வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
கடவுளை நேருக்கு நேராகக் காண பலரும் விரும்புகின்றனர். அவரை உண்மையிலேயே காண்பதற்கான வழிமுறை என்ன, அதற்கான தேவை என்ன முதலியவற்றை ஸ்ரீல பிரபுபாதர் இங்கே விளக்கியுள்ளார்.
தச் ச்ரத்ததானா முனயோ
ஜ்ஞான-வைராக்ய-யுக்தயா
பஷ்யந்த்யாத்மனி சாத்மானம்
பக்த்யா ஷ்ருத-க்ருஹீதயா
“உண்மையான தேடுதல் உள்ள மாணவனோ அல்லது முனிவரோ, முழு அறிவு மற்றும் துறவினைக் கொண்டு, வேதாந்த ஸ்ருதி அல்லது வேத சாஸ்திரங்களில் விளக்கப்பட்டுள்ள பக்தித் தொண்டின் மூலம் பூரண உண்மையை உணர்கின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.12)
“நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா?” “உங்களால் கடவுளைக் காண்பிக்க இயலுமா?” என்று மக்கள் சில நேரங்களில் வினவுகின்றனர். நாங்கள் இதுபோன்ற வினாக்களை எதிர்கொள்வதுண்டு. “ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால், முதலில் நீங்கள் அதற்கான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.” உதாரணத்திற்கு, காரில் ஏதோ பழுது ஏற்பட்டு ஓடாமல் நிற்கும்போது, அதனை அனைவரும் காண்கின்றனர்; கார் மெக்கானிக்கும் காண்கிறார். ஆனால், மற்றவரின் பார்வையிலிருந்து மெக்கானிக்கின் பார்வை வேறுபட்டுள்ளது. காரில் ஏற்பட்டுள்ள பழுதைக் காணும் தகுதியை அவர் பெற்றுள்ளார். அதனால், அவர் காரின் பழுதை சரி செய்தவுடன் வண்டி மீண்டும் ஓட ஆரம்பிக்கின்றது. இவ்வாறாக, ஒரு காரைப் பார்ப்பதற்கே தகுதி தேவைப்படும்போது, எவ்வித தகுதியுமின்றி கடவுளைக் காண விரும்புகிறோம். என்னே மூடத்தனம்! மக்கள் எந்த அளவிற்கு முட்டாள்களாகவும் அயோக்கியர்களாகவும் இருக்கின்றனர் என்றால் தங்களது கற்பனையான தகுதிகளைக் கொண்டு கடவுளைக் காண விரும்புகிறார்கள்.
கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார், நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோக-மாயா-ஸமாவ்ருத:, “நான் அனைவருக்கும் வெளிப்படுவதில்லை. என்னுடைய சக்தியான யோக மாயை என்னை அவர்களிடமிருந்து மறைத்து விடுகிறது.” எனவே, கடவுளை உங்களால் எவ்வாறு காண இயலும்? நிலைமை இவ்வாறிருக்க, “உங்களால் கடவுளை எனக்குக் காண்பிக்க முடியுமா?” “நீங்கள் கடவுளைப் பார்த்துள்ளீர்களா?” என்பன போன்ற அயோக்கியத்தனம் உலகில் காணப்படுகிறது. கடவுள் இவர்களுக்கு ஒரு விளையாட்டுப் பொருளாகி விட்டார்; அதனால்தான் ஏமாற்றுப் பேர்வழிகள் யாரோ ஒரு சாதாரண மனிதனைக் காண்பித்து, “இவரே கடவுள், இவரே கடவுளின் அவதாரம்,” என்று விளம்பரப்படுத்துகின்றனர்.
ந மாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா:. பாவகரமான அயோக்கியர்கள், முட்டாள்கள், மனிதரில் கடைநிலையோர்—இவர்கள்தான் “கடவுளைக் காண்பிக்க முடியுமா?” எனும் கேள்வியை எழுப்புவர். கடவுளைக் காண்பதற்கு உங்களிடம் என்ன தகுதி இருக்கிறது? தச் ச்ரத்ததானா முனய:, ஒருவன் முதலில் நம்பிக்கை உடையவனாக இருக்க வேண்டும் (ஷ்ரத்ததான). இதுவே தகுதியாகும். அவன் கடவுளைக் காண்பதற்கான பேராவலுடன் இருக்க வேண்டும். இதனை ஏதோ ஓர் அற்பமான விஷயமாக நினைத்து, “எனக்கு கடவுளைக் காண்பிக்க முடியுமா?” என்று வினவக் கூடாது, இதனை ஏதோவொரு மாயாஜாலமாக நினைத்து விடக் கூடாது. அவர்கள் கடவுளை மாய வித்தையாக நினைக்கின்றனர். அது தவறு. ஒருவன் கடவுளை அறிவதில் தீவிரமாக இருந்து கொண்டு, “ஆம், கடவுளைப் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்துள்ளது. இதை வைத்து, கடவுள் இருந்தால், அவரை நான் நிச்சயம் காண வேண்டும்,” என்று சிந்திக்க வேண்டும்.
இது தொடர்பாக சுவாரஸ்யமான கதை ஒன்று உள்ளது. மிகவும் நல்லறிவு தரக்கூடிய இதனை கவனமுடன் கேளுங்கள். ஒருமுறை பாகவத உபன்யாசகர் ஒருவர் ஸ்ரீமத் பாகவதத்தை மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார். கிருஷ்ணர் பசுக்களை மேய்ப்பதற்காகக் காட்டிற்குச் செல்லும்போது, அவர் விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்து செல்வார் என்பதை அவர் விளக்கினார். அந்த மக்களிடையே திருடன் ஒருவனும் இருந்தான். அவன், “நான் ஏன் விருந்தாவனம் சென்று அந்தப் பையனிடமிருந்து கொள்ளையடிக்கக் கூடாது? அவன் பல்வேறு விலையுயர்ந்த ஆபரணங்களுடன் காட்டில் உலாவுகிறான். நான் அங்குச் சென்று அவனைப் பிடித்து எல்லா நகைகளையும் திருடலாமே!” என்று யோசிக்கலானான். அவனது அந்த நோக்கம் படிப்படியாக தீவிரமடைந்தது. “அந்தப் பையனைக் கண்டுபிடித்து விட்டால், ஒரே இரவில் நான் கோடீஸ்வரனாகி விடுவேன்,” என்று அவன் சிந்திக்கலானான்.
“கிருஷ்ணரைப் பார்த்தாக வேண்டும்! கிருஷ்ணரை நிச்சயம் பார்த்தாக வேண்டும்!” என்ற எண்ணமே அவனது தகுதியாக இருந்தது. அந்த ஆர்வமும் ஏக்கமும் அவனை விருந்தாவனத்திற்கு அழைத்துச் சென்று, அங்கே உண்மையிலேயே கிருஷ்ணரைக் காணச் செய்தது. பாகவத உபன்யாசகர் கிருஷ்ணரைப் பற்றி எவ்வாறு விளக்கினாரோ, அதே விதத்தில் அவன் கிருஷ்ணரைக் கண்டான். “கிருஷ்ணா, நீ ரொம்ப நல்ல பையன்,” என்று கிருஷ்ணரிடம் கூறிய திருடன், அத்தகு முகஸ்துதியின் மூலமாக நகைகளை எளிதாக எடுத்துக்கொள்ள நினைத்தான். சிறிது நேரம் கழித்து தன்னுடைய உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தினான், “நீ பெரிய பணக்காரன், உனது நகைகளில் கொஞ்சத்தை நான் எடுத்துக்கொள்ளட்டுமா?” “இல்லை, இல்லை. என் அம்மா கோபம் அடைவாள்! என்னால் கொடுக்க முடியாது,” என்று கூறி, கிருஷ்ணரும் ஒரு குழந்தையைப் போன்று விளையாடினார்.
அதனால், கிருஷ்ணரின் நகைகளைப் பெறுவதற்கான திருடனின் ஆர்வம் மேன்மேலும் வளர்ந்தது. அதே சமயத்தில், கிருஷ்ணரின் சங்கத்தினால் அவன் தூய்மையடைந்து கொண்டிருந்தான். இறுதியில், நகைகளை எடுத்துக்கொள்ள கிருஷ்ணர் அவனுக்கு அனுமதியளித்தார். ஆயினும், அப்போது அந்தத் திருடன் கிருஷ்ணரது சங்கத்தினால் முற்றிலும் தூய்மையடைந்து, உடனே கிருஷ்ண பக்தனாக மாறினான். இவ்வாறாக, ஏதேனும் ஒரு வகையில், நீங்கள் கிருஷ்ணரின் சங்கத்தைப் பெற்றால், நீங்களும் தூய்மை பெறுவீர்.
கிருஷ்ணரைக் காண பேராவல் கொண்டிருந்த கோபியர்களையும் இதற்கு உதாரணமாகக் காணலாம். அவர்கள் கிருஷ்ணரின் அழகினால் கவரப்பட்டு அவரிடம் வந்தனர். அவர்கள் இளம் பெண்களாக இருந்தனர், கிருஷ்ணரோ மிகவும் அழகானவராக இருந்தார். அவர்கள் கிருஷ்ணரை அணுகியபோது காம எண்ணத்துடன் வந்தனர்; இருப்பினும், கிருஷ்ணர் மிகவும் தூய்மையானவர் என்பதால், அவர்கள் முதல்தர பக்தர்களாயினர். கோபியர்களின் பக்தியை யாருடனும் ஒப்பிட முடியாது; ஏனெனில், அவர்கள் கிருஷ்ணரை ஆத்மார்த்தமாக நேசித்தனர். அதுவே அவர்களின் தகுதி. அவர்கள் எந்தளவிற்கு கிருஷ்ணரை நேசித்தனர் என்றால், நள்ளிரவில் கிருஷ்ணருக்காக வீட்டை விட்டு வெளியேறியபோது, அவர்கள் தங்களது குடும்பம், நற்பெயர் என எதையும் பொருட்படுத்தவில்லை. கிருஷ்ணரின் குழலோசையைக் கேட்ட மாத்திரத்தில், அவர்கள் அனைவரும் வீட்டை விட்டு தப்பியோட முயன்றனர். அவர்களுடைய தந்தைமார்கள், சகோதரமார்கள், கணவன்மார்கள் என அனைவரும், “எங்கே செல்கிறீர்கள்? இந்த நள்ளிரவில் எங்கே செல்கிறீர்கள்?” என்று கூறியபோதும், கோபியர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. தங்கள் பிள்ளைகள், குடும்பம் என அனைத்தையும் அவர்கள் உதாசீனப்படுத்தினர். “கிருஷ்ணரிடம் செல்ல வேண்டும்,” என்பதே அவர்களின் ஒரே எண்ணமாக இருந்தது.
இந்த ஆர்வமே நமக்கான தேவை. கிருஷ்ணரைக் காண நாம் மிகுந்த ஆர்வமுடன் இருக்க வேண்டும். கிருஷ்ணரை சந்திப்பதற்குச் செல்லக் கூடாது என்று பலவந்தமாக தடுக்கப்பட்ட சில கோபியர்கள் அந்தப் பிரிவுத் துயரால் தங்களது உயிரைத் துறந்தனர். எனவே, இந்த விஷயத்தில் ஆர்வமே மிகவும் அவசியம்; அப்போது உங்களால் கடவுளைக் காண முடியும். நீங்கள் கொள்ளைக்காரனாக, காம எண்ணம் உடையவனாக, கொலைகாரனாக, அல்லது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்—ஆனால் கிருஷ்ணரைக் காண்பதற்கான ஆர்வம் உங்களிடம் இருக்க வேண்டும். அப்போது உங்களால் கிருஷ்ணரைக் காண இயலும்.
அவரைக் காண்பதற்கு நாம் எந்தளவிற்கு ஆர்வமுடன் உள்ளோம் என்பதைப் பொறுத்து கிருஷ்ணர் நமக்கு பிரதிபலிக்கிறார். உங்களிடம் காம எண்ணம் இருக்கலாம், அல்லது அவரது நகைகளைக் கொள்ளையடிக்கும் எண்ணம் இருக்கலாம், அல்லது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஏதேனும் ஒரு வகையிலாவது கிருஷ்ணரால் கவரப்பட்டு அவரைக் காண்பதற்கான ஆர்வம் உங்களிடம் இருக்குமெனில், அதற்கான உங்களது அனைத்து முயற்சிகளும் நிச்சயம் வெற்றி பெறும்.
துருவன் பேரார்வத்தின் காரணமாக பகவானை தரிசித்தல்
ஆனால், நீங்கள் கிருஷ்ணரை மட்டுமே விரும்ப வேண்டும். இது தொடர்பாக, ஸ்ரீல ரூப கோஸ்வாமி ஸ்லோகம் ஒன்றை இயற்றியுள்ளார்:
ஸ்மேரான் பங்கீ-த்ரய-பரிசிதாம் ஸாசி-விஸ்தீர்ண-த்ருஷ்டிம்
வம்ஷீ-ந்யஸ்தாதர-கிஷலயாம் உஜ்ஜ்வலாம் சந்த்ரகேண
கோவிந்தாக்யாம் ஹரி-தனும் இத: கேஷி-தீர்தோபகண்டே
மா ப்ரேக்ஷிஷ்டாஸ் தவ யதி ஸகே பந்து-ஸங்கே ’ஸ்தி ரங்க:
ஒரு கோபி மற்றொரு கோபிக்கு அறிவுரை கூறுகிறாள், “அன்புள்ள தோழியே, யமுனையின் கேசி படித்துறைக்கு அருகே புல்லாங்குழலை இசைத்தபடி கோவிந்தன் எனும் பாலகன் நின்று கொண்டுள்ளான். அவன் மிகவும் அழகானவன், பௌர்ணமி நிலவொளியில் மிகுந்த அழகுடன் காணப்படுகிறான். பிள்ளைகள், கணவன் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களுடன் இந்த பெளதிக உலகில் மகிழ்ச்சியாக இருக்க நீ எண்ணினால் தயவுசெய்து அங்கே செல்லாதே.” பங்கீ-த்ரய: கிருஷ்ணர் மூன்று வளைவுகளுடன் புல்லாங்குழலை இசைத்தபடி நிற்கிறார். அது கிருஷ்ணரின் மூன்று வளைவுகள் கொண்ட த்ரி-பங்க ரூபம் என்று அறியப்படுகிறது. ஒரு கோபி மற்றொரு கோபியிடம் கூறுகிறாள், “நீ இந்த ஜட உலகில் அதிக மகிழ்ச்சியுடன் வாழ எண்ணினால், கிருஷ்ணரைப் பார்ப்பதற்கு செல்ல வேண்டாம்.” கருத்து என்னவெனில், ஒருமுறை நீங்கள் கிருஷ்ணரைப் பார்த்துவிட்டால், இந்த அபத்தமான பெளதிக இன்பங்களை மறந்துவிடுவீர்கள். இதுவே கிருஷ்ணரைக் காண்பதால் ஏற்படும் விளைவாகும்.
கிருஷ்ணரைக் கண்ட துருவ மஹாராஜர் கூறினார், ஸ்வாமின் க்ருதார்தோ ’ஸ்மி வரம் ந யாசே. “அன்பார்ந்த பிரபுவே, நான் வேறெதையும் விரும்பவில்லை.” துருவ மஹாராஜர் தமது தந்தையின் அரசாட்சியைப் பெறும் நோக்கத்துடன் கிருஷ்ணரை அணுகினார். அவர் கிருஷ்ணரைக் கண்ட பொழுது, கிருஷ்ணர், “உனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக்கொள்” என்று கூறினார். துருவரோ, “பகவானே, எனக்கு எந்த ஆசையும் இல்லை” என்று பதிலளித்தார். இதுவே, கிருஷ்ணரைக் காண்பதாகும்.
கிருஷ்ணரைக் காண்பதற்கான உங்களது நோக்கம் எதுவாக இருப்பினும், அவரைக் காண்பதற்கு நீங்கள் விரும்பினால், உங்களது பேரார்வத்தின் காரணமாக எவ்வகையிலாவது நீங்கள் கிருஷ்ணரை தரிசிப்பீர்கள். இந்த பேரார்வமே கிருஷ்ணரைக் காண்பதற்கான தகுதியாகும்.
மற்றொரு ஸ்லோகத்தில் ரூப கோஸ்வாமி கூறுகிறார், க்ருஷ்ண-பக்தி-ரஸ-பாவிதா மதி: க்ரீயதாம் யதி குதோ ’பி லப்யதே. நான் பயன்படுத்தக்கூடிய “கிருஷ்ண உணர்வு” என்னும் வார்த்தை இந்த க்ருஷ்ண-பக்தி-ரஸ-பாவிதா என்னும் வரியிலிருந்து வந்ததாகும். “கிருஷ்ண பக்தி ரஸம் (கிருஷ்ண உணர்வு) எங்கேனும் கிடைக்குமெனில், தாமதிக்காமல் அதனை உடனே வாங்கிக்கொள்ளுங்கள்; அது மிகவும் இனிமையானது,” என்று ரூப கோஸ்வாமி அறிவுறுத்துகிறார்.
கிருஷ்ண பக்தியை இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்திடமிருந்து நீங்கள் பெற்றுக்
கொள்ளலாம். இஃது ஓர் அருமையான விஷயம். ஆனால், அதற்கு விலை கொடுக்க வேண்டும். என்ன விலை? தத்ர லௌல்யம் அபி மூல்யம் ஏகலம், பேரார்வம் எனும் விலையைக் கொடுப்பதன் மூலம் நீங்கள் கிருஷ்ணரை உடனடியாக அடையலாம். கிருஷ்ணர் ஒன்றும் ஏழையல்ல, கிருஷ்ணரை மற்றவர்களுக்கு வழங்கும் கிருஷ்ண பக்தனும் ஏழையல்ல. கிருஷ்ண பக்தன் கிருஷ்ணரை இலவசமாக விநியோகிக்கிறான். வெறுமனே உங்களின் பேரார்வத்தின் மூலமாக, நீங்கள் அவரை வாங்க வேண்டும்.
ஒருவர், “ஆர்வம்தானே, அதுதான் என்னிடம் உள்ளதே” என்று நினைக்கலாம். ஆனால், அஃது அவ்வளவு எளிதல்ல. ஜன்ம-கோடி-ஸுக்ருத்தைர் ந லப்யதே: கோடிக்கணக்கான பிறவிகள் புண்ணிய காரியங்களைச் செய்தாலும் இந்த ஆர்வத்தினை அடைய இயலாது. நீங்கள் வெறுமனே புண்ணிய காரியங்களைச் செய்து கொண்டே போகலாம். அதனால் இந்த ஆர்வம் கிடைக்காது.
எனவே, இந்த ஆர்வம் மிகவும் முக்கியமானது. இந்த ஆர்வத்தை பக்தர்களின் சங்கத்தினால் மட்டுமே எழுப்பவியலும். எனவேதான், நாங்கள் இந்த ஆர்வத்தைப் பெறுவதற்கு அனைவருக்கும் வாய்ப்பளிக்கின்றோம்; அப்போது, நீங்கள் கடவுளை நேருக்கு நேராகக் காணலாம்.
இந்த வாழ்க்கை கிருஷ்ணரைக் காண்பதற்கானது. நாய்களையும், பன்றிகளையும் போன்று ஆவதற்கு அன்று. துரதிர்ஷ்டவசமாக, இன்றைய நவீன நாகரிகம் மக்களை நாய்களாகவும் பன்றிகளாகவும் மாறுவதற்குப் பயிற்சி அளிக்கின்றது. இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மட்டுமே “கிருஷ்ணரை எவ்வாறு காண்பது” என்பதற்கான பயிற்சியை மக்களுக்கு அளிக்கின்றது. ஆகவே, இந்த இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தச் ச்ரத்ததானா முனயோ ஜ்ஞான-வைராக்ய-யுக்தயா. ஆர்வத்தின் மூலமாக நீங்கள் உடனடியாக அறிவு மற்றும் துறவின் தளத்தினை அடைவீர்கள். அணுகுண்டுகளை தயாரிப்பது அறிவல்ல. அஃது எத்தகைய அறிவு? மக்கள் ஏற்கனவே இறந்து கொண்டுள்ளனர், நீங்கள் அவர்களின் இறப்பைத் துரிதப்படுத்தும் வகையில் அணுகுண்டை தயாரித்துள்ளீர்கள். இதனை அறிவு என்று எவ்வாறு கூறவியலும்? ஆனால், நாங்கள் அந்த இறப்பைத் தடுக்கும் அறிவான கிருஷ்ண பக்தியை வழங்குகிறோம். இதுவே சிறந்த அறிவாகும். ஜ்ஞான-வைராக்ய-யுக்தயா. இந்த அறிவைப் பெற்றவுடன், நீங்கள் இந்த அபத்தமான பௌதிக இன்பத்தின் மீதான பற்றுதலை இழப்பீர். மிக்க நன்றி.
கிருஷ்ணரின் குழலோசையைக் கேட்ட மாத்திரத்தில், கோபியர்கள் அவரைக் காண விரைந்து ஓடுதல்