கடவுள் இருக்கிறாரா?

Must read

தலைப்புக் கட்டுரை
வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ்
கடவுளின் இருப்பை மறுத்து அவரே இவ்வுலகைப் படைத்தார் என்பதைப் புறக்கணிக்கும் நாத்திகவாதிகள், இதுகுறித்த நாத்திகக் கருத்துகளை மக்களிடம் விதைத்து குழப்பி வருகின்றனர். இருப்பினும், இப்பிரபஞ்சத்தின் இயற்கையை சற்று கவனித்தால் போதும்; கடவுள் இருக்கிறார் என்பதற்கான பல்வேறு ஆதாரங்களையும், அறிவியல்பூர்வமான சுவாரஸ்ய மிக்க சாட்சியங்களையும் நம்மால் எளிதில் காண முடியும். அனைத்திற்கும் காரணம் “இயற்கையே” என்று கூறி கடவுளின் இருப்பை மறுக்கும் போலி பகுத்தறிவாளர்களின் வாதங்களை உண்மையான பகுத்தறிவு சிந்தனையைக் கொண்டு இக்கட்டுரையால் வீழ்த்துவோம்.
அண்டம் தானாக வந்துவிட்டதா?
நமது பிரபஞ்சம், ஆற்றல் மற்றும் ஒளியின் பெரு வெடிப்பால் உருவாகியதாக நாத்திக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கு அவர்கள் பெருவெடிப்புக் கொள்கை (Big-Bang Theory) என்று பெயரிட்டுள்ளனர். ஆனால், வெடித்துச் சிதறும் ஒன்றிலிருந்து “மிகவும் துல்லியமான வடிவங்கள்” தோன்றுவது சாத்தியமற்றதாகும். மிகச் சரியான வடிவத்தில் காணப்படும் பூமியினை வெடித்துச் சிதறிய பொருள் என்று கூறுதல் விஞ்ஞானபூர்வமானதல்ல. பெருவெடிப்புக் கொள்கை தவறானது என்பதைச் சுட்டிக்காட்ட, இந்த பக்குவமான பூமியைக் காட்டிலும் வேறு சாட்சியம் வேண்டுமா?
விஞ்ஞானிகளின் சமையலறையிலுள்ள கேஸ் சிலிண்டர் வெடித்து, தானாகவே சாதம், சாம்பார், பொரியல், கூட்டு என எல்லாம் தயாராகி மதிய உணவாக தட்டிற்கு வந்து விடுமா என்ன? அதற்கு சாத்தியமே இல்லை. தட்டு தயாரிப்பதற்குகூட யாராவது ஒருவர் தேவைப்படுகிறார் எனும்போது, இவ்வளவு பெரிய அண்டம் தானாக வந்துவிட்டதா? எனவே, விஞ்ஞான ரீதியாக அணுகினாலும் தர்க்க ரீதியாக அணுகினாலும், உலகம் உருவானது தற்செயலான நிகழ்வல்ல என்பதை நாம் அறியலாம்.
கட்டுப்பாடுடைய பூமி
ஒரு நிகழ்வு தற்செயலாக நிகழ்ந்ததாக இருப்பின், அது நீண்ட காலத்திற்கு செம்மையான முறையில் இயங்காது. இதை நாம் ஒரு சிறிய எடுத்துக்காட்டுடன் புரிந்துகொள்ள முடியும்.
சிறுவர்கள் வெடிக்கும் பட்டாசிலிருந்து சிதறும் காகிதங்கள், கட்டுப்பாடின்றி அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். காகிதங்கள் கட்டுப்பாடு இல்லாமல் இவ்வாறு சுற்றுவதற்கு என்ன காரணம்? அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கட்டுப்பாட்டாளர் இல்லை.
பூமியையும் சூரியனையும் சற்று கவனியுங்கள். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பன்னெடுங் காலமாக மாற்றமின்றி சுற்றிக் கொண்டுள்ளன. அவற்றின் வேகம் ஒருபோதும் மாறாமல் இருப்பதற்கு யார் காரணம்?
மேலும், பூமியின் சுழற்சி இடமிருந்து வலமாக மட்டுமே நிகழ்கிறது, அஃது ஒருபோதும் வலமிருந்து இடமாகச் சுழல்வதில்லை. அனைத்தும் தற்செயலாக நடப்பதாக இருந்தால், பூமி சில நேரங்களில் வலமிருந்து இடமாகவும் சுழல வேண்டுமே! விஞ்ஞானிகள் கூறுவதைப் போன்று இஃது ஒரு தற்செயல் நிகழ்வெனில், மேற்கூறிய காகித உதாரணத்தைப் போல், பூமி, சூரியன், கோள்கள் என அனைத்தும் கட்டுப்பாடு இல்லாமல் அல்லவா சுற்ற வேண்டும்?
இதையெல்லாம் காணும் உண்மையான பகுத்தறிவுள்ள ஒருவன், இந்த பூமி “சரியான வடிவத்தில்” உருவானதற்கும், “சரியான முறையில்” இயங்குவதற்கும், அதன் அச்சில் நிலைத்து இருப்பதற்கும், பின்புலத்தில் யாரோ ஒருவர் இருக்க வேண்டும் என்பதை சிந்திக்கத் துவங்குவான். விஞ்ஞானரீதியாக அல்லது தர்க்கரீதியாகப் பார்த்தால்கூட, இவை தற்செயலாக நிகழக்கூடியவை அல்ல என்பதை சிறு குழந்தையால்கூட புரிந்துகொள்ள இயலும்.
சூரியன் 
சூரியனைச் சற்று கவனிப்போம்: பூமி சூரியனிலிருந்து ஒரு துல்லியமான தூரத்தில் அமைந்துள்ளதாலேயே, அதன் சராசரி வெப்பநிலை மாற்றம் –30°க்கு குறையாமலும் 120°Fக்கு மிகாமலும் பேணப்படுகிறது. அவ்வாறு அல்லாமல், பூமி சூரியனிடமிருந்து சற்று விலகிச் சென்றால், நாம் உறைந்து போவோம்; சற்று நெருக்கமாக சென்றால், நாம் அனைவரும் கருகிப் போவோம்.
சூரியனின் நிலையிலோ பூமியின் நிலையிலோ ஏற்படும் ஒரு சிறு மாறுபாடும், பூமியில் உயிர்வாழிகள் வாழ்வதை சாத்தியமற்றதாக்கி விடும். பூமி சூரியனிடமிருந்து சரியான தொலைவில் அமைந்து, தனது அச்சில் நிலைபெற்று, பூமியின் முழு மேற்பரப்பையும் ஒவ்வொரு நாளும் தகுந்த முறையில் சூடேற்றவும் குளிர்விக்கவும் அனுமதிக்கிறது. எனவே, விஞ்ஞானரீதியாகவும் தர்க்கரீதியாகவும் இவை தற்செயல் நிகழ்வல்ல என்பதை இவ்வொப்புமை உறுதிப்படுத்துகிறது.
“பூமியின் 97% நீர் கடல்களிலேயே உள்ளது. சந்திரன் அதன் அச்சிலிருந்து சிறிது நகர்ந்தால் முழு கடலும் அதன் எல்லையிலிருந்து பிறழ்ந்து முழு பூமியையும் நீரில் மூழ்கடித்துவிடும் அபாயம் உள்ளது. ஆனால் அதுபோன்று ஒருபோதும் நிகழ்வதில்லை. எனவே, இவற்றை தற்செயலான நிகழ்வுகள் என்று கூறி விட முடியுமா?”
சந்திரனும் பெருங்கடல்களும்
பட்டாசிலிருந்து சிதறிய காகிதங்களுக்குள் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருப்பதோடு, சில நேரங்களில் அவை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்கின்றன. அவை ஒருபோதும் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்துவதில்லை. ஆனால், கோள்களோ விதிகளுக்கு உட்பட்ட தொடர்புடன் நிலைபெற்று இருப்பதை நாம் காணலாம். உதாரணமாக, சந்திரன் அதன் ஈர்ப்பு விசையால் பூமியிலிருந்து சரியான அளவிலும் துல்லியமான தூரத்திலும் உள்ளது. கடல் அலைகளையும் இயக்கங்களையும் உருவாக்குவதில் சந்திரன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான், இன்றளவும் பூமியின் நிலப்பரப்பு முழுவதுமாக கடல் நீரால் ஆக்கிரமிக்கப்படாமலும் கண்டங்களுக்குள் அதன் நீர் புகாமலும் பாதுகாக்கப்படுகிறது.
பூமியின் 97% நீர் கடல்களிலேயே உள்ளது. சந்திரன் அதன் அச்சிலிருந்து சிறிது நகர்ந்தால் முழு கடலும் அதன் எல்லையிலிருந்து பிறழ்ந்து முழு பூமியையும் நீரில் மூழ்கடித்துவிடும் அபாயம் உள்ளது. ஆனால் அதுபோன்று ஒருபோதும் நிகழ்வதில்லை. எனவே, இவற்றை தற்செயலான நிகழ்வுகள் என்று கூறி விட முடியுமா?
தண்ணீர்
பூமியிலுள்ள 3% நீர் மட்டுமே நன்னீராக உள்ளது, 97% நீர் உப்பு நீராகக் கடல்களில் உள்ளது. இருப்பினும், வடிவமைக்கப்பட்ட ஓர் அமைப்பு கடல் நீரிலிருந்து உப்பை அகற்றி, நீரை ஆவியாக்கி, மேகங்களை உருவாக்கி, அதை காற்றின் மூலம் எடுத்துச் சென்று பூமியிலுள்ள உயிர்வாழிகளின் நன்மைக்காக நிலத்தின் மீது மழையாகப் பொழிவிக்கிறது. இந்த சுத்திகரிப்பு மற்றும் விநியோக முறையினாலேயே பூமியில் உயிர்கள் வாழ்ந்து கொண்டுள்ளன. இஃது ஈடுஇணையற்ற நீர் மறுசுழற்சி மேலாண்மையாகும்.
பிரபஞ்சம் இதுபோன்ற எண்ணற்ற இயற்கையின் சீரான விதிகளால் இயங்குகிறது என்பதை அறியும் ஒருவன், அந்த விதிகள் புத்திக்கூர்மையுள்ள நபரால் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அறிவான். அத்தகு புத்திசாலி நபர் இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பவரே கடவுள் என்பதையும், அவரது சக்திகளில் ஒன்றான இந்த ஜட இயற்கை, அவரது மேற்பார்வையில் செயல்பட்டு, அசைகின்ற மற்றும் அசையாதவற்றை எல்லாம் உண்டாக்குகின்றது என்பதையும் உணர முடியும். இதனை பகவத் கீதை (9.10) பின்வருமாறு கூறுகிறது:
மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம்
ஹேதுனானேன கௌந்தேய ஜகத் விபரிவர்ததே
பகவான் கிருஷ்ணரே ஜட இயற்கையின் தோற்றத்திற்கும் மறைவிற்கும் காரணமாக இருக்கின்றார். அவரே அனைத்தையும் கட்டுப்படுத்தும் முழுமுதற் கடவுள் என்பதை இதிலிருந்து அறியலாம். மேலும் அறிய, ஸ்ரீல பிரபுபாதரின் உரையுடன்கூடிய பகவத் கீதை உண்மையுருவில் நூலைப் படிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives