வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
உடலுறவினால் மகிழ்ச்சியடைவதற்கு எவ்வளவு முயன்றாலும், அது சாத்தயமல்ல என்பது நிச்சயம். ஆன்மீகத் தளத்தின் மகிழ்ச்சிக்கு முன்னேறாவிட்டால், ஒருபோதும் திருப்தியடைய முடியாது என்பதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட வங்காளப் பாடலின் மூலமாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.
பௌதிக வாழ்வின் அடிப்படை
ஹரி ஹரி பிஃபலே என்று தொடங்கும் பாடலை எழுதிய நரோத்தம தாஸ தாகூர் ஒரு புகழ்பெற்ற ஆச்சாரியராவார், அவரின் தொகுப்புகள் அனைத்தும் வேத உண்மையைப் போன்று ஏற்கப்படுகின்றன. இப்பாடலில் அவர் நம்மைப் போன்ற சராசரி மனிதனை பிரதிநிதிக்கிறார். அவர் பகவான் கிருஷ்ணரிடம் (ஹரியிடம்) தமது வேதனையை முறையிடுகிறார், ஹரி ஹரி பிஃபலே ஜனம கோஙாஇனு, “அன்பார்ந்த பிரபுவே, உங்களை வணங்காது என் வாழ்வினை பயனில்லாமல் வீணடித்துவிட்டேன்.”
மக்கள் தங்களது வாழ்வினை வீணாக்குகிறோம் என்பதை அறிவதில்லை. அவர்கள், “எனக்கு நல்ல வீடு, நல்ல கார், மனைவி, வருமானம், மற்றும் சமூக அந்தஸ்தும் உள்ளது,” என்று நினைக்கின்றனர். இந்த ஜட ஈர்ப்புகளெல்லாம் “கிருஷ்ணரை வழிபடுதல்” என்னும் வாழ்வின் நோக்கத்தினை மறக்கச் செய்கின்றன.
ஜட ஈர்ப்புகளை ஸ்ரீமத் பாகவதம் ஒரே ஸ்லோகத்தில் [5.5.8] சூத்திரமாக உரைத்துள்ளது. உடலுறவே ஜட ஈர்ப்பின் அடிப்படை கொள்கையாகும், பும்ஸ: ஸ்த்ரியா மிதுனீ-பாவம் ஏதம். ஆண் ஒருவன் பெண் ஒருத்தியின் மீது ஏக்கம்கொள்கிறான், பெண்ணானவள் ஆணின் மீது ஏக்கம்கொள்கிறாள். அவர்கள் இணைந்து உடலுறவில் ஈடுபடும்போது, ஒருவர் மீது ஒருவர் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர். தயோர் மிதோ ஹ்ருதய-க்ரந்திம் ஆஹு:. ஹ்ருதய என்றால் “இதயம்” என்று பொருள்; க்ரந்திம் என்றால் “இறுகிய முடிச்சு” என்று பொருள். ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது, அவர்களின் இதயத்தில் இறுகிய முடிச்சு ஏற்படுகிறது. “நான் உன்னை விட்டு விலக மாட்டேன், நீயே எனது உயிர்,” என்று அவன் கூறுகிறான். அவளும், “நான் உன்னை விட்டு விலக மாட்டேன், நீயே எனது உயிர்,” என்று கூறுகிறாள்.
இதெல்லாம் சில நாள்கள் மட்டுமே. அதன் பின்னர், விவாகரத்து ஏற்படுகிறது. ஆயினும், அனைத்திற்கும் ஆரம்பம் உடலுறவே. ஜட ஈர்ப்பின் அடிப்படைக் கொள்கை உடலுறவே.
ஜடவுலகில் சிக்கிக்கொள்ளுதல்
ஏதோ ஒரு வழியில் இருவர் இணையும்போது, அங்கே அடுத்ததாக ஒரு நல்ல வீடும் (க்ருஹ) சிறிது நிலமும் (க்ஷேத்ர) தேவைப்படுகிறது. அதன் பிறகு, பிள்ளைகள் (ஸுத) தேவைப்படுகின்றனர். குழந்தைகளின்றி இல்லம் இனிமையாக இருக்காது என்பதால், வீடு, மனைவி என்பதைத் தொடர்ந்து குழந்தைகள் தேவைப்படுகின்றன. புத்ர-ஹீனம் க்ருஹம் ஷூன்யம், “குழந்தைகளற்ற இல்லம் பாலைவனத்தைப் போன்றதாகும்.” இல்லற வாழ்வின் உண்மையான மகிழ்ச்சி குழந்தைகளே. இறுதியாக, உறவினர்கள் அல்லது ஒரு சமூகம் (ஆப்த) தேவைப்படுகிறது. இவை அனைத்தையும் பணத்தினைக் கொண்டே (வித்தை:) நிர்வகிக்க முடியும் என்பதால், பணம் தேவைப்படுகின்றது.
இவ்விதமாக, ஒருவன் ஜடவுலகில் சிக்கிக் கொண்டு அறியாமையால் மறைக்கப்படுகிறான். ஏன் அறியாமை? மனைவி, குழந்தைகள், செல்வம் முதலிய முக்கியமானவற்றை “அறியாமை” என்று எவ்வாறு கூற முடியும்? ஏனெனில், வீடு, மனைவி, குழந்தைகள், சமூகம், அந்தஸ்து ஆகிய அனைத்தும் தற்சமயம் நன்றாக உள்ளதாக நீங்கள் நினைக்கலாம். உங்கள் உடல் முடிவுற்ற உடனேயே இவை அனைத்தும் முடிந்து விடுகின்றன. இவை அனைத்தையும் கைவிட்டு வாழ்வின் அடுத்த தளத்திற்குச் செல்லும்படி நீங்கள் நிர்பந்திக்கப்படுவீர்கள். மேலும், உங்களின் அடுத்த நிலை என்ன என்பதும் உங்களுக்குத் தெரியாது. உங்களின் அடுத்த உடல் மனிதனாகவோ பூனையாகவோ நாயாகவோ வேறு ஏதேனும் ஒன்றாகவோ இருக்கலாம். அஃது உங்களுக்குத் தெரியாது. எதுவாக இருப்பினும், இந்த உடலை விட்டு வெளியேறியவுடனேயே நீங்கள் அனைத்தையும் மறந்து விடுவீர்கள். நீங்கள் யாராக இருந்தீர்கள், உங்களின் மனைவி யார், உங்களின் வீடு எப்படி இருந்தது, உங்களிடம் வங்கி இருப்பு எவ்வளவு இருந்தது என எதுவும் நினைவுக்கு வரப் போவதில்லை, அனைத்தும் முடிவுற்று விடும்.
மனித வாழ்வை வீணடித்தல்
நமது பெளதிக வாழ்க்கை இவ்விதமாகவே சென்று கொண்டுள்ளது. உயிர்வாழி பல்வேறு உயிரினங்களில் பல கிரகங்களில் பயணித்து இறுதியில் மனிதப் பிறவியை அடைகிறான். மனிதப் பிறவி என்பது, நாம் எவ்வாறு ஒரு பிறவியிலிருந்து மற்றொரு பிறவிக்கு மாறுகிறோம் என்பதையும், நமது ஸ்வரூப நிலை என்ன என்பதையும், நாம் ஏன் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறோம் என்பதையும் அறிவதற்கானதாகும்; இவற்றை அறியாவிடில், நாம் காலத்தை வீணடிப்பதாகவே பொருள்படும்.
மனித வாழ்வில் இதைப் பற்றிதான் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், நாமோ வாழ்வின் உண்மை நிலையினைப் பற்றி விசாரிக்காமல், பாலுறவு, மனைவி, வீடு, சொத்து, குழந்தைகள், சமுதாயம், செல்வம், அந்தஸ்து முதலியவற்றில் மட்டும் ஈடுபடுகிறோம். இவற்றினால் மயக்கப்பட்டு, நமது வாழ்வை வீணடிக்கின்றோம்.
ஆகவே, நரோத்தம தாஸ தாகூர் நம்மை பிரதிநிதித்து புலம்புகிறார், “அன்பார்ந்த இறைவனே, எனது வாழ்வை வீணடித்து விட்டேன்.” ஏன்? மனுஷ்ய-ஜனம பாஇயா ராதா-க்ரிஷ்ண நா பஜியா: “இந்த மனிதப் பிறவி ராதா-கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களை வழிபடுவதற்கு
மானது. ஆனால், ராதா-கிருஷ்ணரைத் தொடர்புகொள்ளாமல் எனது வாழ்வினை புலனின்பத்தில் வீணடித்து விட்டேன்.”
கோலோகத்திலிருந்து வரும் ஹரி நாமம்
அவர் மேலும் கூறுகிறார், கோலோகேர ப்ரேம-தன ஹரி-நாம-ஸங்கீர்தன, ரதி நா ஜன்மிலோ கேனே தாஇ, “ஐயகோ! ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தில் எனக்கு ஏன் எந்த ஈர்ப்பும் இல்லை?” ஹரே கிருஷ்ண மந்திரம் ஓர் ஆன்மீக அதிர்வாகும், இது ஜட வஸ்துவல்ல. இது கிருஷ்ணரின் ஆன்மீகத் தளத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். “ஹரே கிருஷ்ண” எனும் இந்த ஆன்மீக ஒலியானது அங்கிருந்துதான் வந்துள்ளது. இந்த ஒலியானது சூரியனிலிருந்து வரும் சூரியக் கதிர்களைப் போன்றது. சூரியன் உங்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதால், உங்களால் சூரியனிடம் செல்ல முடிவதில்லை; இருப்பினும், சூரியனின் கதிர்கள் சூரிய கோளத்திலிருந்து வருகின்றன என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுபோன்றே, ஹரே கிருஷ்ண மஹாமந்திரமும் கிருஷ்ணரின் வாசஸ்தளமான கோலோகத்திலிருந்து (கோலோகேர ப்ரேம-தன) வருகின்றது. இந்த உச்சாடனம் கிருஷ்ணரின் மீதான அன்பினை விளைவிக்கின்றது (ப்ரேம-தன என்றால் “கடவுளின் மீதான அன்பின் புதையல்” என்று அர்த்தம்).
புலனின்ப நெருப்பு
நரோத்தம தாஸ தாகூர் புலம்புகிறார், ஹரி நாம ஸங்கீர்தன ரதி நா ஜன்மிலோ கேனே தாஇ, “ஐயகோ! ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனத்தில் எனக்கு ஏன் எந்த பற்றுதலும் இல்லை?” இந்த மந்திர உச்சாடனத்தில் ஏன் பற்றுதல்கொள்ள வேண்டும்? இஃது அடுத்த வரியில் விவரிக்கப்பட்டுள்ளது. ஸம்ஸார-விஷானலே திபா-நிஷி ஹியா ஜ்வலே ஜுஃடாஇதே, “புலனின்பம் எனும் கொழுந்து விட்டு எரியும் விஷ நெருப்பிற்கு ஹரே கிருஷ்ண மஹாமந்திர உச்சாடனமே ஒரே மருந்தாகும்.” ஹியா என்றால் “இதயம்” என்று பொருள். நமது இதயம் எப்பொழுதும் எரிந்து கொண்டுள்ளது. ஏன்? ஏனெனில், அஃது எப்பொழுதும் புலனின்பத்திற்கான வழிகளை எதிர்நோக்குகின்றது. ஆனால் எந்தப் புலனின்பமாயினும் அது திருப்தியைக் கொடுக்காது.
மக்களும் பல விதங்களில் முயற்சி செய்துவிட்டு இப்பொழுது கடைசியாக நிர்வாண நடனத்திற்கு வந்துவிட்டனர். இந்த ஜடவுலகின் அடிப்படைக் கொள்கை உடலுறவே என்பதால், “வாருங்கள், பாலுறவில் மகிழுங்கள், பாலுறவில் மகிழுங்கள்,” என்று அனைவரையும் அழைக்கின்றனர். நீங்கள் பாலுறவில் இன்புறுவதற்கு எவ்வளவு முயற்சித்தாலும் உங்களால் அதில் திருப்தியுற இயலாது என்பது நிச்சயம்; ஏனெனில், பாலுறவு உங்களது மகிழ்ச்சிக்கான உண்மையான தளம் இல்லை. நீங்கள் ஆத்மா என்பதால், ஆன்மீகத் தளத்திற்கு வராமல், எந்தவிதமான புலனுகர்ச்சியாலும் உங்களால் ஒருபோதும் திருப்தியுற இயலாது. மகிழ்ச்சியின் பின்னால் அலைந்து கொண்டே இருக்க வேண்டியதுதான், திருப்தியினை ஒருபோதும் காண மாட்டீர்கள்.
ஸ்ரீ சைதன்யரின் கருணை
அடுத்ததாக அவர் கூறுகிறார், வ்ரஜேந்த்ர-நந்தன ஜேஇ ஸசி-ஸுத ஹஇலோ ஸேஇ. வ்ரஜேந்திர-நந்தன என்று அழைக்கப்படும் பகவான் கிருஷ்ணர், ஸசி-ஸுத என்று அழைக்கப்படும் பகவான் சைதன்யராகத் தோன்றி இந்த ஹரே கிருஷ்ண உச்சாடனத்தை அறிமுகம் செய்தார்.
கிருஷ்ணர் விருந்தாவன மன்னரான நந்தருடைய மகனாக அவதரித்தார். எனவே, கிருஷ்ணர் “விரஜேந்திர-நந்தனர்” என்று அழைக்கப்படுகிறார். பகவான் சைதன்யர் தம்மை அன்னை ஸச்சியின் மகனாக வைத்துக் கொண்டதால், அவர் “ஸச்சி-ஸுதர்” என்று அழைக்கப்படுகிறார். பகவானை அவருடைய பக்தரின் பெயருடன் (சக்தியின் பெயருடன்) அழைக்கும்போது, அவர் ஆனந்தமடைகிறார். அவரே அனைவருக்கும் தந்தை, அவருக்குத் தந்தை என்று யாரும் கிடையாது; இருப்பினும், இந்த பூமியில் அவதரிக்கும்போது, அவர் தமது பக்தர்களில் ஒருவரை தந்தையாக ஏற்றுக்கொள்கிறார். தூய பக்தன் கிருஷ்ணரை தனது மகனாகப் பெற விரும்பும்போது, கிருஷ்ணர் அந்த பக்தனை தனது பெற்றோர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்கிறார்.
விரஜேந்திர-நந்தனர் (கிருஷ்ணர்) இப்பொழுது ஸச்சி-ஸுதராக (பகவான் சைதன்யராக) அவதரித்துள்ளார். மேலும், கிருஷ்ணரின் அண்ணனாகிய பலராமர் தற்போது நிதாயாக அவதரித்துள்ளார். இவர்களின் பணி என்ன? தீன-ஹீன-ஜத சிலோ ஹரி-நாமே உத்தாரிலோ, இழிவான, கட்டுண்ட பாவப்பட்ட ஆத்மாக்களை ஹரே கிருஷ்ண உச்சாடனத்தின் மூலம் காப்பாற்றுவதே இவர்களின் பணி. இந்த கலி யுகத்தில் புண்ணியமான மக்களைக் காண முடியாது. அனைவரும் பாவச் செயல்களுக்கு அடிமையாகி உள்ளனர். ஆயினும், ஒருவன் எவ்வளவு பாவப்பட்டவனாக இருந்தாலும், ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தினை வழங்குவதன் மூலமாக, பகவான் சைதன்யர் அவர்களைக் காப்பாற்றுகிறார்; “வாருங்கள், ‘ஹரே கிருஷ்ண’ மந்திரத்தை உச்சரித்து விடுதலை பெறுங்கள்,” என்று அவர் அழைக்கின்றார்.
கருணைக்கு சாட்சி
மிகவும் வீழ்ச்சியடைந்தவர்களை பகவான் சைதன்யர் காப்பாற்றினார் என்பதற்கு என்ன சாட்சி? தார ஸாக்ஷீ ஜகாஇ மாதாஇ. ஜகாய், மாதாய் என்னும் சகோதரர்கள் இருவரும் அனைத்துவித பாவ காரியங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் இருவரும் உயர்ந்த பிராமண குலத்தில் பிறந்திருப்பினும், தவறான சேர்க்கையின் காரணமாக பாவிகளாக இருந்தனர். அவர்களைப் போலவே, மேற்கத்திய மக்கள் உயர்ந்த நல்ல ஆரிய வம்சத்திலிருந்து வந்தவர்கள் என்றபோதிலும், தற்போதைய காலத்தில் தவறான சேர்க்கையினால் அவர்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர். அவர்களின் சூழ்நிலையானது முறையற்ற பாலுறவு, போதை, மாமிசம் மற்றும் சூதாட்டத்தினால் நிறைந்துள்ளது. ஆகவே, ஜகாய், மாதாய் ஆகிய இருவரையும் நவீன மக்களுக்கு முன்மாதிரியாக இருந்தவர்கள் என்று கூறலாம், அவர்களை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்கச் செய்து பகவான் சைதன்யர் விடுவித்தார்.
எனவே, ஹரே கிருஷ்ண உச்சாடனம் வீழ்ச்சியடைந்தவர்களை விடுவிக்கின்றது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இது போலியான பிரச்சாரம் இல்லை. ஒருவரது முந்தைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தாலும், இந்த உச்சாடனத்தினை ஏற்பவர்கள் சாதுக்களாக மாறுகின்றனர், தூய கிருஷ்ண உணர்வைப் பெறுகின்றனர்.
எளிதில் மஹாத்மாவாக மாறுதல்
ஹரே கிருஷ்ண உச்சாடனம் எரிந்து கொண்டுள்ள நமது இதயத்தைத் தூய்மைப்படுத்துகிறது. அதன் பிறகு, “நான் பரம புருஷராகிய கிருஷ்ணரின் நித்திய சேவகன்” என்பதை நாம் புரிந்துகொள்வோம். கிருஷ்ணர் பகவத் கீதையில் (7.19) உறுதி செய்துள்ளபடி, பற்பல பிறவிகளுக்குப் பின்னரே பொதுவாக நாம் இதனைப் புரிந்துகொள்கிறோம், பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஜ்ஞானவான் மாம் ப்ரபத்யதே, “பற்பல பிறவிகளுக்குப் பிறகு ஒருவன் அறிவாளியாக மாறும்போது, என்னை சரணடைகிறான்.” ஏன்? வாஸுதேவ: ஸர்வம் இதி, ஏனெனில், கிருஷ்ணரே அனைத்தும் என்பதை அவன் அறிந்துகொள்கிறான். ஆயினும், அப்படிப்பட்ட ஆத்மா மிகவும் அரிதானவன் (ஸ மஹாத்மா ஸு-துர்லப:).
அதே சமயத்தில், அவ்வாறு மஹாத்மாவாக மாறுவதை பகவான் சைதன்யர் எளிமையாக்கியுள்ளார். எவ்வாறு? ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக. எனவே, நரோத்தம தாஸ தாகூர் தமது பாடலின் இறுதியில் கூறுகிறார், ஹா ஹா ப்ரபு நந்த-ஸுத வ்ருஷபானு-ஸுதா-ஜுத கருணா கரஹ ஏஇ-பாரோ, “அன்பார்ந்த பிரபுவே, கிருஷ்ணரே, உங்களின் ஆனந்த சக்தியான (அந்தரங்க சக்தியான) ராதாராணியுடன் என் முன் இருக்கின்றீர். தயைகூர்ந்து என் மீது கருணைகொள்ளுங்கள். பாவி என்று என்னை நிராகரித்து விடாதீர்கள். என் கடந்தகாலம் மிகவும் இருளடைந்ததாக இருக்கிறது. இருப்பினும், தயைகூர்ந்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். என்னை உதைத்து தள்ளிவிடாதீர்கள். நான் உங்களிடம் சரணடைகிறேன்.”
புலன்களின் எஜமானருக்குத் தொண்டாற்றுதல்
நாம் அனைவரும் நரோத்தம தாஸ தாகூரின் அடிச்சுவட்டைப் பின்பற்ற வேண்டும். நம்மைத் தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை ஹரே கிருஷ்ண உச்சாடனமே. நமது இதயம் தூய்மையடைந்தவுடன் கிருஷ்ணரே பரம புருஷர் என்பதிலும் நாம் அவரது சேவகர்கள் என்பதிலும் முழுமையாக நம்பிக்கை கொள்வோம். இவற்றை நாம் தற்போது மறந்துள்ளோம். இன்றும்கூட நாம் சேவை செய்கின்றோம், ஆனால் பகவானுக்கு சேவை செய்வதற்கு பதிலாக புலன்களுக்கு சேவை செய்கின்றோம். நாம் ஒருபோதும் எஜமானராக முடியாது. நாம் நம்முடைய புலன்களுக்கு எஜமானர் இல்லை; நாம் புலன்களின் சேவகர்களாவோம். இதுவே நமது நிலை.
ஆகவே, புலன்களின் சேவகர்களாக இருப்பதை விட புருஷோத்தமரின் சேவகனாக ஏன் ஆகக் கூடாது? உண்மையில், நீங்கள் கிருஷ்ணருடைய சேவகராகும்போது மட்டுமே புலன்களுக்கு எஜமானராகிறீர்கள், இல்லையெனில் அதற்கு வாய்ப்பில்லை. கோதாஸ அல்லது கோஸ்வாமி, இதனை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். புலன்களின் சேவகனாக இருப்பவர் கோதாஸன் என்றும், புலன்களின் எஜமானராக இருப்பவர் கோஸ்வாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். கோஸ்வாமி புலன்களைக் கட்டுப்படுத்துகிறார். அவரது நாக்கு கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்காத உணவை உண்ணத் தூண்டினால், “நாவே, இந்த உணவை நீ சுவைக்க முடியாது, இது கிருஷ்ண பிரசாதம் இல்லை,” என்று நினைக்கின்றார்.
புலன்களை புலனுகர்ச்சியில் ஈடுபடுத்தாது கிருஷ்ணரின் சேவையில் மட்டுமே ஒருவன் ஈடுபடுத்தினால், அதுவே பக்தித் தொண்டு என்று அறியப்படுகிறது. ஹ்ருஷீகேன ஹ்ருஷீகேஷ-
ஸேவனம் பக்திர் உச்யதே, புலன்களை புலன்களுடைய எஜமானரின் திருப்திக்காக ஈடுபடுத்துதல் பக்தித் தொண்டாகும். புலன்களின் உயர்ந்த எஜமானர் கிருஷ்ணரே. நாம் தற்சமயம் புலன்களை நமது சேவையில் பயன்படுத்துகிறோம், இது மாயை எனப்படுகிறது. ஆனால், அதே புலன்களை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தினால், அதுவே பூரணத்துவமாகும். புலன்களின் செயல்களை நாம் நிறுத்துவதில்லை. ஆனால், புலன்களை பகவானின் சேவையில் ஈடுபடுத்துவதின் மூலம் அதனைத் தூய்மைப்படுத்துகின்றோம். இதுதான் கிருஷ்ண உணர்வாகும்.
மிக்க நன்றி.