அகிஞ்சன மனநிலை

Must read

Gita Govinda Dasi
திருமதி. கீதா கோவிந்தா தாஸி, கணிப்பொறி வல்லுநராக பணியாற்றும் தன் கணவருடன் தற்போது கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.

எந்தச் செல்வமும் தன்னுடையதல்ல என்ற உணர்வுடன், கிருஷ்ணரைத் தவிர தனக்கென்று யாரும் கிடையாது, எதுவும் கிடையாது என்பதை உணர்ந்து, அவரை அணுகும் மனநிலை.

வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி

எறும்பு முதல் பிரம்மதேவர் வரை இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் பரம புருஷ பகவானின் கருணையினையே சார்ந்திருக்கின்றன. ஜீவன்களின் எல்லாத் தேவைகளும் பகவானால்தான் நிறைவேற்றப்படுகின்றன. இதை பௌதிகவாதிகளால் அறிய முடியாது. ஆயினும், பக்தர்கள் இதனை தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உணர வேண்டும். எந்த மனநிலையின் மூலமாக பக்தர்களால் இதனை உணர முடியும் என்பதை இங்கு காண்போம்.

தன்னையே தாழ்த்திக்கொள்ளல்

உயர்ந்த ஆச்சாரியர்களின் பிரார்த்தனைகளில் இரண்டு விஷயங்களைக் காணலாம்: ஒன்று, தன்னுடைய தாழ்வான நிலையை உணர்ந்து பகவானிடம் பணிதல். மற்றொன்று பகவானின் உயர்ந்த நிலையை ஏற்று அவரைப் போற்றுதல். இந்த மனநிலை எல்லா பக்தர்களுக்கும் அவசியமானதாகும். பௌதிக உலகிலுள்ளோர் தன்னைத்தானே உயர்த்துவதற்கும் போற்றிக்கொள்வதற்கும் முயல்கின்றனர்; பக்தனோ தன்னைத் தாழ்த்திக் கொண்டு பகவானையும் இதர பக்தர்களையும் போற்றுகிறான்.

இதனை நாம் ஸ்ரீல பக்திவினோத தாகூரின் பல்வேறு பாடல்களில் பார்க்கலாம். அவர் மிகவுயர்ந்த பக்தராக இருந்தபோதிலும், தன்னை மிகவும் தாழ்வான நிலையில் வைத்திருந்தார். அவரது பாடல்களில் ஒன்றான ஆமார ஜீவன என்று தொடங்கும் பாடல், நாம் அனைவரும் கற்க வேண்டிய பாடமாகும்.

ஆமார ஜீவன ஸதா பாபே ரத, நாஹிகோ புண்யேர லேஷ. இந்த பாடலை வைஷ்ணவர்களுக்கே உரிய தன்னடக்கத்தோடு பக்திவினோத தாகூர் பாடியுள்ளார். வைஷ்ணவர்கள் எப்போதும் சாந்தமாகவும் பணிவுடனும் இருப்பார்கள். இங்கு பக்திவினோதர் பொதுமக்களின் வாழ்க்கையைப் பற்றி வர்ணித்து, அதில் தன்னையும் ஒருவனாகக் கருதுகிறார். அவர் கூறுகிறார்: “வாழ்வில் நான் எப்போதும் பாவ காரியங்களையே புரிந்தேன், ஒரு புண்ணிய காரியம் செய்ததற்கான தடயத்தைக்கூட உங்களால் காண இயலாது.” அவர் மேலும் கூறுகிறார், பரேரே உத்வேக, தியாசி ஜே கத, தியாசி ஜீவேரே க்லேஷ, “பிற உயிர்களுக்குத் துன்பம் கொடுப்பதே என்னுடைய வேலை. பிறர் துன்பத்தில் இருப்பதைக் கண்டு நான் இன்புறுவேன்.”

அதே பணிவு மனப்பான்மையுடன் அவர் மேலும் கூறுகிறார்: “என்னுடைய சுய புலனின்பத்திற்காக எல்லா விதமான பாவச் செயல்களையும் ஏற்றேன். நான் என்னுடைய சுயநலனை மட்டுமே எதிர்பார்க்கும் கருணையற்ற மனிதன். மற்றவர்கள் இன்புறும்போது  நான் துன்புறுகிறேன், எப்போதும் பொய்யுரைப்பவனாக உள்ளேன். சாதாரண விஷயங்களில்கூட நான் பொய்யுரைக்கப் பழகியுள்ளேன். மற்றவர்கள் துக்கத்தில் வாடும்போது நான் இன்பமடைகிறேன்.

“நான் எண்ணற்ற இச்சைகளை இதயத்தில் கொண்டவன், எப்போதுமே கோபத்துடனும் பொய் கர்வத்துடனும் அகந்தையுடனும் இருப்பவன். நான் புலனின்பப் பொருட்களால் கவரப்பட்டு அவற்றில் மதி மயங்கியவன். பொறாமையும் கர்வமும் எனது ஆபரணங்களாகும். நான் சோம்பலாலும் உறக்கத்தாலும் தோற்கடிக்கப்பட்டேன், புண்ணிய செயல்களைச் செய்ய தயங்கினேன். நான் பாவச் செயல்களைச் செய்வதில் எப்போதும் உற்சாகமாக இருந்தேன். என்னுடைய கௌரவத்திற்காக நான் எப்போதும் பலரையும் ஏமாற்றியுள்ளேன். பேராசையாலும் தீராத காமத்தாலும் நான் தோற்கடிக்கப்பட்டேன்.

“நான் மிகவும் வீழ்ச்சியடைந்தவன், பக்தர்களிடம் எவ்வித சங்கமும் கொள்ளாதவன். எப்போதும் அபராதியாகவே இருந்தேன். எனது வாழ்வில் எந்தவொரு சுப காரியத்தையும் பார்க்க இயலாது. எனது மனம் எப்போதும் தீய பழக்கங்களால் கவரப்படுகின்றது. இத்துயரங்களால் எனது வாழ்வின் இறுதியில் துவண்டுபோய் உதவாதவனானேன். இப்போது வயோதிகத்தில் எனக்கு எவ்வழியும் இல்லை. எனவே, கட்டாயத்தால், நான் பணிவானவனாகவும் பொறுமையுடையவனாகவும் மாற்றப்பட்டுள்ளேன். இவ்வாறாக, இந்த பக்திவினோதன் தனது வாழ்வின் துக்க அறிக்கைகளை பரம புருஷரின் தாமரைத் திருவடிகளில் சமர்ப்பிக்கின்றான்.”

இங்கே பக்திவினோத தாகூர் தம்மை அகிஞ்சன என்று கூறி, பகவானிடம் முன்வைக்கிறார், தாதே தீன அகிஞ்சன. அகிஞ்சன என்றால் “ஏதுமற்றவன்,” “கொஞ்சம்கூட இல்லாதவன்,” என்று பொருள்.

ஜீவராசிகளின் உண்மையான நிலை

ஜீவராசிக்கு உண்மையில் சொந்தமானது என்று எதுவும் கிடையாது. இந்த ஜடவுடல் பஞ்ச பூதங்களால் உருவானது, இந்த பஞ்ச பூதங்கள் யாவும் பகவானுடைய வெளிப்புற சக்தியின் தோற்றமே. ஆத்மாவும்கூட அந்த பகவானின் சொத்துதான் என்பதால், ஜீவனுடைய உண்மையான நிலை நித்தியமாக பகவானுக்கு சேவை செய்வதே, ஜீவேர ஸ்வரூப ஹய—கிருஷ்ணேர நித்ய-தாஸ.

உலகத்தில் நமக்குக் கிடைத்துள்ள அனைத்து பொருட்களும் வசதிகளும் உறவுகளும் பகவானின் கருணையினாலேயே கிடைத்துள்ளன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு ஸ்ரீல பிரபுபாதர் ஓர் உதாரணத்தைக் கூறுகிறார். ஒரு வங்கி மேலாளரிடம் நிறைய பணம் இருக்கும், ஆனால் அவை அவருடையதல்ல. அந்த கோடிக்கணக்கான பணம் வங்கியினுடையது, அதனை அவரால் தம் சொந்த செலவுக்காக கையாள முடியாது. அதே போல நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் பகவானுக்குச் சொந்தமானவை, அவற்றை அவருடைய சேவையில் ஈடுபடுத்துவதே நேர்மையான செயல். ஆகவே, ஸ்ரீ ஈஷோபநிஷத் கூறுகிறது, ஈஷாவாஸ்யம் இதம் ஸர்வம், “பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருட்களும் பகவானுக்குச் சொந்தமானவை.” ஜடம் மட்டுமின்றி, ஆத்மாவும் பகவானுக்குச் சொந்தமானதே என்பதை நாம் அறிய வேண்டும்.

அகிஞ்சனர்கள்

பகவானின் பக்தர்கள் “அகிஞ்சனர்கள்” என்று அழைக்கப்படுகின்றனர்; ஏனெனில், பகவானைத் தவிர வேறு சொத்து இல்லை என்று அவர்கள் வாழ்கின்றனர். பௌதிகச் சொத்துகள் அனைத்தும் ஜட இயற்கையின் முக்குணங்களில் இருந்து உண்டானவை. அவை ஆன்மீக சக்தியைத் தடுத்து விடுகின்றன என்பதால், பக்தர்கள் பௌதிகத்தைக் குறைவாகவே கையாளுகின்றனர். ஒருவேளை பக்தர்களுக்கு பகவான் பௌதிகச் செல்வத்தை நிறைய கொடுத்தாலும், அவர்கள் அவற்றை பகவானின் சேவைக்கே பயன்படுத்துவார்கள்.

அகிஞ்சன-கோசரம்

குந்தி மஹாராணி தமது பிரார்த்தனையில், பகவானை அகிஞ்சன-கோசரம், “பௌதிகத்தில் ஏதுமில்லா நபர்களால் எளிதில் அணுகப்படக் கூடியவர்,” என்று புகழ்கிறாள்:

ஜன்மைஷ்வர்ய-ஷ்ருத-ஸ்ரீபிர்

ஏதமான-மத: புமான்

நைவார்ஹத்யபிதாதும் வை

த்வாம் அகிஞ்சன-கோசரம்

“எம்பெருமானே, பகவானாகிய தங்களை சுலபமாக அணுகி விட முடியும். ஆனால் பௌதிக வாழ்வில் ஏதுமில்லா நபர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கௌரவமான குடும்பம், பெரும் செல்வம், உயர்ந்த கல்வி, உடல் அழகு ஆகியவற்றில் தன்னை முன்னேற்றிக்கொள்ள முயல்பவரால், உங்களை உண்மையான உணர்வுடன் அணுக முடியாது.” (ஸ்ரீமத் பாகவதம் 1.8.26)

செல்வங்களைப் பெற்றுள்ளவர்கள் அந்தச் செல்வங்களினால் மதிமயங்கி திமிர் பிடித்தவர்களாகின்றனர். கௌரவமான குடும்பம், நல்ல செல்வம், உயர்ந்த கல்வி, வசீகரிக்கும் அழகு ஆகியவை பௌதிக முன்னேற்றத்தின் நான்கு முக்கிய அம்சங்களாக உள்ளன; ஆயினும், ஆன்மீக முன்னேற்றப் பாதையில் அவை இடைஞ்சல்களாகக் கருதப்படுகின்றன; ஏனெனில், ஒருவரால் இவற்றைக் கொண்டு உண்மையான உணர்வுடன் பகவானை அணுக முடியாது.

எனவே, குந்தி மஹாராணி மேலே குறிப்பிடப்பட்ட ஸ்லோகத்திற்கு அடுத்த ஸ்லோகத்தில், பகவானை நமோ அகிஞ்சன வித்தாய, “பௌதிகத்தில் ஏதுமில்லா நபர்களின் செல்வமே” என்று அழைக்கிறாள்.

குந்தி மஹாராணி பகவான் கிருஷ்ணரைப் போற்றிப் புகழுதல்

பக்தர்களின் பணிவு

ஒரு பக்தை என்னிடம், “நான் வறுமையில் வாழும் பிச்சைக்காரி” என்று பணிவுடன் கூறினார். “நீங்கள் மட்டும் இல்லை. பெளதிக உலகிலுள்ள அனைவரும் பகவானிடம் கையேந்தும் பிச்சைக்காரர்கள்தான்,” என்று நான் பதிலளித்தேன். எல்லா ஜீவராசிகளின் நிலையும் இதுதான். ஆனால், அறிவற்ற ஜீவன்களோ பகவானால் அளிக்கப்பட்ட உடைமைகள், திறமை, வலிமை, அழகு ஆகியவற்றைக் கொண்டு கர்வத்துடன் செயல்படுகின்றனர்.

அஹங்கார விமூடாத்மா கர்தாஹம் இதி மன்யதே, அஹங்காரத்தினால் மயங்கியுள்ள ஆத்மா பௌதிகச் செயல்களுக்கு தன்னையே கர்த்தா என்று எண்ணிக்கொள்வதாக பகவத் கீதை (3.27) கூறுகிறது. நாம் கிருஷ்ணரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றோம் என்ற அறிவு பௌதிகவாதிகளுக்கு இருப்பதில்லை. அதுமட்டுமின்றி, நாம் அனுபவிப்பவை அனைத்தும் பகவானால் கொடுக்கப்பட்டவை என்பதையும் அவர்கள் உணர்வதில்லை, எல்லாவற்றையும் தன்னுடையது என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.

இறுதியாக, ஒருவர் ஏழ்மையில் இருக்கலாம், செல்வத்தில் மிதக்கலாம்; எப்படி இருப்பினும், அவரை “அகிஞ்சனர்” என்றுதான் கூற வேண்டும்; ஏனெனில், உண்மையில் அனைவரும் ஏதுமில்லாத நபர்களே. தற்போதைய நிலையில் நாம் இதனை மறந்துள்ளோம். ஆயினும், பகவானது கருணையைப் பெற வேண்டுமெனில், நம்மிடமிருக்கும் பணம், அறிவு, அல்லது திறமையைக் கொண்டு யாரும் கர்வம்கொள்ள முடியாது. இவையனைத்தும் கிருஷ்ணருடைய கருணையினால் நமக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதை உணர்ந்து, உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் கர்வத்தை மனதிலிருந்து அகற்றி விட்டு, அகிஞ்சன எண்ணத்தை வளர்க்க வேண்டும்.

அகிஞ்சனராக வாழ்வோம், அந்த அச்சுதனை (கிருஷ்ணரை) அடைவோம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives