குரு என்றால் என்ன?

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

குரு என்ற சொல்லைக் கேட்டதும், வினோதமான வயதான மனிதர் உங்களின் நினைவில் வரலாம். நீண்ட தாடியுடன், நீளமான அங்கி அணிந்து, ஆராய்ச்சியில் மூழ்கியிருப்பவரைப் போன்ற ஒரு தோற்றம் நினைவிற்கு வரும். அல்லது மக்களின் ஆன்மீக தாகத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் போலி மனிதன் என்ற எண்ணமும் வரலாம். ஆனால் உண்மையில் குரு என்றால் என்ன? அவர் நமக்கு கற்றுத் தருவது என்ன? ஸ்ரீல பிரபுபாதர் இங்கே சில தெளிவூட்டும் விடைகளைத் தருகிறார்.

 

ஓம் அஜ்ஞானதிமிராந்தஸ்ய   ஜ்ஞானாஞ்ஜனஷலாகயா

சக்ஷுருன்மீலிதம் யேன    தஸ்மை ஸ்ரீகுரவே நம:

 

“நான் அறியாமையின் இருளில் பிறந்தேன். எனது கண்களை ஞான ஒளியால் திறந்த எனது ஆன்மீக குருவிற்கு எனது மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்ப்பிக்கின்றேன்.”

ஜடவுலகம் இருள் நிறைந்தது

அஜ்ஞான என்றால் “அறியாமை” அல்லது “இருள்” என்று பொருள். இந்த அறையிலுள்ள எல்லா விளக்குகளும் உடனடியாக அணைந்துவிட்டால் நாமும் மற்றவர்களும் எங்கு அமர்ந்துள்ளோம் என்பதை நம்மால் அறிய முடியாது. எல்லாம் குழப்பமாகிவிடும். அதுபோலவே, இந்த பௌதிக உலகில் நாம் அனைவரும் இருளில் இருக்கிறோம், இது தமஸ் நிறைந்த உலகம். தமஸ் அல்லது திமிர என்றால் “இருள்” என்று பொருள். இந்த பௌதிக உலகம் இருளானது என்பதால், ஒளியைப் பெற இங்கு சூரிய ஒளி அல்லது சந்திர ஒளி தேவைப்படுகிறது. எனினும், ஆன்மீக உலகம் என்று மற்றோர் உலகம் உள்ளது; அஃது இந்த இருளுக்கு அப்பாற்பட்டது. அந்த உலகம் பகவத் கீதையில் (15.6) ஸ்ரீ கிருஷ்ணரால் வர்ணிக்கப்பட்டுள்ளது:

 

ந தத் பாஸயதே ஸூர்யோ         ந ஷஷாங்கோ ந பாவக:

யத் கத்வா ந நிவர்தந்தே   தத் தாம பரமம் மம

 

“எனது அந்த இருப்பிடம் சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அதனை அடைப வர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.”

 

சீடர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது குருவின் பணியாகும். ஒருவன் தனது அறியாமை யினால் நோயை வரவழைத்துக் கொள்வதுபோல, ஒவ்வொரு வரும் தற்போது அறியாமையின் காரணத்தினால் துன்பப்பட்டுக் கொண்டுள்ளனர். ஒருவனுக்கு சுகாதாரத்தைப் பற்றி தெரியாவிடில், தன்னை எது களங்கப்படுத்தும் என்பதை அவன் அறியான். அத்தகு அறியாமையினால், நம்மை வியாதிகள் தொற்றிக் கொள்கின்றன, நாமும் துன்பத்திற்கு உள்ளாகிறோம். குற்றம் புரிந்தவன், “எனக்கு சட்டம் தெரியாது” என்று கூறலாம். ஆனால் அவன் குற்றம் புரிந்திருந்தால், சட்டம் அவனைத் தண்டிக்காமல் விடுவதில்லை. அறியாமையைக் காரணமாகக் கூறி அவனால் மன்னிப்பு கோர முடியாது. அதுபோலவே, நெருப்பு சுடும் என்பதை அறியாத குழந்தை அதைத் தொடுகிறது. “பாவம் குழந்தை, நான் சுடுவேன் என்று அதற்குத் தெரியாது,” என்று நெருப்பு எண்ணப் போவதில்லை, அதற்கு மன்னிப்பு இல்லை. அரசாங்கத்தின் சட்டங்களைப் போல இயற்கைக்கும் கடுமையான சட்டங்கள் உள்ளன. அவற்றை நாம் அறியாமல் இருந்தாலும், அவை தமது வேலைகளைச் செய்யும். அறியாமையின் காரணத்தினால் தவறு செய்தால்கூட பலனை அனுபவிக்க வேண்டியதுதான். இதுவே நியதி. அஃது அரசாங்கத்தின் சட்டமானாலும் சரி, இயற்கையின் விதியானாலும் சரி, அதனை மீறினால் தண்டனையை நாம் அடைந்தேயாக வேண்டும்.

 

எந்தவொரு மனிதனும் இப்பௌதிக உலகில் துன்பப்படக் கூடாது என்பதே குருவின் அலுவல். “நான் துன்பப்படவில்லை” என்று யாரும் சொல்ல முடியாது, அது சாத்தியமல்ல. இந்த பௌதிக உலகில் மூன்று வகையான துன்பங்கள் உள்ளன: அத்யாத்மிக, அதிபௌதிக, அதிதைவிக. ஜடவுடலாலும் மனதாலும் எழும் துன்பங்கள், பிற உயிரினங்களால் எழும் துன்பங்கள், இயற்கையின் சக்திகளால் வரும் துன்பங்கள் என்பனவே அவை. நாம் மனத் துயரத்தின் காரணமாகவும், மற்ற உயிரினங்களின் (உதாரணமாக எறும்பு, கொசு, ஈ) காரணமாகவும், அல்லது மேலான சக்திகளின் காரணமாகவும் துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம். மழையில்லாமல் போகலாம், வெள்ளம் வரலாம், அல்லது மிக அதிகமான வெப்பமோ குளிரோ ஏற்படலாம். இயற்கை எத்தனையோ வகையான இன்னல்களை விளைவிக்கிறது. இப்படியாக, பௌதிக உலகில் மூன்று வகையான துயரங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் இதில் ஒன்று, இரண்டு, அல்லது மூன்றினாலும் அவதிப்படுகிறார்கள். துயரங்களிலிருந்து முற்றிலும் விடுபட்டிருப்பதாக யாராலும் கூற முடியாது.

துயரத்திற்கு காரணம்

உயிர்வாழி துயரத்திற்கு உள்ளாவது ஏன் என்ற கேள்வியை நாம் உடனே கேட்கலாம். அதற்கான விடை: அறியாமை. “நான் தவறுகளைச் செய்கிறேன், பாவகரமான வாழ்க்கையை வாழ்கிறேன். இதனால் நான் துன்பப்படுகிறேன்,” என்று எவரும் எண்ணுவதில்லை. எனவே, அறியாமையிலிருந்து சீடனை விடுவிப்பதே குருவின் முதல் திருப்பணியாகும். நாம் நமது குழந்தைகளை துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக பள்ளிக்கு அனுப்புகிறோம். நமது குழந்தைகள் கல்வி பெறாவிடில், அவர்கள் வருங்காலத்தில் துன்பப்படுவார்கள் என்று நாம் அஞ்சுகிறோம். துன்பங்களுக்கு காரணம் இருளுடன் ஒப்பிடப்படும் அறியாமையே என்பதை குரு காண்கிறார். இருளில் இருப்பவரை எவ்வாறு காப்பாற்றுவது? ஒளியால். இருளில் மூழ்கியிருக்கும் உயிர்வாழியின் முன்பு குருவானவர் ஞானஒளியை முன்வைக்கின்றார். அந்த ஞானம் அறியாமையின் இருளினால் ஏற்படும் துயரங்களிலிருந்து அவனைக் காப்பாற்றுகிறது.

குரு என்பவர் கிருஷ்ணரிலிருந்து வரும் சீடப் பரம்பரையைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். அவர் கிருஷ்ணரின் செய்திகளை மாற்றுவதில்லை.

குருவானவர் செய்திகளை மாற்றாதவர்

குரு என்பவர் அத்தியாவசியமான தேவையா என்று ஒருவர் கேட்கலாம். அவர் ஓர் அவசியத் தேவையே என்பதை வேதங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன:

 

தத்விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத்

ஸமித்பாணி: ஷ்ரோத்ரியம் ப்ரஹ்மநிஷ்டம்

(முண்டக உபநிஷத் 1.2.12)

 

குருவைத் தேடி அடையுங்கள் என்று வேதங்கள் நம்மை வலியுறுத்துகின்றன; உண்மையில், முறையான குருவை அடையும்படி வலியுறுத்துகின்றன, ஏதாவது ஒரு குருவை அல்ல. குருவானவர் சீடப் பரம்பரையில் வருபவர் என்பதால், குரு என்பவர் ஒருவராகவே இருக்க முடியும். வியாஸதேவரும் கிருஷ்ணரும் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு என்ன கற்பித்தனரோ, அதே விஷயம் இன்றும் கற்பிக்கப்படுகிறது. இந்த இரு உபதேசங்களுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. ஆச்சாரியர்கள் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் வந்து போனாலும், செய்தி ஒன்றே. உண்மையான குருவானவர் அவரது முந்தைய ஆச்சாரியர்கள் பேசியதற்கு வித்தியாசமாகப் பேசுவதில்லை. சில ஆன்மீக ஆசிரியர்கள், “என் கருத்துப்படி நீ இதைச் செய்ய வேண்டும்,” என்று கூறுவதுண்டு. ஆனால் அப்படிப்பட்டவர் குருவல்ல. அப்படிப்பட்ட பெயரளவிலான குருமார்கள் வெறும் அயோக்கியர்களே. உண்மையான குருவுக்கு ஒரே ஒரு கருத்து மட்டுமே இருக்க முடியும். அக்கருத்து கிருஷ்ணர், வியாஸதேவர், நாரதர், அர்ஜுனன், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, கோஸ்வாமிகள் ஆகியோர்களால் வெளிப்படுத்தப்பட்ட கருத்தே. ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையை மொழிந்தார். அதை வியாஸதேவர் பதிவு செய்தார். ஸ்ரீல வியாஸதேவர், “இஃது என் கருத்து” என்று சொல்லவில்லை. ஸ்ரீ பகவான் உவாச, அதாவது “புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்” என்றுதான் எழுதினார். வியாஸதேவர் எழுதியதெல்லாம் பகவான் கூறியதே, அவர் தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவில்லை.

 

ஆகையால், வியாஸதேவர் குருவாகிறார். அவர் கிருஷ்ணரின் சொற்களுக்குத் தவறாகப் பொருள் கூறவில்லை. அவை எவ்வாறு பேசப்பட்டனவோ அவ்வாறே வழங்கப்பட்டுள்ளன. நாம் ஒரு தந்தியை அனுப்பினால், அதைக் கொண்டு சேர்ப்பவன், அதைத் திருத்தவோ கூட்டவோ குறைக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அதை அவன் அப்படியே தருகிறான். குருவின் பணி அதுபோன்றதே. குரு இவராகவோ அவராகவோ இருக்கலாம், ஆனால் செய்தி ஒன்றே; ஆகையால், குரு என்பவர் ஒருவரே என்று சொல்லப்படுகிறது.

 

குரு சீடப் பரம்பரையில் ஒரே விஷயம் மீண்டும்மீண்டும் சொல்லப்பட்டு வருவதை நாம் எளிதில் காண முடியும். பகவத் கீதையில் (9.34) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

 

மன்-மனா பவ மத்-பக்தோ  மத்-யாஜீ மாம் நமஸ்குரு

மாம் ஏவைஷ்யஸி யுக்த்வைவம்    ஆத்மானம் மத்-பராயண:

 

“உனது மனதை எப்பொழுதும் என்னைப் பற்றிச் சிந்திப்பதில் ஈடுபடுத்தி, எனது பக்தனாகி, எனக்கு வந்தனை செய்து, என்னை வழிபடுவாயாக. இவ்வாறாக என்னில் முழுமையாக லயித்து, நிச்சயமாக நீ என்னிடமே வருவாய்.” இதே அறிவுரையை இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், சைதன்ய மஹாபிரபு போன்ற எல்லா ஆச்சாரியர்களும் மீண்டும்மீண்டும் வழங்கி வந்துள்ளனர், ஆறு கோஸ்வாமிகளும் அதே கருத்தை வழங்கினர், நாங்களும் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம்–இவற்றில் வித்தியாசம் எதுவுமில்லை. கிருஷ்ணருடைய சொற்களுக்கு, “என் கருத்துப்படி குருக்ஷேத்திரப் போர்க்களம் மனித உடலைக் குறிக்கிறது”, என்று எங்களில் யாரும் அர்த்தம் கற்பிப்பதில்லை.

அயோக்கிய குருமார்கள்

இப்படிப்பட்ட விளக்கங்களை முன்னுரைக்கும் எத்தனையோ அயோக்கிய குருமார்கள் இவ்வுலகில் உள்ளனர். ஆனால் நாம் எவ்வித அயோக்கியனுக்கும் சவால் விடமுடியும். “நான் கடவுள், நாம் எல்லோரும் கடவுள்,” என்று அயோக்கிய குரு கூறலாம், சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் கடவுள் என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்பதை நாம் அகராதியில் பார்த்து அறிய வேண்டும். பொதுவாக, கடவுள் என்றால் “பரம உயிர்வாழி” என்று அகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆகையால், அந்த குருவிடம் “நீங்கள் பரம உயிர்வாழியா?” என்று கேட்கலாம். இதை அவரால் புரிந்துகொள்ள முடியாவிடில், பரமம் என்பதற்கான பொருளை அவருக்கு நாம் கூற வேண்டும். எந்த அகராதியும், பரமம் என்பதற்கு, “மிகவுயர்ந்த அதிகாரி” என்ற பொருளைத் தரும். அப்போது நாம், “நீங்களா மிகவுயர்ந்த அதிகாரி?” என்று கேட்கலாம். அப்படிப்பட்ட அயோக்கிய குரு தன்னைத் தானே கடவுளென்று பிரகடனப்படுத்திக் கொண்டாலும், இந்தக் கேள்விக்கு அவனால் பதில் கூற முடியாது. கடவுளே பரம உயிர்வாழி, மிகவுயர்ந்த அதிகாரி. அவருக்கு சமமானவரோ அவரைவிடப் பெரியவரோ எவரும் இல்லை. எனினும், பல அயோக்கிய குருமார்கள் தம்மையே கடவுள், எல்லோரிலும் உன்னதமானவர்கள் என்று பிரகடனப்படுத்துகிறார்கள். ஜட வாழ்வெனும் இருளிலிருந்து வெளியே செல்வதற்கு இத்தகு அயோக்கியர்களால் நமக்கு உதவ முடியாது. ஆன்மீக அறிவு எனும் ஒளியைக் கொண்டு இருளை விலக்க இவர்களால் முடியாது.

 

அதிகாரபூர்வமான குருவானவர் பரம குருவாகிய கடவுள் அருளியுள்ள அதிகாரபூர்வமான சாஸ்திரங்களில் இருப்பதை மட்டுமே எடுத்து வழங்குவார். சிஷ்ய பரம்பரையில் வரும் செய்தியை குருவினால் மாற்ற முடியாது.

 

பூரண சத்தியத்தை ஆராய்ச்சிகள் செய்து கண்டறிய இயலாது என்பதை நாம் உணர வேண்டும். “எனது குரு மஹாராஜர், எனது ஆன்மீக குரு, என்னை ஒரு முட்டாளாகக் கருதினார்,” என்று சைதன்ய மஹாபிரபுவே கூறியுள்ளார். தன் குருவுக்கு முன்பு தன்னை ஒரு பெரிய முட்டாளென்று கருதுபவர் குருவாக விளங்கும் தகுதி பெற்றவர். அதற்கு மாறாக, “என் குருவைவிடச் சிறப்பாகப் பேசுமளவிற்கு நான் முன்னேறியுள்ளேன்,” என்று ஒருவன் சொன்னால், அவன் அயோக்கியனாகவே இருக்க வேண்டும். பகவத் கீதையில் (4.2) ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:

 

ஏவம் பரம்பராப்ராப்தம்         இமம் ராஜர்ஷயோ விது:

ஸ காலேனேஹ மஹதா  யோகோ நஷ்ட: பரந்தப

 

“உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் மூலமாகப் பெறப்பட்டு, அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அத்தொடர் விட்டுப் போகவே, இவ்விஞ்ஞானம் மறைந்துவிட்டதைப் போலத் தோன்றுகிறது.”

கிருஷ்ணரிடம் சரணடைய விரும்புவோர் கிருஷ்ணரின் பிரதிநிதியிடம் முதலில் சரணடைய வேண்டும். இதுவே முறையான வழிமுறை.

குருவை ஏற்பது ஃபேஷன் அல்ல

குருவை ஏற்பது வெறும் ஃபேஷன் அல்ல. ஆன்மீக வாழ்க்கையைப் புரிந்துகொள்வதில் உண்மையான அக்கறை கொண்டுள்ளவனுக்கு குருவானவர் தேவைப்படுகிறார். கடவுள், ஆன்மீக வாழ்வு, அதற்குரிய செயல்முறை, கடவுளுடனான உறவு, இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற உண்மையான அக்கறை கொண்டுள்ள ஒருவருக்கு குரு மிகவும் அவசியம். ஒரு குறிப்பிட்ட குருவிடம் செல்வது அந்த குறிப்பிட்ட தருணத்தில் ஃபேஷன் என்று எண்ணி, அதற்காக அவரிடம் செல்லக் கூடாது. குருவிடம் சரணடைய வேண்டும், சரணடையாமல் எதையும் நம்மால் கற்க முடியாது. சவால் விடுவதற்காக மட்டும் குருவிடம் சென்றால், நம்மால் எதையும் கற்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணரை அர்ஜுனன் குருவாக ஏற்றுக் கொண்ட அதே முறையில் நாமும் நமது குருவை ஏற்க வேண்டும்.

 

கார்பண்யதோஷோபஹதஸ்வபாவ:

ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:

யச் ச்ரேய: ஸ்யான் நிஷ்சிதம் ப்ரூஹி தன் மே

ஷிஷ்யஸ் தே ஷாதி மாம் த்வாம் ப்ரபன்னம்

 

“இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்ந்து எனக்கு அறிவுரை கூறுவீராக.” (பகவத் கீதை 2.7)

 

இதுவே குருவை ஏற்பதற்கான வழிமுறை. குருவானவர் கிருஷ்ணரின் பிரதிநிதி, முந்தைய ஆச்சாரியர்களின் பிரதிநிதி. எல்லா ஆச்சாரியர்களும் தனது பிரதிநிதிகள் என்று கிருஷ்ணர் கூறுகிறார்; எனவே, கடவுளுக்குக் கொடுக்கப்படும் அதே மரியாதை குருவிற்கும் தரப்பட வேண்டும். ஆன்மீக குருவிற்கான தனது பிரார்த்தனையில், விஷ்வநாத சக்ரவர்த்தி தாகூர் கூறுகிறார், யஸ்ய ப்ரஸாதாத் பகவத் ப்ரஸாத, “குருநாதரின் கருணையால் கிருஷ்ணரின் அருள் கிட்டுகிறது.” இப்படியாக அதிகாரபூர்வமான குருவிடம் நாம் சரணடையும்போது, கடவுளிடம் சரணடைகிறோம். குருவிடமுள்ள நமது சரணாகதியால் கடவுள் நம்மை ஏற்றுக்கொள்கிறார்.

 

பகவத் கீதையில் (18.66) கிருஷ்ணர் கட்டளையிடுகிறார்;

 

ஸர்வதர்மான் பரித்யஜ்ய  மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ

அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ   மோக்ஷயிஷ்யாமி மாஷுச:

 

“எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து, என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன். பயப்படாதே.”

குருவின் மூலமாக கிருஷ்ணரிடம் சரணடைதல்

“கிருஷ்ணர் எங்கிருக்கிறார்? நான் அவரிடம் சரணடைய விரும்புகிறேன்,” என்று யாராவது வாதம் செய்யலாம். ஆனால் அஃது அவ்வாறல்ல. முதலில் நாம் கிருஷ்ணரின் பிரதிநிதியிடம் சரணடைய வேண்டும், பின்பு கிருஷ்ணரிடம் சரணடையலாம்ஶீஇதுவே முறை, எனவே, ஸாக்ஷாத்தரித்வேன ஸமஸ்த ஷாஸ்த்ரை, குரு கடவுளுக்கு சமமானவர். குருவுக்கு நாம் மரியாதை செலுத்தும்போது கடவுளுக்கு மரியாதை செலுத்துகிறோம். நாம் கடவுளுணர்வு பெற முயற்சிப்பவர்களாகையால், கடவுளின் பிரதிநிதியின் மூலமாக அவருக்கு வணக்கம் செலுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். எல்லா சாஸ்திரங்களும் குரு கடவுளுக்குச் சமமானவர் என்று வர்ணிக்கின்றன. ஆனால், குருவானவர் தன்னை ஒருபோதும் “கடவுள்” என்று சொல்வதில்லை. கடவுளுக்கு மரியாதை செலுத்துவதுபோலவே குருவையும் மதிக்க வேண்டியது சீடனின் கடமை. ஆனால், “என் சீடர்கள் கடவுளைப் போலவே என்னை மதிக்கிறார்கள், எனவே நான் கடவுளாகிவிட்டேன்,” என்று குரு ஒருபோதும் எண்ணுவதில்லை. அவர் அப்படி நினைத்தால் உடனே நாயாகிறார், கடவுளாக அல்ல. எனவே, விஷ்வநாத சக்ரவர்த்தி கூறுகிறார், கிந்து ப்ரபோர் ய: ப்ரிய ஏவ தஸ்ய. குரு கடவுளின் அந்தரங்க சேவகர் என்பதால், அவருக்கு கடவுளுக்கு சமமான மரியாதை அளிக்கப்படுகிறது. கடவுள் எப்போதும் கடவுளே, குரு எப்போதும் குருவே. கடவுள் வணக்கத்திற்குரிய கடவுள், குரு வணங்கும் கடவுள் (ஸேவகபகவான்). எனவே, குருவானவர் ப்ரபுபாத என்று அழைக்கப்படுகிறார். ப்ரபு என்பது பகவானைக் குறிக்கும் சொல். பாத என்றால் நிலை. ப்ரபுபாத என்றால் கடவுளின் நிலையை ஏற்றவர் என்று பொருள். இதுவே ஸாக்ஷாத்தரித்வேன ஸமஸ்த ஷாஸ்த்ரை.

 

இறை விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற தீவிர அக்கறையிருந்தால் மட்டுமே குரு தேவைப்படுகிறார். நாகரிகத்திற்காக குருவை வைத்துக் கொள்ள நாம் முயலக் கூடாது. ஒரு குருவை ஏற்றுக் கொண்டவரின் பேச்சு அறிவுடையதாயிருக்கும். அப்படிப்பட்டவர் அபத்தமாகப் பேசுவதில்லை. இதுவே அதிகாரம் பெற்ற குருவை அடைந்துள்ளதற்கான அடையாளம். ஆன்மீக குருவிற்கு எல்லா மரியாதைகளும் வழங்கப்பட வேண்டும், அதே சமயம் அவரது கட்டளைகளை நிறைவேற்ற வேண்டுமென்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். குருவைத் தேடி அவரை அணுகுவது எப்படி என்பதை பகவத் கீதையில் (4.34) கிருஷ்ணரே கூறுகிறார்.

 

தத் வித்தி ப்ரணிபாதேன   பரிப்ரஷ்னேன ஸேவயா

உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞானம்   ஜ்ஞானினஸ் தத்த்வதர்ஷின:

 

“ஆன்மீக குருவை அணுகி உண்மையை அறிய முயற்சி செய். அடக்கத்துடன் அவரிடம் கேள்விகள் கேட்டு அவருக்குத் தொண்டு செய். உண்மையைக் கண்டவர்களான தன்னுணர்வு பெற்ற ஆத்மாக்கள் உனக்கு ஞானத்தை அளிக்க முடியும்.” சரணடைவதே முதற்படி. உயர்வான ஒருவரைக் கண்டறிந்து அவரிடம் மனப்பூர்வமாக சரணடைய வேண்டும். ஒருவரை குருவாக ஏற்பதற்கு முன்பாக, அவரிடம் நாம் சரணடையலாமா என்பதை கவனமாக ஆராய வேண்டுமென்று சாஸ்திரங்கள் பணிக்கின்றன. ஏதாவது வெறியின் காரணமாக ஒருவரை திடீரென்று குருவாக ஏற்கக் கூடாது. அஃது அபாயகரமான செயல். ஒருவன் சிஷ்யனாவதற்குத் தகுதியுள்ளவனா என்பதை குருவும் கவனிக்க வேண்டும். குரு-சிஷ்ய உறவு இவ்வாறுதான் நிலைநிறுத்தப்பட வேண்டும். எல்லாம் தெளிவாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் வழிமுறையை நாம் மனப்பூர்வமான சிரத்தையுடன் மேற்கொள்ள வேண்டும். அப்போது நாம் நேர்மையான சிஷ்யனாக பயிற்சி பெறலாம். முதலில் அதிகாரபூர்வமான குருவைத் தேடியடைந்து, அவரோடு உறவை ஏற்படுத்திக் கொண்டு அதன்படி நடக்கவேண்டும். அப்போது நம் வாழ்வு வெற்றிகரமாக அமையும். ஏனெனில் சிரத்தையுள்ள மாணவனை குரு இருளிலிருந்து வெளிச்சத் திற்குக் கொண்டுவர வல்லவர்.

முட்டாள்கள் அறிவொளியைப் பெற வேண்டும்

ஒவ்வொருவரும் அயோக்கியர்களாகவும் முட்டாள் களாகவுமே பிறக்கிறார்கள். பிறக்கும்போதே நாம் அறிவாளிகளாக இருந்திருந்தால், நாம் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? நாம் அறிவை வளர்த்துக் கொள்ளாவிடில், விலங்குகளைவிட எவ்வகையிலும் மேம்பட்டவர்கள் அல்ல. புத்தகங்கள் தேவையில்லை, நான் குருவாகிவிட்டேன் என்று ஒரு மிருகம் சொல்லலாம். ஆனால், விஞ்ஞானம் மற்றும் தத்துவத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான நூல்களைப் படிக்காமல் எவ்வாறு ஒருவன் அறிவைப் பெற முடியும்? அயோக்கிய குருமார்கள் இவற்றை தவிர்க்கப் பார்க்கிறார்கள். நாம் அனைவரும் அயோக்கியர்களாகவும் முட்டாள்களாகவுமே பிறந்துள்ளோம் என்பதையும், அனைவருமே அறிவொளி பெற வேண்டியவர்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது வாழ்வைப் பக்குவமாக்குவதற்கு அறிவைப் பெற வேண்டியது அவசியம். நமது வாழ்வை நாம் பக்குவப்படுத்தாவிடில், நாம் தோல்வியுற்றவர்கள். இஃது என்ன தோல்வி? வாழ்க்கைப் போராட்டம். நாம் ஒரு சிறந்த வாழ்வை அடைய முயற்சிக்கின்றோம், உயர்நிலையை அடையப் பார்க்கிறோம், அதற்காக நாம் கடினமாக போராடி வருகிறோம். ஆனால் உண்மையான உயர்ந்த நிலை என்ன என்பதை நாம் அறியாமல் உள்ளோம்.

 

ஜடவுலகில் நமது நிலை எதுவாக இருந்தாலும், நாம் அதனைக் கைவிட வேண்டும். நாம் நல்ல நிலையில் இருக்கலாம், கெட்ட நிலையில் இருக்கலாம்; எந்த நிலையில் இருந்தாலும், நாம் இங்கேயே தொடர்ந்து இருப்பது இயலாதது. இலட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பதால், “நான் நல்ல நிலையில் இருக்கிறேன்,” என்று நாம் எண்ணலாம். ஆனால் சிறு காலராவோ சீதபேதியோ அந்த நிலையைக் கவிழ்த்து விடும். நமது வங்கி முறிந்துவிட்டால், நாமும் நஷ்டமடைந்து   போவோம். எனவே, நல்ல நிலை என்பது இந்த ஜடவுலகில் எதுவுமில்லை. அவையனைத்தும் ஏமாற்றமே. எனவே, ஜடவுலகில் தன் நிலையை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பவர்கள், முடிவில் தோல்வியடைவார்கள்; ஏனெனில், இங்கே உயர்ந்த நிலை என்று எதுவுமில்லை. உயர்ந்த நிலை எதுவென்பதை பகவத் கீதை (14.26) கூறுகிறது.

 

மாம் ச யோவ்யபிசாரேண    பக்தியோகேன ஸேவதே

ஸ குணான் ஸமதீத்யைதான்  ப்ரஹ்மபூயாய கல்பதே

 

“களங்கமற்ற பக்தித் தொண்டு என்னும் ஆன்மீக செயல்களில் ஈடுபடுபவன், ஜட இயற்கையின் குணங்களை உடனடியாகக் கடந்து ஆன்மீகத் தளத்திற்கு உயர்வு பெறுகிறான்.”

 

அமரத்துவம் அடைவதற்கான அறிவைத் தரக் கூடிய விஞ்ஞானம் எங்கு உள்ளது? நம்மால் அமரத்துவத்தை அடைய முடியும், ஆனால் பௌதிகத் தளத்தில் அல்ல. பல்கலைக்கழகங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் நம்மால் இந்த அறிவைப் பெற இயலாது. வேத சாஸ்திரங்களில் புதைந்திருக்கும் அறிவினைக் கொண்டுதான் நாம் அமரத்துவத்தை அடைய முடியும். அத்தகைய அமரத்துவமே நமது சிறந்த நிலை. பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எதுவும் இனி இல்லை. இவ்வாறாக, குருவானவர் மிகப்பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் பக்குவநிலையான அமரத்துவம் அடைவதற்கு தனது சீடனை தகுதியுடையவனாக ஆக்குமளவிற்கு வழிநடத்திச் செல்ல வேண்டும். சீடன் மீண்டும் முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குச் செல்லுமளவிற்கு அவனை வழிகாட்டுவதற்கான திறனை குரு பெற்றிருக்க வேண்டும்.

mm
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

Leave A Comment