அசுரர்களின் மன்னன் ஹிரண்யகசிபு

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.
ஸ்ரீமத் பாகவத சுருக்கம்
வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது. 
தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்திரஸ மூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த இதழில்: ஏழாம் ஸ்கந்தம், அத்தியாயம் 2
சென்ற இதழில், பாரபட்சமற்ற பகவான் தேவர்கள், அசுரர்கள் என அனைவருக்கும் நன்மை புரிபவராக உள்ளார் என்பதைப் பற்றிக் கண்டோம். அதன் இறுதியில், ஹிரண்யகசிபு தன் சொந்த மகன் பிரகலாதனின் மீது ஏன் கடும் கோபம் கொண்டிருந்தார் என்று நாரதரிடம் யுதிஷ்டிர மஹாராஜர் வினவினார். அதற்கான நாரதரின் பதிலை இந்த இதழிலிருந்து காணலாம்
  ஹிரண்யகசிபுவின் சபதம் 
பகவான் விஷ்ணு வராஹ மூர்த்தியின் வடிவில் ஹிரண்யாக்ஷனைக் கொன்றபொழுது, ஹிரண்யாக்ஷனின் சகோதரனான ஹிரண்யகசிபு கடும் கோபமடைந்து பின்வருமாறு பேசினான்: 
“தானவர்களே! தைத்தியர்களே! துவிமூர்தன், திரியக்ஷன், நமுச்சி முதலான அசுரர்கள் அனைவரும் நான் கூறுவதைக் கேளுங்கள்! என்னுடைய வார்த்தையை கவனமாகக் கேட்டு, அதற்கேற்ப நீங்கள் எல்லாரும் தாமதமின்றி செயல்பட வேண்டும்.
“எதிரிகளான தேவர்கள் ஒன்று சேர்ந்து எனது சகோதரனான ஹிரண்யாக்ஷனைக் கொன்று விட்டனர். பரம புருஷனான விஷ்ணு அனைவருக்கும் சமமானவன் என்றாலும் ஹிரண்யாக்ஷனைக் கொல்வதில் தேவர்களுக்கு உதவியுள்ளான். தமது இயல்பான சமத்துவத்தை விட்டுவிட்டு, பக்தர்களான தேவர்களை மகிழ்விப்பதற்காக ஒரு காட்டுப் பன்றியின் ரூபத்தை ஏற்றுக் கொண்டுள்ளான். நான் எனது சூலத்தினால் பகவான் விஷ்ணுவின் தலையைத் துண்டித்து விடப் போகிறேன். அந்த ரத்தத்தின் மூலமாக, ரத்தம் உறிஞ்சுவதை மிகவும் விரும்பிய என் சகோதரன் ஹிரண்யாக்ஷனை திருப்திப்படுத்தி, நானும் திருப்தியடைவேன். 
“விஷ்ணுவைக் கொன்று விட்டால், தேவர்கள் தங்கள் உயிரின் மூலத்தை இழந்து உலர்ந்து போய் விடுவார்கள். நான் விஷ்ணுவைக் கொல்வதில் ஈடுபட்டிருக்கும்பொழுது, நீங்கள் செய்ய வேண்டிய காரியங்கள் மிகவும் முக்கியமானவை, அவசியமானவை.”
அசுரர்கள் பூமியை அடித்தல் 
ஹிரண்யகசிபு தொடர்ந்து கூறினான், “பிராமணப் பண்பாட்டினாலும் சத்திரிய அரசாட்சியாலும் செழிப்புற்று விளங்கும் மண்ணுலகிற்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கே தவத்திலும் வேதக் கல்வியிலும் விரதங்களிலும் தான தர்மங்களிலும் ஈடுபட்டுள்ள மக்களை எல்லாம் நீங்கள் அழித்துவிட வேண்டும். பிராமணப் பண்பாட்டின் அடிப்படைக் கொள்கை பகவான் விஷ்ணுவை திருப்திப்படுத்துவதே ஆகும். பகவான் விஷ்ணு எல்லா சமயக் கொள்கைகளுக்கும் பிறப்பிடம் ஆவார். அவரே அனைத்து தேவர்களுக்கும் சிறந்த பிதாக்களுக்கும் பொது ஜனங்களுக்கும் புகலிடமாவார். 
“பிராமணர்கள் கொல்லப்பட்டு விட்டால் யாகங்கள் செய்யும்படி சத்திரியர்களை உற்சாகப்படுத்து வதற்கு எவருமே இருக்க மாட்டார்கள். இவ்வாறாக, தேவர்களும் யாகத்தில் வரும் அவிர்பாகம் இன்றி வருந்தி தானாகவே இறந்து விடுவர். வர்ணாஷ்ரம கொள்கைகள் எங்கு கடைப்பிடிக்கப்படுகின்றனவோ, பசுக்களும் பிராமணர்களும் எங்கு பாதுகாக்கப்படுகின்றனரோ, அங்கே சென்று அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் மேய்ச்சல் நிலங்கள், வயல்வெளிகள் மற்றும் கனிந்த மரங்களை எல்லாம் அழித்து விடுங்கள்.” 
ஹிரண்யகசிபுவின் இத்தகைய அசுரக் கட்டளைகளைக் கேட்ட அவனது சேவகர்கள், ஜீவராசிகளுக்கு எதிரான மற்றும் இயற்கைக்கு முரணான துஷ்ட செயல்களில் ஈடுபடத் தொடங்கினர். அச்செயல்களால் தொல்லைக்குள்ளான மக்கள் வேதப் பண்பாட்டைக் கைவிட வேண்டியிருந்தது. இதனால் யாகங்களின் பலன்களைப் பெறாத தேவர்கள் தங்கள் ஸ்வர்க லோகங்களைக் கைவிட்டு, அசுரர்களின் கண்களுக்குப் புலப்படாமல் மண்ணுலகில் சஞ்சரிக்கத் தொடங்கினர்.
பகுதிகள்—அத்தியாயம் 2
ஹிரண்யகசிபுவின் சபதம் (1–9)
அசுரர்கள் பூமியை அழித்தல் (10–16)
ஹிரண்யகசிபுவின் தத்துவ உரை (17–26)
சுயக்ஞனுடைய இராணிகளின் வருத்தம் (27–35)
எமராஜரின் அறிவுரை (36–44)
உடல், ஆத்மா, பரமாத்மா (45–49)
ஹிரண்யகசிபுவின் தத்துவ உரை 
ஹிரண்யாக்ஷனின் மரணத்திற்குப் பின் ஈமக்கிரியைகளைச் செய்த ஹிரண்யகசிபு தன் தாயிடமும், தம்பி மனைவி மற்றும் மகன்களிடமும் ஆறுதல் வார்த்தைகளைக் கூற முற்பட்டான்: “போரில் ஒரு வீரன் உயிரை விடுவது அவனுக்கு பெருமையைச் சேர்ப்பதும் புகழத்தக்கதுமாகும். ஆதலால் நீங்கள் கவலைகொள்ளக் கூடாது. ஓர் உணவு விடுதியில் பற்பல பயணிகள் கூடிப் பிரிவதைப் போலவே, ஜீவராசிகள் ஒரு குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்து, தத்தமது கர்ம விளைவுகளுக்கு ஏற்ப பிரிகின்றனர். 
“ஜீவராசிகள் நித்தியமானவர்கள்; அறிவுமயமானவர்கள்; ஜட உடலிலிருந்து வேறானவர்கள்; மரணமற்றவர்கள். மேலும், அவர்கள் பௌதிகக் களங்கங்களிலிருந்து விடுபட்டிருப்பதன் மூலம் பௌதிக மற்றும் ஆன்மீக உலகங்களில் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். தனது சிறு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்வதால் ஜடவுடலை ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். இதனால் பௌதிகத் துன்பங்களுக்கு உள்ளாகிறான். 
“எனவே, உடலிலிருந்து உயிர் பிரிவதுகுறித்து ஒருவரும் துக்கப்படக் கூடாது. இயற்கையின் குணங்களால் மனம் அலைக்கழிக்கப்படும்போது ஜீவன் தன்னை உடலுடன் அடையாளப்படுத்திக்கொள்கிறான். இதனால், சிலரை உறவினர்கள் என்றும் மற்றவர்களை வெளிநபர்கள் என்றும் கருதுகிறான். கட்டுண்ட ஆத்மா வெவ்வேறு வகை உயிரினங்களில் பிறவியெடுத்து பல்வேறு உணர்வு நிலைகளில் செயலாற்ற வேண்டியுள்ளது. சில சமயம் சரியான புரிந்துணர்வுக்கு வருகிறோம். சில சமயம் தவறான புரிந்துணர்வுக்குப் பலியாகி விடுகிறோம். இது தொடர்பான ஓர் உதாரண கதையைக் கூறுகிறேன்.”
சுயக்ஞரின் இராணிகளின் வருத்தம் 
அதனைத் தொடர்ந்து, எமராஜருக்கும் மரணமடைந்த ஒருவரின் உறவினர்களுக்கும் இடையில் நிகழ்ந்த பின்வரும் உரையாடலை ஹிரண்யகசிபு எடுத்துரைத்தான். 
உசீனரம் என்ற தேசத்தில் சுயக்ஞன் என்ற புகழ்பெற்ற மன்னன் இருந்தான். அவன் யுத்தத்தில் பகைவரால் கொல்லப்பட்டான். அவன் உடல் முழுவதும் ரத்தத்தால் நனைந்து, ஆயுதங்களுடன் கூடிய கரங்கள் வெட்டப்பட்டு, அவனது அழகிய முகம் கருமை அடைந்து யுத்த களத்தின் புழுதியால் மூடப்பட்டிருந்தது.
 இதைக் கண்ட இராணிகள் புலம்பி அழுதனர்: “உசீனர நாட்டின் மன்னராக இருந்து மக்களைக் காத்தும், படியளந்தும், பராமரித்தும் வந்த நீங்கள் எங்கள் பார்வைக்கு எட்டாத இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டீர்கள். தாங்கள் சென்றுள்ள இடத்தைக் கூறினால் நாங்களும் அங்கே வந்து தங்களுக்கான சேவைகளைத் தொடர்வோம்.” 
இவ்வாறு இராணிகள் அழுது புலம்பிக் கொண்டிருந்தபோது, அந்த அழுகுரல் எமராஜருக்கும் கேட்டது. எமராஜர் ஒரு சிறுவனின் வடிவில் தோன்றி இராணிகளிடம் அறிவுரை கூறுதல்.
எமராஜரின் அறிவுரை 
எமராஜர் மிக்க கருணையுடன் ஒரு சிறுவனின் வடிவில் அங்கே வந்து வருந்திக் கொண்டிருந்த உறவினர்களை அணுகி பின்வருமாறு பேசினார்: “பிறந்தவர் அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்பதை பலமுறை அனுபவத்தில் பார்த்திருந்தும் இவ்வாறு இவர்கள் புலம்புவது ஆச்சரியமே!
“கட்டுண்ட ஆத்மா எங்கிருந்து வருகிறான், எங்கே போகிறான் என்பவை யாருக்கும் தெரியாது. இந்தச் சட்டத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல. அதே சமயம் தாய் தந்தையரால் கைவிடப்பட்டவன் பலவீனமாக இருந்தால்கூட, அவன் இந்த உலகில் அழிக்கப்படவோ கொடிய விலங்குகளால் கொல்லப்படவோ இல்லை.
குறைவற்றவரான பரம புருஷரின் விருப்பத்தாலேயே பிரபஞ்சம் படைக்கப்பட்டு, காக்கப்பட்டு, அழிக்கப்படுகிறது. சில சமயங்களில் வீதியில் கிடக்கும் பணம்கூட பாதுகாப்பாக இருக்கிறது, வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்படும் செல்வம்கூட தொலைக்கப்பட்டு விடுகிறது. அதுபோலவே, கொடிய வனவிலங்குகள் நிறைந்த காட்டிலும் சிலர் உயிர் தப்பி வாழ முடிகிறது, ஆனால் பாதுகாப்பு நிறைந்த இடத்தில்கூட மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் சிலர் இறக்க நேரிடுகிறது.
“கர்மத்திற்கேற்ப ஓர் உயிர்வாழி வெவ்வேறு உடல்களைப் பெறுகிறான். அறியாமையின் காரணத்தால் அவன் தன்னை உடலாகக் கருதுகிறான்; எனினும் அவன் பஞ்சபூத உடல் மற்றும் சூட்சும உடலிலிருந்து வேறுபட்டவன். உடலின் பிறப்பு, இறப்புடன் ஆத்மாவிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. 
“யாருக்காக நீங்கள் துக்கப்படுகிறீர்களோ, அந்த சுயக்ஞன் எங்கும் சென்று விடவில்லை. அவர் இப்போதும் உங்கள் முன் படுத்திருக்கிறாரே! இதுவரை உடலுக்குள் இருந்து கொண்டு, நீங்கள் கூறியதைக் கேட்டு பதில் பேசிய அவரை நீங்கள் ஒருபோதும் கண்டதில்லை. நீங்கள் அன்றாடம் பார்த்து வந்த உடல் இங்கே அப்படியே கிடக்கிறது. எனவே, இதில் நீங்கள் துக்கப்பட அவசியமே இல்லை.”
உடல், ஆத்மா, பரமாத்மா
அதனைத் தொடர்ந்து, உடல், ஆத்மா, பரமாத்மா ஆகியவற்றைப் பற்றி எமராஜர் பேசினார். உடல்: ஸ்தூல உடல், சூட்சும உடல் என இரண்டு உண்டு. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களாலான உடல் ஸ்தூல உடலாகும். மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவை சூட்சும உடலின் பாகங்கள் ஆகும். இரு உடல்களும் நித்தியமற்றவை. உடலில் மிக முக்கியப் பொருளாக விளங்குவது பிராண வாயு. ஆனால் பிராண வாயு என்பது ஆத்மா அல்ல. ஆத்மா: ஆத்மா பிராண வாயுவிற்கும் அப்பாற்பட்டவன், உணர்வுடையவன். அவன் ஸ்தூல, சூட்சும உடல்களால் மூடப்பட்டிருக்கும் வரை தன் கர்ம பலன்களால் பந்தப்படுகிறான், வெவ்வேறு உடல்களை ஏற்று நேரெதிரான சூழ்நிலைகளையும் அனுபவிக்க நேரிடுகிறது.
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives