ஹம்பி — ஹனுமானின் பிறப்பிடம்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருப்பதே ஹம்பி என்னும் திருத்தலம். இந்த வனம் வானரப் படைகளின் வசிப்பிடமாகத் திகழ்ந்ததால் கிஷ்கிந்தா க்ஷேத்திரம் என்றும், பார்வதிதேவி கடுந்தவம் புரிந்ததால் பம்பா தீர்த்தம் என்றும் அறியப்படுகிறது. ஹனுமானின் பிறப்பிடமான இவ்விடத்திற்கு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, நித்யானந்த பிரபு, பலராமர் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிஷ்கிந்தா க்ஷேத்திரம்

ஹம்பி நகரமானது விஜயநகர பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது. இன்று இந்நகரம் பாரம்பரிய கட்டிடக் கலை, நினைவுச் சின்னங்கள், குகைகள், கற்கோயில்கள், பசுமையான வளம், நீரோடை என பலவற்றிற்கும் புகழ் பெற்றுள்ளது. புராண காலத்தில் தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் (பஞ்சவடி) பகுதியிலிருந்து ஹனுமான் அவதரித்த ஹம்பி வரை கிஷ்கிந்தையாக அறியப்பட்டது.

பகவான் இராமசந்திரர் கிஷ்கிந்தையில் பல அற்புதமான திவ்ய லீலைகளை அரங்கேற்றியுள்ளார். வானரப் படைகளின் தலைவர்களான வாலியும் சுக்ரீவனும் கிஷ்கிந்தையை தலைமையிடமாகக் கொண்டிருந்தனர். ஹம்பியில் காணப்படும் கோயில்களை அறிவதற்கு முன்பாக இராமர் கிஷ்கிந்தைக்கு வந்த சம்பவத்தைப் பற்றி சுருக்கமாக அறிவோம்.

சுக்ரீவன் தஞ்சமடைந்து வாழ்ந்த ரிஷ்யமுக மலை

இராமரும் ஹனுமானும் சந்தித்தல்

பஞ்சவடியில் இராவணன் சீதையைக் கடத்திய பிறகு, இராமரும் இலஷ்மணரும் அவளைத் தேடி தீவிரமாக அலைந்த சமயத்தில், இராமர் கபந்தன் என்ற அசுரனைக் கொன்றார். அசுரன் சாப விமோசனம் பெற்றவுடன், இராமரிடம் தென்பகுதி நோக்கி பயணித்தால் சுக்ரீவனைச் சந்திப்பீர்கள் என்றும், அவனுடன் நட்புறவை ஏற்படுத்தினால் சீதையின் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும் என்றும் அறிவுறுத்தினான். அதன்படி, இராமரும் தெற்கு நோக்கி பயணித்து ரிஷ்யமுக மலையை அடைந்தார்.

சுக்ரீவனுக்கும் வாலிக்கும் ஏற்பட்ட கடும்பகையினால், சுக்ரீவன் கிஷ்கிந்தையிலிருந்து விரட்டப்பட்டார். மாதங்க ரிஷியினுடைய சாபத்தின் காரணத்தினால், வாலியினால் ரிஷ்யமுக மலைக்குள் நுழைய முடியாது என்பதை அறிந்திருந்த சுக்ரீவன் அங்கே தஞ்சமடைந்தார். இராமரையும் இலக்ஷ்மணரையும் பார்த்து, அவர்கள் வாலியின் உளவாளிகளாக இருப்பார்களோ என பதட்டமடைந்தார். ஹனுமான் சுக்ரீவனின் அமைச்சராகவும் நண்பராகவும் உதவியாளராகவும் இருந்தார். அவர் உடனடியாக பிராமண வேடத்தில் அவர்களை அணுகி தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஹனுமானின் பேச்சு

ஹனுமானின் மென்மையான பேச்சு, ஆழ்ந்த அர்த்தம் கொண்ட வார்த்தைகள், சொற்கோர்வைகள், முக பாவனை, சைகைகள், சாஸ்திர ஞானம் முதலியவை இராமரை வெகுவாகக் கவர்ந்தன. ஹனுமானின் உண்மையான அடையாளத்தையும் இராமர் புரிந்து கொண்டார். பிறகு இராமரும் இலக்ஷ்மணரும் தங்களை மாமன்னரான தசரதனின் புதல்வர்கள் என ஹனுமானிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களது கதையைத் தெரிவித்தனர். ஹனுமான் உடனடியாக இராமரையும் இலக்ஷ்மணரையும் தோளில் சுமந்து சுக்ரீவன் வசித்த ரிஷ்யமுக மலைக்கு அழைத்துச் சென்றார்.

சுக்ரீவனின் பரீட்சை

அப்போதுகூட சுக்ரீவனின் அச்சம் தெளியவில்லை. இராமர் தமது மனைவியான சீதையை இராவணன் கடத்திச் சென்றுவிட்டான் என்றும், அவனைப் பற்றிக் கேள்விப்பட்டீர்களா என்றும் சுக்ரீவனிடம் வினவ, சுக்ரீவனோ தமது மனைவி ருமாவை வாலி கடத்திச் சென்றுவிட்டான் என்று இராமரிடம் தெரிவித்தார். பல விவாதங்களுக்குப் பின்னர், இராமரும் சுக்ரீவனும் அக்னி குண்டத்தின் முன்பாக பரஸ்பர நட்புறவை ஏற்படுத்திக் கொண்டனர்.

இராமர் வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு ராஜ்ஜியத்தையும் மனைவியையும் மீட்டுக் கொடுப்பதாக உறுதியளித்தார். இப்போதுகூட சுக்ரீவனுக்கு இராமரின் மீது முழு நம்பிக்கை ஏற்படவில்லை. வாலி மிகவும் சக்தி வாய்ந்தவன் என்பதால், அவனுக்கு எதிராகப் போரிடுவதற்குரிய சக்தியை நிரூபிக்க வேண்டும் என சுக்ரீவன் இராமரிடம் தெரிவித்தார். முதல் பரிட்சை: துந்துபி என்னும் அசுரனின் உடலை வாலி பல மைல்களுக்கு அப்பால் தூக்கி வீசியிருந்ததால், இராமரும் அந்த உடலை ஒரே உதையினால் பல மைல்களுக்கு அப்பால் எறிய வேண்டும். இரண்டாவது வேண்டுகோள், அங்கிருந்த ஏழு பனை மரங்களையும் ஒரே அம்பினால் துளைக்க வேண்டும்.

இதைக் கேட்ட இராமர், புன்முறுவலுடன் தமது திருப்பாதத்தால் துந்துபியின் உடலை உதைக்க, அது பல மைல்களுக்கு அப்பால் வீசப்பட்டது. இராமர் அம்பை எய்தபோது அது ஏழு பனைமரங்களையும் ஊடுருவி, பாதாள லோகம் வரை சென்று மீண்டும் அவரது அம்புறா தூணிக்குத் திரும்பியது. அந்த அதிசயத்தைக் கண்ட பிறகு சுக்ரீவனுக்கு இராமரின் மீது பூரண நம்பிக்கை ஏற்பட்டது.

மன்னன் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக அமைச்சர்களை கலந்தாலோசிப்பது அவசியம் என்பதையும், எதிரியை வீழ்த்தி தர்மத்தை நிலைநாட்ட கூட்டணி அவசியம் என்பதையும் மண்ணுலக ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவதற்காக, முழுமுதற் கடவுள் இராமர் சுக்ரீவனுடன் கூட்டணி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமர் வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார். சுக்ரீவனை உடனடியாக கிஷ்கிந்தையின் மன்னராகவும் இராமர் முடிசூட்டினார். சிறிது காலம் கழித்து, வானரப் படைகள் கிஷ்கிந்தையிலிருந்து நான்கு குழுக்களாகப் பிரிந்து நான்கு திசைகளிலும் சீதாதேவியைத் தேடினர். நான்காவது குழுவில் அங்கதன், ஜாம்பவான், ஹனுமான் இடம் பெற்றிருந்தனர். கழுகு ஜடாயுவின் சகோதரரான சம்பாத்தி கழுகு, சீதை இலங்கையின் அசோக வனத்தில் அடைக்கப்பட்டிருக்கும் செய்தியைத் தெரிவித்தார். அதன் பிறகு, ஜாம்பவான் ஹனுமானின் சக்திகளை அவருக்கு நினைவூட்டுதல், ஹனுமான் இலங்கைக்குத் தாவுதல், சீதையைக் காணுதல், இராமர்-இராவண யுத்தம் என இராமாயணம் தொடர்கிறது.

சபரி பக்தியுடன் கொடுத்த பழங்களை இராமர் ஏற்றல்

ஹம்பியிலுள்ள இடங்கள்

ஹம்பியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பல்வேறு இராமாயண லீலா ஸ்தலங்களை இன்றும் காணலாம். அவற்றைப் பற்றிய குறிப்புகளைக் காண்போம்.

சபரியின் குகை

மாதங்க ரிஷி தமது உடலை விடுவதற்கு முன்பாக தமது பெண் சீடரான சபரியிடம் உன்னைக் காண இராமர் வருவார் என ஆசீர்வதித்திருந்தார். குருவின் வார்த்தையில் முழு நம்பிக்கை கொண்டிருந்த சபரி தினந்தோறும் இராமரின் வருகைக்காக பல ஆண்டுகள் ஆவலுடன் காத்திருந்தாள். இராமரும் இலக்ஷ்மணரும் பம்பா ஸரோவரை அடைந்த பிறகு, நேராக சபரியின் ஆஷ்ரமத்திற்கு சென்றனர். மூதாட்டியான சபரி உடனடியாக இராமருக்கு இனிப்பான பழங்களை மட்டுமே அர்ப்பணிக்க முடிவெடுத்து, பழத்தின் ஒரு பகுதியைக் கடித்து சோதித்த பிறகே இராமருக்கு அர்ப்பணித்தாள்.

சபரி கொடுத்த பழங்களை சுவைக்க இராமர் முனைந்தபோது, இலக்ஷ்மணர் அவை ஏற்கனவே சபரியினால் கடிக்கப்பட்டவை என தெரிவித்தார். அதற்கு இராமர் நான் எத்தனை பழங்கள் உண்டிருந்தாலும், அவை சபரியின் பக்தி பழங்களுக்கு ஈடாகாதவை என்று இலக்ஷ்மணரிடம் தெரிவித்தார். நாம் அர்ப்பணிக்கும் பொருளைவிட பக்தியுடன் அர்ப்பணிக்கும் மனநிலையை மட்டுமே பகவான் கவனிக்கிறார். சபரி வாழ்ந்த குகையை இன்றும் நாம் ஹம்பியில் காணலாம்.

பம்பா ஸரோவர்

சபரியின் குகைக்கு அருகில் பம்பா ஸரோவர் தென்படுகிறது. இவ்விடத்தில் பார்வதிதேவி சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தாள். சைதன்ய மஹாபிரபு ஹம்பிக்கு விஜயம் செய்தபோது பம்பா ஸரோவரில் நீராடினார் என சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மத்திய லீலை 9.316)

ஆஞ்சனேய மலை

ஆனைகுந்தி பகுதியில் அமைந்துள்ள ஹனுமான் கோயில், அவரது பிறப்பிடமாகப் போற்றப்படுகிறது. இங்குதான் கேசரிக்கும் அஞ்சனைக்கும் ஹனுமான் தெய்வீக மகனாகத் தோன்றினார். இந்த அழகான கற்கோயிலுக்குச் செல்ல 555 படிக்கட்டுகள் உள்ளன.

ஸ்ரீ மால்யவந்த ரகுநாத சுவாமி

இவ்விடத்தில் இராமரும் இலக்ஷ்மணரும் சாதுர்மாதம் எனப்படும் நான்கு மாத காலத்தில் தங்கியிருந்தனர். இதற்கு அருகில் இருக்கும் மதுவனத்தில், சீதாதேவியை மீட்டபிறகு புஷ்பக விமானத்தில் வந்த வானரங்கள் அனைவரும் தரையிறங்கி பழங்களை உண்டு மகிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

கோதண்ட ராமர் கோயில்

கிஷ்கிந்தையின் மன்னராக சுக்ரீவன் மகுடம் சூட்டப்பட்ட இடத்தில் கோதண்டராமர் கோயில் உள்ளது. இவ்விடத்திற்கு அருகில் ரிஷ்யமுக மலை அமைந்துள்ளது. வாலியினால் விரட்டப்பட்ட பிறகு சுக்ரீவன் இவ்விடத்தில் அடைக்கலம் மேற்கொண்டு பல வருடங்கள் வசித்தார்.

சுக்ரீவன் குகை

இராவணன் அன்னை சீதாதேவியை கடத்தியபோது, சீதாதேவி வீசிய ஆடை, ஆபரணங்கள் இவ்விடத்தில்தான் விழுந்தன. அதன் சுவடுகளை இன்றும் கற்களில் காணலாம். இராமர், இலக்ஷ்மணரின் திருப்பாத சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

யந்த்ரோ தாரக ஆஞ்சனேயர்

ஹனுமான் முதன்முதலில் இராமரையும் இலக்ஷ்மணரையும் இங்குதான் சந்தித்தார். கிருஷ்ணதேவ ராயரின் ஆட்சிக்காலத்தில் மாபெரும் பண்டிதரான ஸ்ரீ வியாஸ தீர்த்தர் இவ்விடத்திற்கு வருகை புரிந்தபோது அவரது மனதில் குறிப்பிட்ட ஒரு ஹனுமானின் உருவம் தோன்றிக் கொண்டே இருந்தது. அவர் கரிக்கட்டையினால் அந்த உருவத்தை வரைந்து முடித்தபோது, குரங்கு ஒன்று அந்தக் கல்லிலிருந்து உயிருடன் வெளியே குதித்தது. அந்த ஓவியம் மறைந்து போனது. மீண்டும் ஓவியத்தை வரைந்தபோது, அதுபோலவே மீண்டும் ஒரு குரங்கு வெளியே குதித்து ஓவியம் மறைந்தது. இச்சம்பவம் பன்னிரண்டு முறை நடைபெற்றது. இறுதியாக, ஸ்ரீ வியாஸ தீர்த்தர் ஹனுமானின் உருவத்தை ஒரு யந்திரத்தினால் கட்டிப் போட்டார். இங்கு ஹனுமான் அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார்.

விருபாக்ஷ கோயில்

இங்கே சிவபெருமானின் சுயம்பு லிங்கம் காணப்படுகிறது, இக்கோயில் பம்பாபதி கோயில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயிலின் அடிவாரத்தில் விஷ்ணு கோயிலும் இடம் பெற்றுள்ளது.

ஸப்த தால மரங்கள்

இராமர் தமது திறனை சுக்ரீவனிடம் நிரூபிக்கும்பொருட்டு, ஏழு பனை மரங்களைத் துளைத்துச் செல்லும் அம்பினை ஏவினார் என்பதைக் கண்டோம். அந்த ஏழு மரங்கள் நீண்ட காலமாக அங்கேயே நின்று கொண்டிருந்தன. திரேதா யுகத்தில் இராமராக அவதரித்த அந்த பகவான், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது, அவர் ஸப்த தால என்ற பெயரில் அறியப்பட்ட ஏழு பனை மரங்களின் இடத்திற்கு வருகை புரிந்தபோது, அவற்றைத் தழுவிக் கொண்டார்.

அந்த ஏழு பனை மரங்களும் மிகப் பழமையாகவும் கனமாகவும் உயரமாகவும் இருந்தன. சைதன்ய மஹாபிரபுவினால் தழுவப்பட்டதால், அம்மரங்கள் அனைத்தும் வைகுண்ட லோகத்திற்குத் திரும்பின. ஏழு மரங்களும் புறப்பட்ட பிறகு அந்த இடம் வெற்றிடமாக மாறியதைக் கண்ட மக்கள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்னும் இந்த சந்நியாசி பகவான் இராமசந்திரரின் அவதாரமே என்பதை உணர்ந்து கொண்டனர். சைதன்ய மஹாபிரபு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மரங்
களுக்கும் வைகுண்ட பிராப்தத்தை அருளும்போது, மனிதர்களுக்கு கூறவும் வேண்டுமோ!

ஹனுமானின் பிறப்பிடம்

சபரியினுடைய குகைக்கு அருகிலுள்ள பம்பா ஸரோவர்

மால்யவந்த ரகுநாத சுவாமி திருக்கோயில்

சுக்ரீவன் குகை

சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அமைந்துள்ள விருபாக்ஷ திருக்கோயில்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஏழு பனை மரங்களை வைகுண்டத்திற்கு அனுப்புதல்

ஹனுமானின் சேவை மனப்பான்மை

ஹனுமான் இராமாயணத்தில் சேவை செய்தது மட்டுமின்றி, மஹாபாரதத்திலும் அர்ஜுனனின் ரதக் கொடியிலும் பீமனின் கர்ஜனையிலும் பங்கெடுத்துக் கொண்டார். சேவை மனப்பான்மைக்கு ஹனுமான் மிகச்சிறந்த உதாரண பக்தராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

எல்லாச் சூழ்நிலையிலும் விழிப்பான சேவை, முன்னுதாரண பிரம்மசாரி, துறவு, சாஸ்திர ஞானத்தை நடைமுறை வாழ்விற்கு ஏற்ப கடைபிடித்தல், சக்தி வாய்ந்த சேவகர், குறிப்பறிந்து சேவை செய்தல், உற்சாகம், புத்துணர்ச்சி, பேச்சுதிறன், பணிவு என ஹனுமானின் திவ்ய குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவரது பிறப்பிட பூமியான ஹம்பியை தரிசிப்பதால், பக்தியில் சிறந்த சேவை மனப்பான்மையை நாமும் நிச்சயம் வளர்த்துக்கொள்ள முடியும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives