சீடப் பரம்பரையின் மூலமாக பெறப்படும் அறிவு

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பின்வரும் உரையில், யோக விஞ்ஞானத்தை அறிய விரும்புவோர் முறையான குரு சீடப் பரம்பரையினை அணுகுவதன் முக்கியத்துவத்தினை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியர் விளக்குகிறார்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஸ்ரீ பகவானுவாச

இமம் விவஸ்வதே யோகம்ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்

விவஸ்வான் மனவே ப்ராஹமனுர் இக்ஷ்வாகவேப்ரவித்

 “புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரியதேவனான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத் தந்தையான மனுவிற்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர்.” (பகவத் கீதை 4.1)

 நெருப்பினாலான உடல்கள்

பகவான் கிருஷ்ணர் பன்னெடுங் காலத்திற்கு முன்பே பகவத் கீதையின் தெய்வீக அறிவை சூரியதேவனான விவஸ்வானுக்கு வழங்கினார். சூரியன் மிகவும் வெப்பமுடைய இடமாதலால், அங்கே யாரும் வசிப்பது சாத்தியமன்று என்று நாம் எண்ணுகிறோம். இவ்வுடல்களுடன் சூரியனை நெருங்கக்கூட இயலாது. ஆனாலும், சூரிய கிரகமும் இந்த கிரகத்தைப் போன்றதே என்றும் அங்கிருப்பவை அனைத்தும் நெருப்பாலானவை என்றும் வேத இலக்கியங்களிலிருந்து நாம் அறிகிறோம். இந்த பூமி பெரும்பாலும் மண்ணால் செய்யப்பட்டிருப்பதுபோலவே, பெரும்பாலும் நெருப்பு, நீர் மற்றும் காற்றினால் ஆக்கப்பட்ட கிரகங்களும் உள்ளன.

வேறுபட்ட கிரகங்களில் உள்ள உயிரினங்கள், தாம் வாழும் கிரகத்தில் எத்தகைய பொருள் பிரதானமானதாக உள்ளதோ, அதற்கேற்ற உடல்களைப் பெறுகின்றனர். எனவே, சூரியனில் வாழும் உயிர்வாழிகளது உடல் நெருப்பாலானதாகும். விவஸ்வான் என்னும் பெயருடைய தேவரே சூரியனில் இருக்கும் உயிர்வாழிகளில் முக்கிய நபர். அவர், சூரியதேவன் (சூர்ய நாராயணன்) என்று அறியப்படுகிறார். அமெரிக்காவில் தலைமை நபராக ஜனாதிபதி இருப்பதைப் போலவே, ஒவ்வொரு கிரகத்திலும் முக்கிய நபர்கள் இருக்கின்றனர். மஹாபாரதம் எனும் வரலாற்று புத்தகத்திலிருந்து, முற்காலத்தில் இங்கே பரதர் என்ற பெயர் கொண்ட மாமன்னர் இருந்ததாக அறிகிறோம். சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு ஆண்ட அவரது பெயரே இந்த பூமி முழுவதற்கும் இடப்பட்டிருந்தது. அதன் பின்னர், இப்பூமி பற்பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. தற்போது பல்வேறு ஆட்சியாளர்கள் இப்பூமியினை ஆட்சி செய்கின்றனர்.

பழமையான கீதை

பல கோடி வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீ கிருஷ்ணர் கர்ம யோகத்தின் ஞானத்தை சூரியதேவனான விவஸ்வானுக்கு வழங்கியதை நான்காம் அத்தியாயத்தின் முதல் ஸ்லோகத்திலிருந்து நாம் அறிகிறோம். பகவத் கீதையின் உபதேசங்களை அர்ஜுனனுக்கு வழங்கும் ஸ்ரீ கிருஷ்ணர், இவை புதியவை அல்ல என்றும், பல யுகங்களுக்கு முன்பே வேறு கிரகத்தில் வழங்கப்பட்டவை என்றும் கூறுகிறார். விவஸ்வான் இந்த உபதேசங்களை தனது மகனான மனுவிற்கு வழங்கினார். மனு, அந்த ஞானத்தை தனது சீடனான இக்ஷ்வாகுவுக்கு அளித்தார். இக்ஷ்வாகு மகாராஜர், பகவான் ஸ்ரீ இராமசந்திரரின் முன்னோரும் பெரும் மன்னருமாவார். இங்கே குறிப்பிடப்படும் பொருள் என்னவெனில், பகவத் கீதையை ஒருவர் கற்று பயனடைய விரும்பினால், அதைப் புரிந்துகொள்வதற்கென ஒரு வழிமுறை உள்ளது. அந்த வழிமுறை இங்கே விளக்கப்பட்டிருக்கின்றது. கிருஷ்ணர் பகவத் கீதையை அர்ஜுனனிடம்தான் முதன்முதலில் உபதேசித்தார் என்பதில்லை. சுமார் 40 கோடி வருடங்களுக்கு முன்பே விவஸ்வானுக்கு இந்த தெய்வீக ஞானத்தை கடவுள் உபதேசித்ததாக வேத அறிஞர்களால் கணக்கிடப்பட்டிருக்கின்றது. சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவத் கீதை அர்ஜுனனுக்கு கூறப்பட்டதாக மஹாபாரதத்திலிருந்து அறிகிறோம். அர்ஜுனனுக்கு முன்னதாக சீடத் தொடர் வழியாக இந்த உபதேசங்கள் பெறப்பட்டு வந்தது, ஆனால் நீண்டகாலமானதால் அவை இழக்கப்பட்டு விட்டன. (பார்க்க, பகவத் கீதை 4.2-3)

பரம்பரையின் முக்கியத்துவம்

பகவத் கீதையில் பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ஹட யோகம் என பல யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. எனவேதான், இங்கு (4.1) யோகம் என்னும் சொல் உபயோகிக்கப்படுகிறது. ’யோகம்’ என்ற சொல்லுக்கு இணைப்பது என்று பொருள். ’யோகம்’ என்றால் நாம் நமது உணர்வை இறைவனுடன் இணைக்கின்றோம் என்று பொருள். அதாவது, இறைவனுடன் மீண்டும் இணைவது, அல்லது அவருடனான நமது உறவை மீண்டும் நிலைநாட்டிக்கொள்வதாகும். கிருஷ்ணரால் வழங்கப்பட்ட இந்த யோகம் காலப்போக்கில் இழந்து போனது. ஏன்? ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடன் பேசிக் கொண்டிருந்தபொழுது கற்றறிந்த சாதுக்கள் எவரும் இல்லையா? அப்படியல்ல. பற்பல சாதுக்கள் அன்றும் இருந்தனர். ‘இழந்து விட்டது என்றால் பகவத் கீதையின் உட்பொருள் இழந்து விட்டது என்பதாகும். அறிஞர்கள் தங்களது மனம்போனபோக்கில் ஆராய்ந்து, பகவத் கீதையைப் பற்றிய தங்களது சுயமான கருத்துரைகளை அளிக்கலாம். ஆனால் அவையெல்லாம் பகவத் கீதை ஆகாது. இந்த கருத்தைத்தான் கிருஷ்ணர் வலியுறுத்துகிறார். பகவத் கீதையின் மாணவர்கள் இதனைக் கவனிக்க வேண்டும். பௌதிகக் கண்ணோட்டத்தில் ஒருவர் பெரும் அறிஞராக இருக்கலாம், ஆனால் அது பகவத் கீதைக்கு கருத்துரை வழங்கும் தகுதியை அவருக்குக் கொடுப்பதில்லை. பகவத் கீதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், பரம்பரையின் கொள்கையை ஏற்க வேண்டும். நாம் பகவத் கீதையின் உள்நோக்கத்தில் உட்புக வேண்டும், வெறுமனே புலமையின் பார்வையில் அணுகக் கூடாது.

 

பாண்டித்துவத்தினால் புரிந்துகொள்ள முடியாது

பகவத் கீதையின் ஞானத்தைப் பெறுவதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்தார்? அர்ஜுனன் பெரும் அறிஞனுமல்ல, யோகியுமல்ல, தியானிப்பவனோ அல்லது முனிவனோ அல்ல. அவன் போரிடத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு போர் வீரன். அச்சமயத்தில் மிகச்சிறந்த சாதுக்கள் பலரும் இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுக்கு பகவத் கீதையைக் கொடுத்திருக்க முடியும். அர்ஜுனன் சாதாரண மனிதனாக இருந்தாலும், அவனிடம் ஒரு மிகப்பெரிய தகுதி இருந்தது என்பதே பதில். பக்தோஸிமே ஸகாசேதி, “நீ எனது நண்பனும் பக்தனுமாயிருக்கிறாய்.” இதுவே அர்ஜுனனுக்கு இருந்த தனித் தகுதியாகும், இது மாபெரும் சாதுக்களுக்கு இல்லாமலிருந்தது. கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதை அர்ஜுனன் அறிந்திருந்த காரணத்தினால், அவரை தனது ஆன்மீக குருவாக ஏற்று அவரிடம் சரணடைந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனல்லாதவன் பகவத் கீதையைப் புரிந்துகொள்வது சாத்தியமல்ல. பகவத் கீதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், வேறு வழிமுறைகளின் உதவியினால் அது முடியாது. அர்ஜுனன் புரிந்து கொண்டதைப் போலவே நாமும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் வேறொரு வழியில் பகவத் கீதையைப் புரிந்துகொள்ள விரும்பினாலோ சுயமான கருத்துரையளித்தாலோ, அது நமது பாண்டித்துவத்தை வெளிப்படுத்த உதவுமே தவிர, பகவத் கீதையாகாது.

 

ஒரு தனி மனிதனின் சுய நோக்கத்திற்கு ஏற்ப பகவத் கீதைக்கு கருத்துரைக்கப்பட்ட உடனேயே அதன் நோக்கம் அழிந்துவிடுகின்றது. நமது சொந்த வாதங்களாலும் யூகத்தின் பலத்தாலும் வேத இலக்கியங்களின் முடிவை அறிந்துகொள்ள முடியாது என்று கூறப்பட்டுள்ளது. பல விஷயங்கள் நமது யூகத்தின் எல்லைக்குள் வருவதில்லை. வேத இலக்கியங்கள் என்று எடுத்துக் கொண்டால், பல இலக்கியங்கள் பூரண உண்மையைப் பலவிதங்களில் விவரித்துள்ளன. அவை எல்லாவற்றையும் நாம் ஆராய்ந்தால், குழப்பமே உண்டாகும். வேறுபட்ட பல கருத்துகள் கொண்ட பல தத்துவஞானிகள் ஒருவரோடு ஒருவர் ஒவ்வாத கொள்கைகளை உடையவராக இருக்கின்றனர். பல்வேறு இலக்கியங்களைப் படிப்பதாலும் தர்க்க ரீதியிலான வாதங்களாலும் தத்துவக் கொள்கைகளாலும் உண்மையை உணர முடியாது; அப்படியெனில், அதை எவ்வாறு அடைவது? உண்மை என்னவென்றால், பூரண உண்மையைப் பற்றிய அறிவு மிகவும் இரகசியமானது. ஆயினும், அதிகாரிகளைப் பின்பற்றினால் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.

 

அதிகாரிகளைப் பின்பற்றுவோம்

இந்தியாவில் இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், நிம்பார்கர், விஷ்ணு ஸ்வாமி என நான்கு ஆச்சாரியர்களின் வழியாக வரும் சீடப் பரம்பரைகள் உள்ளன. வேத இலக்கியங்கள் உயர்ந்த ஆன்மீக குருமார்களின் மூலமாக புரிந்துகொள்ளப்படுகின்றன. அர்ஜுனன் பகவத் கீதையை கிருஷ்ணரிடமிருந்து கற்றுக் கொண்டான். எனவே, நாம் கீதையை அறிய விரும்பினால் அர்ஜுனனிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், வேறு எந்த மூலத்திடமிருந்தும் அல்ல. பகவத் கீதையைப் பற்றி நமக்கு ஏதேனும் தெரிந்திருந்தால், அஃது அர்ஜுனன் புரிந்து கொண்டதோடு எந்த அளவுக்கு பொருந்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும். அர்ஜுனன் பகவத் கீதையைப் புரிந்து கொண்டதைப் போலவே நாமும் புரிந்து கொண்டிருந்தால், அது சரியானதாகும். இதுவே நாம் பகவத் கீதையைக் கற்பதற்கான அளவுகோலாகும். உண்மையில் பகவத் கீதையிலிருந்து நாம் பலனைப் பெற விரும்பினால், இந்தக் கொள்கையை பின்பற்ற வேண்டும். பகவத் கீதை கடைகளிலிருந்து வாங்கிப் படித்து அகராதியின் உதவியோடு புரிந்துகொள்ளும் ஒரு சாதாரண புத்தகமல்ல, அது சாத்தியமுமல்ல. அது சாத்தியமாக இருப்பின், இவ்விஞ்ஞானம் காலப்போக்கில் மறைந்துவிட்டதென்று கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறியிருக்க மாட்டார்.

பகவத் கீதையைப் புரிந்துகொள்ள சீடத் தொடர் மூலமாகச் செல்ல வேண்டியதன் அவசியத்தை அறிவது சிரமமல்ல. நாம் ஒரு வழக்கறிஞராகவோ பொறியாளராகவோ மருத்துவராகவோ ஆக விரும்பினால், அந்த துறையில் அதிகாரபூர்வமான நபரிடம் பயிற்சியாளராக சேர்ந்து கற்பதே வழக்கமாகும். அதிகாரபூர்வமான மூலத்திடமிருந்து பெற்றால் அன்றி, ஒரு துறையைப் பற்றிய நமது அறிவு பக்குவமானதாக இருக்க முடியாது.

இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், நிம்பார்கர், விஷ்ணு ஸ்வாமி ஆகியோர் நான்கு சம்பிரதாயத்திற்கு ஆச்சாரியர்களாவர்.

ஆராய்ச்சி அறிவும் அதிகார அறிவும்

இரு வழிகளில் அறிவைப் பெறலாம்: ஒன்று, ஆரோஹபன்தா (ஆராய்ச்சியினால் பெறப்படும் அறிவு), மற்றொன்று அவரோஹபன்தா (மேலிருந்து பெறப்படும் அறிவு). அவரோஹபன்தா முறை மிகவும் பக்குவமானதாகக் கூறப்படுகின்றது. “எல்லா மனிதரும் மரணமடைபவரே” எனும் நியதியை எடுத்துக்கொள்வோம்: மனிதன் மரண மடையக் கூடியவனா என்பதை யாரும் விவாதிக்க வேண்டிய தில்லை, இதனை சரி என்று பொதுவாக எல்லாரும் ஏற்பர். எனவே, ஆராய்ச்சி வழியின் முடிவு, “திரு. ஜான்சன் அவர்கள் மனிதராக இருப்பதால், மரணமடையக் கூடியவரே.” ஆனால் எல்லா மனிதரும் மரணமடைபவர் எனும் வாதம் எவ்வாறு வந்தது? யூக முறையைப் பின்பற்றுவோர் ஆராய்ச்சிகளாலும் கண்டுபிடிப்புகளாலும், இந்த நியதியை அடைய முயல்கின்றனர். அந்த மனிதன் இறந்தான், இந்த மனிதன் இறந்தான், பல மனிதர்கள் இறந்திருக்கின்றனர் என்பதை ஆராய்ந்து, மனிதரெல்லாம் இறக்கக் கூடியவரே என்பதைக் காணும்பொழுது, அனைத்து மனிதர்களும் மரணமடைபவர்களே என முடிவு செய்கிறோம். ஆனால் இந்த ஆரோஹபன்தா முறையில் ஒரு பெரும் குறையிருக்கின்றது: நமது அனுபவங்கள் எல்லைக்குட்பட்டவை என்பதால், மரணமடையாத ஒருவனை நாம் இதுவரை காணாமல் இருந்திருக்கலாம், ஆனால் நாம் நமது எல்லைக்குட்பட்ட அனுபவத்தினால் தீர்ப்பு வழங்குகிறோம். நமது புலன்களின் சக்தி வரம்பிற்கு உட்பட்டது, கட்டுண்ட நிலையில் நம்மிடம் இதர பல குறைகளும் உள்ளன. இதனால், இந்த ஆரோஹபன்தா முறையானது எல்லா நேரத்திலும் பக்குவமானதாக இருப்பதில்லை. மாறாக, அவரோஹபன்தா முறையானது, பக்குவமான மூலத்திலிருந்து பெறப்படுவதால், என்றென்றும் பக்குவமான அறிவாகும்; வேத வழிமுறை அத்தகையதாகும்.

பகவத் கீதையின் பல இடங்களில் பார்ப்பதற்கு ஆணவக் கூற்றுகள்போல தோன்றக்கூடிய கருத்துகள் உள்ளன. உதாரணமாக, ஸ்ரீ கிருஷ்ணர் (7.7) கூறுகிறார்:

மத்த: பரதரம் நான்யத்கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜயமயி ஸர்வம் இதம் ப்ரோதம்ஸூத்ரே மணிகணா இவ

“செல்வத்தை வெல்வோனே, என்னைவிட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப் பட்டுள்ளதுபோல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன.”

தன்னைவிட உயர்ந்த அதிகாரி எவருமில்லை என்று கிருஷ்ணர் கூறுகிறார். இஃது அகம்பாவமாக தெரியலாம். “என்னை விடப் பெரியவன் எவனுமில்லை,” என்று நான் சொன்னால், “இந்த சாமியார் மிகவும் கர்வம் பிடித்தவர்,” என்று மக்கள் எண்ணலாம். பற்பல குறைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளவன் தன்னை அனைவரிலும் சிறந்தவனாகக் கூறிக் கொண்டால், அவன் வெற்றுப் பேச்சாளன். ஆனால் கிருஷ்ணர் இதைச் சொல்லலாம்; ஏனெனில், அவர் இப்பூமியில் இருந்தபோது, அனைவரிலும் சிறந்த நபராக விளங்கினார் என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிகின்றோம். அவர் எல்லாத் துறைகளிலும் மிகச் சிறந்தவராகத் திகழ்ந்தார்.

சூரியனை நாம் நேரடியாக காணும்போது, அது நாம் உணவு உண்ணும் தட்டின் அளவில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அது பூமியைவிட பல்லாயிரம் மடங்கு பெரியதாகும்.

அறிவைப் பெறும் மூன்று வழிகள்

வேத முறைப்படி மிகச்சிறந்த அதிகாரியிடமிருந்து அடையப் பெற்ற ஞானம் பக்குவமானதாகக் கருதப்படுகிறது. மூன்று வித சான்றுகள் உள்ளன: ப்ரத்யக்ஷம், அனுமானம், ஸப்தம். நமது புலன்களால் நேரடியாக அறிவது ப்ரத்யக்ஷம் எனப்படுகிறது. என் முன் ஒருவன் அமர்ந்திருந்தால், அவன் அங்கு அமர்ந்திருப்பதை நான் காண்கிறேன், அந்த அறிவு என் கண்களால் பெறப்படுகிறது. இரண்டாம் முறையான அனுமானம், யூகமாகும். உதாரணமாக, வெளியே குழந்தைகள் விளையாடும் ஒலியைக் கேட்டு, அவர்கள் அங்கே இருப்பதாக நாம் யூகிக்கின்றோம். மூன்றாம் முறையோ (ஸப்தம்) உயர் அதிகாரியிடமிருந்து உண்மைகளைப் பெறுவ தாகும். ‘மனிதன் மரணமடைபவனே போன்ற கூற்றுகள் உயர் அதிகாரிகளிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது, இஃது அனைவராலும் ஏற்கப்படுகிறது. எல்லா மனிதரும் மரண மடைபவர் என்பதை யாரும் அனுபவத்தில் பார்த்ததில்லை. இதை நாம் பாரம்பரியமாக ஏற்றுக்கொள்கிறோம். யாரேனும், “இவ்வுண்மையை முதலில் கண்டவர் யார்? நீ கண்டு பிடித்தாயா?” என்று கேட்டால், பதிலளிப்பது மிகக் கடினம். இந்த அறிவு பரம்பரையாக வருகிறது, இதனை நாம் ஏற்கின்றோம் என்பதைத் தவிர நம்மால் வேறெதுவும் கூறவியலாது.

அறிவு பெறுவதற்கான மூன்று முறைகளில், உயர் அதிகாரிகளிடமிருந்து அறிவைப் பெறும் மூன்றாவது முறையே மிக பக்குவமானதென்று வேதங்கள் கூறுகின்றன. நேரடியாக உணர்தல், எப்போதும், குறிப்பாக கட்டுண்ட நிலையில் பக்குவமற்றதாகும். சூரியனை நாம் நேரடியாக உணரும்போது, அது நாம் உணவு உண்ணும் தட்டின் அளவில் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அது பூமியைவிட பல்லாயிரம் மடங்கு பெரியது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்போது நாம் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும்? விஞ்ஞானிகள் கூறுவதையா நமது சுய அனுபவத்தையா? சூரியன் எவ்வளவு பெரியதென்று நம்மால் நிரூபிக்க முடியாவிட்டாலும், வானவியல் அறிஞர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறோம். அதுபோலவே, ஒவ்வொரு துறையிலும் அதற்கென்று உள்ள அதிகாரிகளின் கூற்றை ஏற்றுக்கொள்கிறோம். செய்தித்தாள் மற்றும் வானொலியிலிருந்து சீனா, இந்தியா என பூமியின் பல்வேறு இடங்களில் நிகழ்வது என்ன என்பதை அறிந்துகொள்கிறோம். அந்த நிகழ்வுகளை நாம் நேரடியாக அனுபவிப்பதில்லை, அவை உண்மையிலேயே நிகழ்கின்றனவா என்பதும் நமக்கு தெரியாது. ஆனாலும், வானொலி மற்றும் செய்தித்தாளின் அதிகாரத்தை ஏற்று, அந்த செய்திகளை நாம் நம்புகிறோம். எனவே, அறிவைப் பெற அதிகாரிகளை நம்புவதை விட வேறு சிறந்த வாய்ப்பு இல்லை, அந்த அதிகாரி பக்குவமானவராக இருந்தால், நமது அறிவும் பக்குவமானதாக இருக்கும்.

வேத ஞானம் பழமையானது

வேதங்களின்படி, கிருஷ்ணரே மிகச்சிறந்தவரும் மிகப் பக்குவமானவரும் ஆவார் (மத்த: பரதரம் நான்யத் கிஞ்சித் அஸ்தி தனஞ்ஜய). கிருஷ்ணர் மட்டும் தன்னை உயர் அதிகாரியாகக் கூறிக் கொள்வதில்லை, பகவத் கீதையின் பெரும் அறிஞர்கள், பெரும் சாதுக்கள், பண்டிதர்கள் என அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். கிருஷ்ணரை அதிகாரியாக ஏற்று, அவரது சொற்களை நாம் உள்ளது உள்ளபடி ஏற்காவிடில், பகவத் கீதையிலிருந்து எந்த இலாபத்தையும் நம்மால் பெறவியலாது. இந்தக் கூற்று ஆணவத்தினால் கூறப்படுவது அல்ல, இஃது உண்மையான கூற்றாகும்.

வேத ஞானம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. இது மிகவும் பழமையான ஞானம். கிருஷ்ணர் இதனை புராதன:, அதாவது மிகப் பழமையானது என குறிப்பிடுகிறார். கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இந்த யோக விஞ்ஞானத்தை சூரியதேவனுக்கு கொடுத்ததாக கிருஷ்ணர் கூறுகிறார். அதற்கு எத்தனை கோடி வருடங்களுக்கு முன்னர் வேறு யாரிடமாவது கொடுத்தாரா என்பது நமக்குத் தெரியாது. ஒவ்வொரு வருடமும் கோடை, வசந்தம், குளிர், இளவேனிற்காலம் என பருவ காலங்கள் மாறிமாறி வருவதைப் போல, இந்த ஞானமானது திரும்பதிரும்ப கொடுக்கப்படுகிறது. நமது அறிவு மிகக் குறைவானது: 5,000 வருடங்களுக்கு முன்பாக நிகழ்ந்த சரித்திரம்கூட நமக்குத் தெரியாது. ஆனால் வேத நூற்களோ பல கோடி வருடங்களுக்கு முற்பட்ட சரித்திரங்களைப் பேசுகின்றன. இக்கிரகத்தில் 3,000 வருடங்களுக்கு முன்பு என்ன நடந்தது என்பதன் அறிவு நமக்கு இல்லாததால், அதற்கு முன் சரித்திரமே இல்லை என முடிவுக்கு வர முடியாது.

கிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர்

மஹாபாரதத்தின்படி, கிருஷ்ணர் 5,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தார் என்பதால், பல கோடி வருடங்களுக்கு முன்பு சூரியதேவனுக்கு அவர் பகவத் கீதையைக் கூறியிருப்பது சாத்தியமல்ல என்று ஒருவர் கூறலாம். சில கோடி வருடங்களுக்கு முன்பு சூரியனில் சொற்பொழிவாற்றினேன் என்று நான் கூறினால், “இந்த சாமியார் பிதற்றுகிறார்” என்று மக்கள் கூறுவர். ஆனால் கிருஷ்ணர் பரம புருஷ பகவான் என்பதால், அவரது விஷயத்தில் இது மாறுபட்டதாகும். சூரியதேவனுக்கு உபதேசித்ததை நாம் நம்புகிறோமோ இல்லையோ, அர்ஜுனனால் இந்த உண்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அர்ஜுனன் கிருஷ்ணரை பரம புருஷராக ஏற்றிருந்ததால், பல கோடி வருடங்களுக்கு முன்பு அவர் மற்றொருவரிடம் இதைப் பேசியிருப்பது சாத்தியமான காரியமே என அவன் அறிந்திருந்தான். இருப்பினும், தனக்குப் பின் வரக்கூடிய மக்களுக்கு நிலைமையை தெளிவாக்குவதற்காக அவன் கேட்கிறான்: “சூரியதேவனான விவஸ்வான் பிறப்பால் தங்களைவிடப் பெரியவர். தாங்கள் அவருக்கு இவ்விஞ் ஞானத்தை ஆரம்பத்திலேயே உபதேசித்தீர்கள் என்பதை எவ்வாறு நான் புரிந்துகொள்வது?” (பகவத் கீதை 4.4)

உண்மையில் இது மிகவும் புத்திசாலித்தனமான கேள்வி, இதற்கு கிருஷ்ணர் பதிலளித்தார்: “நீயும் நானும் பற்பல பிறவிகளைக் கடந்துள்ளோம். என்னால் அவை எல்லாவற்றையும் நினைவுகூற முடியும்; ஆனால், எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே! அஃது உன்னால் முடியாது.” (பகவத் கீதை 4.5)

கிருஷ்ணர் கடவுளாக இருந்தாலும் பலமுறை அவதரிக்கின்றார். ஜீவாத்மாவான அர்ஜுனனும் பற்பல பிறவிகளை எடுக்கின்றான். முழுமுதற் கடவுளுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள வித்தியாசம் இங்கே விளக்கப்படுகிறது: தான்யஹம் வேத ஸர்வாணி, கிருஷ்ணர் தனது எல்லா அவதாரங்களின் கடந்த கால நிகழ்வுகளையும் ஞாபகம் வைத்திருக்கிறார், ஆனால் ஜீவாத்மாவால் இது முடியாது. கடவுள் அழிவற்றவர், நாமும் அழிவற்றவரே; ஆனால் வேறுபாடு என்னவெனில், நாம் நமது உடல்களை எப்பொழுதும் மாற்றிக் கொண்டுள்ளோம், வாழ்வில் நடந்தவற்றை மரணத்துடன் நாம் முற்றிலும் மறந்துவிடுகிறோம். மரணம் என்றால் மறதி. இரவில் உறங்கும்போது, “இந்த மனைவியின் கணவன் நான்,” இந்தக் குழந்தைகளின் தந்தை நான்” என்பதை நாம் மறந்துவிடுகிறோம். உறக்கத்தில் நம்மையே நாம் மறந்துவிடுகிறோம். ஆனால் எழுந்தவுடன், “நான் இன்னார், நான் இந்தஇந்த செயல்களைச் செய்ய வேண்டும்,” என நினைவுகொள்கிறோம். முற்பிறவிகளில் நாம் வெவ்வேறு உடல்கள், பற்பல குடும்பங்கள், பல நாடுகள், பல்வேறு தாய்தந்தையர் என வாழ்ந்துள்ளோம்; ஆனால் அவையனைத்தையும் நாம் மறந்துவிட்டோம். நாய், பூனை, மனிதன், தேவர் என நாம் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம், அவற்றை இப்பொழுது மறந்துவிட்டோம்.

சீடப் பரம்பரையைப் பின்பற்றுவோம்

பற்பல பிறவிகளை ஏற்கும்போதிலும், ஜீவாத்மாக்களான நாம் நித்தியமானவர்களே. முற்பிறவிகளில் இந்த உடலுக்காக நாம் தயார் செய்ததைப் போலவே, இப்பிறவியிலும் மற்றோர் உடலுக்காக நம்மைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். நமது கர்மத்திற்கு ஏற்ற உடல்களை நாம் பெறுகிறோம். ஸத்வ குணத்தில் இறப்பவர் உயர்தர வாழ்விற்காக உயர் கிரகங்களுக்கு உயர்த்தப்படுகின்றனர் (பகவத் கீதை 14.14). ரஜோ குணத்தில் இறப்பவர் பூமியிலேயே தங்கி விடுகின்றனர், தமோ குணத்தில் இறப்பவரோ மிருக இனங்களில் வீழ்கின்றனர் அல்லது கீழ் உலகங்களுக்கு மாற்றப்படுகின்றனர் (பகவத் கீதை 14.15). இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் நாம் இதனை மறந்துவிடுகிறோம்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம்மிடம் வந்து கூறுகிறார்: இந்த ஜடவுலகில் என்ன செய்கிறாய்? ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, என்னிடம் வா! உனக்கு நான் எல்லா பாதுகாப்பும் தருகிறேன்.” ஆனால் நாமோ, “ஐயா, நீங்கள் சொல்வதை நம்ப முடியாது. எனக்கு இங்கு இதைவிட மிக முக்கியமான வேலையிருக்கிறது” என்கிறோம். இது கட்டுண்ட ஆத்மாவின் மறதியைக் காட்டுகிறது. முறையான சீடப் பரம்பரையைப் பின்பற்றுவதால் இந்த மறதியிலிருந்து நாம் வெகுவிரைவில் விடுபட்டு, ஸ்ரீ கிருஷ்ணரைச் சென்றடைவோம்.

பகவத் கீதையை உண்மையறிவைப் புரிந்துகொள்ள முறையான சீடப் பரம்பரையில் வரும் ஆச்சாரியரை அணுக வேண்டும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives