சீடர்: ஆசைப்படக் கூடாது என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லும்போது, அவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
ஸ்ரீல பிரபுபாதர்: அவருக்குத் தொண்டு செய்வதற்கு மட்டுமே நாம் ஆசைப்பட வேண்டும் என்பதையே அவர் அங்கு குறிப்பிடுகிறார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகத்-ஈஷ காமயே, “தனம் வேண்டேன், ஜனம் வேண்டேன், அழகிய பெண்களும் வேண்டேன்” என்று கூறினார். அப்படியெனில், அவர் வேண்டுவது என்ன? “நான் வேண்டுவதெல்லாம் கிருஷ்ண சேவை மட்டுமே” என்கிறாரே தவிர, “எனக்கு இது வேண்டாம், அது வேண்டாம். நான் சூன்யமாகிவிடுகிறேன்,” என்று அவர் கூறவில்லை.
சீடர்: பக்தனல்லாதவனும் தனக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்துள்ளதாகக் கூறுகிறான். ஆனால், “அந்த நல்ல முடிவுகளை அடைய எனக்கு கிருஷ்ணர் தேவையில்லை” என்றும் சொல்கிறான்.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், அவன் ஒரு முட்டாள். நல்ல முடிவுகள் என்பதன் உண்மையான பொருளை அவன் அறியவில்லை. இன்று ஒருவகையான “நல்ல முடிவுக்கு” அவன் மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்றான். ஆனால் அவனது விருப்பம் நாளை மாறிவிடும். மரணத்தின்போது அவன் தனது உடலை மாற்றித்தானே ஆக வேண்டும். சில சமயம் நாயின் உடலை எடுத்து ஒருவகையான “நல்ல முடிவுக்கு” ஆசைப்படுவான். மற்றொரு சமயம் தேவர்களின் உடலை எடுத்து வேறுவகையான “நல்ல முடிவுக்கு” ஆசைப்படுவான். பிரமதாம் உபர்-யத:, அவன் பிரபஞ்சத்தில் மேலும் கீழுமாக சக்கரம்போலச் சுற்றுகிறான். அந்த சக்கரத்தின் பெயர் என்ன?
சீடர்: இராட்டினம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். சில சமயங்களில் அவன் மேலான நிலைக்கு உயர்கின்றான், மீண்டும் அவன் கீழ்நிலைக்கு வந்து பன்றி அல்லது நாயைப் போன்ற உடலை அடைவது உறுதி. இஃது எப்போதும் நடந்து கொண்டே இருக்கும்.
ப்ரஹ்மாண்ட ப்ரமிதே கோண பாக்யவான் ஜீவ
குரு-க்ருஷ்ண-பிரஸாதே பாய பக்தி-லதா-பீஜ
“பிரபஞ்சத்திலுள்ள மேலுலகங்களுக்கும் கீழுலகங்களுக்கும் பற்பல பிறவிகளாக அலைந்து திரிந்த பின்னர், எவனொரு வன் அதிர்ஷ்டசாலியோ, அவன் ஆன்மீக குருவின் கருணை யினாலும் கிருஷ்ணரின் கருணையினாலும் பக்தித் தொண்டிற்கு வருகிறான்.” (சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை 19.151)
சீடர்: இருக்கலாம். ஆனால் பக்தனல்லாதவனோ, “நாங்களும் நல்ல செயல்களைத்தான் செய்கின்றோம். நீங்கள் மற்றவர்களுக்கு உணவளிப்பதுபோல நாங்களும் உணவளிக்கிறோம். நீங்கள் பள்ளிகளைத் திறப்பதுபோல நாங்களும் பள்ளிகளைத் திறக்கிறோம்” என்று கூறுவான்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் நாங்கள் கிருஷ்ண உணர்வை போதிக்கும் பள்ளிகளைத் திறக்கின்றோம், உங்களது பள்ளிகளோ மாயையை கற்றுக் கொடுக்கின்றன. பிரச்சனை என்னவெனில், இந்த அயோக்கியர்களால் பக்தி என்பதற்கும் கர்மம் (பௌதிக செயல்) என்பதற்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்துகொள்ள முடிவதில்லை. பக்தியானது கர்மத்தை போலத் தோன்றினாலும், அது கர்மம் அல்ல. பக்தி நெறியிலுள்ள நாம் கிருஷ்ணரின் திருப்திக்காக வேலை செய்கிறோம். இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடாகும்.
உதாரணமாக, குருக்ஷேத்திர யுத்தத்தில் போரிட்ட அர்ஜுனன், அச்செயலை கிருஷ்ணருக்காக செய்ததால், சிறந்த பக்திமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான். கிருஷ்ணர் அவனிடம், பக்தோ (அ)ஸி மே… ப்ரியோ (அ)ஸி மே (பகவத் கீதை 4.3), “அர்ஜுனனே, நீ எனது மிகவும் பிரியமான பக்தன்” என்று கூறினார். அர்ஜுனன் அப்படி என்ன செய்தான்? அவன் சண்டையிட்டான், அவ்வளவுதான். ஆனால் அவன் கிருஷ்ணருக்காக சண்டையிட்டான். அதுவே இரகசியம். போர் வீரன் என்னும் தகுதியை அர்ஜுனன் மாற்றவில்லை, ஆனால் தனது மனப்பான்மையை மாற்றிக் கொண்டான். போர் தொடங்குவதற்கு முன், “நான் ஏன் எனது உறவினர்களைக் கொல்ல வேண்டும்? இந்த யுத்த களத்தை விட்டு வனத்திற்குச் சென்று சாதாரண ஆண்டியாகிவிடலாம்” என்று நினைத்தான். ஆனால் கிருஷ்ணரோ அவன் போரிட வேண்டும் என்று விரும்பினார், இறுதியில் கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜுனன், கிருஷ்ணரின் தொண்டாக போர் புரிந்தான். அவன் தனது சொந்த புலனின்பத்திற்காக அல்லாமல், கிருஷ்ணரது புலனின்பத்திற்காக போரிட்டான்.
பக்தர்: அப்படியெனில், பக்தித் தொண்டிலும் புலனின்பம் உண்டா?
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கர்மியொருவன் தனது சொந்த புலனின்பத்திற்காக வேலை செய்கிறான். பக்தனோ கிருஷ்ணரின் புலனின்பத்திற்காக வேலை செய்கிறான். இதுவே பக்தனல்லாதவனுக்கும் பக்தனுக்கும் உள்ள வேறுபாடாகும். புலனின்பம் என்பது இரண்டு வழிகளிலும் உண்டு. ஆனால் நீங்கள் உங்களுடைய சொந்த புலனின்பத்திற்காக வேலை செய்தால், அது கர்மம் என்றும்; கிருஷ்ணரின் புலனின் பத்திற்காக வேலை செய்தால், அது பக்தி என்றும் கூறப்படுகிறது. பக்தியும் கர்மமும் ஒரேமாதிரி தோன்றலாம், ஆனால் தரத்தில் வேறுபட்டவை.
கோபியரின் நடத்தைகளை மற்றோர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கிருஷ்ணரின் மிக அழகான வாலிப பருவதின் அழகில் கோபியர்கள் வசீகரிக்கப்பட்டனர். அவர்கள் கிருஷ்ணரை காதலராகப் பெற விரும்பியதால், அவருடன் நடனமாடுவதற்காக நள்ளிரவில் தங்களது வீட்டை விட்டுச் சென்றனர். இதனால் அவர்கள் ஏதோ பாவச் செயலில் ஈடுபட்டதுபோல் தோன்றும்.ஆனால் அவர்கள் செய்தது பாவமல்ல; ஏனெனில், அவர்களது செயல் கிருஷ்ணரை மையமாகக் கொண்டது. எனவே, சைதன்ய மஹாபிரபு, ரம்யா காசித் உபாஸனா வ்ரஜவதூ-வர்கேண யா கல்பிதா, “கிருஷ்ணரை பூஜிக்க கோபியர்கள் கடைபிடித்த வழிமுறையைக் காட்டிலும் சிறப்பான வழிமுறை வேறெதுவும் இல்லை” என்று பரிந்துரைக்கிறார்.
ஆனால், அயோக்கியர்களோ, “ஓ, இது மிகவும் அருமை. கிருஷ்ணர் நள்ளிரவில் அடுத்தவர்களின் மனைவியருடன் நடனமாடினார். நாமும் சில பெண்களை வரவழைத்து நடனமாடி கிருஷ்ணரைப்போல மகிழ்வோம்” என்று எண்ணு கின்றனர். அத்தகு எண்ணம், கிருஷ்ணர் கோபியருடன் நடத்திய லீலைகளைப் பற்றிய மிகவும் தவறான கருத்தாகும். இதுபோன்ற தவறான கருத்துகளைப் போக்கவே ஸ்ரீல வியாசதேவர் (ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர்) கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்பதை விளக்குவதற்கு பாகவதத்தின் ஒன்பது காண்டங்களை அர்ப்பணித்துள்ளார். அதன் பின்னரே அவர் கோபியருடனான கிருஷ்ணரின் லீலைகளைப் பற்றி வர்ணிக்கின்றார். ஆனால் அயோக்கியர்களோ கோபியரு டனான கிருஷ்ணரின் லீலைகளைப் படிக்க நேரடியாக பத்தாவது காண்டத்திற்குத் தாவுகின்றனர். இவ்வாறு அவர்கள் ஸஹஜியர் களாக (கிருஷ்ணரைப் போல நடிப்பவர்களாக) ஆகின்றனர்.
சீடர்: அப்படிப்பட்டவர்கள் ஏதோ ஒரு விதத்தில் கிருஷ்ணருடன் தொடர்பு கொள்கின்றனர் என்பதால், அவர்களின் இதயத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டா?
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. கம்சன்கூட கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டான், ஆனால் விரோதியாகத்தான் பழகினான். அது பக்தி அல்ல. பக்தி என்பது, ஆனுகூல்யேன கிருஷ்ணானு-ஷீலனம், அதாவது, கிருஷ்ணருக்கு அனுகூலமான விதத்தில் இருக்க வேண்டும். கிருஷ்ணரைப்போல நடிக்கவோ கிருஷ்ணரைக் கொல்லவோ முற்படக் கூடாது. அதுவும் கிருஷ்ண உணர்வே, ஆனால் அஃது அனுகூலமான தொண்டு அல்ல என்பதால், அது பக்தி ஆகாது. இருப்பினும், ஏதாவது ஒரு முறையில் கிருஷ்ணரைப் பற்றி நினைவுகொள்வதால், கிருஷ்ணரது எதிரிகளும் முக்தியடைகின்றனர். அவர்கள் அருவ பிரம்ம முக்தியைப் பெற்றாலும், ஆன்மீக உலகத்தில் கிருஷ்ணருடனான லீலைகளில் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அந்த பெறற்கரிய வாய்ப்பு, கிருஷ்ணருக்கு தூய அன்புடன் பக்தித் தொண்டினை பயிற்சி செய்பவர்களுக்கு மட்டுமே உரித்தானதாகும்.