வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ்
சைதன்ய மஹாபிரபு விஜயம் செய்த திருத்தலங்களுள் முக்கியமான ஒன்று சாட்சி கோபால் என்னும் அற்புத திருத்தலம். உத்கல தேசம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் (இன்றைய ஒடிஸா மாநிலத்தில்), ஜகந்நாத புரி க்ஷேத்திரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் சத்தியவதி என்ற கிராமத்தில் சாட்சி கோபாலரின் திருக்கோயில் அமைந்துள்ளது.
எங்களின் பயணம்
புரிக்கு பயணம் செய்யும்போது பலமுறை சாட்சி கோபாலரைத் தரிசித்துள்ளேன். ஆயினும், சென்ற வருடம் பகவத் தரிசனத்திற்கு சேவை செய்யும் பக்தர்களுடன் யாத்திரை சென்று சாட்சி கோபாலரை தரிசித்தது நிச்சயம் மறக்க முடியாத அனுபவம். பக்தர்களுடன் இணைந்து சென்று, பகவானை தரிசித்து, அவரது லீலைகளைக் கேட்டு, ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை கீர்த்தனம் செய்வதன் அனுபவமும் இனிமையும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. அவை உள்ளத்தில் ஆழமாகப் பதிகின்றன.
புரியில் தங்கியிருந்த நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாட்சி கோபாலரின் திருக்கோயிலை தரிசிக்கச் சென்றோம். இக்கோயிலின் முழு நேர திருப்பணியில் பல்வேறு பக்தர்கள் ஈடுபட்டு தங்களுடைய வாழ்வினை சாட்சி கோபாலருக்காக அர்ப்பணித்துள்ளனர், பாண்டா என்று அழைக்கப்படும் இவர்கள் பொதுவாக திருக்கோயிலின் பராமரிப்பிற்காகவும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகவும் நன்கொடை திரட்டுவதில் அதிக உற்சாகத்துடன் ஈடுபடுவது உண்டு. ஒரு காலத்தில் அவர்களுடைய வற்புறுத்தல் மிக அதிகமாக இருந்தது, தற்போது நிறைய மாறியுள்ளதைக் காண முடிகிறது.
சாட்சி கோபாலரின் பாண்டாக்கள் அனைவரும் எங்களை மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினர். நாங்கள் முதலில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் பகவான் சாட்சி கோபாலரையும் அவருக்கு அருகில் நின்ற ஸ்ரீமதி ராதாராணியையும் கண்குளிர தரிசித்தோம். பிறகு வெளி பிரகாரங்களுக்குச் சென்று சுற்றியிருந்த பல்வேறு சிறு கோயில்களையும் தரிசித்தோம். கோயிலைச் சுற்றி வலம் வந்த பின்னர், கோயிலின் ஒருபுறத்தில் ஒன்றாக அமர்ந்து, சாட்சி கோபாலரின் லீலைகளை பக்தர்களுடன் விவாதித்து பேரானந்தம் அடைந்தோம்.
கோயில் வரலாறு
ப்ரஜா என்னும் அழியாத கற்களைக் கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பேரன் வஜ்ரநாபர் பதினாறு கிருஷ்ண விக்ரஹங்களை மதுராவின் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்தார். மதன கோபால் (மதன-மோஹன்), சாட்சி கோபால் ஆகிய இரு விக்ரஹங்களும் விரஜ மண்டலத்தின் மையமான விருந்தாவனத்தில் சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.
மாமன்னர் வஜ்ரநாபரால் விருந்தாவனத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோபாலர், இன்று ஒடிஸாவில் சாட்சி கோபால் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளது ஏன்? விருந்தாவனத்திலிருந்து கிருஷ்ணர் ஒடிஸாவிற்கு ஏன் வந்தார்? முகலாயர்களின் படையெடுப்பினால் பல விக்ரஹங்கள் இடம் மாறியதைப் போல இவரும் இடம் மாறினாரா? இல்லை. யாரேனும் அவரை அங்கிருந்து இங்கு கொண்டு வந்தனரா? அதுவும் இல்லை. அப்படியென்றால் எப்படி கோபாலர் அங்கிருந்து இங்கு வந்தார்?
நடந்தே வந்தார்! ஆம். தன்னுடைய திருப்பாதங்களால் நடந்தே வந்தவர் இவர்! கோபாலர் தானே மனமுவந்து தன்னுடைய பக்தர்களின் துயரைப் போக்க நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்து தென்னிந்தியாவின் வித்யா நகரத்திற்கு வந்தார். எவ்வாறு நடந்து வந்தார்? ஏன் நடந்து வந்தார்? தொடர்ந்து படியுங்கள்.
சாட்சி கோபாலருடைய கோயிலின் முகப்பு வாயில்.
ஓர் எச்சரிக்கை
சாட்சி கோபாலரின் கதையை அறிவதற்கு முன்பாக வாசகர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை: கோபாலர் சாக்ஷாத் முழுமுதற் கடவுள், அவருடைய லீலைகள் எதையும் நாம் பௌதிக கண்ணோட்டத்தோடு படிக்கக் கூடாது. சில நேரங்களில் சாட்சி கோபாலரின் கதையை சிலர் பௌதிக திருமண கதைகளுக்கு சமமாக நினைத்து, நமது புலனின்பத்திற்கு கிருஷ்ணர் உதவி செய்வார் என்று எதிர்பார்க்கின்றனர். அது முற்றிலும் தவறான எண்ணமாகும். பகவான் கிருஷ்ணர் “பக்தவத்ஸலர்” அதாவது, பக்தர்களிடம் பெரும் பாசம் கொண்டவர் என்று அழைக்கப்படுகிறார்.
பக்தவத்ஸலர் என்னும் தனது பெயரை நிலைநாட்டுவதற்காகவும் தூய பக்தர்களின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்துவதற்காகவும் மற்றும் இதர தெய்வீக நோக்கத்திற்காகவும் பகவான் கிருஷ்ணரால் ஏற்பாடு செய்யப்பட்டதே இந்த தெய்வீக லீலை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மீது தென்னிந்தியாவைச் சார்ந்த இரண்டு பிராமணர்கள் வைத்திருந்த எல்லை கடந்த நம்பிக்கையையும் தூய அன்பையும் இக்கதை வெளிப்படுத்துகின்றது.
சாட்சி கோபாலரின் லீலை ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அங்கே சாட்சி கோபாலரை தரிசித்த பின்னர், பகவான் நித்யானந்த பிரபு கோபாலரின் இந்த கதையினை வர்ணிக்கிறார். தனது அந்தரங்க பக்தர்களுடன் இணைந்து பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பேராவலுடன் இரு பிராமணர்களின் இக்கதையைக் கேட்டு மகிழ்வுற்றார். இக்கதை சாதாரண கல்யாண கதை என்றால், நித்யானந்த பிரபு இதனை உரைத்திருக்க மாட்டார், பரம சந்நியாசியான சைதன்ய மஹாபிரபு நிச்சயம் இதனைக் கேட்டிருக்க மாட்டார், கிருஷ்ண தாஸ கவிராஜர் இதனை சைதன்ய சரிதாம்ருதத்தில் விவரமாக ஓர் அத்தியாயம் முழுக்க விளக்கியிருக்க மாட்டார்.
எனவே, சாட்சி கோபாலரின் கல்யாண கதை, சாதாரண கல்யாண கதை அல்ல என்ற எண்ணத்துடன் தொடர்ந்து படியுங்கள்.
கோபாலரின் முன்பு சத்தியம் செய்த பிராமணர்
ஒருமுறை தென்னிந்தியாவின் வித்யாநகரைச் சார்ந்த ஒரு வயோதிக பிராமணரும் ஓர் இளம் பிராமணரும் கயா, காசி, ப்ரயாகை, மதுரா, கோவர்தனம் போன்ற தீர்த்த ஸ்தலங்களுக்கு நீண்ட யாத்திரையை மேற்கொண்டனர். அவர்கள் இறுதியில் மதுராவை அடைந்து, விருந்தாவனத்தின் பன்னிரண்டு வனங்களையும் கோவர்தன மலையையும் தரிசித்து, யமுனை நதியின் பல்வேறு படித்துறைகளில் நீராடிய பின்னர், பஞ்சக்ரோஸி விருந்தாவனத்தில் அமைந்திருந்த கோபாலரின் திருக்கோயிலை அடைந்தனர். கோபாலரின் ஒப்பிலடங்கா அழகு இருவரின் மனதையும் திருட, அங்கேயே அவர்கள் நான்கு நாள்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழித்தனர்.
இளைய பிராமணர் பற்பல சேவைகளை யாத்திரை முழுவதும் மூத்த பிராமணருக்கு செய்து வந்தார்; மூத்தவர் களைப்படையா வண்ணம் சொந்த மகன்கூட செய்யாத உதவியினை இளைய பிராமணர் செய்தார். அவருக்கு தக்க மரியாதை வழங்கும் கடமை உணர்வோடு, மூத்தவர் தனது மகளை அவருக்கு கன்னியாதானம் செய்து வைக்க முடிவு செய்தார்.
மூத்தவரின் முடிவைக் கேட்ட இளம் பிராமணர், “ஐயா, இந்தத் திருமணம் சாத்தியமல்ல. நீங்கள் உயர் குடும்பத்தைச் சார்ந்தவர், சிறந்த கல்வியும் பெரும் செல்வமும் படைத்தவர். நானோ நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த சாதாரண கல்வியறிவை உடைய ஏழை. நான் நிச்சயம் உங்களுக்கு தகுந்த மருமகன் அல்ல. அதுமட்டுமின்றி, வைஷ்ணவ சேவையினால் பகவான் கிருஷ்ணர் திருப்தியடைவார் என்பதால்தான், நான் உங்களுக்கு சேவை செய்து வருகிறேன்” என்று கூறினார்.
மூத்த பிராமணர் தொடர்ந்து வலியுறுத்த, இளைய பிராமணர், குடும்பத்தினர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஊர் மக்கள் ஏற்பார்களா என பல காரணங்களைக் கூறி மறுத்தார். அனைத்தையும் கேட்ட மூத்த பிராமணர், தன்னுடைய மகளை கன்னியாதானம் செய்து கொடுப்பது தனது விருப்பம் என்றும், அதனை குடும்பத்தினர் உட்பட யாராலும் தடுக்க இயலாது என்றும் உறுதியளித்தார். இறுதியில், மூத்த பிராமணர், பகவான் கோபாலரின் முன்பு சென்று தனது மகளை அவருக்கு கன்னியாதானம் செய்வதாக சத்தியமளித்தார். அப்போது, இளைய பிராமணர் பகவானிடம் கூறினார், “எம்பெருமானே, இந்தத் திருமண ஒப்பந்தத்திற்கு நீரே சாட்சி, தேவைப்பட்டால் சாட்சி கூற உம்மை அழைப்பேன்.”
யாத்திரையின் எஞ்சியிருந்த நாள்களிலும் இளைய பிராமணர், ஒரு சீடனைப் போல மூத்தவருக்கு சேவை செய்ய, அவர்கள் இருவரும் வித்யாநகருக்கு திரும்பினர்.
தனக்கும் பெரியவருக்கும் இடையிலான திருமண ஒப்பந்தத்திற்கு சாட்சி சொல்ல வந்த கோபாலரை இளைய பிராமணர் ஊர் மக்களுக்கு காண்பித்தல்.
மூத்த பிராமணருக்கு எழுந்த தர்ம சங்கடம்
வீடு திரும்பிய சில நாள்களில், மூத்த பிராமணர் தன்னுடைய சத்திய பிரமாணத்தை நிறைவேற்றுவதற்காக, குடும்பத்தினரை அழைத்து தன்னுடைய முடிவை அறிவித்தார். இளைய பிராமணர் சந்தேகித்த வண்ணமே, முதியவரின் மகனும் மனைவியும் அவருடைய ஒப்பந்தத்தினை கடுமையாக எதிர்த்தனர். தங்களின் அந்தஸ்து பறிபோகி விடும் என்றும், தங்களை மீறி முடிவெடுத்தால் விஷம் குடித்து இறந்து விடுவோம் என்றும் மிரட்டினர்.
தனது நிலையை எண்ணி மூத்த பிராமணர் மிகவும் கலங்கினார். கோபாலருக்கு முன்பு செய்த சத்தியத்தை எவ்வாறு மீறுவது என்று அவர் கேள்வியெழுப்ப, அவருடைய மகன், “வெகு தொலைவிலுள்ள விக்ரஹத்தால் எவ்வாறு சாட்சி கூற முடியும்? எனவே, இளைய பிராமணர் இங்கு வந்தால், எதுவும் நினைவில் இல்லை என்று கூறி விடுங்கள். மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்,” என்று கூறினான். தர்ம சங்கடத்தில் சிக்கிய மூத்த பிராமணர் பகவான் கோபாலரின் தாமரைத் திருவடியில் சரணடைந்து சிறந்த வழிகாட்டும்படி வேண்டினார்.
இளைய பிராமணர் மீண்டும் விருந்தாவனம் செல்லுதல்
மறுநாள், இளம் பிராமணர், மூத்த பிராமணரைச் சந்தித்து வாக்கை நிறைவேற்றும்படி வேண்டினார். அப்போது மூத்த பிராமணர் மௌனம் சாதிக்க, சந்தர்ப்பத்தினை உபயோகித்து அவரது மகன் கையில் தடியைக் கொண்டு இளைய பிராமணரை விரட்டினான். மறுநாள் இளைய பிராமணர் ஊர் மக்களை வைத்து பஞ்சாயத்தைக் கூட்டினார். மூத்தவர் தனக்கு வாக்களித்த ஞாபகமில்லை என்று கூற, அவரது மகனோ இளைய பிராமணர் தனது தந்தையின் வயோதிகத்தினை துஷ்பிரயோகம் செய்து, பயணத்தின்போது போதை மருந்து கொடுத்து பணத்தை எல்லாம் திருடி விட்டார் என்று குற்றம் சாட்டினான். வாதங்களைக் கேட்ட ஊர் மக்களும் இளம் பிராமணரை சந்தேகிக்கத் தொடங்கினர்.
இளைய பிராமணர் ஊர் மக்களிடம் நடந்த சம்பவங்களை எடுத்துரைத்தார். எந்த வற்புறுத்தலுமின்றி மூத்தவர் தாமாகவே இந்த ஏற்பாட்டை முன்வைத்தார் என்றும், மூத்த பிராமணருடைய மகனின் வாதங்கள் போலியானது என்றும், தங்களுடைய ஒப்பந்தம் பகவான் கோபாலரை சாட்சியாக வைத்து செய்யப்பட்டது என்றும் வாதாடினார். அத்தருணத்திற்காக காத்திருந்த மூத்த பிராமணர், “பகவான் கோபாலர் இங்கு வந்து சாட்சி கூறினால், நான் ஒப்புக்கொள்கிறேன்,” என்று அறிவித்தார். பகவான் கோபாலர் மிகவும் கருணை வாய்ந்தவர் என்பதால், அவர் அங்கே வந்து நிச்சயம் சாட்சி கூறி தனது வாக்கினைக் காப்பாற்றுவார் என்று மூத்த பிராமணர் முழுமையாக நம்பினார். அவரது மகனோ, விக்ரஹம் சாட்சி கூறிய சம்பவம் ஒருபோதும் நடந்ததல்ல என்று எண்ணி, ஊர் மக்களின் முன்பாக தனது தந்தையின் முடிவை ஆதரித்தார்.
இளைய பிராமணர் மீண்டும் விருந்தாவனத்திற்குச் சென்று கோபாலரை தரிசித்து நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துரைத்தார். இரு பிராமணர்களின் தர்மங்களையும் வாக்கையும் காப்பதற்காகவே உங்களை சாட்சியாக அழைக்கிறேன், பெண்ணைத் திருமணம் செய்யும் நோக்கத்துடன் அல்ல,” என்று தெளிவுபடுத்தினார்.
சாட்சி கோபாலரின் மூல விக்ரஹம்
விக்ரஹம் நடந்துவந்த அதிசயம்
இளம் பிராமணரின் வேண்டுகோளைக் கேட்ட பகவான் அவரிடம் பேசத் தொடங்கினார், “நீங்கள் ஊருக்கு திரும்பிச் செல்லுங்கள், ஊரார் முன்னிலையில் நீங்களும் முதியவரும் என்னை நினைத்த மாத்திரத்தில், நான் அனைவர் முன்பும் தோன்றி சாட்சி அளிக்கிறேன்,” என்று கூறினார். ஆயினும், நான்கு கரங்களைக் கொண்ட விஷ்ணு ரூபத்தில் தோன்றி சாட்சியளித்தாலும் ஊர் மக்கள் நம்ப மாட்டார்கள் என்றும், அவர் விக்ரஹ வடிவில் வந்து சாட்சியளித்தால் மட்டுமே அனைவரும் நம்புவர் என்றும் இளம் பிராமணர் வாதாடினார்.
விக்ரஹங்கள் நடந்ததாக நான் கேள்விப்பட்டதில்லை என்று பகவான் கோபாலர் கூற, இளம் பிராமணரோ, “விக்ரஹம் பேசும் பட்சத்தில், நடக்கவும் முடியும்,” என்று மறுவாதம் புரிந்து பகவானை வெற்றி கொண்டார். பிராமணரை திரும்பிப் பார்க்காமல் நடக்கும்படியும் தான் பின்தொடர்ந்து வருவதாகவும் கோபாலர் சம்மதம் தெரிவித்தார். பிராமணர் திரும்பிப் பார்த்தால், அங்கேயே விக்ரஹமாக நின்று விடுவேன் என்று கோபாலர் நிபந்தனையும் விதித்தார்.
அதற்கு சம்மதித்த இளம் பிராமணர், கோபாலருடைய கொலுசு சப்தத்தை பின்னால் கேட்டபடியே வித்யாநகரை நோக்கி பயணம் மேற்கொண்டார். பயணம் முழுவதும் பகவான் கோபாலருக்கு உரிய நேரத்தில் ஒரு படி அன்னம் சமைத்துப் படைத்து வந்தார். அவர்களது பயணம் வித்யாநகரை நெருங்கியது. கோபாலர் உண்மையிலேயே தன்னுடன் நடந்து வந்ததை அனைவரும் பார்த்து மகிழ வேண்டும் என்று எண்ணிய இளம் பிராமணர் பின் திரும்பி பகவானின் திருவிக்ரஹத்தை தரிசித்தார்.
பகவான் அவரிடம் இனிமேல் நான் நகர மாட்டேன் என்றும் ஊருக்குச் சென்று அனைவரையும் அழைத்து வரும்படியும் கூற, இளம் பிராமணர் அவ்வண்ணமே ஊர் மக்களை அழைத்து வந்தார். அனைவரும் பகவானின் திருவிக்ரஹத்தை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். பின்பு பகவான் சாட்சி கூற, அவர் முன்னிலையில் இளம் பிராமணருக்கு மூத்த பிராமணர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார்.
தூய பக்தர்கள் என்றும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சரணத்தை நம்பியே செயல்படுகின்றனர் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.
இரு பிராமணர்களுக்கும் வரமளிக்க பகவான் முன்வந்தபோது, அவர்கள் இருவரும் பகவான் தனது திருவிக்ரஹ வடிவில் என்றென்றும் அங்கே உலகின் மக்களுக்கு காட்சியளித்து கருணையைப் பொழிய வேண்டும் என்று வேண்டினர். பகவானும் அதற்கு சம்மதிக்க, இரு பிராமணர்களும் கோபாலரின் சேவையில் மிக்க மகிழ்ச்சியோடு ஈடுபட்டனர்.
புரிக்கு அருகில் கோபாலர் வருதல்
பிற்காலத்தில், விஜயநகரத்தை ஒடிஸா மன்னர் புருஷோத்தம தேவர் வெற்றி கொண்டார். அவர் பகவானின் தூய பக்தரானதால், அவர் பகவானை தன்னுடைய தலைநகரான கட்டாக் நகரத்திற்கு வரும்படி பிரார்த்தித்தார். கோபாலரும் கட்டாக் சென்றார், அதன் பின்னர் சிறிது காலம் ஜகந்நாத புரியில் ஜகந்நாதருடன் வசித்த பிறகு, காலப்போக்கில் தற்போதைய இடத்திற்கு சாட்சி கோபால் வந்து சேர்ந்தார்.
விக்ரஹம் வெறும் கல் அல்ல, அது சாக்ஷாத் பகவானின் திருமேனி என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். மூத்த பிராமணரின் மகன் நாஸ்திகன் என்பதால், அவனது புத்தியும் ஞானமும் மாயா சக்தியால் திருடப்பட்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைவதற்கு அவன் தவறினான். தன்னை பக்த வத்ஸலர் என்று பல இடங்களில் நிரூபித்துள்ள பகவான் அதனை இங்கே மீண்டும் நிரூபித்தார். தனது தூய பக்தர்களை காப்பதற்காக தாமே வருவதாக பகவத் கீதையில் (4.8, 9.22) தான் கூறும் வார்த்தைகளுக்கு சாட்சியளிக்கிறார் சாக்ஷாத் சாட்சி கோபால்.
ஒடிஸாவின் இன்றைய தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து ஜகந்நாத புரிக்குச் செல்லும் நெடுஞ்சாலை மூலமாக அல்லது இரயில் பாதையின் மூலமாக இத்திருத்தலத்தை எளிதில் அடைய முடியும். இதுவரை தரிசிக்காதவர்கள் பக்தர்களின் சங்கத்தில் தரிசித்து பயன் பெறுங்கள்.
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.