இலக்கினை அறியாத ஆன்மீகப் பயிற்சியா?
பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அருவவாத தன்மை கொண்ட ரோஸிகுருசியன் திருச்சபையின் அதிகாரியான திரு பேல்ஃபியோரி என்பவருக்கும் இடையிலான கலந்துரையாடல்.
பேல்ஃபியோரி: தங்களைப் போன்று கிழக்கு நாடுகளிலிருந்து வரும் பெரிய குருமார்கள், “பரம உண்மை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது,” எனும் எங்களது விளக்கத்தைக் கேட்டவுடன் நகைக்கின்றனர். அவர்களிடம் என்னால் எதுவும் கூற முடிவதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களது அறிவு பக்குவமானதல்ல.
பேல்ஃபியோரி: உண்மைதான். எனது அறிவு பக்குவமானதல்ல, தங்களைப் போன்றே நானும் பக்குவ அறிவிற்காக முயல்கிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், “இறுதி இலக்கு என்ன?” என்பதை அறியாதபட்சத்தில், உங்களால் எவ்வாறு அதில் முன்னேற முடியும்?
பேல்ஃபியோரி: எங்களது ஒட்டுமொத்த சபையும் எங்களுக்கு குரு, இந்த சபை இதன் இறுதி இலக்கை அறிந்திருக்கிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அந்த இயக்கத்தின் அங்கத்தினரான உங்களுக்கு அதன் இறுதி இலக்கு தெரியாது!
பேல்ஃபியோரி: மனிதனின் பரிணாமம் என்பதே எங்களது இயக்கத்தின் இலக்கு. இது சித்திகளைப் போன்று மர்மமானது, இதனை விஞ்ஞானபூர்வமாக எளிதில் விளக்க இயலாது.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களின் குறிக்கோள் தெளிவற்றது, இதில் திட்டவட்டமான கருத்துகள் ஏதுமில்லை.
பேல்ஃபியோரி: நீங்கள் இவ்வாறு ஆட்சேபனை தெரிவிப்பது வியப்பளிக்கிறது. உங்களது இயக்கத்தினர் ஜபம் செய்வதாகக் கேள்விப்பட்டேன், அதனால் நீங்களும் மர்மமான ஒன்றைத் தேடுவதாக நினைத்தேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை, எங்களிடம் தெளிவான இலக்கு உள்ளது—கிருஷ்ணர் என்னும் புருஷோத்தமரான முழுமுதற் கடவுளே அந்த இலக்கு. அவருக்கென்று ரூபம் உண்டு, அவருக்கென்று வசிப்பிடம் உண்டு, அவருக்கென்று பெயர் உண்டு, அவருக்கென்று லீலைகள் உண்டு, அவருக்கென்று தனி நாடும் உண்டு. அவருடைய அந்த திருநாட்டிற்குள் நுழைவதையே நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்.
பேல்ஃபியோரி: எங்களது இயக்கம் ஏதோ புதியதாக உருவான திருச்சபை அல்ல. இது குறைந்தபட்சம் பண்டைய எகிப்திய காலம் வரை செல்லக்கூடியது.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் உங்களுடைய ஆன்மீக முயற்சியின் இறுதி இலக்கு என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லையே.
பேல்ஃபியோரி: என்னால் முன்பு கூறிய அதே விஷயத்தை மட்டுமே மீண்டும் கூற முடியும். உணர்வின் பக்குவநிலையை அடைவதே எங்களின் இலக்கு; அந்த நிலையில் மனிதன் தனக்கு அப்பாற்பட்டதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாததுமான அந்த உன்னத உணர்வுடன் இணக்கமாகி ஒன்றறக் கலந்து விடுகிறான்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அந்த “அப்பாற்பட்ட” ஒன்றினை உங்களால் விவரிக்க முடியாது என்று கூறுகிறீர். அதாவது, “கடவுள் என்றால் என்ன” என்பதைக்கூட உங்களால் விவரிக்க முடியவில்லை. இதைத்தான் பக்குவமற்ற அறிவு என்று நான் கூறுகிறேன்.
பேல்ஃபியோரி: கடவுளுடன் ஐக்கியமாகுதல், கடவுளைப் பற்றிய அறிவு—இவையெல்லாம் உள்ளுணர்வைச் சார்ந்தவை, ஒருவருக்கொருவர் மாறுபடலாம். இஃது உங்களுடைய அனுபவத்திற்கு உட்பட்டது, விளக்கத்திற்கு உட்பட்டதல்ல.
ஸ்ரீல பிரபுபாதர்: அவ்வாறு பெறப்படும் அறிவு பக்குவமானதல்ல.
பேல்ஃபியோரி: ஒவ்வொருவரும் தனது பிறப்பிடம், வயது, வளர்ப்பு ஆகியவற்றிற்கு ஏற்றவாறு கடவுளுடனான இந்த ஐக்கியத்தை வெவ்வேறு விதங்களில் அனுபவிக்கின்றனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: இல்லை. கடவுள் என்பவர் எல்லாருக்கும் கடவுளே. ஏதேனும் ஓர் அனுபவம் உண்மையிலேயே கடவுளிடமிருந்து வருவதாக இருந்தால், அஃது எல்லாராலும் பெறத்தக்கதாக இருக்க வேண்டும். [ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள், குறிப்பிட்ட வயதுடையோர் முதலியவற்றைச் சார்ந்திருக்கக் கூடாது.]
பேல்ஃபியோரி: எங்களது திருச்சபையில் நாங்கள் இறுதி உணர்வைத் தேடுகிறோம்—கடவுளுடன் இணைவதைக் குறித்த அபிப்பிராய பேதங்கள் அனைத்தும் மறைந்து, கடவுளைப் பற்றிய ஒரு பொதுவான உணர்வும் பொதுவான அனுபவமும் தோன்றும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அதெல்லாம் சரி. ஆனால் அந்த இறுதி இலக்கு என்ன என்பதை உங்களால் விவரிக்க முடியாவிடில், மற்றவர்கள் எவ்வாறு இதில் கவரப்படுவர்?
பேல்ஃபியோரி: எங்களது சமுதாயத்தில் பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்களும் பிரிவைச் சார்ந்தவர்களும் இருக்கின்றனர். கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம், இந்து அல்லது எந்த மதத்தில் இருந்தாலும், அதைக் கைவிடுமாறு அவர்களிடம் நாங்கள் கூறுவதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: நாங்களும் அவ்வாறு கூறுவதில்லை, நான் உங்களிடம் அதுகுறித்து விசாரிக்கவில்லை. “உங்களது இறுதி இலக்கு என்ன?” என்பதைத்தான் வினவுகிறேன்.
பேல்ஃபியோரி: எங்களது திருச்சபை இதன் மாணவர்களுக்கு வழங்கும் செயல்முறையைப் பின்பற்றுவதால், ஒருவன் இறுதி இலக்கை அடைய முடியும்.
ஸ்ரீல பிரபுபாதர்: நான் இலண்டனுக்குச் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக வைத்துக்கொள்வோம். அப்போது, அங்குச் செல்வதில் என்னிடம் ஆர்வத்தை ஏற்படுத்த, இலண்டனைப் பற்றிய போதுமான தகவல்களை நீங்கள் எனக்கு எடுத்துரைக்க வேண்டும். இல்லையெனில், இலண்டனுக்குச் செல்வதால் என்ன பயன்?
பேல்ஃபியோரி: எங்களுடைய மாணவர்கள் இறுதியான பக்குவநிலையின் அவசியத்தை உணர்கின்றனர். அதனால்தான், அவர்கள் எங்களது சபைக்கு வருகிறார்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அந்த இறுதியான பக்குவநிலை என்னவென்பது அவர்களுக்குத் தெரியாவிடில், இது போலியானது.
பேல்ஃபியோரி: கடவுளை உணர்வதே இறுதியான பக்குவநிலை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களுக்கு அதன் விவரங்கள் தெரியவில்லையே. “இதைச் செய்தால், ஒரு மில்லியன் டாலர் சம்பாதிக்கலாம்,” என்று நான் உங்களிடம் கூறினால், முதலில் ஒரு மில்லியன் டாலரின் மதிப்பை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான், நான் கூறுவதைச் செய்வதற்கு முயல்வீர். ஆனால், அந்த ஒரு மில்லியன் டாலரின் மதிப்பையே அறியாவிடில், அதற்கு ஏன் முயலப் போகிறோம்?
பேல்ஃபியோரி: கடவுளை உணர்வதன் மதிப்பை எங்களது மாணவர்கள் அனைவரும் இதயத்தில் அறிந்தவர்கள்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவர்களுக்கு எப்படி தெரியும்? அவர்களுக்குத் தெரியும் என்று எப்படி கூறுகிறீர்?
பேல்ஃபியோரி: உயர்ந்த ஆன்மீக வாழ்வைத் தேடும் எண்ணற்ற மக்கள் எங்களிடம் உள்ளனர்.
ஸ்ரீல பிரபுபாதர்: அந்த ஆன்மீக வாழ்வு என்ன?
பேல்ஃபியோரி: உயர்ந்த ஆன்மீக எண்ணங்கள், உணர்வுகள்.
ஸ்ரீல பிரபுபாதர்: இவை வெறும் வார்த்தைகளே. நீங்கள் கூறிய அந்த ஆன்மீக வாழ்க்கை என்ன? இதை நான் அறிய விரும்புகிறேன். நீங்கள் எதைஎதையோ பேசுகிறீர்.
உங்களுடைய நோக்கம் என்ன, இலக்கு என்ன, ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன—இதில் எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை. இது பயனற்ற நிலை. நான் விசாரித்த எதைப் பற்றியும் உங்களிடம் தெளிவான அறிவு இல்லை. ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன என்பதை உங்களிடம் வினவினேன். உங்களால் அதனை விவரிக்க இயலவில்லை. இந்த நிலையில், ஆன்மீக வாழ்வையும் பௌதிக வாழ்வையும் உங்களால் எவ்வாறு வேறுபடுத்த முடியும்?
(அடுத்த இதழில் தொடரும்)