வழங்கியவர்: முனைவர் சகாதேவ தாஸ்
ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் நாம் சில பாடங்களைக் கற்க முடியும். நாமோ பெரும்பாலும் அவற்றிற்குச் செவி சாய்ப்பதில்லை. கொரோனா நமக்குக் கற்பிக்கும் சில பாடங்களை முனைவர் விளக்குகிறார்.
இயற்கையின் விதிகளைப் பின்பற்றுவோம்
காலம் மாறிக் கொண்டே உள்ளது, உலகமும் மாறிக் கொண்டே உள்ளது. நாம் மாறிக் கொண்டுள்ளோமா என்பதே கேள்வி. சுமார் இருநூறு ஆண்டுகளாக நாம் பழகியுள்ள இந்த தொழிற்சாலை நாகரிகம் ஒரு முக்கிய கட்டத்தினுள் நுழைந்துள்ளது, கர்ம வினைகள் பலன் கொடுக்கத் தொடங்கியுள்ளன. நீண்ட காலம் கூத்தாடி விட்டோம், இப்போது வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. நமது பூமியும் இயற்கையும் இந்த ஓட்டம் மிகுந்த வாழ்விற்கு இனிமேல் ஆதரவளிக்க இயலாது. இவ்வுலகம் மிகவும் நுணுக்கமான சம நீதி கொண்ட சட்டங்களுடன் செயல்படுகிறது, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படுதல் நமக்கு உதவாது. படைப்பின் நியமங்களை நாம் பின்பற்றினால், உலகம் மிகச்சிறந்த நன்மையை அடையும்; மாறாக, அதன் சூட்சும விதிகளை மறுத்தால், அந்த நன்மைகளை இழப்பது மட்டுமின்றி, விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
நாம் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்து வந்தோம். ஆனால், தொழிற்சாலைகளை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய நாகரிகத்தின் மூலமாக அவையனைத்தும் மாறி விட்டன. இயற்கையைச் சுரண்ட முடியும் என்பதைக் கற்றுக் கொண்டு, இயற்கை நமக்கு விதித்த நியமங்கள் ஒவ்வொன்றையும் விஞ்ஞானத்தையும் தொழில்
நுட்பத்தையும் கொண்டு கடக்க முயன்றோம். இயற்கைக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருந்த போரில் நாம் வெற்றியை நோக்கிச் செல்வதாக எண்ணிக் கொண்டிருந்தோம். ஆயினும், இந்த அறியாமை மீண்டும் ஒருமுறை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. பாடம் கற்றுக்கொள்வதில் நாம் ஆர்வமின்றி இருப்பதால், நம்மை நாம் சிறந்தவர்களாக நினைத்துக் கொண்டுள்ளோம். உண்மையோ, வேறுவிதமாக உள்ளது, நாம் எத்தனையோ உயிரினங்களுக்கு மத்தியில் வாழும் மற்றொரு சாதாரண உயிரினமே.
கனவுகளைச் சிதைத்த கொரோனா
தற்போதைய சிக்கல் மிகுந்த சூழ்நிலையில், நமது எல்லா விஞ்ஞான அமைப்புகளும் கையும் களவுமாக மாட்டிக் கொண்டுள்ளன. விஞ்ஞானிகள் நமக்கு நிலாவில் வீடு தருவதாகவும், 2020இல் செவ்வாயில் கால் பதிப்பதாகவும் உறுதியளித்திருந்தனர். ஆனால் இன்று வீட்டை விட்டே வெளியில் கால்பதிக்க முடிவதில்லை. நோய்களை அகற்றி மனிதனை அமரனாக்குவோம் என்று கூறினர், ஆனால் இன்று ஆயிரக்கணக்கானோர் மடிகின்றனர், மருத்துவ வசதிகள் உலகெங்கும் சிதைந்து நிற்கின்றன. பணக்கார நாடுகள், ஏழை நாடுகள் என அனைவரும் மடிந்துபோன, மடியக் கிடக்கும் குடிமக்களின் தேவைகளை நிறைவு செய்யப் போராடுகின்றனர். அவர்களுடைய மிகப்பெரிய விஞ்ஞான பிரகடனங்கள் யாவும் பின்தேதியிட்ட காசோலையாக நிற்கின்றன. (எந்தவோர் அறிவுள்ள மனிதனும் பின்தேதியிட்ட காசோலைகளை வைத்து செலவுகளைத் திட்டமிட மாட்டான்.
இயற்கைக்கு எதிராக நிகழ்ந்து கொண்டிருந்த போரில் நாம் வெற்றியை நோக்கிச் செல்வதாக எண்ணிக் கொண்டிருந்தோம். ஆயினும், இந்த அறியாமை மீண்டும் ஒருமுறை முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுள்ளது. பாடம் கற்றுக்கொள்வதில் நாம் ஆர்வமின்றி இருப்பதால், நம்மை நாம் சிறந்தவர்களாக நினைத்துக் கொண்டுள்ளோம். உண்மையோ, வேறுவிதமாக உள்ளது, நாம் எத்தனையோ உயிரினங்களுக்கு மத்தியில் வாழும் மற்றொரு சாதாரண உயிரினமே.
கொஞ்சம் பணிவினை ஏன் வளர்த்துக்கொள்ளக் கூடாது?
நாம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் உன்னத இயக்குநர்கள் அல்ல என்பதை ஏன் ஒப்புக்கொள்ளக் கூடாது? பிரபஞ்சத்தின் இரகசியங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதை ஏன் ஒப்புக்கொள்ளக் கூடாது? ஆனால் இந்த பெயரளவு நிபுணர்களோ எல்லாம் அறிந்தவர்களைப் போல பேசுகின்றனர். அவர்கள் ஒரே சமயத்தில் கதியற்றவர்களாகவும் வெட்கமற்றவர்களாகவும் உள்ளனர்.
இந்த வைரஸை உதாரணமாகப் பாருங்கள். இது 0.85 ஆட்டோகிராம் எடையைக் கொண்டதாகும். ஒரு மனிதனை நோயுறச் செய்வதற்கு சுமார் 7,000 கோடி வைரஸ்கள் தேவைப்படுகின்றன, அவற்றின் கனம் சுமார் 0.0000005 கிராம் மட்டுமே. உலகம் முழுவதிலுமுள்ள 20 இலட்சம் நோயாளிகளைக் கணக்கில் எடுத்தால், இந்த தீய வைரஸின் ஒட்டுமொத்த கனம் சுமார் ஒரு கிராம் மட்டுமே. அதாவது, ஒரு கிராம் வைரஸ் மனித நாகரிகம் முழுவதையும் மண்டியிட வைத்து விட்டது. நமது அறிவியல் முன்னேற்றம் என்னும் மாயையை இது தகர்த்து விட்டது. இந்த ஒரு கிராம் வைரஸ் கடந்த 200 ஆண்டு கால விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தினை மிரட்டி வருகிறது. இந்த எளிய உண்மையினை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இயற்கையுடன் இணைந்து வாழப் பழக வேண்டும்.
உருக்குலையும் நாகரிகம்
இயற்கை இவ்வுலகினை மாபெரும் கடல்களைக் கொண்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரித்துள்ளது. நாம் அதனை ஒரு பெரிய கிராமத்தைப் போன்று சுருக்கியுள்ளோம். உலகமயமாக்கல் என்னும் தாகம் செயற்கையானதும் அபாயகரமானதுமாகும். நாகரிகங்கள் எப்போதும் தத்தமது உள்ளூர் சூழ்நிலைகளில் நிலைத்து வளர்ச்சி பெற்றுள்ளன. இயற்கை நம்மை மீண்டும் உள்ளூரில் சுய சார்புடன் வாழ்வதற்கு கட்டாயப்படுத்துகிறது.
“சிறப்பான வாழ்விற்கு ஆசைப்படு, ஆனால் மோசமான வாழ்விற்கு தயாராக இரு,” என்னும் ஆங்கில பழமொழியை நினைவிற்கொள்வோம். நவீன மனோவியல் தந்தைகளில் ஒருவரான கார்ல் ஜங் என்பவருடைய கூற்றின்படி, மக்களால் அதிகப்படியான உண்மையினை தாங்கிக்கொள்ள இயலாது. அத்தகு உண்மைகளில் ஒன்று யாதெனில், மனித வரலாற்றில் எத்தனையோ நாகரிகங்கள் முடிவிற்கு வந்துள்ளன என்பதாகும். உண்மையில் நிலைத்து நின்ற நாகரிகங்களைக் காட்டிலும் உருக்குலைந்துபோன நாகரிகங்களே அதிகம்.
நம்முடைய தற்போதைய நாகரிகமும் அந்த அழிவுற்ற நாகரிகங்களின் பட்டியலில் இணைய நேரிடலாம்; ஒரு வேறுபாடு என்னவெனில், தற்போதைய நாகரிக அழிவு என்பது உலகம் முழுவதையும் பாதிக்கும், ஒட்டுமொத்த சமுதாய வாழ்வையும் மிரட்டும். நாகரிகங்கள் எப்போதும் அந்தந்த பகுதிகளில் மட்டும் காணப்பட்டு வந்தன, ஒட்டுமொத்த மனித சமுதாயமும் ஒரே பொதுவான விதியினை சந்திப்பது இதுவே வரலாற்றில் முதல்முறையாக நிகழ்கிறது.
வினை விதைத்தவன் வினையறுப்பான்
எவ்வாறு எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைப்பது நல்ல கொள்கையாக இருக்காதோ, அவ்வாறே உலகமயமாக்கலும் சரியான கொள்கை அல்ல. அதற்கான பயனை நாம் தற்போது இந்த கொரோனா தொற்றுநோயின் மூலமாக அனுபவித்து வருகிறோம். பௌதிக உலகம் எப்போதும் பெரியபெரிய இன்னல்கள் நிறைந்ததே. ஆயினும், முந்தைய இன்னல்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டுமே பாதித்தன. தற்போது நாம் உலகளாவிய பேரழிவிற்கு நம்மை தயார் செய்ய வேண்டியுள்ளது.
நாம் நமது தேவைகளுக்காக உலகின் மற்றொரு பகுதியை நம்பி வாழ்வதும் உலகின் எல்லா பகுதிகளுக்கும் இடையிலான பயணத் தொடர்புகளுமே இதற்கு காரணம். முன்பு நாம் தனித்து துன்பமடைந்தோம், இப்போது அனைவரும் இணைந்து சீரழிகின்றோம். வினை விதைத்தவன் வினையறுப்பான் என்னும் பழமொழி மிகவும் பொருத்தமானதே. இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமரான டோனி பிளேயர் அவர்கள் அக்டோபர் 2006இல் சரியாகக் கூறினார், “நமக்கு இன்னும் 10 முதல் 15 வருடங்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. பேரழிவினை வழங்கக்கூடிய செயல்களில் நாம் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்.”
இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதும் அதற்கேற்ற சூழ்நிலைகளுமே நீடித்த நாகரிகத்திற்கு உதவும். இந்த நாகரிகத்தின் வருங்காலத்தைப் பற்றி End of Modern Civilisation and Alternative Future என்னும் எனது நூலில் 2008லேயே நான் விவாதித்துள்ளேன்.
தொழிற்சாலைகளில் விலங்குகளைக் கொல்லுதல்
இந்த வைரஸிற்கு, உணவிற்காக எல்லா விலங்குகளையும் விற்கும் சீனாவின் வூஹான் சந்தையே காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, நாம் அப்பாவி விலங்குகளின் மீது கொடூரமான தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறோம். இந்த கொடூரத்தன்மை மனித சமுதாயத்தில் நீண்ட காலமாக இருந்துவந்துள்ள
போதிலும், நாம் அதனை தற்போது தொழிற்சாலைகளின் தொழிலாக்கி விட்டோம். இதனால், இதுவரை கண்டிராத கொடூர மிருக வதையை இன்றைய சமுதாயம் கண்டு வருகிறது.
மக்கள் உணவிற்காக (அல்லது பொழுதுபோக்கிற்காக) எப்போதும் மிருகங்களைக் கொன்று வந்துள்ளனர். ஆனால் இயந்திரங்களைக் கொண்டு தொழிற்சாலைகளில் அவற்றை வதைப்பது நவீன கால கண்டுபிடிப்பாக உள்ளது. விலங்குகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் எடுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் ஒருபோதும் நிகழவில்லை. இன்றைய கசாப்புக்கூடங்களில் அதுதான் நிகழ்கிறது.
மனித சமுதாயம் அதன் இயல்பான சைவ உணவிற்கு மீண்டும் மாறுதல் அவசியம். மாமிசம் உண்பவர்கள் இதர மாமிச உண்ணிகளைப் போன்று வெளியே சென்று வேட்டையாடி உண்ணட்டும். வசதியான கசாப்புக் கூடங்களை அமைத்து உலகளவில் நடைபெறும் வியாபாரம் வேண்டாமே. இந்த உலகம் நமது புலனின்பத்திற்காக அல்ல என்பதையும், இதில் நாம் ஓர் அற்பமான துகள் என்பதையும் உணருதல் நலம்; இவற்றை ஏற்பது கடினமாக இருந்தாலும், ஏற்றல் நன்று.
கோழிகளால் வரவிருக்கும் வருங்கால வைரஸ்
கோழிகள் சின்னஞ்சிறு பெட்டியில் அடைக்கப்பட்டு கொடூரமாக வாழ்கின்றன, பூமியிலேயே நரகத்தை அனுபவிக்கின்றன. அத்தகு கோழிப் பண்ணையிலிருந்து அடுத்த வகையான பெரிய வைரஸ் ஏற்படும் என்று New York Post பத்திரிகையில் மே 30 அன்று செய்தி வெளியிட்டுள்ளனர். அதில் மருத்துவ விஞ்ஞானியான முனைவர் மைக்கேல் கிரேகோர் என்பவர், தூய்மையின்றி நெரிசலாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோழிகளிலிருந்து உருவாகும் வைரஸ் மனித இனத்தில் பாதியை அழிக்கக்கூடிய திறனுடன் இருக்கும் என்று கூறியுள்ளார்.
மனித சமுதாயம் அதன் இயல்பான சைவ உணவிற்கு மீண்டும் மாறுதல் அவசியம். மாமிசம் உண்பவர்கள் இதர மாமிச உண்ணிகளைப் போன்று வெளியே சென்று வேட்டையாடி உண்ணட்டும். வசதியான கசாப்புக் கூடங்களை அமைத்து உலகளவில் நடைபெறும் வியாபாரம் வேண்டாமே. இந்த உலகம் நமது புலனின்பத்திற்காக அல்ல என்பதையும், இதில் நாம் ஓர் அற்பமான துகள் என்பதையும் உணருதல் நலம்; இவற்றை ஏற்பது கடினமாக இருந்தாலும், ஏற்றல் நன்று.
கொரோனாவிடமிருந்து மேலும் என்ன கற்றுக்கொள்ளலாம்?
* இயற்கை தன்னுடைய இடத்தை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பிடித்துக்கொள்ளும்.
* விலங்குகளுடன் இணக்கமாக வாழ்வதற்கான கலையை கற்றுக்கொள்ளும் நேரமிது.
* நமது அடிப்படை வாழ்வாதாரமாகத் திகழும் நிலத்திற்கும் விவசாயத்திற்கும் திரும்பிச் செல்ல வேண்டியது அவசியமாகிறது.
* வெகு வேகமாக நிகழும் நகரமயமாக்கல் செயற்கையானது, மனித வாழ்வின் தன்மைக்கு முற்றிலும் எதிரானது. வருங்காலத்தில் கிராமமயமாக்கல் என்னும் புதிய நிலை நிச்சயம் மேலோங்கும்.
* இயற்கையையும் விலங்குகளையும் தொந்தரவு செய்யும் நமது பழக்கம் ஒரு மாபெரும் குற்றச் செயல். மனித வளம் என்பது இயற்கையின் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டதே.
* அளவிற்கு அதிகமாக இயற்கையை வஞ்சிப்பதே தற்போதைய பிரச்சனைக்கு அடிப்படையாக உள்ளது, இந்த பூமியினால் தற்போதைய வாழ்க்கை முறையை இனிமேல் தாங்க இயலாது.
* நாம் விரும்பினாலும் விரும்பாவிடினும், தொழிற்சாலைகள் இல்லாத விவசாய வாழ்விற்கு நாம் மீண்டும் திரும்பியாக வேண்டும். அது நிகழும் என்பதில் ஐயமில்லை, எப்போது என்பதுதான் கேள்வி.
* வருங்கால மனித சமுதாயம் உலகமயமாக்கலைச் சார்ந்ததாக இருக்காது, உள்ளூர் உற்பத்தியைச் சார்ந்தே அமையும்.
* தற்போதைய சிக்கல் நமக்கு ஒரு முன்னெச்சரிக்கை மட்டுமே. வருங்காலத்தில் நிகழவுள்ள பெரிய பிரச்சனைகளுக்கு நாம் நம்மை தயார் செய்தல் நன்று.
* மனித சமுதாயம் இன்பமாக வாழ்வதற்கு, பௌதிக திருப்திக்கு அப்பாற்பட்ட ஆன்மீகத் தேவை ஒன்று உள்ளது.
* “எளிமையான வாழ்வு, உயர்ந்த சிந்தனை” என்ற நோக்கத்துடன் சுயசார்புடைய கிராமங்களைப் பற்றி சிந்திப்போம். இன்று ஆயிரக்கணக்கான மக்கள் தாமாக முன்வந்து எளிய வாழ்வை ஏற்று வருகின்றனர், மன உளைச்சலைக் கொடுக்கும் பெரியபெரிய வேலைகளைக் கைவிட்டு விவசாயத்திற்குத் திரும்புகின்றனர். அவர்கள் சிறிய நிலம், ஒன்றிரண்டு பசுக்களுடன் வாழ ஆரம்பித்து விட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்று ஆயிரக்கணக்கான பண்ணைகள் உருவாகியுள்ளன. நகரங்களிலும், பலர் தங்களது காய்கறிகளை வீட்டில் (மொட்டை மாடிகளில்) வளர்க்கத் தொடங்கியுள்ளனர்.
* அரசியல்வாதிகளால் எப்போது நிர்வகிக்க முடியவில்லையோ, அப்போது அவர்கள் உடனடியாக போர்களைப் பற்றிப் பேசி மக்களின் கவனத்தை திசைதிருப்புவர்.
முன்னேற்றம் என்பது மக்களுடைய முன்னேற்றமாக இருக்க வேண்டுமே தவிர பொருட்களுடைய முன்னேற்றமாக இருக்கக் கூடாது. நம்மிடம் சிறப்பான சாலைகள் உள்ளன, சிறப்பான கணினிகள் உள்ளன, சிறப்பான கட்டிடங்கள் உள்ளன; ஆனால் மக்களோ நாய்களின் தரத்திற்கு மாறி வருகின்றனர். உண்மையில், இன்றைய மக்களை விலங்குகள் என்று கூறுதல் விலங்குகளை அவமதிப்பதாக அமையும்.
இதுகுறித்து மேலும் பலவற்றைக் கூறலாம், மற்றொரு நாளில்.