—கிஷோரி தாஸியின் பேட்டியிலிருந்து
குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம் பல விஷயங்களைக் கூறியுள்ளார். அவர் கூறிய வேத வழிமுறை, வைஷ்ணவ முறை என்பது எங்களது கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவற்றில் சில அறிவுரைகளைப் பகிர்ந்துகொள்கிறேன்.
குழந்தை அழும்போது அதனை அழவிடாமல், உடனடியாக மடியில் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தையிடம் ஒருபோதும் “முடியாது” என்று கூறக் கூடாது. அப்போதுதான் அவன் பிற்காலத்தில் தன்னம்பிக்கையுடன் வளருவான்.
குழந்தையை நீராட்டிய பின்னர், கைகள் உட்பட முழுமையாகத் துணியினால் நன்றாக சுற்றி வைக்க வேண்டும். அப்போது அவன் நன்றாக உறங்குவான். குழந்தைகள் முறையாக வளருவதற்கு அதிகமான உணவும் நீரும் அவசியம், அவற்றோடு நல்ல உறக்கமும் அவசியம்.
குழந்தை தனது கையில் ஏதேனும் கூடாத பொருளை வைத்திருந்தால், உங்களது கையில் வேறு ஏதேனும் நல்ல பொருளைக் காண்பித்து, தவறான பொருளை வாங்க வேண்டும். அப்போது அவன் அழ மாட்டான். அவன் தன் கையில் இருப்பதை தானே கீழே போட்டுவிட்டு, அப்படியே மறந்து விடுவான்.
ஏழு வயதிற்கு முன்பாக குழந்தைக்கு புத்தகக் கல்வி கூடாது; ஏனெனில், அஃது அவனது எண்ணங்களை சிதைத்து, பிற்காலத்தில் மூளையின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். அவன் சிறு வயதில் அதிகமாக விளையாட வேண்டும்.
சிறுவன் மிகவும் புத்திசாலியாக இருந்தால், அவனுடன் அதிகமான குறும்புத்தனமும் இருக்கும். அந்த குறும்புத்தனம்கூட புத்திக்கான ஓர் அறிகுறியே.
குழந்தைகளுக்கு பலவித பொம்மைகளையும் பொம்மை கார்களையும் வழங்க வேண்டும். அப்போது வருங்காலத்தில் பெரிய பொருட்களுக்கும் கார்களுக்கும் ஆசையிருக்காது.
ஒரு தாய் தனது மகன்களுக்கு தன்னால் இயன்ற வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். கிருஷ்ணர் தமது அன்னையிடமிருந்து ஏழு வயது வரை தாய்ப்பால் பருகினார். பையன் தாயிடமிருந்து நீண்ட காலம் தாய்ப்பால் பருகினால், பிற்காலத்தில் அவன் பெண்களுடைய மார்பகத்தினால் அதிகம் கவரப்பட மாட்டான்.
குழந்தை பிறந்த பின்னர், ஒரு மாத காலத்திற்கு மிக நெருங்கிய உறவினர்கள் மட்டுமே குழந்தையைப் பார்க்க வேண்டும். ஒரு மாதத்திற்கு வெளியே செல்லக் கூடாது. அப்போது வெளியிலிருந்து எந்தவொரு பாக்டீரியாவும் குழந்தையைத் தாக்காது. குழந்தையை யாரும் தேவையின்றி தொடக் கூடாது.
நீங்கள் பகவானுக்காக சமைத்துக் கொண்டிருந்தாலும், குழந்தை சமையல் அறைக்குள் நுழைந்து, பசியில் எதையாவது கையில் எடுத்துக் கொண்டால், அவனிடமிருந்து அதை பிடுங்கக் கூடாது. நைவேத்யம் செய்யப்படாததாக இருந்தாலும், அவனுக்கு அதனை உடனே வழங்க வேண்டும். குழந்தைக்கு உணவளித்தல் மிகமிக அவசியம்.
மிகவும் முக்கியமானது: குழந்தையை ஒருபோதும் எக்காரணம் கொண்டும் அடிக்கக் கூடாது.
வீட்டில் பெண் குழந்தைகள் அழுதால், லக்ஷ்மி வெளியேறி விடுவாள்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!