உங்களின் வரிகளும் வினாக்களும் – ஜனவரி 2023

Must read

நெத்தியடியாக அமைந்த படக்கதை

நவம்பர் 2022 பகவத் தரிசனம் மடல் கிடைக்கப் பெற்றேன். தங்கக் கிண்ணமா, பித்தளை கிண்ணமா என்ற தலைப்பில் ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய உபதேச கதையும் அதிலிருந்த விளக்கமான கருத்துகளும் அருமையிலும் அருமை. தற்போதுள்ள காலத்தில், மது மற்றும் இதர லாகிரி வஸ்துகளை அருந்திவிட்டு, தன் மனைவியை விட்டு பிற பெண்களைத் தேடி இச்சையுடன் செல்லும் ஆண்களுக்கு இலக்ஷஹீரா மூலம் தகுந்த சாட்டையடி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இதுபோன்ற கருத்துகள் அடங்கிய படக்கதை வெளிவர அன்புடனும் வணக்கத்துடனும் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டிக்கொள்கிறேன்.

முத்துப்பாண்டியன், நெடுவயல் (தென்காசி)

அழகாக உணர்த்தியது

கிருஷ்ணர் இல்லாத பகவத் கீதை என்னும் தலையங்கம் “பகவத் கீதை உண்மையுருவில்” பதிப்பின் சிறப்பை அழகாக உணர்த்தியது. வடிவியல் பாடம் நாத்திகர்களுக்கான அற்புத பாடமாய் இருந்தது. நன்றி!

கார்த்திகா ராணி, பழநி

அளவில்லா ஆனந்தம்

டிசம்பர் மாத இதழ் கிடைக்கப் பெற்றோம். மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு பக்கமும் தேவாமிர்தம்போல் உள்ளது. மிகவும் அருமை, இதயம் நிறைந்த பாராட்டுகள். அடியேன் ஒரு தீவிர ஸ்ரீ இராமானுஜ பக்தன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீபெரும்புதூர் சென்று ஆச்சாரியர் ஸ்ரீ இராமானுஜரை சேவித்து அகமும்புறமும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இதழில் ஸ்ரீ இராமானுஜரின் சீடர் ஸ்ரீமத் அனந்தாழ்வார் பற்றிய கட்டுரையைப் படித்து அளவிலா ஆனந்தம் அடைந்தோம். குறிப்பாக, அனந்தாழ்வார் பயன்படுத்திய கடப்பாரை திருமலை
யில் உள்ளது என்னும் விபரத்தை அறிந்து மிகவும் ஆச்சரியம் அடைந்தோம். நன்றி, ஹரே கிருஷ்ண!

—s.மகேசன், மதுரை

ஐந்து கதைகளும் அருமை

நவம்பர் மாத இதழில் வெளிவந்த சோதனைகளை சாதனைகளாக்குவோம் என்ற கட்டுரை மிகவும் அருமை. அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஐந்து உண்மை கதைகளும் பகவானின் அந்தரங்க சக்தியே நிரந்தரமானது என்பதை உணர்த்துகிறது. இக்கட்டுரையை எழுதிய திருமதி கீதா கோவிந்த தாஸி அவர்களுக்கு நமஸ்காரங்கள்.

—சத்திய நாராயணன், வாட்ஸ் ஆப் மூலமாக

அருமையான உரையாடல்

ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் மிகவும் அருமை. அறியாமையில் உள்ள சாதாரண மனிதரைப் போல தம் சீடர்களிடம் கேள்விகளை எழுப்பி, சீடர்கள் மூலமே சரியான விடைகளைக் கூற வைத்தது அற்புதம். இது சீடர்கள் சாதாரண மக்களிடம் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்ய நல்ல பயிற்சியாக இருந்திருக்கும். ஸ்ரீல பிரபுபாதரின் தொலைநோக்கு சிந்தனை, அயராத உழைப்பு, உண்மையான சமூக அக்கறை முதலியவை அவரது ஒவ்வொரு செயலிலும் தெரிகின்றன. நன்றி.

தேவிஸ்ரேஷ்டா கேசவி தேவி தாஸி, அம்மாபேட்டை

மார்கசீர்ஷ மாதமும் மார்கழியும் ஒன்றா?

கெளடீய வைஷ்ணவத்திலுள்ள மார்கசீர்ஷ மாதமும் தமிழ் வருடத்தில் வருகின்ற மார்கழி மாதமும் ஒன்றா? மார்கசீர்ஷ மாதத்தில் கோபியர்கள் விரதமிருந்தனர், ஆண்டாள் மார்கழி மாதத்தில் நோன்பு மேற்கொண்டார். இதில் “மாதங்களில் நான் மார்கழி” என்பது எதைக் குறிக்கிறது? இதில் எது சரியானது? விளக்கம் தரவும்.

பிரசன்னா, ஃபேஸ்புக் மூலமாக.

எமது பதில்: மார்கசீர்ஷ மாதம் என்பது கௌடீய வைஷ்ணவத்திற்கானது மட்டுமன்று. இது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பொதுவான மாதங்களில் ஒன்றுதான். தமிழ் மாதங்கள் அனைத்தும் (ஆங்கில நாள்காட்டியைப் போலவை) சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. சந்திரனின் சுழற்சியிலும் சூரியனின் சுழற்சியிலும் மாற்றங்கள் இருப்பதால், அவை இரண்டும் ஒருபோதும் ஒன்றாகி விடாது.

சந்திர மாதங்களை அடிப்படையாக வைத்து நாம் கொண்டாடக்கூடிய கிருஷ்ண ஜென்மாஷ்டமி சில நேரங்களில் ஆடி மாதத்திலும் சில நேரங்களில் ஆவணி மாதத்திலும் வரும். மேலும், தீபாவளி, விஜயதசமி, விநாயகர் சதுர்த்தி முதலிய பல்வேறு பண்டிகைகளும் (தமிழ் நாள்காட்டி, ஆங்கில நாள்காட்டி முதலிய) சூரிய மாத கணக்கின்படி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நாளில் வருவதை கவனிக்கவும்.

தமிழ் (சூரிய) மாதங்களின் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத (சந்திர) மாதங்களின் பெயரை ஒத்திருப்பதால், சில நேரங்களில் மார்கசீர்ஷ என்பதை மார்கழியுடன் ஒப்பிடுகின்றனர். ஆயினும், அதிலும்கூட இரண்டிற்கும் இடையே ஒரு மாத இடைவெளி உள்ளது. மார்கசீர்ஷ மாதம் பெரும்பாலும் நவம்பர்-டிசம்பரில் வரும்; மார்கழியோ டிசம்பர்-ஜனவரியில் வரும். ஆங்கில மாதமாகிய ஜனவரியின் காலத்தை தமிழில் குறிப்பிட விரும்பும்போது, சிலர் “தை மாதம்” என்று கூறுவதைப் போல, மார்கசீர்ஷ என்பதையும் சிலர் மார்கழி என்கின்றனர். “மாதங்களில் நான் மார்கசீர்ஷ” என்றுதான் கிருஷ்ணர் கீதையில் கூறுகிறார். துல்லியமாகப் பார்த்தால், இரண்டும் வெவ்வேறு மாதங்களைக் குறிக்கின்றன.

ஆம், கோபியர்கள் மார்கசீர்ஷ மாதத்தில் விரதம் மேற்கொண்டனர். வட இந்திய காலநிலையின்படி, அது மழை காலம் முடிந்து வரக்கூடிய இலையுதிர் காலத்தைக் குறிப்பிடுகிறது. தமிழ் மாதமாகிய மார்கழியோ குளிர் காலத்தைக் குறிக்கிறது. இந்த வேறுபாட்டையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

எது சரி, எது தவறு என்று பார்ப்பதைக் காட்டிலும், இரண்டும் இரண்டு வேறுபட்ட கணக்குகள் என்பதைப் புரிந்துகொள்ளுதல் நலம். மேலும், ஆச்சாரியர்கள் அமைத்துள்ள எடுத்துக்காட்டைப் பின்பற்றி, நாம் மார்கழியைக் கொண்டாடுகிறோம், மார்கசீர்ஷத்
தையும் கொண்டாடுகிறோம். பகவானை இரண்டு முறை நினைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கிறது, நமது மகிழ்ச்சியும் இரட்டிப்பாகிறது.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives