ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் வழங்கிய உபதேச கதை
கருத்து
பகவத் கீதையிலும் இதர வேத சாஸ்திரங்களிலும், முழுமுதற் கடவுளே அனைத்திற்கும் உரிமையாளர் என்றும், அவருக்கு அர்ப்பணிக்காமல் உலக விஷயங்களை அனுபவிப்பவன் திருடனே என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அத்தகு திருடர்களுக்கு நாட்டில் பஞ்சம் இல்லை.
உண்மையான காவலர்களைப் போன்ற பக்தர்கள் திருடர்களைப் போன்ற அயோக்கிய நாத்திகர்களின் முகமூடியைக் கிழித்து, உண்மையை வெளிக்கொணர்கின்றனர்.
அப்போதுகூட, அந்த தந்திரக்கார திருடர்கள், “அதோ, திருடன் ஓடுகிறான்!” என்று வெறுமனே கூக்குரலிட்டு மக்களை திசைதிருப்புகின்றனர், தங்களது திருட்டை மறைத்து விடுகின்றனர்.
அதுமட்டுமின்றி, சிலர் மேலும் தந்திரமான முறையில் காவலர்களுக்கே திருட்டுப் பட்டம் கட்ட முயல்கின்றனர்: “இந்த பக்தர்கள் வேலை செய்யாமல் சமுதாயத்தின் சொத்தை திருடித் திண்கின்றனர்.” இதுதான் கலி யுகம்.
கிருஷ்ண பக்தர்களால் பெறப்படும் நன்கொடை பகவான் ஸ்ரீ ஹரியின் தொண்டில் பக்குவமாக ஈடுபடுத்தப்படுகிறது, சொந்த குடும்பத்திற்காகவோ புலனுகர்ச்சிக்காகவோ பயன்படுத்தப்படுவதில்லை.
உண்மையைச் சொன்னால், பக்தர்கள் மட்டுமே செல்வத்தை செல்வத்தின் உரிமையாளருக்காகப் பயன்படுத்துகின்றனர். பகவானுடைய சொத்தை அவருக்கு அர்ப்பணிக்காமல் அனுபவிக்கும் மனிதர்கள் நிச்சயம் திருடர்களே.