வழங்கியவர்: ஜெயகோவிந்தராம தாஸ்
மூன்று கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் யோகாவிலும் பிராணாயாமத்திலும் ஈடுபடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மட்டுமின்றி, இந்தியாவிலும் யோகா கற்பதற்காக மக்கள் பெயரளவு ஆன்மீக இயக்கங்களை நாடிச் செல்வது நாளுக்குநாள் பெருகி வருகின்றது. கலி யுகத்தின் தாக்கத்தினால் ஏற்படும் மன சஞ்சலம், அமைதியின்மை, வியாதி போன்ற இன்னல்
களிலிருந்து தற்காலிகமான விடுதலையைப் பெறுவதற்காகவே பெரும்பாலான மக்கள் யோகப் பயிற்சிகளை நாடுகின்றனர். உலகளவில் இன்று யோகா என்னும் சொல் பிரபலமாக இருப்பினும், மக்களுக்கு யோகாவைப் பற்றிய முறையான அறிவோ ஆன்மீகத்தின் மீது நாட்டமோ அவ்வளவாக இல்லை. எனவே, இக்கட்டுரையின் மூலம் வேத சாஸ்திரங்
களின் ஒளியால் மக்களிடம் உள்ள யோகம் பற்றிய அறியாமையை போக்கி உண்மையை வெளிக்காட்ட முயல்கிறோம்.
யோகத்தின் நோக்கம்
பரம புருஷ பகவானுடன் நம்மை இணைத்துக்
கொள்வதற்கான வழிமுறையே யோகம். தாழ்ந்த நிலையில் தொடங்கி உயர்ந்த நிலையை அடைய உதவும் ஓர் ஏணியுடன் யோகத்தின் பல்வேறு நிலைகளை ஒப்பிடலாம். இந்த யோக ஏணி, ஜீவாத்மாவின் தாழ்ந்த (பௌதிக) நிலையில் தொடங்கி, தூய ஆன்மீகப் பக்குவத்திற்கு வழிவகுக்கிறது. இந்த ஏணியில் கர்ம யோகம், ஞான யோகம், தியான யோகம் (அஷ்டாங்க யோகம்), பக்தி யோகம் என்னும் நான்கு படிகள் (நிலைகள்) உள்ளன.
யோகத்தை முறையாகப் பயிற்சி செய்தால், நம்மை (ஆத்மாவை) மறைத்துள்ள செயற்கையான போர்வைகளை (உடல் சம்பந்தமான அடையாளங்
களை) நீக்குவதுடன், நமது இயல்பான தூய உணர்வுநிலையை மீண்டும் எழச் செய்கின்றது. யோகம் நமது எல்லாத் துன்பங்களுக்கும் நிரந்தர தீர்வு வழங்கும் மருந்தாகும்.
கர்ம யோகம்
ஒருவர் வேத சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை விஷ்ணுவை திருப்திப்படுத்துவதற்காக நிறைவேற்றுவதே கர்ம யோகம் எனப்படுகிறது. கர்ம யோகத்தில் பலனை எதிர்பார்த்து செயல்படுதல் (ஸகாம கர்ம யோகம்), பலனை எதிர்பார்க்காமல் செயல்படுதல் (நிஷ்காம கர்ம யோகம்) என இரண்டு நிலைகள் உள்ளன.
கர்ம யோகமே மேற்கூறிய யோகா ஏணியின் முதல் படியாகும். இதன் முதல்நிலையான ஸகாம கர்ம யோகத்தில், ஒரு சாதகன் ஆன்மீக முன்னேற்றமே வாழ்வின் உன்னத இலக்கு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளான், இருந்தும் அவன் பெளதிகப் பலன்களில் ஆர்வமுடையவனாக வாழ்கிறான். அவன் செயல்களின் பலன்களைத் துறந்து, நிஷ்காம கர்ம யோகியாகும்போது, பௌதிக பந்தத்திலிருந்து சிறிதுசிறிதாக விடுபடுகிறான்.
ஞான யோகம்
ஞான யோகம் மேற்கூறிய யோகா ஏணியின் இரண்டாவது படியாகும். நிஷ்காம கர்ம யோகியின் சூட்சும புலன்களான மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவை தூய்மையடையும்போது, அந்த சாதகன் ஞான யோகத்தின் பாதையைத் தழுவிக்கொள்கிறான். ஞான யோகிகள் “இது பௌதிகம்,” “இது பௌதிகம் அன்று, ஆன்மீகம்,” என்று ஆராய்ந்து, பௌதிக வஸ்துக்களைத் துறக்கின்றனர். இந்த ஞான யோகம் என்பது, ஞானத்தையும் அனுமானத்தையும் வைத்து அருவமான பரம்பொருளுடன் தொடர்புகொள்வதாகும்.
அஷ்டாங்க யோகம்
யோகா ஏணியின் மூன்றாவது நிலையிலுள்ள அஷ்டாங்க யோகி (தியான யோகி) பரமாத்மாவை உணர்ந்தறிவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளான். தெருக்கள்தோறும் இருக்கக்கூடிய பெயரளவு யோகா மையங்களில் இன்று கற்றுத் தரப்படும் உடற்பயிற்சியோ மூச்சுப்பயிற்சியோ உண்மையான அஷ்டாங்க யோகம் அன்று. அஷ்ட என்றால் “எட்டு” என்றும், அங்க என்றால் “நிலை” அல்லது “பகுதி” என்றும் பொருள்படுகின்றன. அஷ்டாங்க யோகத்தின் அந்த எட்டு நிலைகளாவன: (1) யமம், (2) நியமம், (3) ஆஸனம், (4) பிராணாயாமம், (5) பிரத்யாஹாரம், (6) தாரணா, (7) தியானம், (8) ஸமாதி.
இவற்றைப் பற்றி பதஞ்சலி முனிவர் தம்முடைய யோக-தர்ஷனத்தில் பின்வருமாறு கூறுகிறார்:
(1) யமம்: அஹிம்ஸாஸத்யாஸ் தேய ப்ரஹ்மசர்யா பரிக்ரஹா யமா:. அகிம்சை, வாய்மை, திருடாமை, பிரம்மசரியம், அபரிக்ரஹம் (இன்பத்திற்கான பொருட்களைச் சேகரிக்காமல் இருத்தல்) ஆகியவை ஐந்தும் யமம் என்பதில் அடங்குகின்றன. (யோக சூத்திரம் 2.30)
(2) நியமம்: ஸௌசஸந்தோஷதப: ஸ்வாத்யா
யேஸ்வரப்ரணி தானானி நியமா:. தூய்மை (அகம், புறம்), சந்தோஷம், தவம், சாஸ்திரங்களைப் படிப்பது, ஈஷ்வர ப்ரணிதானம் (அனைத்தையும் பகவானுக்கு அர்ப்பணித்து அவரது ஆணைகளை நிறைவேற்றுதல்) ஆகியவை ஐந்தும் நியமம் என்பதில் அடங்குகின்றன. (யோக சூத்திரம் 2.32)
(3) ஆஸனம்: ஸ்திரஸுகமாஸனம். ஸ்திரமாகவும் அமைதியாகவும் அமருதல் ஆசனம் எனப்படுகிறது. (யோக சூத்திரம் 2.46)
(4) பிராணாயாமம்: தஸ்மின் ஸதி ஸ்வாஸப்ரஸ்
வாஸயோர் கதி விச்சேத: ப்ராணாயாம. ஆசனத்தில் நிலைத்த பிறகு, காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுவதைக் கட்டுப்படுத்துதல் பிராணாயாமம் எனப்படுகிறது. (யோக சூத்திரம் 2.49)
(5) பிரத்யாஹாரம்: ஸ்வவிஷயாஸம்ப்ரயோகே சித்தஸ்வரூபானுகார இவேந்த்ரியானாம் ப்ரத்யாஹார:. புலன்கள் அவற்றின் போகப் பொருட்களிலிருந்து விலகி ஓய்ந்து போய், சித்தத்திலேயே அடங்கிவிடும் நிலை பிரத்யாஹாரம் எனப்படுகிறது. (யோக சூத்திரம் 2.54)
(6) தாரணா: தேஸ பந்தஸ் சித்தஸ்ய தாரணா. சித்தத்தை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் வெகு நேரம் நிலைக்க வைத்து, மனதை உறையச் செய்வது தாரணா எனப்படுகிறது. (யோக சூத்திரம் 3.1)
(7) தியானம்: தத்ர ப்ரத்யைகதானதா த்யானம். அதாவது, கங்கையின் பிரவாகத்தைப் போல மனதை இடைவிடாமல் பரமாத்மாவிடம் லயிக்க வைப்பது தியானம் எனப்படுகிறது. (யோக சூத்திரம் 3.2)
(8) ஸமாதி: ததேவார்த்தமாத்ர நிர்பாஸம் ஸ்வரூபஸூன்யமிவ ஸமாதி. அப்படி தியானிக்கும்போது, பரமாத்மாவின் ஸ்வரூபம் மட்டுமே தெரிந்து, நாம் தியானம் செய்கிறோம் என்ற உணர்ச்சி உட்பட மற்றவை அனைத்தும் மறைந்துபோனதுபோலத் தோன்றுவது ஸமாதி எனப்படுகிறது. (யோக சூத்திரம் 3.3)
பக்தி யோகம்
பக்தி யோகமே யோக மார்க்கத்தின் இறுதி நிலையும் யோகா ஏணியின் உயர்ந்த படியுமாகும். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கிருஷ்ணருக்கு எவ்வித உள்நோக்கமும் இன்றி அனுகூலமான முறையில் அன்புத் தொண்டாற்றுதலே பக்தி யோகம் எனப்படுகிறது. பக்தித் தொண்டு என்பது நமது புலன்களை புலன்களின் எஜமானரான பகவானின் சேவையில் ஈடுபடுத்துவதாகும். இத்தகைய பக்தி யோகத்தைப் பயில்பவர் (மற்ற யோக முறைகளால் பெறப்படும்) ஞானத்தையும் பற்றின்மையையும் உடனே பெறுகின்றனர் என்று ஸ்ரீமத் பாகவதம் (1.2.7) கூறுகின்றது.
வாஸுதேவே பகவதி
பக்தி-யோக: ப்ரயோஜித:
ஜனயத்யாஷு வைராக்யம்
ஜ்ஞானம் ச யத் அஹைதுகம்
“பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதன் மூலமாக, ஒருவன் காரணமற்ற ஞானத்தையும் இவ்வுலகின் மீதான பற்றின்மை
யையும் உடனே அடைகின்றான்.”
பக்தி யோகத்தில் பக்குவத்தை அடைபவர், பகவானுடன் சாந்தமான பக்தர், சேவகர், நண்பர், பெற்றோர், காதலி ஆகிய ஐந்து உறவுகளில் ஏதேனும் ஒன்றினை வளர்த்துக் கொண்டு, ஆன்மீக உலகில் பகவானுக்குத் தொண்டாற்றுகிறார்.
பக்தி யோகமும் மற்றைய
யோக முறைகளும்
கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் ஆகிய மூன்றும் உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்கு ஒரு முன்னுரையைப் போன்றவையே! நமது இயல்பான கிருஷ்ண உணர்வை (கடவுள் உணர்வை) விழிப்படையச் செய்யும்போதுதான், நம்முடைய உண்மையான ஆன்மீக வாழ்க்கை தொடங்குகிறது.
யோக மார்க்கங்களில் முன்னேற்றமடைவதற்கு மனதில் உறுதியும் ஸ்திரமான ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் தேவைப்படுகின்றன. ஒரு நபர் ஒரு தளத்தில் ஸ்திரமாக நிலைபெற்ற பிறகு, அவர் அந்த நிலைக்கான பற்றுதலையும் ஒட்டுதலையும் கைவிட்டு, அடுத்த உயர்நிலைக்குச் செல்ல வேண்டும். இறுதி இலக்கை (பக்தி யோகத்தை) அடைய முடியாமல் கீழ்நிலைகளிலேயே தங்கிவிடுபவர்கள், அந்நிலைகளுக்கேற்ப, கர்ம யோகி, ஞான யோகி, தியான யோகி என்று அழைக்கப்படுகின்றனர்.
கர்ம யோகம், ஞான யோகம், அஷ்டாங்க யோகம் ஆகிய மூன்றின் இலக்கினை அடைவதற்கும் சிறிதளவேனும் பக்தி இருக்க வேண்டும். எனவே, பக்தி இவற்றின் உயிர்சக்தியைப் போன்றதாகும். மற்ற யோகங்கள் எப்போதும் பக்தி யோகத்தைவிட தாழ்ந்தவையே! ஏனெனில், பக்தி யோகமானது ஒருவனை உயர்ந்த ஆன்மீகத் தளத்திற்கு உயர்த்துகிறது.
ஞானியானவன் சிறிதளவு வீழ்ச்சி அடைந்தாலும், ஸ்ரீமத் பாகவதம் (7.15.36) அத்தகு நபரை சொந்த வாந்தியை உண்பவர் என்று கூறுகின்றது. ஆனால் பக்தி யோகியின் விஷயத்தில், காமம், பேராசை முதலிய களங்கங்களால் பாதிக்கப்பட்டாலும்கூட, அவன் பக்தி மார்க்கத்தை எடுத்துக்கொள்ள தகுதி உள்ளவனாகவே கருதப்படுவான்.
நேரடியான பாதையும்
மறைமுகமான பாதையும்
யோகத்தின் பூரணத்துவத்தை அடைவதற்கு இரண்டு பாதைகள் உள்ளன: ஒன்று நேரடியான பாதை, மற்றொன்று மறைமுகமான பாதை. கர்மங்களின் பலனைத் துறத்தல் (கர்ம யோகம்), ஆன்மீக ஞானத்தை பண்படுத்துதல் (ஞான யோகம்), இதயத்தினுள் இருக்கும் பரமாத்மாவை தியானித்தல் (அஷ்டாங்க யோகம்) என யோகத்தின் ஏணிப்படிகள் ஒவ்வொன்றாகக் கடந்து, இறுதி இலக்கான பக்தி யோகத்தை விழிப்படையச் செய்யும் மறைமுகமான பாதையாகும். இவ்வாறு படிப்படியாகச் செல்லாமல், நேரடியாக பக்தி யோகத்தில் ஈடுபடுவது நேரடியான பாதையாகும்.
நம்முடைய ஆயுள் மிகவும் குறைவானது என்பதாலும், நம்முடைய பழக்க வழக்கங்களில் நாம் ஸ்திரமாக இருப்பதில்லை என்பதாலும், கலி யுகத்திற்கு மறைமுகமான பாதை சிபாரிசு செய்யப்படவில்லை. மறைமுகமான பாதையினால் அரிதாக சிலர் பூரணத்துவத்தை அடையலாம்; ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில், பெரும்பாலான மக்களுக்கு அது சாத்தியமல்ல. இதையும் மீறி ஒருவர் யோகத்தின் நோக்கத்தையோ வழிமுறையினையோ அறியாமல் உடற்பயிற்சி அல்லது மூச்சுப்பயிற்சியில் ஈடுபட விரும்பினால், அவை வெறும் கால விரயமே! அத்தகு பயிற்சியினால், யோகத்தின் இறுதி நோக்கத்தை நிச்சயம் அடைய இயலாது.
உயர்ந்த யோகி யார்?
பக்தி யோகத்தின் பாதையில் வருவதற்கு ஒருவன் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும். பக்தி யோகி மற்ற யோகிகளைவிட உயர்ந்தவன் என்பதை பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் (6.47) கூறுகிறார்.
யோகினாம் அபி ஸர்வேஷாம்
மத்–கதேனாந்தர்–ஆத்மனா
ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்
ஸ மே யுக்ததமோ மத:
“எல்லா யோகிகளுக்கும் மத்தியில் எவனொருவன் பெரும் நம்பிக்கையுடன் எப்போதும் என்னில் நிலைத்து, தன்னுள் என்னை நினைத்து, எனக்கு திவ்யமான அன்புத் தொண்டு புரிகின்றானோ, அவனே யோகத்தில் என்னுடன் நெருங்கியவனும், எல்லாரையும்விட உயர்ந்தவனும் ஆவான்.”
ஒரு சீர்மிகு யோகியானவன் சியாமசுந்தரர் எனப்படும் பகவான் கிருஷ்ணரின் மீது தன்னுடைய கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்; பகவான் கிருஷ்ணர் அனைத்து வைபவங்களும், திவ்ய குணங்களும் பூரணமாக நிரம்பப் பெற்றவர். பகவானின் இத்தகு இயல்புகளைப் பற்றிய பூரண உணர்வில் இருப்பவன், மிக உன்னதமான யோகி எனப்படுகிறான். யோகத்தின் இத்தகு உயர்ந்த பக்குவநிலை பக்தி யோகத்தில் மட்டுமே அடையப்படக்கூடியதாகும்.
யோகத்தின் பக்குவ நிலை
யோகப் பயிற்சியின் உன்னதமான பக்குவ நிலை கிருஷ்ண உணர்வே! கிருஷ்ண உணர்வில் இருப்பவனே பரம யோகியாவான். உயிர்வாழி கிருஷ்ணருடனான தனது நித்திய உறவை மறந்ததன் காரணத்தால், பௌதிக இயற்கையினால் துன்பங்களுக்கு உட்படுத்தப்படுகின்றான் என்பதை பக்குவமான யோகி அறிந்துள்ளான். மேலும், அவன் எப்போதும் கிருஷ்ண உணர்வில் ஆனந்தமாக இருப்பதால், கிருஷ்ணரைப் பற்றிய ஞானத்தை அவன் எல்லா இடங்களிலும் விநியோகிக்க முயல்கிறான். கிருஷ்ண உணர்வின் முக்கியத்
துவத்தை பிரச்சாரம் செய்ய முயல்வதால், அந்த பக்குவமான பக்தி யோகியானவன், உலகிலேயே மிகச்சிறந்த வள்ளலும், பகவானின் மிக நெருங்கிய சேவகனும் ஆவான்.
மேலும், பகவத் கீதையில் (18.69) கூறப்படுள்ளது: ந ச தஸ்மான் மனுஷ்யேஷு கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம:. அதாவது, கிருஷ்ண பக்தன் மற்ற உயிர்வாழிகளின் நலனை எப்போதும் விரும்புவதால், அவன் எல்லாருக்கும் உற்ற நண்பனாக உள்ளான். அவன் தன் சுய இலாபத்திற்காக யோகத்தில் ஈடுபடுவதில்லை, அவன் பிறருக்காகவும் முயல்கிறான், சக உயிர்வாழிகளிடம் பொறாமை கொள்வதில்லை. அதனால், அவனே தலைசிறந்த யோகியாவான். ஆகவே, பக்குவமான தியானத்திற்காக தனியிடத்திற்குச் செல்லும் யோகியைக் காட்டிலும் ஒவ்வொரு மனிதனையும் கிருஷ்ண உணர்வை நோக்கித் திருப்புவதற்காக தன்னால் இயன்ற வரை முயலும் பக்தி யோகி உயர்ந்தவனாவான்.
யோகம் என்றால் வெறும் உடற்பயிற்சியோ மூச்சுப்பயிற்சியோ அல்ல என்பதை அறிந்த நாம், நமது பொன்னான நேரத்தை தலைசிறந்த யோகமான பக்தி யோகத்தில் செலவிட்டு நமது வாழ்வை பக்குவப்படுத்துவோமாக!
இக்கட்டுரை தவத்திரு பிரகலாதானந்த ஸ்வாமி அவர்கள் எழுதிய கட்டுரையைத் தழுவி தமிழில் எழுதப்பட்டுள்ளது.