சம்பூகனை இராமர் வதம் செய்தது சரியா?

Must read

வழங்கியவர்கள்: ஸந்தான கிருஷ்ண தாஸ், ஸ்ரீ கிரிதாரி தாஸ்

சம்பூக வதம்—இராமாயணத்தில் காணப்படும் எளிமையான சம்பவம், ஆனால் பலரும் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி இராமருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கின்றனர். இதுகுறித்த ஒரு பார்வை.

வேத கால மன்னர்கள் இன்றைய ஆட்சியாளர்களைப் போல சுயநலனிற்காக சட்டத்தை மீறுபவர்களாக அல்லாமல், தர்மத்தின்படி ஆட்சி புரிந்தனர்; தன்னுடைய மகிழ்ச்சியும் குடும்பத்தினருடைய மகிழ்ச்சியும் இரண்டாம் பட்சமே. இத்தகைய மன்னர்களில் தலைசிறந்தவராகத் திகழ்ந்தவர் பகவான் ஸ்ரீ இராமர்.

மக்கள் ஆன்மீக விஷயங்களில் அதிகம் ஈடுபாடு காட்டாத இன்றைய சூழ்நிலையில்கூட, “இராம ராஜ்ஜியத்தை அமைப்போம்,” என அரசியல்வாதிகள் தேர்தல் வாக்குறுதி தரும் அளவிற்கு இராமர் ஆட்சியாளர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்கிறார். இருந்தும்கூட, அவ்வப்போது சில அரைவேக்காட்டு மனிதர்கள் அவரது செயல்களை தவறாக விமர்சிக்கின்றனர். அவற்றில் ஒன்று, தவம் செய்த சூத்திரன் சம்பூகனை பகவான் இராமர் வதம் செய்த சம்பவமாகும்.

இராமர் முழுமுதற் கடவுள், பூரண சுதந்திரமானவர், எந்தச் சட்டத்திற்கும் எதற்கும் கட்டுப்பட்டவர் அல்லர். எனவே, அவரது சார்பாக யாரும் வாதிடத் தேவையில்லை. இராமாயணத்தை முறையாகப் படிப்பவர்கள் எல்லா ஐயத்திலிருந்தும் விடுபட்டு, பகவான் ஸ்ரீ இராமரை பிறழாத மனதுடன் வழிபடுவர் என்பது உறுதி. அதே சமயத்தில், இராமாயணம் படிக்காதவர்கள் பலர் குற்றம் காண்பதற்காகவே இராமாயணத்தைப் படித்துள்ள அறிவிலிகளின் வாதங்களினால் சஞ்சலமடையலாம் என்பதால், பகவான் ஸ்ரீ இராமருக்கான ஓர் எளிய சேவையாக, அயோக்கியர்களின் விமர்சனங்களுக்கு சாஸ்திரத்தின் அடிப்படையில் இங்கு விளக்கமளிக்க முயல்கிறோம்.

இராமாயணத்தின் வரிகள்

முதலில், சம்பூக வதம் குறித்து இராமாயணத்தில் என்னதான் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைச் சுருக்கமாகக் காண்போம்.

ஒருநாள் வயதான பிராமணர் ஒருவர் தமது பதினான்கு வயது மகன் இறந்தமைக்காக, இராமர் தமது கடமையில் அலட்சியமாக இருக்கின்றார் என்று அரசவையில் குற்றம் சாட்டினார். இதுகுறித்து இராமர் ஆலோசனையில் ஈடுபட்டபோது, சம்பூகன் என்னும் சூத்திரனுடைய கடுமையான தவமே பிராமண சிறுவனின் மரணத்திற்கு காரணம் என்றும், அவனது தலை கீழே விழும்போது சிறுவன் மீண்டும் உயிர்த்தெழுவான் என்றும் நாரதரின் வாயிலாகத் தெரிந்து கொண்டார்.

சம்பூகனை தேடிச் சென்ற இராமர், தனது நாட்டின் தென்பகுதியில், ஒரு பெரிய மலைக்கும் ஒரு பெரிய ஏரிக்கும் அருகில், அவன் தனது தலையைக் கீழே தொங்கவிட்டவாறு கடுமையாக தவம் செய்வதைக் கண்டார். அவனைப் பற்றி ஒரு சில வரிகளில் விசாரித்த இராமர், உடனடியாக தமது உடைவாளால் அவனது தலையைக் கொய்தார். அப்போது, விண்ணவர்கள், “அற்புதம்! அற்புதம்! அற்புதம்!” என்று பூமாரி பொழிந்தனர். மன நிறைவடைந்த தேவர்கள் இராமரிடம், “எம்பெருமானே! நீங்கள் எமக்கு பேருதவி புரிந்தீர்கள்! சிறப்பான இச்செயலால் இந்த சூத்திரன் அறநெறிகளை மீறி ஸ்வர்கத்தை அடைவதிலிருந்து காத்தீர்கள்,” என்று அறிவித்தனர்.

பிராமணரது மகனை உயிர்ப்பிக்க விரும்பிய இராமரிடம் இந்திரன் கூறினார், “எம்பெருமானே! சூத்திரனின் தலை நிலத்தில் விழுந்த உடனேயே, அந்தக் குழந்தை மீண்டும் உயிர் பெற்று, தனது பெற்றோருடன் இணைந்துவிட்டது.”

எதிர்ப்பவர்களின் வாதங்கள்

இந்த சம்பவத்தைப் படித்து விட்டு, இராமருக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்கள் கீழ்க்காணும் மூன்று வாதங்களை முன்வைக்கின்றனர்:

(1) சூத்திரன் தவம் செய்யக் கூடாது என்பதால், அவனை இராமர் கொன்று விட்டார். இதனால் அவர் தம்மை சூத்திரர்களின் எதிரியாக நிரூபித்துள்ளார்.

(2) ஏதோவொரு மூலையில் சூத்திரன் தவம் செய்ததற்கும் பிராமணருடைய மகன் அகால மரணம் அடைந்ததற்கும் என்ன தொடர்பு?

(3) தமிழனின் விரோதியாகிய இராமர் நாட்டின் தென்பகுதியில் வாழ்ந்த சம்பூகனை, அதாவது தமிழனைக் கொன்று விட்டார்.

ஒன்றன்பின் ஒன்றாக பதிலளிப்போம்.

தலைகீழாக கடும் தவம் செய்து கொண்டிருந்த நபரை பகவான் இராமர் விசாரித்தல்.

சம்பூக வதம் இடைச்செருகலா?

சம்பூக வதம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு சர்ச்சைக்குரியதாகத் தோன்றுவதால், இதற்கு முறையாக விடையளிக்க முடியாத ஆன்மீகிகள் சிலர், உத்தர காண்டம் வால்மீகியால் எழுதப்பட்டதல்ல என்றும், சம்பூக வதம் ஓர் இடைச்செருகல் என்றும், கம்பன்கூட அதைப் புறக்கணித்தார் என்றும் வாதிட்டு நழுவுகின்றனர்.

இரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி போன்ற அறிஞர்களும் சம்பூக வதம் ஓர் இடைச்செருகல் என்று கூறுகின்றனர். இராமாயணத்தின் அதிகாரபூர்வமான பதிப்பு என்ற நோக்கத்துடன் Critical Edition என்ற பெயரில் வெளிவந்த இராமாயணத்தில் சம்பூக வதம் அகற்றப்பட்டு விட்டது. எனவே, ஒரு சிலர் இதனை இடைச்செருகல் என்று கூறி விட்டு ஒதுங்கிக்கொள்ள விரும்பலாம்.

ஆயினும், சுமார் 800 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவரும் இடைச்செருகல்கள் குறித்து அப்போதே விவாதித்தவருமான ஸ்ரீபாத மத்வாசாரியர் சம்பூக வதத்திற்கு விளக்கமளித்துள்ளார் என்பதை வைத்துப் பார்க்கும்போது, நிச்சயம் சம்பூக வதம் இடைச்செருகல் அல்ல என்று முடிவு செய்யலாம்.

எனவே, அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக ஆச்சாரியர்களின் கூற்றுகளை வைத்து சம்பூக வதத்தினை ஆராய்வோம்.

இராமர் சூத்திரர்களுக்கு எதிரியா?

சம்பூக வதத்தை வைத்து இராமரை சூத்திரர்களின் எதிரியாகக் காண்பிக்க சிலர் விரும்புகின்றனர். ஆனால், இராமரது ஆட்சியில் நான்கு வர்ணத்தவர்களும் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருந்ததை இராமாயணத்தின் பல இடங்களில் காண்கிறோம்.

இன்னும் ஆழமாகப் பார்த்தால், நான்கு வர்ணத்தவர் மட்டுமின்றி வர்ணத்திற்கு வெளியே வாழ்ந்தவர்களையும் இராமர் அன்புடனும் பண்புடனும் மரியாதையுடனும் நடத்தினார், யாரையும் இழிவாக நடத்தவில்லை. இராமர் வேடனான குகனைக் கட்டித் தழுவி “குகனோடு ஐவரானோம்” என்று கூறினார். அவர் சூத்திரர்களை அவமதிப்பவராக இருந்திருந்தால், குகனை எவ்வாறு தமது சகோதரரில் ஒருவராக ஏற்றிருப்பார்?

இராமாயணம் சூத்திரர்களை அவமதிக்கும் காவியம் என்றால், வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இரத்னாகர், நாரதரின் வழிகாட்டுதலை ஏற்று, இராமாயணத்தை எவ்வாறு எழுதியிருக்க முடியும்? அவர் தன்மீது புற்று ஏற்படும்படி கடும் தவம் புரிந்ததால், வால்மீகி (“புற்றிலிருந்து பிறந்தவர்”) என்று பெயர் பெற்றார். சூத்திரனான சம்பூகனின் தவத்தை ஏற்காத இராமர், திருடனான வால்மீகியின் தவத்தை எவ்வாறு ஏற்றார்?

காட்டில் வசித்து வந்த வயதான பெண் தபஸ்வியான சபரி, சூத்திர குடும்பத்தைச் சார்ந்தவளாக இருந்தும், ஸ்ரீ இராமரால் பெரிதும் மதிக்கப்பட்டாள். சபரியின் குருவாகிய மாதங்க மகரிஷியும் சண்டாள குடும்பத்தில் பிறந்து பிராமண நிலைக்கு உயர்வு பெற்றவர் என்பதை அறிகிறோம்.

இராமர், பிராமணனாகப் பிறந்து கடும் தவம் புரிந்த இராவணனைக் கொன்றார், பிராமணரான பரசுராமரிடம் போரிட்டு அவரது தவத்தின் பலன்களை அழித்தார். இதனால், இராமர் பிராமணர்களை வெறுப்பவர் என்று கூறலாமே! வானர மன்னன் வாலியைக் கொன்றதால், மிருகங்களை வெறுப்பவர் என்று அவரைக் கூறலாமே? எனவே, தயவுசெய்து இதுபோன்ற முட்டாள்தனமான வாதங்களை முன்வைக்காதீர்!

ஆகவே, இராமர் சம்பூகனைக் கொன்றதற்கு “அவன் ஒரு சூத்திரன்,” என்பதை காரணம் கூறுவதை விடுத்து, அதன் பின்புலத்திலுள்ள மற்ற விஷயங்களையும் ஆராய வேண்டியது அவசியமாகிறது.

சம்பூகனின் குற்றங்கள்

இந்த சம்பவத்தை சற்று கவனித்தால், மூன்று விஷயங்கள் தெளிவாகப் புலப்படும்:

(1) சம்பூகன் சாஸ்திர விதிகளுக்குப் புறம்பாக கடும் தவம் புரிந்து ஸ்வர்கத்தை அடைய முயன்றான்.

பகவத் கீதையில் (17.19) தவங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது பகவான் கிருஷ்ணர் சுட்டிக்காட்டுகிறார், “பிறரை அழிப்பதற்காகவோ துன்புறுத்துவதற்காகவோ, அல்லது தன்னையே வருத்திக் கொண்டு முட்டாள்தனமான முறையில் செய்யப்படும் தவங்கள், தமோ குணத்தில் இருப்பவையாகக் கருதப்படுகின்றன.”

அசுரர்களான ஹிரண்யகசிபு, இராவணன் மட்டுமின்றி, சம்பூகனின் தவமும் இப்பிரிவில் அடங்குகின்றது. இவற்றை முளையிலேயே கிள்ளுதல் அவசியமானதாகும். ஸ்வர்கத்தை வெல்வதற்கான தவத்தில் ஈடுபட்ட தனது மகன் ஜலந்தரனை சிவபெருமான் கொன்ற சம்பவத்தையும் இங்கு ஒப்பிடுதல் நலம்.

(2) சம்பூகனின் தலை தரையில் விழுந்த உடனேயே, பிராமணரின் குழந்தை மீண்டும் உயிர்த்தெழுந்தது. இதிலிருந்து குழந்தையின் மரணத்திற்கு சம்பூகனின் தவமே காரணம் என்பது உறுதியாயிற்று.

ஒருவருடைய தவத்திற்கும் மற்றொருவருடைய மரணத்திற்கும் என்ன தொடர்பு? இதுவே கர்ம விதிகளின் சூட்சும செயல்பாடாகும். இந்த உலகம் தான்தோன்றித்தனமாகச் செயல்படவில்லை. நல்லோர் சிலருக்காக எல்லாருக்கும் மழை பெய்கிறது என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதுபோலவே, தீயோர் சிலரினால் எல்லாருக்கும் தீமையும் நிகழ்கிறது. இயற்கையின் விதிகளை அறியாத முட்டாள்கள் மட்டுமே ஒருவன் தவமிருக்க மற்றொருவன் எவ்வாறு மடிவான் என்று கேள்வி எழுப்புவர்.

(3) தேவர்கள் பகவான் இராமசந்திரரின் மீது பூமாரி பொழிந்ததன் மூலமாக, சம்பூகனின் வதம் சரியே என்பதைச் சுட்டிக்காட்டினர். இராமரின் செயல் தவறாக இருந்திருந்தால், தேவர்கள் நிச்சயம் இராமரை வாழ்த்தி நன்றி சொல்லியிருக்க மாட்டார்கள்.

தண்டனை அனைவருக்கும் பொதுவானது

அந்நிய நாட்டிற்குச் செல்ல எவ்வாறு விசா தேவைப்படுகிறதோ, அவ்வாறே ஸ்வர்க லோகம் செல்வதற்கும் பல விதிமுறைகள் உள்ளன. வேத சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ள இந்த நெறிகளுக்குப் புறம்பாக, கொடூரமான தவத்தினால் ஸ்வர்கம் செல்ல முயன்றது சம்பூகனின் மாபெரும் தவறாகும். தண்டனை என்பது அனைவருக்கும் பொதுவானது; தகுதியின்றி ஸ்வர்கம் செல்ல முயல்பவன் சத்திரியனாக இருந்தாலும் சூத்திரனாக இருந்தாலும் யாராக இருந்தாலும், அவன் தண்டிக்கப்படுவான். திரிசங்குவின் வாழ்க்கையே இதற்கு சாட்சி. அவர் தமது பூலோக உடலுடன் மேலுலகம் செல்ல எண்ணினார், மன்னராக இருந்தபோதிலும் அச்செயலுக்காக தண்டிக்கப்பட்டார்.

தகுதியற்ற சாமானியன் ஒருவன் அரசு ஆவணத்தில் ஆட்சியரின் கையொப்பத்தைப் பதிவிட்டால், அச்செயல் நிச்சயம் தண்டனைக்குரியது. அதற்காக, நீதிமன்றம் சாமானியனை வஞ்சித்துவிட்டது என்று கூறலாமா? அதுபோல, தகுதியின்றி மேலுலகம் செல்ல முயற்சிப்பது மேலுலகவாசிகளுக்கு மிகுந்த தொந்தரவளிப்பதாக அமைந்துவிடும்.

சமுதாயத்தில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கு, வர்ண பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும்.

சம்பூகனின் நோக்கம் என்ன?

இராமாயணத்தின் இப்பகுதியை ஆராய்ந்துள்ள ஆச்சாரியர்கள் சம்பூகனைப் பற்றிய மேலும் பல தகவல்களை வழங்குகின்றனர்.

எல்லா மக்களையும் தம் பிள்ளைகளாகப் பாவித்து நல்லாட்சி புரிந்தவரும் எல்லா தர்மத்தையும் துல்லியமாக அறிந்தவருமான முழுமுதற் கடவுள் ஸ்ரீ இராமர் எவரேனும் ஒருவனைக் கொல்கிறார் என்றால், அவ்வாறு கொல்லப்படுபவன் நல்லவன் கிடையாது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். எனவே, சம்பூகனை “தவத்தில் ஈடுபட்ட சூத்திரன்” என்று மட்டும் பார்க்கக் கூடாது, அவனுடைய நோக்கம் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும்.

இராமாயணத்தில் அவனுடைய தவம் உக்கிரமான கடும் தவம் (ஸுமஹத்-தப:) என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பத்ம புராணத்தில்கூட (1.35.75–77) அவனது தவம் அசுரத்தனமானது என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக, சம்பூகனிடம் இராமர் விசாரித்தபோது, அவன் கூறிய பதில்: தேவத்வம் ப்ரார்தயே ராம! ஸஷரீரோ மஹாயஷ:, ந மித்யா ’ஹம் வதே ராம! தேவலோகஜிகீஷயா, “என்னுடைய தற்போதைய உடலிலேயே தேவ லோகத்தை அடைய விரும்புகிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை, உண்மையில் நான் அந்த தேவ லோகத்தை வெற்றி கொண்டு என்னுடையதாக மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.” தேவர்களை வென்று மக்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்ற சம்பூகனின் தீய நோக்கம் இதிலேயே தெளிவாகத் தெரிகிறது.

மத்வாசாரியர் தம்முடைய மஹாபாரத-தாத்பர்ய-நிர்ணய என்னும் நூலில் (9.20-21) சம்பூக வதத்தினைப் பின்வருமாறு விளக்குகிறார்:

ஜங்கநாமா ’ஸுர: பூர்வம் கிரிஜா-வரதானத:

 பபூவ ஷூத்ர: கல்பாயு: ஸ லோகக்ஷயகாம்யயா

தபஷ்சசார துர்புத்திரிச்சன்மாஹேஷ்வரம் பதம்

 அனன்யவத்யம் தம் தஸ்மாஜ்ஜகான புருஷோத்தம:

“அவன் [ஸ்ரீ இராமரால் கொல்லப்பட்ட அந்த சூத்திர தபஸ்வி] ஜங்கன் என்ற பெயரில் முன்பு அசுரனாக இருந்தவன், அன்னை பார்வதியிடமிருந்து வரம் பெற்று ஒரு கல்ப காலம் ஆயுளைப் பெற்றிருந்தான். உலகிற்கு அழிவைத் தரும் நோக்கத்துடன், துர்புத்தி கொண்ட அந்த அசுரன், சிவபெருமானின் இடத்தைப் பிடிக்க வேண்டி தவம் செய்தான். எனவே, வேறு யாராலும் கொல்ல முடியாத அவனை பகவான் ஸ்ரீ இராமர் கொன்றார்.”

வரம் கொடுத்த பார்வதியை அனுபவிக்க விரும்பியதும், அதற்காக சிவபெருமானின் நிலையைப் பெற விரும்பியதும் சாதாரண குற்றமா? கல்ப காலத்திற்கு யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என்ற கர்வத்துடன், உலகிற்கே தீமையைக் கொடுப்பதற்காக சம்பூகன் தவம் செய்தான். அதனால்தான், அவனைக் கொன்றமைக்காக தேவர்கள் அனைவரும் இராமருக்கு நன்றி தெரிவித்தனர்.

அசுரன் என்று வந்த பின்னர், பிராமணன் (இராவணன்), சூத்திரன் (சம்பூகன்), பெண் (தாடகை) முதலிய பேதங்கள் எதையும் இராமர் பார்ப்பதில்லை. அசுரர்களை அழிப்பதற்காகவே அவர் அவதரிக்கின்றார்.

கருணை இல்லாத அரசனா?

ஈ.வே. ராமசாமியைப் போன்றோர் சம்பூக வதத்தைக் காரணம் காட்டி இராமன் கருணையுடைய அரசன் அல்லன் என்று குற்றஞ்சாட்டினர். சம்பூகன் ஓர் அசுரன் என்பதை அவர்கள் மறந்து விட்டனர் எனத் தோன்றுகிறது. யாரேனும் ஒரு தீவிரவாதி மக்களை ஆயிரக்கணக்கில் கொல்வதற்காக வெடிபொருட்களை தயார் செய்து கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்வோம். அவனது ஆயுத கிடங்கிற்குச் செல்லும் காவல்துறையினர் என்கவுன்டர் மூலமாக அவனைச் சுட்டுக் கொன்றால், காவல்துறைக்கு பாராட்டு தெரிவிப்போமா, எதிர்ப்பு தெரிவிப்போமா? அல்லது தீவிரவாதியின் ஜாதி அல்லது மதத்தைப் பார்த்து முட்டுக் கொடுப்போமா?

அதுபோன்றதே சம்பூக வதம். தவத்தின் மூலமாக மக்களை அழிப்பதற்குரிய சக்திகளைப் பெற்று தொல்லைகளைக் கொடுத்த பல்வேறு அசுரர்களை நாம் புராணங்களில் காண்கிறோம். அந்தப் பட்டியலில் சேர வேண்டிய சம்பூகனை பகவான் இராமர் முன்கூட்டியே என்கவுன்டர் செய்து விட்டார், அவ்வளவுதான். தீவிரவாதியைச் சிறைபிடித்து பிரியாணி கொடுத்து வளர்க்கும் பழக்கம் அக்கால மன்னர்கள் யாரிடமும் கிடையாது.

நெறி தவறாது ஆட்சி செய்யும் மன்னர்கள், மக்களின் நன்மைக்காக சில நேரங்களில் கடுமையாக நடந்துகொள்ளுதல் தவிர்க்க இயலாததாகும்.

சம்பூகன் தமிழனா?

முற்றிலும் முட்டாள்தனமான வாதம். பகவானால் கொல்லப்படும் எல்லா அசுரர்களையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டு, சம்பந்தமே இல்லாமல் அவர்களை “தமிழர்கள்” என்று ஒரு கும்பல் கூப்பாடு போட்டுக் கொண்டுள்ளது. இராவணன், நரகாசுரன் முதலிய அத்தகு போலி தமிழர்களின் பட்டியலில் சம்பூகனையும் சேர்த்துக் கொண்டுள்ளனர் அத்தகு அறிவிலிகள். இவர்களுக்கு என்னதான் வேண்டும் என்று புரியவில்லை. ஒருபுறம் இராமாயணமே கற்பனை என்று கூறுவர், மறுபுறம் இராமாயண கதாபாத்திரத்தில் இருக்கும் அசுரர்களை “தமிழர்கள்” என்று பிரகடனம் செய்வர். என்னே வித்தியாசமான பிறவிகள்!

சம்பூகனைத் தேடி வந்த இராமர் தமது நாட்டின் [அயோத்தியின்] தென்பகுதியில் சம்பூகனைக் கண்டறிந்தார் என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, திராவிட நாட்டின் தென்பகுதிக்கு வந்தார் என்று கூறப்படவில்லை. தென்பகுதி என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு, தமிழன் என்று கூறுதல் எதார்த்தமற்ற வாதம்.

சம்பூகனுக்கு நன்மை செய்த இராமர்

சம்பூகனைக் கொன்றதன் மூலமாக இராமர் மூவுலகத்திற்கு மட்டுமின்றி சம்பூகனுக்கும் நன்மை செய்தார். எவ்வாறு? (1) சம்பூகன் எண்ணிலடங்காத பாவங்களைச் செய்வதிலிருந்து முன்கூட்டியே காப்பாற்றப்பட்டுள்ளான். (2) இராமரால் கொல்லப்பட்ட சம்பூகன் (பகவானால் கொல்லப்படுபவர்களும் நற்கதி அடைவார்கள் என்னும் விதிமுறைக்கு ஏற்ப) ஸ்வர்கத்திற்குச் சென்றான் என்று பத்ம புராணம் கூறுகிறது. ஸ்வர்கம் செல்ல விரும்பிய சம்பூகனின் ஆசை நிறைவேற்றப்பட்டது, அதே சமயத்தில் அவனது உடலில் அந்த ஆசையுடன் குடி கொண்டிருந்த தீய எண்ணங்கள் கொல்லப்பட்டுவிட்டன.

சூத்திரர்களுக்கான ஆன்மீகப் பயிற்சி

வேத கலாசாரத்தில், வர்ண பேதமின்றி தண்டனை வழங்கப்பட்டதைப் போல, எல்லா வர்ணத்தினருக்கும் ஆன்மீகப் பயிற்சியும் வழங்கப்பட்டது. மஹாபாரதம் உட்பட பல இடங்களில் இதுகுறித்த சான்றுகளைக் காண்கிறோம். பகவத் பக்தியின் மூலமாக சூத்திரர்களும் மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைய முடியும் என்று பகவத் கீதையில் (9.32) கிருஷ்ணர் கூறுகிறார். அதாவது, ஆன்மீக முன்னேற்றத்தைப் பொறுத்தவரையில், வர்ணம் ஒரு தடையல்ல என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நன்மை பயக்கும் இராமாயணம்

சூத்திரர்கள், பிராமணர்கள் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், அனைவரையும் ஆன்மீகத்தில் முன்னேற்றுவதற்காக இராமாயணம், மஹாபாரதம், ஸ்ரீமத் பாகவதம் முதலிய சாஸ்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் சாதாரண மனிதர்களின் பௌதிகச் செயல்களையும் வரலாற்றையும் அறிவதில் ஆவல் கொண்டுள்ளனர். ஆனால் அவற்றின் மூலமாக தங்களது மதிப்பு மிக்க காலத்தை வீணடிக்கின்றோம் என்பதை அவர்கள் அறிவதில்லை. அவ்வாறு காலத்தை வீணடிக்காமல், பகவான் இராமசந்திரருடைய தெய்வீக லீலைகளின் மீது கவனத்தைத் திருப்புவதன் மூலம், ஒருவன் ஆன்மீக வாழ்வில் வெற்றியடையலாம். பகவானுடைய தெய்வீக லீலைகளைப் புரிந்து கொண்டவனுக்கு மறுபிறவி கிடையாது என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (4.9) கூறுகிறார்.

நம்மை உய்விப்பதற்காகவே, பகவான் காரணமற்ற கருணையுடன் இந்த பௌதிக உலகில் மானிடராக அவதரித்து பற்பல தெய்வீக லீலைகளைப் புரிகின்றார். அத்தகு லீலைகளைக் கேட்பதால், அவருடன் நேரடித் தொடர்பு ஏற்பட்டு, நாம் காலங்காலமாக சேர்த்த பாவங்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. பாவங்கள் அகற்றப்படுவதால், கேட்பவர் படிப்படியாக பௌதிகத் தொடர்புகளிலிருந்து விடுபட்டு பகவானுடைய தெய்வீக ரூபத்தின் மீது கவர்ச்சியடைகிறார். இறுதியில், பகவானுடைய லோகத்தில் அவரது நேரடி சங்கத்தைப் பெறுகிறார்.

வாழ்வின் அந்த மிகவுயர்ந்த பக்குவநிலையை அடைய பகவானுடைய தெய்வீக லீலைகளை சரியான மூலத்திலிருந்து மட்டுமே கேட்க வேண்டும். அப்போது, “சம்பூகனை இராமர் ஏன் கொன்றார்?” என்பது உட்பட எல்லா வினாக்களுக்கும் முறையான விடைகளைப் பெற முடியும். மேலும், இராமாயண கதைகளை திசைதிருப்பி அதிலிருந்து ஜாதி பேதத்தைக் காட்டி குளிர்காய நினைக்கும் அயோக்கியர்களிடமிருந்தும் நாம் காப்பாற்றப்படுவோம்.

முறையாக இராமாயணம் படிப்போம், இராமரை வணங்குவோம், இராமரை அடைவோம்!

திரு  கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives