உண்மையான ஸநாதன தர்மம்

Must read

Sridhara Srinivasa Dasa
திரு. ஸ்ரீதர ஸ்ரீனிவாஸ தாஸ் அவர்கள், கோயம்புத்தூரில் தன் குடும்பத்துடன் கிருஷ்ண பக்தியைப் பயிற்சி செய்தபடி, மக்களிடையே ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை பெரும் ஆர்வத்துடன் விநியோகித்து வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீதர ஸ்ரீநிவாஸ தாஸ்

 

சமீபத்தில் நண்பர் ஒருவர் (ஸநாதன தர்மத்தை புகழ்வதாக எண்ணிக்கொண்டு), “ஸநாதன தர்மம் அனைவரையும் அனுசரிக்கக்கூடியதாக உள்ளது. அனைவரும் அவரவரது நம்பிக்கையின்படி, யாரை வேண்டுமானாலும் கடவுளாக ஏற்று வழிபடுவதை இஃது அனுமதிக்கின்றது,” என்று கூறினார். அவரிடம் இதற்கான சாஸ்திர பிரமாணத்தை (ஆதாரத்தை) வழங்குமாறு நான் விண்ணப்பித்தபோது, “பிரமாணங்கள் எதையும் நான் அறியேன், வழிவழியாக பலர் கூறக் கேட்டுள்ளேன்,” என்று அவர் விடையளித்தார்.

சிந்தித்துப் பார்க்கையில், எமது நண்பர் மட்டுமல்லாது, இந்தியாவிலுள்ள பலருக்கும், “ஸநாதன தர்மம் என்றால் என்ன? அதற்கான மூலம் என்ன?” என்பனவற்றிற்கான சரியான விடை தெரிவதில்லை. இதனால், மக்கள் மத்தியில் ஸநாதன தர்மத்தைப் பற்றி பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. எனவே, இவற்றைத் தெளிவுபடுத்தி ஸநாதன தர்மத்தின் உண்மைப் பொருளை சாஸ்திர பிரமாணங்களுடன் விவாதிக்க வேண்டியது இன்றைய சூழலில் அவசியமானதாகிறது.

ஸநாதன தர்மம் – இந்து சமயமா? இந்தியர்களுக்கு மட்டுமானதா?

ஸநாதன தர்மத்தை இந்திய நாட்டின் எல்லைக்கு உட்பட்ட ஒரு பண்பாடு என்று உலக மக்கள் கருதுகின்றனர். ஆயினும், உண்மை அதுவல்ல. மஹாபாரதம், இராமாயணம் போன்ற பண்டைய கால நூல்களின்படி முழு உலகமும் “பரத கண்டம்” என்று அறியப்பட்டது. அந்த பரந்த நிலப்பரப்பு காலப்போக்கில் அரசியல் காரணங்களால் சுருங்கியது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான் நாடுகளில் பரவியிருக்கும் ஹிந்துகுஷ் மலைத்தொடருக்கு கிழக்கே அமைந்த நிலப்பரப்பினை “ஹிந்துஸ்தான்” என்று கூறத் தொடங்கினர்; அதுவே பின்னர் “இந்தியா” என்று மாற்றமடைந்துள்ளது.

மேலும், பாகிஸ்தானில் பாயும் சிந்து நதிக்குக் கிழக்கே வாழ்ந்த மக்கள் “ஹிந்துக்கள்” என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ஸநாதன தர்மமும் “இந்து சமயம்” என்னும் பெயரில் ஒரு குறிப்பிட்ட மக்களின் மத நம்பிக்கையினைக் குறிக்கும் சொல்லாகத் திரிபடைந்துள்ளது.

இன்றைய இந்து சமயம் ஸநாதன தர்மத்தைப் போன்று தோன்றினாலும், ஸநாதன தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்கள் இந்து மதத்தில் முற்றிலும் நீர்த்துப்போய்விட்டன. அதாவது, பண்டைய காலத்தில் (இந்தியாவில் மட்டுமல்லாது) உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட பண்பாடாகிய ஸநாதன தர்மம், இன்று இந்து சமயம் என்னும் பெயரில் திரிபடைந்துவிட்டது.

வட இந்தியர்கள் அல்லது ஆரியர்களுக்கானதா?

ஆரியர், திராவிடர் என்னும் சொற்களின் உண்மைப் பொருளை அறியாத ஒருசாரார், ஸநாதன தர்மம் ஆரியர்களுக்கான தர்மம் என்றும், திராவிடர்களுக்கானது அல்ல என்றும் வதந்திகளைப் பரப்புகின்றனர். ஆரியன் என்னும் சொல்லுக்கு “மிகச்சிறந்த நபர்” என்று பொருள். திராவிடம் என்னும் சொல்லோ விந்திய மலைக்குத் தெற்கிலுள்ள பிரதேசங்களைக் குறிக்கின்றது. இங்கு வாழ்பவர்கள் திராவிடன் எனப்படுகின்றனர்.

இங்கே கேள்வி என்னவெனில், திராவிட தேசத்தில் சிறந்த நபர்கள் (ஆரியர்கள்) பிறப்பதில்லையா? பிரிவினைவாதிகள் தங்களின் சுயநலனிற்காக, அரசியல் சூழ்ச்சி செய்து, ஸநாதன தர்மத்தை “வடநாட்டு தர்மம்” என்று கூறி மக்களைக் குழப்புகின்றனர். சமீப காலத்தில், இது மேலும் திரிபடைந்து, பல்வேறு போலி கருத்துகளால் நிரப்பப்பட்டு, பிராமணர்களின் தர்மம் என்று குறுகிய மனப்பான்மையுடன் பேசப்படுகிறது.

[ஆரியம், திராவிடம் என்பன குறித்த விரிவான விளக்கத்திற்கு, பகவத் தரிசனத்தின் ஜுன் 2014 இதழில் வெளிவந்த ஆரிய திராவிட பாகுபாடு, இனவாதமா? பிரிவினை
வாதமா? என்னும் கட்டுரையை https://bit.ly/3FL8Fhv என்னும் இணைப்பில் படிக்கவும்.]

“ஸ்வ-தர்மத்துடன் இணைந்து, அனைவருக்கும் பொதுவான ஸநாதன தர்மத்தையும் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினால் மட்டுமே, மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும்.”

பொதுவுடைமைக்கு எதிரானதா?

ஸநாதன தர்மமும் வர்ணாஷ்ரம தர்மமும் தொடர்புடையவை என்பதால், இதனை பொதுவுடைமைக்கு எதிரானது என்று கம்யூனிஸ்டுகள் ஆதாரமற்ற வாதத்தினை முன்வைக்கின்றனர். இவர்கள் வர்ணாஷ்ரம தர்மத்தையும் ஸநாதன தர்மத்தையும் கொச்சைப்படுத்துவதோடு நாஸ்திகக் கருத்துகளையும் பரப்ப முயல்கின்றனர். ஸநாதன தர்மத்தின் இன்றியமையாத நூல்களில் ஒன்றான ஈஷோபநிஷதத்தில், ஈஷா வாஸ்யம் இதம் ஸர்வம், “அனைத்தும் கடவுளின் சொத்து என்பதால், அவரவருக்கு வழங்கப்பட்டுள்ள வஸ்துகளைத் தவிர்த்து, பிறரது வஸ்துகளை அடைவதற்கு விரும்பக் கூடாது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையே வர்ணாஷ்ரம சமுதாயத்தின் அடிப்படையாகும்.

இதற்கு மாறாக, வர்ணாஷ்ரம சமுதாயத்தினை “ஜாதி ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டாடும் சமுதாயம்” என்று இதன் மீது அபாண்டமாகக் குற்றம் சாட்டும் கம்யூனிஸ்டுகளால், தங்களது நாட்டில் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க முடிகிறதா? விஞ்ஞானிகளுக்கும் தெருவைச் சுத்தம் செய்யும் ஊழியர்களுக்கும் சமமான ஊதியம், அந்தஸ்து, பாராட்டு, புகழ் மற்றும் சலுகைகள் வழங்கப்படுகின்றனவா? ஒவ்வொருவரும் தத்தமது குணத்திற்கு ஏற்ற தொழிலைச் செய்து அதற்குரிய ஊதியத்தையும் வசதிகளையும் பெறுகின்றனர் என்பதே இயற்கையின் நியதி.

ஆக, இத்தனை குழப்பங்களையும் களைவதற்கு ஸநாதன தர்மத்தின் உண்மைப் பொருளை அறிய வேண்டும். தர்மம் என்றால் எதைக் குறிக்கும்? ஸநாதனம் என்பது எதைக் குறிக்கும்? தெளிவாக விவாதிப்போம், தொடர்ந்து படியுங்கள்.

தர்மம்

தர்மம் என்னும் சொல்லிற்கான முதன்மையான பொருள், ஒரு வஸ்துவிலிருந்து பிரிக்க இயலாத இயல்பு என்பதாகும். கடமை, சமயம், தானம், நீதி முதலிய அர்த்தங்கள் எல்லாம் இரண்டாம் பட்சமே. உதாரணமாக, உப்பு கரிப்பதும் சர்க்கரை இனிப்பதும் அந்தந்த வஸ்துகளின் பிரிக்க முடியாத தர்மம் எனலாம். வெப்பமும் வெளிச்சமும் நெருப்பின் தர்மமாகும், தாகத்தைத் தணிப்பதும் ஈரத்தன்மையும் நீரின் தர்மமாகும். தன்னுடைய தர்மத்தை உணர்ந்து செயல்படுவதே மனிதனின் தனித்தன்மையாகும்.

ஆஹார-நித்ரா-பய-மைதுனம் ச

 ஸாமான்யம் ஏதத் பஷுபிர் நராணாம்

தர்மோ ஹி தேஷாம் அதிகோ விஷேஷோ

 தர்மேண ஹீன: பஷுபி: ஸமான:

“உண்ணுதல், உறங்குதல், தற்காப்பு, இனப்பெருக்கம் ஆகிய நான்கும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் பொதுவானவை. ஆயினும், தர்மத்தை அறிந்து நடப்பதே மனிதனின் விசேஷ குணமாகும். அதைத் தவறினால் மனிதன் மிருகத்திற்குச் சமமானவன்.” (ஹிதோபதேஷம் 25)

இங்கே “தர்மம்” என்பது, உடல் சார்ந்த இயல்புகளைக் குறிக்கிறதா அல்லது ஆத்மாவின் இயல்பினைக் குறிக்கிறதா? சிலந்தி முதல் சிங்கம் வரையுள்ள எல்லா விலங்குகளும் தங்களது உடல் சார்ந்த இயல்புகளை மாற்றிக்கொள்வதில்லை; புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது. ஆகவே, உடல் சார்ந்த இயல்புகளின்படி வாழ்தல் மனிதனின் தர்மமல்ல; உடல் சார்ந்த கடமைகளோ தானங்களோகூட அவனது தர்மமாகாது. எனவே, ஆத்மாவின் இயல்பினை அறிந்து, அதன்படி செயல்படுவதே மனிதனின் விசேஷத் தன்மையாகும்.

உடல் வேறு ஆத்மா வேறு என்பதே ஸநாதன தர்மத்தின் அடிப்படை பாடமாகும். எனவே, மனிதன் உடல் சார்ந்த தர்மமான ஸ்வ-தர்மம், ஆத்மாவிற்கான ஸநாதன தர்மம் ஆகிய இரண்டு தர்மங்களையும் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தின் மூலமாக எளிதில் முக்தியடைய முடியும்.

ஸ்வ-தர்மம் அல்லது சாதாரண தர்மம்

ஸ்வ-தர்மம் என்றால், அவரவர் நம்பிக்கைக்கேற்ப (விருப்பத்தின்படி) எந்த மதக் கொள்கைகளை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று சில அசுரத்தனமான அயோக்கியர்கள் கூறுகின்றனர். ஆனால், அதுவல்ல ஸ்வதர்மம்.

ஒவ்வோர் ஆத்மாவிற்கும், அவனது சுய விருப்பத்தையும் முற்பிறவியின் பாவ புண்ணியத்தையும் அடிப்படையாக வைத்து, பௌதிக இயற்கையினால் உடல் வழங்கப்படுகிறது. அந்த உடலுடன் தொடர்புடைய கடமைகள் ஸ்வ-தர்மம் எனப்படுகின்றன. இஃது ஒருவரது இயற்கையான குணம் மற்றும் செயலின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ள தொழிற்கடமைகளைக் குறிக்கின்றது.

ஸ்வ-தர்மத்தை மட்டும் பின்பற்றினால் போதுமா?

இல்லை. உடல் தற்காலிகமானது, அழிவிற்குட்பட்டது என்னும் பகவத் கீதையின் கூற்றிற்கு இணங்க, உடலின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் அதிருப்தியிலேயே முடிகின்றன. ஸ்வ-தர்மத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு வாழ்வது அவசியம் என்றாலும், அந்த விதிகளின் இறுதி நோக்கம் பகவான் ஹரியின் பக்தித் தொண்டில் ஈடுபட்டு அவரைத் திருப்திப்படுத்துவதே என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

ஆகவே, ஸ்வ-தர்மத்துடன் இணைந்து, அனைவருக்கும் பொதுவான ஸநாதன தர்மத்தையும் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினால் மட்டுமே, மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தை அடைய முடியும்.

ஸநாதனம்

ஸநாதனம் எனும் சமஸ்கிருத சொல் ஸஹ-அனந்தம் என்பதாகும். ஸஹ என்பது நபரைக் குறிக்கிறது; அனந்தம் என்பது ஆதி அந்தமில்லா தன்மையைக் குறிக்கின்றது. எனவே, ஸநாதனம் என்பது ஆதியும் அந்தமும் இல்லாத உயிர்வாழியான ஆத்மாவைக் குறிக்கிறது. ஸநாதன-தர்மம் எனும் கூட்டுச்சொல் ஆதியும் அந்தமும் இல்லாத ஆத்மாவின் இயல்பினைக் குறிக்கின்றது.

பகவத் கீதை உள்ளிட்ட அனைத்து வேத சாஸ்திரங்களிலும் ஜீவாத்மா, பரமாத்மா ஆகிய இருவருமே ஸநாதனம் என்றே வர்ணிக்கப்
பட்டுள்ளனர். ஜீவாத்மா, பரமாத்மா ஆகிய இருவருமே ஸநாதனம் என்றபோதிலும், அனைவரும் சமம் என்றோ அனைத்து கடவுள்களும் ஒன்று என்றோ நானும் கடவுளும் சமம் என்றோ கூறி விட முடியாது. இதனை, பகவத் கீதை (15.7) தெளிவுபடுத்துகின்றது:

மமைவாம்ஷோ ஜீவ-லோகே ஜீவ-பூத: ஸநாதன:

மன:-ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருதி-ஸ்தானி கர்ஷதி

“ஜடவுலகில் கட்டுண்டு கிடக்கும் அனைத்து ஜீவராசிகளும் என்னுடைய நித்தியமான அம்சங்களாவர். கட்டுண்ட வாழ்வின் காரணமாக அவர்கள் மனம் உள்ளிட்ட ஆறு புலன்களால் கட்டப்பட்டு கடுமையாகத் தவிக்கின்றனர்.”

ஜீவாத்மாக்கள் கிருஷ்ணருடைய அம்சங்கள் என்பதால், அவர்கள் தன்மையில் பகவான் கிருஷ்ணரை ஒத்துள்ளனர். ஆயினும், ஜீவாத்மாக்கள் கிருஷ்ணரின் தெய்வீக குணங்களை முழுமையான அளவில் பெற்றிருப்பதில்லை, சிறிதளவே கொண்டுள்ளனர். சூரியனும் சூரியக் கதிர்களும் ஒரே தன்மையைக் கொண்டிருந்தாலும், சூரியக் கதிரின் வெப்பம் ஒருபோதும் சூரியனின் வெப்பத்திற்கு சமமாகாது என்பதை இங்கே உதாரணமாகக் காணலாம்.

ஆகவே, ஸநாதன தர்மம் என்பது நித்தியமான ஆத்மாவின் தர்மத்தைக் குறிக்குமே தவிர, தற்காலிகமான உடல் சம்பந்தமான சாதாரண தர்மத்தைக் குறிக்காது. எனவே, எந்த இடத்தில் வாழ்ந்தாலும் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தாலும், மனிதர்கள் உள்ளிட்ட உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் பகவான் கிருஷ்ணரின் நித்திய சேவகன் என்பதே ஸநாதன தர்மமாகும்.

கலி யுகத்தில் ஸநாதன தர்மம்

ஸ்வ-தர்மத்தைக் கடைப்பிடிப்பதோடு அதைக் காட்டிலும் முக்கியமான ஆத்ம தர்மமான பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றுதல் எனும் ஸநாதன தர்மத்தையும் கடைப்பிடிப்பது மனிதனின் தலையாய கடமையாகும். ஸ்ரவணம், கீர்த்தனம் (செவியுறுதல், உரைத்தல்) முதலான ஒன்பது வகைகளில் பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டாற்றுவதே மனித வர்க்கத்தின் தலையாய கடமை என்று பிரகலாத மஹாராஜர் போதிக்கின்றார். இது ஸநாதன தர்மத்தின் உண்மைப் பொருளை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

கலி யுகம் மிகவும் வீழ்ச்சியடைந்தது என்றும், இதில் வாழும் மக்கள் அமைதியற்ற, அற்ப ஆயுள் பெற்ற துரதிர்ஷ்டசாலிகள் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (1.1.10) விளக்குகிறது. அதே சமயத்தில், கலி யுகம் ஒரு மகத்தான குணத்தைப் பெற்றுள்ளது: உலக மக்கள் அனைவரும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தை புரிவதன் மூலமாக எளிதில் முக்தியடைய முடியும். (ஸ்ரீமத் பாகவதம் 12.3.51)

கிருஷ்ண பக்தி என்னும் ஸநாதன தர்ம பிரச்சாரத்தின் மூலமாக, பல தரப்பட்ட உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைய முடியும் என்பதை இஸ்கான் நிரூபித்துள்ளது. வங்காளத்திலுள்ள மாயாபுரில் ஆண்டுதோறும் கூடும் இஸ்கான் பக்தர்களின் சங்கத்தில் இதனை கண்கூடாகக் காணலாம்.

எனவே, உலகம் முழுவதிலும் அமைதி நிலவ வேண்டுமெனில், நாம் அனைவரும், “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே” என்னும் மஹா மந்திரத்தை அன்றாடம் உச்சரிப்போமாக. அதன் மூலம், நாம் அனைவரும் உண்மையான ஸநாதன தர்மத்தைக் கடைப்பிடித்து, கோலோக விருந்தாவனத்திற்குச் சென்று பகவான் கிருஷ்ணருடன் மகிழ்ச்சியாக வாழ்வோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives