மைத்ரேயருடனான விதுரரின் உரையாடல்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம்

இதுவரை மகாத்மா விதுரர் தூய பக்தரான உத்தவருடன் மேற்கொண்ட தெய்வீக உரையாடலைக் கேட்டோம், இனி மாமுனிவரான மைத்ரேயரிடம் விதுரர் பெறும் உபதேசங்களைக் காண்போம்.

விதுரரின் கேள்விகள்

அமைதியில் பூரணத்துவமும் உன்னதத்தில் திருப்தியும் பெற்றிருந்த விதுரர் கங்கைக் கரையில் (ஹரித்வார்), ஆழங் காண முடியாத அறிவைப் பெற்றிருந்த மைத்ரேய மாமுனிவரை சந்தித்து பின்வருமாறு வினவினார்: “மிகச்சிறந்த முனிவரே, மகிழ்ச்சியை எதிர்பார்த்து பலன்நோக்கு செயல்களில் ஈடுபடும் மக்கள் உண்மையில் துன்பத்தையே அடைகின்றனர். எனவே, உண்மையான மகிழ்ச்சி பெற ஒருவர் எப்படி வாழ வேண்டும்?

“கடந்தகால பாவச் செயல்களின் விளைவினால் பகவானுக்கு அடிபணிய மறுக்கும் மக்கள் வாழ்வில் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்களிடம் இரக்கம் காட்டுவதற்காக பகவத் பக்தர்கள் உலகம் முழுவதும் சஞ்சரித்து பகவானின் கருணையை வழங்கி பிரச்சாரம் செய்கின்றனர். தயவுசெய்து பக்தித் தொண்டைப் பற்றி எனக்கு உபதேசித்து அருளுங்கள். இதனால் நான் தூய்மையடைந்து இதயத்தில் வீற்றுள்ள பகவானின் உபதேசங்களை கேட்பதற்கு தகுதியுடையவன் ஆவேன்.

“மேலும், கேட்கத் தெவிட்டாத பகவானின் அவதார லீலைகளைப் பற்றியும் அவரது பிரபஞ்ச படைப்பைப் பற்றியும் விளக்கியருள வேண்டுகிறேன். எவ்வித கடின முயற்சியும் இன்றி இவ்வுலகத்தையும் ஜீவராசிகளையும் அவர் படைக்கிறார். அவர்கள் வாழ்வதற்குரிய லோகங்களையும் லோக பாலகர்களையும் அவரே படைத்துள்ளார் என கேள்விப்பட்டுள்ளோம். சுய திருப்தியுடைய பகவான் எப்படி வெவ்வேறு ஜீவராசிகளின் இயல்புகள், செயல்கள், உருவங்கள், அம்சங்கள் மற்றும் பெயர்களை வெவ்வேறாக படைத்துள்ளார் என விளக்கியருள வேண்டுகிறேன்.”

கிருஷ்ண கதா

விதுரர் தொடர்ந்தார்: “பௌதிக விஷயங்கள் ஆத்மாவிற்கு திருப்தி தருவதில்லை, மாறாக சலிப்படையவே செய்கின்றன. ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களோ திரும்பதிரும்பக் கேட்டாலும் மீண்டும் கேட்கும் ஆவலைத் தூண்டுபவையாக உள்ளன. அவ்வாறு, பகவானின் திவ்ய நாமம், ரூபம், குணம், லீலைகள் போன்றவற்றைக் கேட்பதில் சுவை அதிகரிக்கும்பொழுது, இதயத்திலுள்ள ரஜோ மற்றும் தமோ குணங்கள் அழிந்து, தேகாபிமானத்தால் உண்டான ஜடப்பற்றுகள், பாசங்கள் குறைந்து படிப்படியாக ஜடத்துன்பங்கள் இல்லாது போகின்றன.

“தங்கள் நண்பரான வியாஸதேவர், பௌதிக விஷயங்களில் மூழ்கியுள்ள மக்களின் மனங்களை கிருஷ்ண கதையை (பகவத் கீதையை) நோக்கி திருப்புவதற்காகவே மஹாபாரதத்தை இயற்றியுள்ளார். இதை உணராமல் வெறும் சடங்குகளில் ஈடுபட்டுள்ளவர்களை பார்த்து நான் அனுதாபப்படுகிறேன். ஆகவே, தயவுசெய்து தேனீயானது மலர்களிலுள்ள தேனை சேகரிப்பதுபோல தாங்கள், வேதங்கள் அனைத்திற்கும் சாரமான ஹரி கதையை கூறியருளுங்கள். குறிப்பாக, பகவானின் விரிவங்கங்களாகிய புருஷ அவதாரங்களைப் பற்றி கூறியருளுங்கள்.”

மகாத்மா விதுரர்

மைத்ரேய மாமுனிவர் பதிலளித்தார்: “விதுரரே, தங்களுக்கு சர்வமங்களம் உண்டாகட்டும். உங்கள் கேள்விகள் பரம புருஷ பகவானைப் பற்றி இருப்பதால் மூவுலகமும் நன்மை பெறும்படியாக உள்ளன.

“பகவானின் நித்ய சகாவான எமராஜராகிய நீங்கள், இப்பிறவியில் ஸ்ரீல வியாஸதேவரின் மூலமாக பிறந்துள்ளீர்கள். பகவான் தம் வசிப்பிடத்திற்கு திரும்பி செல்லும் முன் உமக்கு ஞான உபதேசம் செய்வதற்காகவே என்னிடம் உபதேசங்களை விட்டுச் சென்றார். அத்தகைய நல்லாத்மாவான உங்கள் கோரிக்கையின்படி ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் பிரபஞ்ச படைப்பு, பராமரிப்பு மற்றும் அழிவினை நிகழ்த்தும் பரம புருஷரின் லீலைகளை நான் விளக்குகிறேன்.”

மாயையை துயிலெழுப்புதல்

மைத்ரேயர் தொடர்ந்தார்: “பந்தப்பட்ட ஆத்மாக்கள், முக்தி பெற்ற ஆத்மாக்களைப் போல் பூரணத்துவம் அடைவதற்கான வாய்ப்பளிப்பதற்காகவே பகவான் இந்த பௌதிக உலகங்களை படைத்து, காத்து, அழிக்கின்றார். படைப்பிற்கு முன் அவர் மட்டுமே இருந்தார், அவர் முக்குணங்களைக் கொண்ட ஜட சக்தியான மாயையை துயிலெழுப்பி கருவுறச் செய்கிறார். அதன் பிறகு நித்திய காலத்தால் தூண்டப்பட்டு மஹத் தத்துவம் எனப்படும் மொத்த ஜட சக்தி தோன்றியது. பரம புருஷர் தமது சொந்த உடலிலிருந்து தூய நற்குணமான இந்த மஹத் தத்துவத்திற்குள் பிரபஞ்ச தோற்றத்திற்குரிய விதைகளை பதித்தார்.”

படைப்பு

படைப்பின் வழிமுறையினை மைத்ரேயர் தொடர்ந்து விளக்கினார்: “மஹத் தத்துவமானது தூய ஆத்மாவிற்கும் பௌதிக இருப்பிற்கும் இடைப்பட்ட பொருளாகும். ஜடமும் உயிரும் இணையும் இந்த இடத்திலிருந்துதான் ஜீவராசிகளின் பொய் அஹங்காரம் உற்பத்தியாகிறது. பொய் அஹங்காரம் ஸத்வ குணத்துடன் கலப்பதால் ஜடவுலகை ஆளும் தேவர்களும் மனமும் உண்டாகின்றன. புலன்களோ பொய் அஹங்காரத்தால் ஆளப்படும் ரஜோ குணத்திலிருந்து உண்டாகின்றன.

“பொய் அஹங்காரத்திலிருந்து ஓசையும், ஓசையிலிருந்து ஆகாயமும் உண்டாகின்றன. அதிலிருந்து தொடுஉணர்வும், அதன் பின் காற்றும் தோன்றுகின்றன. காற்றிலிருந்து உருவமும் அதிலிருந்து நெருப்பும் உண்டாகின்றன. பின்னர் சுவையும் அதிலிருந்து நீரும் உண்டாகி, அதிலிருந்து மணமும் பின்னர் நிலமும் உண்டாகின்றன. இந்த மாற்றங்கள் நிகழும் ஒவ்வொரு நிலையிலும் முக்கிய காரணமாக இருப்பது பகவானின் பார்வை, நித்திய காலம், மற்றும் புறச்சக்தியுடன் ஏற்படும் கலவையே ஆகும்.”

தேவர்களின் மனங்கவரும் பிரார்த்தனை

பகவானின் புறச்சக்திக்கு உட்பட்ட நித்திய காலத்தினால் உருவாக்கப்பட்ட தேவர்கள், அவரது அம்சங்களே ஆவர். அவர்கள் பிரபஞ்ச நிர்வாகத்திற்குரிய பல்வேறு கடமைகளை சரிவர நிறைவேற்றுவதற்காக பகவானிடம் பின்வருமாறு பிரார்த்தனைகளை செய்தனர். “எம்பெருமானே! தங்கள் தாமரை பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கங்கள். தங்கள் தாமரை பாதங்களில் புகலிடம் கொள்பவர்களால் எல்லா பௌதிகத் துன்பங்களிலிருந்தும் சுலபமாக விடுபட முடிகிறது. தந்தையே! ஜடவுலகில் மூவகை துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காக, அறிவுமயமாக உள்ள தங்கள் தாமரை பாதங்களில் ஜீவராசிகள் அடைக்கலம் புகுகின்றனர்.

“வேதங்களை கற்றுத் தேர்ந்த முனிவர்கள், தங்கள் தாமரைத் திருமுகத்தை எப்போதும் தேடியலைகின்றனர். தங்கள் தாமரைப் பாதங்களைப் பற்றி சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்பதாலும், இதயத்தில் அவற்றை தியானிப்பதாலுமே உடனடியாக ஒருவர் ஞான ஒளிபெற்று, துறவின் வலிமையால் அமைதி பெறுகிறார். மேலும், அப்பாதங்கள், பக்தர்களுக்கு ஞாபகத்தையும் தைரியத்தையும் அளிக்கின்றன.

“ஆனால், உடல் மற்றும் உடலைச் சார்ந்த உறவினர்களிடம் மிகுந்த பற்றுதலைக் கொண்டுள்ளவர்களால் தங்கள் தாமரை பாதங்களைக் காண முடியாது. மேலும், யாருடைய உள்நோக்கம் பௌதிக செயல்களால் அளவுக்கதிகமாக பாதிப்படைந்துள்ளதோ அவர்களாலும் தங்கள் தாமரை பாதங்களைக் காண முடியாது.

“பகவானே, பக்தித் தொண்டில் உறுதியாக நிலைபெற்றவர்கள், அமுதம் போன்ற தங்கள் திவ்ய லீலைகளை பருகுவதாலேயே ஆன்மீக ஆகாயத்திலுள்ள வைகுண்ட லோகங்களை அடைகின்றனர். ஆனால் பக்தரல்லாதோர் கடின உழைப்பிற்குப்பின் தங்களின் அருவ அம்சமான பிரம்மஜோதியில் கலக்கின்றனர்.

“ஆதிபுருஷரே, முக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் நாங்கள் இருப்பதால் எங்களால் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை. ஆகவே தங்களுக்கு நிவேதனம் செய்ய வேண்டிய வழிகளையும் மார்க்கங்களையும் தயவுசெய்து எங்களுக்கு விளக்கியருளுங்கள். தாங்கள் பலதரப்பட்ட ஜீவராசிகளை தோற்றுவித்த மூல புருஷரும் மாற்றமற்ற ஆதி புருஷரும் ஆவீர். தங்களைவிட உயர்ந்தவரோ தங்களுக்குக் காரணமானவரோ யாருமில்லை.

“பரம புருஷரே, பரமாத்மாவே, மொத்த பிரபஞ்ச சக்தியான மஹத் தத்துவத்திலிருந்து படைக்கப்பட்ட நாங்கள் செயல்பட வேண்டிய வழிமுறையை தயவுசெய்து எங்களுக்கு விளக்குங்கள். தயவுகூர்ந்து பக்குவமான அறிவையும் ஆற்றலையும் அருள வேண்டும். இதனால் பின்தொடரும் சிருஷ்டியின் வெவ்வேறு இலாக்காக்களில் உங்களுக்கு எங்களால் தொண்டு செய்ய முடியும்.”

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives