— வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
கிருஷ்ணர் என்றவுடன், அதிலும் குறிப்பாக ஜன்மாஷ்டமி சமயத்தில், பலரின் மனதில் உடனடியாகத் தோன்றுவது வெண்ணெய் உண்ணும் கிருஷ்ணரே. அழகிய அப்பாவி குழந்தையைப் போன்று அவர் வெண்ணெய் உண்ணும் காட்சியை சிந்திக்கும்போது, அதனை ரசிக்காத இதயங்கள் இருக்க முடியாது. அந்த வெண்ணெயை அவ்வப்போது அவர் திருடி உண்பதும் வழக்கம். “வெண்ணெய் திருடர்” (மக்கன் சோர்) என்னும் பெயர் அவரது பல்வேறு பிரபலமான பெயர்களில் ஒன்றாகும்.
வெண்ணெய் திருடர்
கிருஷ்ணரது பால்ய லீலைகளில் பெரும்பாலானவை வெண்ணெயைச் சுற்றிச்சுற்றி வருகின்றன. சத்திரிய குலத்தில் தோன்றிய கிருஷ்ணர் ஆயர் குலத்திற்கு இடம்பெயர்ந்து வெண்ணெய் உண்பதை தம்முடைய விளையாட்டாக மாற்றினார். ஆயர் குலத் தலைவரான நந்த மஹாராஜரின் இல்லத்தில் வளர்ந்தமையால், வெண்ணெய் அவருக்கு அபரிமிதமாகக் கிடைத்தது. நந்தரிடம் இலட்சக்கணக்கான பசுக்கள் இருந்தன. யசோதை அவற்றிடமிருந்து பால் கறந்து, பாலை தயிராக்கி, தயிரிலிருந்து வெண்ணெயைக் கடைந்து எடுத்து ஆயிரக்கணக்கான பானைகளில் வைத்திருப்பாள். இவ்வெல்லா வேலைகளுக்கும் யசோதைக்கு எண்ணற்ற உதவியாளர்கள் இருந்தனர்.
அதே சமயத்தில், அவள் தன் அன்பிற்குரிய மகன் கிருஷ்ணருக்கென சில சிறப்பான பசுக்களை தனது சொந்தப் பொறுப்பில் வைத்திருந்தாள். அப்பசுக்களிலிருந்து பால் கறப்பது, அதை தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய் எடுப்பது உள்ளிட்ட வேலைகளை அவளே செய்தாள்; ஏனெனில், சிறப்பான வெண்ணெயை தன் கையாலேயே கிருஷ்ணருக்குக் கடைந்து கொடுக்க அவள் விரும்பினாள். காண்பவர் அனைவரையும் வைத்த கண் வாங்காமல் காணச் செய்யும் தனது அழகிய மகன் கிருஷ்ணரை நினைத்தபடியே அவ்வெல்லா வேலைகளையும் அவள் செய்வது வழக்கம். இவ்வளவு பாசத்துடன் அம்மா கொடுக்கும் வெண்ணெயை கிருஷ்ணர் மகிழ்ச்சியுடன் உண்கிறார்.
அந்த வெண்ணெய் அம்மாவின் பாசத்தில் மட்டும் உருவாகவில்லை, அதில் பசுக்களின் பாசமும் கலந்துள்ளது. கோகுலத்து பசுக்கள் எல்லாம் தங்களது சொந்தக் கன்றுகளைக் காட்டிலும் கிருஷ்ணரிடம் அதீத அன்பைப் பொழிந்தன.
யசோதையின் வெண்ணெய் இவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், கிருஷ்ணரிடம் பாசம் காட்டுவதற்கான உரிமை யசோதைக்கு மட்டு
மல்லவே. விருந்தாவனத்தின் மூத்த கோபியர்கள் ஒவ்வொருவரும் கிருஷ்ணரை தங்கள் வீட்டுக் குழந்தையைக் காட்டிலும் அதிகமாக நேசித்தனர். ஆகவே, அவர்களின் பாசத்தை ஏற்பதற்காக, கிருஷ்ணர் முடிவு செய்த தெய்வீக வழிமுறையே அந்த வெண்ணெய் திருடும் படலங்கள்.
யசோதையின் வீட்டிலிருந்த வெண்ணெய் பல ஊருக்குப் போதுமானதாகும், ஆயர்கள் அனைவரிடமும் அளவுக்கதிகமான வெண்ணெய் இருந்தமையால், அதனை அவர்கள் மதுராவிற்குக் கொண்டு சென்று விற்பது வழக்கம். அவ்வளவு வெண்ணெய் இருந்தும்கூட, கிருஷ்ணர் அதனைத் திருடித் தின்பார். சுருக்கமாகச் சொன்னால், வெண்ணெய் கடலுக்கு மத்தியில் வாழ்ந்தபோதிலும், திருடித் தின்பதில் கிருஷ்ணர் ஒரு பேரானந்தத்தை உணர்ந்தார்.
திருட்டு லீலைகள்
“கண்ணா, அம்மா தரும் வெண்ணெயைக் காட்டிலும், இந்த விருந்தாவன மண் மிகவும் ருசியாக இருக்கும்,” என்று கூறக் கேட்டு, மண்ணை உண்டு உலகைக் காட்டிய லீலையும்கூட ஒரு விதத்தில் வெண்ணெய் சார்ந்த திருட்டு லீலையே. சொந்த வீட்டில் வெண்ணெய் பானைகளைப் போட்டு உடைத்து, வெண்ணெயைக் குரங்குகளுக்குக் கொடுத்து, வீடு முழுவதையும் அமர்க்களப்
படுத்தியதற்கும் வெண்ணெயே காரணம். பல வீட்டு வெண்ணெய் சுகத்தை அனுபவிக்க, நண்பர்களுடன் நிகழ்த்திய எல்லா கூத்திற்கும் வெண்ணெயே காரணம். அம்மாவின் கோபத்திற்கு உள்ளாகி, உரலில் கட்டப்பட்டு, பின்னர் குபேரனின் மகன்களுக்கு சாப விமோசனம் கொடுத்ததற்கும் வெண்ணெயே காரணம். எங்குச் சுற்றிலும் வெண்ணெயால் நிறைந்ததே அவரது பால்ய லீலை.
கிருஷ்ணர் வெண்ணெய் வேண்டும் என்று கூறினால், முடியாது என்று யாருமே கூற மாட்டார்கள். ஆனால், கேட்டு வாங்கி சாப்பிடப் பிடிக்காமல், திருடிச் சாப்பிடுவதில் அவர் இன்பத்தைக் கண்டார். திருடும்போது அவருக்கு வெண்ணெயினால் மட்டும் இன்பம் கிடைக்கவில்லை; அதை காரணமாக வைத்து நண்பர்களுடன் கும்மாளம் போடுதல், விருந்தாவன தாய்மார்களின் பொய்யான கோபத்திற்கு ஆளாகுதல் என பலவற்றை கிருஷ்ணர் ரசித்தார். திருடச் சென்றவன் சப்தமின்றி திருடுவான், ஆனால் கிருஷ்ணரோ தாம் திருடியது உடனே தெரிய வேண்டும் என்பதற்காக, அவ்வீட்டிலிருக்கும் பச்சிளம் குழந்தைகளைக் கிள்ளி விட்டு ஓடி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கிருஷ்ணருக்கு பயந்து ஆயர்கள் வெண்ணெய் பானையை உத்திரத்தில் வைக்க, நண்பர்களைக் குனியச் செய்து ஏணி அமைத்து அதையும் திருடி விடுவார் அவர். திருடித் தின்பது ஒரு பக்கம், அதை வைத்து பந்து விளையாடி வீணடிப்பது மறுபக்கம். சில நேரங்களில் ஆயர்குல தாய்மார்களின் கைகளில் வசமாக மாட்டிக்கொள்வதும், ஆனால் எப்படியோ அவர்களை மயக்கிவிடுவதும் அவருக்கு கைவந்த கலையாக இருந்தது.
“கிருஷ்ணர் திருடி விடக் கூடாது என்பதற்காக, இருட்டு அறையை ஏற்பாடு செய்து அதன் உத்திரத்தில் வெண்ணெய் பானையைத் தொங்க விடுவர். ஆனால் கிருஷ்ணர் உள்ளே நுழைந்தவுடன், அந்த அறை பிரகாசமாகி, கிருஷ்ணரும் தன் வேலையை முடித்துக்கொள்வார்.”
திருட்டின் இரகசியம்
பொதுவாக வீட்டிற்குத் திருடன் வந்தால், அதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் விருந்தாவனவாசிகளுக்கு கிருஷ்ணரே உயிர்மூச்சாக இருந்தமையால், “கிருஷ்ணர் என் வீட்டிற்குத் திருட வர மாட்டானா!” என்று ஏங்கிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில், கிருஷ்ணர் வீட்டிற்கு வந்தால், அவருக்கு எளிதில் வெண்ணெய் கிடைத்து விடக் கூடாது என்பதிலும், அவர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். ஒருபக்கம் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு வெண்ணெயைப் பாதுகாக்க முயன்றனர், மறுபக்கம் கிருஷ்ணர் வெண்ணெயைத் திருட வேண்டும் என்றும் விரும்பினர். மேலோட்டமாகப் பார்த்தால், முரண்பட்ட எண்ணங்களாகத் தோன்றலாம், ஆனால் இதுவே கிருஷ்ண பக்தி ரஸத்தினுடைய அசிந்திய (சாதாரண சிந்தனைக்கு அப்பாற்பட்ட) தன்மையாகும்.
கிருஷ்ணர் திருடி விடக் கூடாது என்பதற்காக, இருட்டு அறையை ஏற்பாடு செய்து அதன் உத்திரத்தில் வெண்ணெய் பானையைத் தொங்க விடுவர். ஆனால் கிருஷ்ணர் உள்ளே நுழைந்தவுடன், அந்த அறை பிரகாசமாகி, கிருஷ்ணரும் தன் வேலையை முடித்துக்கொள்வார். அறையில் வெளிச்சம் தோன்றியதற்கு என்ன காரணம் என்பதை தாய்மார்கள் ஒன்றுகூடி விவாதிப்பர். கிருஷ்ணரது திருமேனியில் மிளிரும் ஆபரணங்கள் அதற்கு காரணமா, அல்லது அவரது திருமேனியே பிரகாசமானதா என்பன போன்ற விவாதங்கள் அங்கு நிகழும். கிருஷ்ணருக்கு அழகு சேர்ப்பதாக நினைத்துக் கொண்டு அவரது திருமேனியில் இணைந்த ஆபரணங்கள், அந்த அழகனிடமிருந்து அழகைக் கடன் வாங்கி மிளிர்ந்தன என்பதே உண்மை.
உலக மகா திருடர்
கிருஷ்ணரைப் போன்ற திருடனை உலகில் வேறு எங்கும் காண முடியாது. கிருஷ்ணர் எல்லா விதத்திலும் தன்னிகரற்றவர். அவரது பெயர்களில் ஒன்று, அஸமூர்த்வர், அதாவது தனக்கு சமமாகவோ தன்னைவிட உயர்வாகவோ யாரும் இல்லாதவர். அதனை அவர் திருட்டில்கூட நிரூபித்தார். கிருஷ்ணரே உலக மகா திருடர். அவருக்கு சமமாகவோ அவரைவிட உயர்வாகவோ திருட்டில்கூட யாராலும் இருக்க முடியாது. உலகின் எந்தத் திருடனாவது திருட்டிற்காக 5,000 வருடம் போற்றப்படுகிறானா? யாருடைய திருட்டுச் செயலாவது என்றென்றும் ரசிக்கப்படுகிறதா? எந்தத் திருடனாவது திருடுவதற்கு வர வேண்டும் என்று வீட்டுக்காரர்கள் விரும்பியுள்ளனரா? எந்தத் திருடனாவது தனது உடலிலிருந்து வரும் ஒளியைக் கொண்டு திருடுவது உண்டா?
“குறைமதி கொண்ட மடையர்கள் சிலர் கிருஷ்ணரின் திருட்டிற்காக அவரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அவரது திருட்டின் முழுமையான தெய்வீகத் தன்மையை அவர்கள் புரிந்துகொள்ள மறுப்பது ஏன்? கிருஷ்ணர் திருடினார் என்பதை ஏற்றுக்கொள்வார்களாம், ஆனால் அந்தத் திருட்டைப் பற்றிய இதர விளக்கங்களை ஏற்க மாட்டார்களாம்; என்ன ஒரு மொள்ளமாரித்தனம்!”
உலகில் நாம் காணும் எல்லாத் தன்மைகளும் ஆதியில் கிருஷ்ணரிடம் இருப்பதால்தான் நம்மிடையே காணப்படுகின்றன. எனவே, திருடுதல் என்னும் தன்மையும் கிருஷ்ணரிடம் இருக்கிறது. ஆயினும், இந்த பௌதிக உலகில் நாம் காணும் திருட்டு அந்த தெய்வீகத் திருட்டின் திரிபடைந்த வடிவமாக இருப்பதால், இதனை நம்மால் ரசிக்க முடிவதில்லை, போற்ற முடிவதில்லை, கொண்டாட முடிவதில்லை. அதே நேரத்தில், உண்மையான திருட்டின் தன்மைகளை கிருஷ்ண லீலைகளின் மூலமாகக் காண நேரிடும்போது, நம்மைப் போன்ற கட்டுண்ட ஜீவன்கள்கூட அவற்றை ரசிக்கின்றனர், சுவைக்கின்றனர், மகிழ்கின்றனர், போற்றுகின்றனர்.
மாபெரும் ஆச்சாரியர்களில் ஒருவரான பில்வமங்கல தாகூர் கிருஷ்ணரின் திருட்டை அடிப்படையாக வைத்து சோராஷ்டகம் என்னும் அற்புத பாடலை இயற்றியுள்ளார்: கோகுலத்தில் வெண்ணெயைத் திருடியவர், கோபியர்களிடம் ஆடையைத் திருடியவர், அஜாமிலனைப் போன்ற பாவிகளின் அனேக ஜன்ம பாவத்தைத் திருடியவர், ஸ்ரீ ராதிகாவின் இதயத்தைத் திருடியவர், கருநீல மேகத்திடமிருந்து நிறத்தைத் திருடியவர், தன்னிடம் சரணடைபவர்களிடத்தில் அனைத்தையும் திருடுபவர் என கிருஷ்ணர் தலைசிறந்த திருடராகத் திகழ்கிறார்.
உலகிலுள்ள அனைத்தும் கிருஷ்ணருக்குச் சொந்தமானவை என்பதால், தத்துவ கோணத்திலிருந்து பார்த்தால், அவர் திருடுவதற்கென்று ஏதும் கிடையாது. தன் சொத்தை தானே எடுத்துக்கொள்ளுதல் திருட்டு ஆகுமா? நிச்சயமாக இல்லை. ஆயினும், கிருஷ்ணருக்கும் பக்தருக்கும் இடையிலான அன்புப் பரிமாற்றத்தின் உன்னத கோணத்திலிருந்து பார்த்தால், கிருஷ்ணர் உலக மகா திருடராக அறியப்படுகிறார்.
“குறைமதி கொண்ட மடையர்கள் சிலர் கிருஷ்ணரின் திருட்டிற்காக அவரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அவரது திருட்டின் முழுமையான தெய்வீகத் தன்மையை அவர்கள் புரிந்துகொள்ள மறுப்பது ஏன்? கிருஷ்ணர் திருடினார் என்பதை ஏற்றுக்கொள்வார்களாம், ஆனால் அந்தத் திருட்டைப் பற்றிய இதர விளக்கங்களை ஏற்க மாட்டார்களாம்; என்ன ஒரு மொள்ளமாரித்தனம்!”
நமது மனம் திருடப்படுவதாகட்டும்
நம்முடைய மனதை இந்த வெண்ணெய் திருடர் திருடுவதற்கு நாம் இசையும்போது, எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வை அடைவோம். ஒருவேளை கிருஷ்ணர் நம்மைத் திருடிவிட்டால், நம்முடைய சுதந்திரம் பறிபோய் விடுமோ என்று சிலர் அஞ்சுகின்றனர். முட்டாள்கள்!!! அந்தோ பரிதாபம்!!! இன்று சுதந்திரமாக இருப்பதுபோன்று அவர்கள் கற்பனை செய்து கொண்டுள்ளனர். நாம் நம் மனதை எத்தனையோ தேவையற்ற விஷயங்களில் பறிகொடுத்துக் கிடக்கின்றோம் என்பதே உண்மையிலும் உண்மை. இந்த மனம் பல்வேறு நபர்களால் திருடப்பட்டு, சூறையாடப்பட்டு, நிர்கதியாக நிற்கின்றது என்பதை இன்னுமா நாம் உணர மறுக்கின்றோம்! என்னே விந்தை!
தற்போது நம் மனதை காமம் ஒருபக்கம் திருடுகிறது, கோபம் ஒருபக்கம் திருடுகிறது, பேராசை மறுபக்கத்தில் திருடுகிறது, பொறாமை இன்னொரு பக்கத்தில் திருடுகிறது, இன்னும் எத்தனையோ எண்ணற்ற திருடர்களால் எல்லாப் பக்கமும் திருடப்படுகிறது. இவ்வாறு திருடப்பட்டுள்ள மனதை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் திருடுவதாகட்டும். திருடர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகியுள்ள மனதை அதன் உண்மையான உரிமையாளர் திருடுவதாகட்டும். கட்டுக்கடங்காத குதிரைகள் ரதத்தை வெவ்வேறு திசைகளில் இழுப்பதைப் போல தற்போதைய திருடர்கள் ஒவ்வொருவரும் நம்மை வெவ்வேறு திசைகளில் இழுத்துச் செல்கின்றனர், நிச்சயம் நாம் அதள பாதாளத்திற்குள் வீழ்ந்து கொண்டுள்ளோம். ஒருவேளை கிருஷ்ணர் நமது மனதைத் திருடிவிட்டால், அப்போது, கடிவாளம் பூட்டப்பட்ட முறையான ரதத்தில் அமர்ந்து இன்பமாக பயணிக்கும் பயணியாக நாம் மாறிவிடுவோம்.
இனிமேலும், நமது மனதை கயவர்களிடம் பறிகொடுக்காமல், உண்மையான உரிமையாளரும் தெய்வீகத் திருடருமான அந்த முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பறிகொடுப்போம். அவருடைய திருநாமத்தை உச்சரித்து, அவரைப் பற்றிய விளக்கங்களை பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய சாஸ்திரங்களிலிருந்து செவியுற்றால், நிச்சயம் படிப்படியாக நமது மனம் கிருஷ்ணரால் திருடப்படும்.