செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

செய்யும் தொழிலை உன்னதமானதாக மாற்றுதல் எவ்வாறு?

சாதாரண மக்களால் செய்யப்படும் செயலுக்கும் பக்தனால் செய்யப்படும் செயலுக்கும் இடையிலான வேறுபாட்டை விளக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் ஓர் உரையாடல்.

 

சீடன்: நாம் பற்றற்று இருக்க வேண்டும் என பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது என்ன நோக்கத்தோடு சொல்கிறார்?

ஸ்ரீல பிரபுபாதர்: நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்வதை மட்டுமே விரும்ப வேண்டும் என்ற பொருள்பட சொல்கிறார். ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத் ஈஸ காமயே, “எனக்கு பொருள் தேவையில்லை, சீடர்கள் தேவையில்லை, அழகான பெண்கள் தேவையில்லை,” என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். அப்போது அவருக்கு என்ன வேண்டுமென கோருகிறார்? “நான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும்” என்கிறாரே தவிர, “எனக்கு எதுவும் தேவையில்லை, நான் ஒன்றுமில்லாத சூன்யமாக விரும்புகிறேன்” என்று அவர் கூறவில்லை.

சீடன்: பக்தரல்லாதவர்கூட தன்னுடைய தேவை என்ன என்பதை அறிந்துள்ளான். ஆனால் கிருஷ்ணர் இல்லாமல் நல்ல முடிவுகளை அடைய முடியும் என்று அவன் கூறுகிறான்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில் அவன் ஒரு முட்டாள்; ஏனெனில், “நல்ல முடிவுகள்” என்பதன் உண்மையான பொருளை அவன் அறியவில்லை. இன்று ஒரு குறிப்பிட்ட “நல்ல முடிவிற்காக” அவன் மிகவும் சிரமப்படுகிறான், ஆனால் நாளை வேறொரு முடிவிற்காக ஆசைப்படுவான். ஏனெனில், மரணத்தின்போது அவன் தனது உடலை மாற்ற வேண்டும். சில சமயம் நாயின் உடலில் புகுந்து நல்ல முடிவிற்கு ஆசைப்படுகிறான், மற்றொரு சமயம் தேவரின் உடலை அடைந்து வேறொரு நல்ல முடிவிற்கு ஆசைப்படுகிறான். ப்ரமதாம் உபர்யத:, பிரபஞ்சம் முழுவதும் அவன் ஒரு ராட்டினத்தில் செல்வதுபோல சுற்றிக் கொண்டே உள்ளான்.

சீடன்: ராட்டினம்?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். சில சமயம் அவன் மேலான நிலைக்கு உயர்வு பெறுகிறான். பின்னர் அவன் பன்றி அல்லது நாயின் உடலை ஏற்று இழிவடைகிறான். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோன பாக்யவான் ஜீவ

குரு-க்ருஷ்ண-பிரசாதே பாய பக்தி-லதா-பீஜ

“பற்பல பிறவிகளாக பிரபஞ்சத்தில் மேலும் கீழுமாக அலைந்த பிறகு, யாரொருவன் மிகவும் அதிர்ஷ்டசாலியோ, அவன் ஆன்மீக குருவின் கருணையாலும் கிருஷ்ணரின் கருணையாலும் பக்தித் தொண்டிற்கு வருகிறான்.” (சைதன்ய சரிதாம்ருதம், மத்ய லீலை 19.151)

சீடன்: பக்தனல்லாதவன், “நாங்களும் நல்ல செயல்களைச் செய்து வருகிறோம். நீங்கள் உணவை விநியோகம் செய்கிறீர்கள், நாங்களும் உணவை விநியோகிக்கிறோம். நீங்கள் பள்ளிகளைத் திறக்கின்றீர், நாங்களும் பள்ளிகளைத் திறக்கிறோம்,” என சொல்லலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். ஆனால் நாங்கள் கிருஷ்ண உணர்வை போதிக்கக்கூடிய பள்ளிகளைத் திறக்கின்றோம், ஆனால் உங்களுடைய பள்ளிகளோ மாயையை போதிக்கின்றன. பிரச்சனை என்னவெனில், இந்த அயோக்கியர்கள் பக்தித் தொண்டிற்கும் கர்மத்திற்கும் (பௌதிக செயலுக்கும்) உள்ள வேறுபாட்டை அறிவதில்லை. பக்தியானது கர்மத்தைப் போலவே தோன்றினாலும், அது கர்மம் அல்ல. பக்தி நெறியில் இருக்கும் நாங்களும் வேலை செய்கிறோம், ஆனால் அது கிருஷ்ணரின் திருப்திக்காக உள்ளது. இதுவே வேறுபாடு.

உதாரணமாக, அர்ஜுனன் குருக்ஷேத்திர யுத்தத்தில் போர் புரிந்தான்; ஆனால் அவன் கிருஷ்ணருக்காக போர் புரிந்ததால் சிறந்த பக்தனாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறினார், பக்தோ ‘ஸி மே ப்ரியோ  மே, “நீ எனக்கு மிகவும் பிரியமான பக்தன்.” (பகவத் கீதை 4.3) அர்ஜுனன் என்ன செய்தார்? அவர் போரிட்டார், அவ்வளவே. ஆனால் அவர் கிருஷ்ணருக்காக போர் செய்தார். அதுவே இரகசியம். போர் வீரன் என்னும் தன்னுடைய நிலையை அவன் மாற்றவில்லை, மாறாக தனது மனப்பான்மையை மாற்றினான். ஆரம்பத்தில் அவன் நினைத்தான், “நான் ஏன் எனது உறவினர்களைக் கொல்ல வேண்டும்? இந்த யுத்த களத்தை விட்டு வனத்திற்குச் சென்று பிச்சையெடுத்து வாழலாம்.” ஆனால் அவன் போரிட வேண்டும் என்று கிருஷ்ணர் விரும்பியதால், இறுதியில் அவன் கிருஷ்ணரை சரணடைந்து அவரது தொண்டிற்காக போர் புரிந்தான். அவனுடைய சொந்த புலனின்பத்திற்காக அல்ல, கிருஷ்ணரின் புலனின்பத்திற்காக அதைச் செய்தார்.

சீடன்: அப்படியெனில், பக்தித் தொண்டிலும் புலனின்பம் உண்டா?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கர்மி தனது சொந்த புலனின்பத்திற்காக வேலை செய்கிறான், பக்தன் கிருஷ்ணரின் புலனின்பத்திற்காக வேலை செய்கிறான். இதுவே அபக்தனுக்கும் பக்தனுக்கும் உள்ள வேறுபாடு. இரண்டு செயல்களிலும் புலனின்பம் என்பது உண்டு; ஆனால் நீங்கள் சொந்த புலனின்பத்திற்காக வேலை செய்தால் அது கர்மம் என்றும், கிருஷ்ணரது புலனின்பத்திற்காக வேலை செய்தால் பக்தி என்றும் அறியப்படுகிறது. பக்தியும் கர்மமும் பார்ப்பதற்கு ஒன்று போல தோன்றினாலும், தரத்தினால் (தன்மையினால்) வேறுபட்டவை.

கோபியர்களின் நடத்தையை மற்றொர் உதாரணமாகக் கொள்ளலாம். கிருஷ்ணர் ஓர் அழகான பையனாக இருந்ததால், கோபியர்கள் அவரால் வசீகரிக்கப்பட்டனர். அவரை தங்களது காதலராக அடைய விரும்பியதால், நள்ளிரவு நேரத்தில் அவருடன் நடனமாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றனர். இதை மேலோட்டமாகப் பார்த்தால் அவர்கள் பாவச் செயலில் ஈடுபட்டதுபோலத் தோன்றலாம். ஆனால் மையம் கிருஷ்ணராக இருப்பதால் அவர்களின் செயலில் தவறு ஏதும் இல்லை. அதனால்தான், ரம்யா காசித் உபாஸனா வ்ரஜவது-வர்கேண யா கல்பிதா, “கிருஷ்ணரை வழிபடுவதற்கு கோபியர்கள் கடைப்பிடித்த வழிமுறையைத் தவிர சிறப்பான பாதை வேறு எதுவும் இல்லை,” என்று சைதன்ய மஹாபிரபு பரிந்துரைத்துள்ளார்.

ஆனால் அயோக்கியர்களோ, “இது நன்றாக உள்ளதே. கிருஷ்ணர் மற்றவர்களின் மனைவியருடன் நள்ளிரவில் நடனமாடினார், நாமும் சில பெண்களை சேகரித்து நடனமாடலாம், கிருஷ்ணரைப் போல மகிழலாம்,” என எண்ணுகின்றனர். இத்தகைய எண்ணம் கோபியர்களுடனான கிருஷ்ணரின் லீலையைப் பற்றிய தவறான கருத்தாகும். இத்தகைய தவறான எண்ணங்களை தவிர்ப்பதற்காக ஸ்ரீல வியாஸதேவர் (ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர்) பாகவதத்தின் ஒன்பது காண்டங்களை கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதை விளக்குவதற்காக அர்ப்பணித்துள்ளார். அதன் பின்னர், அவர் கோபியர்களுடனான கிருஷ்ணரின் நடத்தையைப் பற்றி விளக்குகிறார். ஆனால் அயோக்கியர்களோ, நேரடியாக பத்தாவது காண்டத்திற்கு, கோபியர்களுடனான கிருஷ்ணரது உறவை நோக்கி தாவுகின்றனர். இதனால் அவர்கள் ஸஹஜியர்கள் (கிருஷ்ணரைப் போல் நடிப்பவர்கள்) ஆகின்றனர்.

பக்தர்: அப்படிப்பட்டவர்களின் இதயத்தில் ஏதேனும் மாற்றம் வருமா? எப்படியோ ஒருவிதத்தில் அவர்கள் கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டுள்ளனரே?

ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. கம்சனும் கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டிருந்தான், ஆனால் விரோதியாக. அது பக்தி அல்ல. பக்தி என்பது, ஆனுகூல்யேன க்ருஷ்ணானு-சீலனம், அதாவது கிருஷ்ணருக்கு அனுகூலமாக இருக்கும் தொண்டுகளாக இருக்க வேண்டும். கிருஷ்ணரை நகல் செய்யவோ அவரை அழிக்கவோ முற்படக் கூடாது. அதுவும் கிருஷ்ண உணர்வே என்றாலும், அஃது அனுகூலமானதாக இல்லாததால் பக்தி ஆகாது.

இருப்பினும், கிருஷ்ணரது எதிரிகளுக்கும் முக்தி கிடைக்கிறது; ஏனெனில், அவர்களும் ஏதோ ஒரு முறையில் கிருஷ்ணரைப் பற்றி நினைவுகொள்கிறார்கள். அவர்கள் அருவ பிரம்மனில் முக்தியைப் பெற்றாலும், ஆன்மீக உலகில் கிருஷ்ணர் மேற்கொள்ளும் லீலைகளில் அவர்களால் பங்கேற்க முடியாது. அந்த பெறற்கரிய வாய்ப்பு கிருஷ்ணரின் மீது தூய்மையான அன்புத் தொண்டினை மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே உரித்தானதாகும்.

 

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives