கலியை எதிர்கொள்வோம்

Must read

வழங்கியவர்: தயாள் கோவிந்த தாஸ்

கலியின் இன்றைய நடப்பைக் கண்ணில் கண்டும், ஸ்ரீமத் பாகவதம், திருவாய்மொழி இவற்றில் கண்டுள்ள கருத்துக்களை வைத்தும், கலியை எதிர்கொள்வோம் என்ற தலைப்பில் 12 பாடல்களைக் கொண்ட வெண்பா தொகுப்பினையும், அவற்றிற்கான பொருளையும் பின்வருமாரு காண்போம்.

 

உலகின் அழகை ஒருங்கே கெடுத்தார்

நிலநீர் வளங்கள் நலித்தார்கலகம்

தெருக்கள் மலியத் திணித்தார், உலகே!

வரும்நாள் கலியின் வரம். (1)

 

அழகாக இருந்த உலகத்தின் இயற்கையை ஒட்டு மொத்தமாகக் கெடுத்துவிட்டார்கள். நில வளத்தையும் நீர் வளத்தையும் நலியச் செய்தார்கள். தெருக்களில் சண்டைகள் நிறையத் திணித்தார்கள். உலக மக்களே! இனிமேல் வரப்போகின்ற நாள்களில் நடப்பவை எல்லாம் கலியின் வரமாகவே இருக்கும்.

 

பொலிவிழந்து போய்க்கிடக்கும் பொன்வயல்கள், தண்ணீர்

வலுவிழந்து போய்வறழும் வாய்க்கால்கலிநடப்பில்

நல்லபெரும் ஆக்கம் நவில்வர், வெறும்போலி!

செல்வாக்குச் சீர்கெட்ட தே! (2)

பொன்போன்ற நெல்விளையும் வயல்கள் பொலிவு இழந்து கிடக்கின்றன. தண்ணீர் இல்லாமல் வாய்க்கால் வறண்டு கிடக்கிறது. கலி காலத்தில் பெரிய ஆக்கத்திட்டங்கள் பேசுவர், இவைகள் யாவும் போலியானவை. மனிதர்களுக்கு வேண்டிய சிறந்த செல்வங்களான தானியங்கள், பால் முதலியன குன்றி வாழ்வின் செல்வாக்கு சீர்குலைந்து விட்டது.

 

கலியில் அறிவிழந்தார், கற்பதுவும் துச்சம்

மலியும் தொழிலகத்துள் மாட்டிவலியக்

கயிறு திரிவதுபோற் காயம் வருத்தி

வயிறு கழுவல்தான் வாழ்வு. (3)

 

கலியில் அறிவிழந்து விட்டார்கள். வாழ்க்கைக் கல்வி கற்பது குறைவு, பெருகும் தொழிற்சாலைகளில் சிக்கிக் கொண்டு கயிறுபோல் திரிந்து உடல் வருந்தி நிற்பர். வயிற்றுப் பிழைப்பு தவிர வாழ்வின் நோக்கம் ஏதும் தெரியாது.

 

இலங்குநூல் கல்லார், இடம்பொருள் தேறார்,

கலங்குவர் நாளும் கலியில்துலங்காத

வன்சொல் மனத்துதிக்க வாய்விடுவர், என்னில்ஓர்

இன்சொல் அறியார் எனல். (4)

 

அறிவை ஒளிபெறச் செய்கின்ற நூல்கள் கற்க மாட்டார். இடம் பொருள் அறிந்து நன்னடத்தை இருக்காது. ஒவ்வொரு நாளும் துன்பத்தில் ஆழ்வர். பயனில்லாத கடும் சொற்கள் மனத்தே உதிக்க அப்படியே வாய்விட்டுப் பேசுவர், சண்டை வளர்ப்பர். இனிமையாகப் பேசக் கற்றுக்கொள்ளவே இல்லை.

 

நீண்ட முடியழகு, நீதிமான் செல்வத்தால்

பூண்டிருந்தால் வைதிகன் பூ நூலைக்கீண்டபெரும்

வாய்திரித்தாற் கல்விமான், வாட்டம் மணத்திற்கு

ஏய்த்திடுதல் வேலை எனல். (5)

 

கலி காலத்தில் நீண்ட முடி வைத்திருந்தால் அழகு என்று கருதுவர். செல்வம் இருந்தால் நீதிமான் என்பர். பூநூல் அணிந்திருந்தால் போதும் பிராமணன் என்று மதிக்கப்படுவர், திரித்து பேசினால் கல்விமான் என்பார்கள். வெளியழகே திருமணத்திற்குப் போதுமானது. ஏய்ப்பதுதான் வேலையாக இருக்கும்.

 

திருடர் அரசாள்வர் தீதடைவர் மக்கள்

பொருளும்தம் பெண்டிரும் போவர்பெருந்துயரால்

நாட்டில் நகரில் நலமுற்று வாழாது

காட்டிற்குச் செல்வர் கசிந்து. (6)

 

போகப்போகக் கலியில், அரசர்கள் யாவரும் திருடர்களாகவே இருப்பர். மக்கள் எந்த நன்மையையும் அடைய இயலாது. பொருளும் மனைவியும் போகும். பெரும் துன்பமடைந்து மக்கள் நாட்டிலும் நகரத்திலும் நலமுடன் வாழ இயலாது, கண்ணீர் விட்டுக் கொண்டு காட்டிற்குச் செல்வர்.

 

கலியில் மழைவறிது காயும் நிலங்கள்

வலியப் பயிர்செய்தும் வாழா நலிய

அலைந்து பசியால் அவதியுண்டாம், உண்ண

இலைவேர்கள் மற்றொன்றும் இல். (7)

 

கலியில் மழை குறைந்து விடும், நிலங்கள் காயும். முயன்று பயிர் செய்யினும் அவை வாழ மாட்டா. மக்கள் உடல் நலிந்து பசியால் அலைந்து துன்பப்படுவர். உண்ணுவதற்கு இலைகளும் வேர்களும்தான் கிடைக்கும். வேறு ஏதும் இருக்காது.

 

மதியிழந்து வாழ்வர், மதியிலர்பின் நிற்பர்,

மதியார்நல் நீதி மறைகள்- விதிகலியில்

பண்டை நடைமுறைகள் பாழாகிக் காண்பதுவும்

சண்டை நிறைந்த சபை. (8)

 

கலி யுகத்தில் மக்கள் அறிவிழந்து வாழ்வர். அறிவில்லாதவர் களால் நடத்தப்படுவர். நீதி சொல்லும் வேத இலக்கியங்களை மதிக்கமாட்டார்கள். அரச சபையில் தொன்மையான விதி முறைகள் கடைப்பிடிக்கப்பட மாட்டா, சண்டை நிறைந்ததாகவே காட்சியளிக்கும்.

 

கைவலிந்தால் மன்னரென்பர் காமந்தான் மையமென்பர்,

பைநிறைந்தால் வெற்றிப்பண் பாடிடுவர், – ஐயமின்றிப்

பொய்யுரைத்தால் வாணிபத்தைப் போற்றிடுவர், வையத்துள்

மெய்யுரைத்தும் ஏவல் மிகும். (9)

 

வலிய கையை உடையவரை மன்னராக ஏற்பர். காமமே வாழ்வின் மையமாகக் கருதப்படும். காசு பெறுவதையே வெற்றியென்று நினைப்பர். பொய்பேசுபவர்களே சிறந்த வணிகர்களாகக் கருதப்படுவர். உண்மை பேசினும் வறுமை மிகும்.

 

கலியைக் கெடுக்கக் கடல்வண்ணன் பக்தர்

மலியப் புகுவர்நம் மண்ணில்நலியாது

கைத்தலம் பற்றும் கதியுண்டு, கைகொடுக்கும்

சைதன்யர் தந்த சரக்கு. (10)

 

சைதன்ய மஹாபிரபு தோன்றியது முதல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு கண்ணனுடைய பக்தர்கள் நம்மண்ணில் தோன்றி நிறைவர். அவர்களால் கண்ணன் திருத்தலத்திற்குச் செல்கின்ற நல்ல கதி நமக்கு உருவாகும். சைதன்யர் கொடுத்திருக்கின்ற ஹரி நாம ஸங்கீர்த்தனமானது கலியை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.

 

எண்ணற்ற குற்றங்கள் ஏற்றுக் கலிநடந்தும்

ஒண்குணமென் றேற்றற்கு ஒன்றுண்டு, – கண்ணன்தன்

சேமத் திருப்பதங்கள் சேர்ந்துய்வோம் முக்குணம்போய்

நாமசங் கீர்த்தனத்தால் நன்கு. (11)

 

எண்ணற்ற குற்றங்களை ஏற்றுக் கலி சென்றாலும், போற்றும் படியாக அதற்கு ஒரு நல்ல குணமுண்டு. கலியில் கண்ணனின் திருநாமத்தை ஸங்கீர்த்தனமாகப் பாடினால் மட்டும் போதும், மூன்று குணங்களின் சேர்க்கையிலிருந்து விடுபட்டு, அவன் திருப்பாதங்களை பற்றி கோலோக விருந்தாவனம் சென்றடையலாம்.

 

வாழ்வுபெறும் உன்னதம் வாமனன் நாமத்தால்,

தாழ்வுபெறும் மண்ணுலகத் தாகங்கள்பாழ்கலியும்

வாழாது நாமத்தை வாய்விடுக்க, நன்குணர்ந்து

தாழாது செய்வீர் தவம். (12)

வாமனன் ஆகிய கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்வதினால் மண்ணுலகில் நம்மை வருத்தும் காமங்கள் தாழ்வடையும் நம்வாழ்வைப் பாழாக்கும் கலியும் விட்டுவிலகும். ஆதலினால் நன்கு உணர்ந்து, இடைவிடாது, கிருஷ்ணனின் நாமம் சொல்வதாகிய தவத்தை செய்வீர்களாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives