வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
விஷ்ணு-ஷக்தி: பரா ப்ரோக்தா
க்ஷேத்ரஜ்ஞாக்யா ததா பரா
அவித்யா-கர்ம-ஸ்ம்ஜ்ஞான்யா
த்ருதீயா ஷக்திர் இஷ்யதே
“ஆன்மீக சக்தி, ஜீவன்கள், மாயை என்னும் மூன்று பிரிவுகளில் பகவான் விஷ்ணுவின் சக்திகள் சுருக்கமாகக் கூறப்படுகின்றன. ஆன்மீக சக்தி பூரண அறிவைக் கொண்டதாகும். ஜீவன்கள் ஆன்மீக சக்தியைச் சார்ந்தவர்கள் என்றபோதிலும், அவர்கள் மயக்கத்திற்கு உட்பட்டவர்கள். முற்றிலும் அறியாமையால் நிறைந்த மூன்றாவது சக்தி எப்போதும் பலன்நோக்குச் செயல்களில் காணப்படுகிறது.” (விஷ்ணு புராணம் 6.7.61)
கிருஷ்ணரின் சக்திகள்
விஷ்ணு-ஷக்தி: பரா, “பகவானின் சக்தி ஆன்மீகமானது,” என்று கூறப்பட்டுள்ளது. சக்திக்கும் சக்திமானுக்கும் (சக்தியின் தோற்றுவாய்க்கும்) வேறுபாடில்லை. சூரிய ஒளி சூரியனின் சக்தி என்றபோதிலும், குணத்தில் சூரிய ஒளிக்கும் சூரியனுக்கும் வேறுபாடு இல்லை. சூரிய ஒளி பிரகாசமாக, ஒளி பொருந்தியதாக, வெப்பமாக இருக்கிறது. அதுபோலவே, சூரியனிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்; ஆயினும், சூரியனின் வெப்பமும் சூரிய ஒளியின் வெப்பமும் குணத்தில் சமமானதாகும்.
பகவானுடைய பல்வேறு சக்திகளில் ஆன்மீக சக்தியும் ஒன்றாகும். அதே சக்தி மற்றொரு ரூபத்தில் வெளிப்படுகிறது. அதுவே க்ஷேத்ர-ஜ்ஞ, நடுத்தர சக்தி. அந்த சக்திதான் ஜீவன்கள் எனப்படுகிறது.
அன்ய என்றால், இந்த இரண்டு சக்திகளைத் தவிர (ஆன்மீக சக்தி மற்றும் நடுத்தர சக்தியைத் தவிர) மற்றொரு சக்தியும் உள்ளது. அதுவே அவித்யா. அவித்யா என்பது அறியாமை, மாயை. அந்த மாயா சக்தியின் காரணத்தினாலேயே ஒருவன் தான் செய்கின்ற செயலின் பலனை அனுபவிக்க விரும்புகிறான். அதுவே இந்த ஜடவுலகின் இயல்பாகும். இந்த ஜடவுலகமும் கிருஷ்ணரின் சக்தியே.
முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் பூரண ஆன்மீகமயமானவர், அவரிடமிருந்து பல்வேறு சக்திகள் வெளிவருகின்றன. கிருஷ்ணரைப் போலவே அந்த சக்திகளும் ஆன்மீகமானவை. ஷக்தி-ஷக்திமதயோர் அபின்ன. வேத இலக்கியங்களின்படி, சக்திமான் எனப்படும் கிருஷ்ணருக்கும் அவரது சக்திகளுக்கும் வேறுபாடு கிடையாது என்பதை நாம் அறிகிறோம். ஆகையால், இந்த ஜட சக்தியும் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டதல்ல.
அசிந்திய-பேதாபேத தத்துவம்
வேத வார்த்தைகளில் கூறினால், ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம, “அனைத்தும் பிரம்மனே.” பகவத் கீதையிலும் கிருஷ்ணர் கூறுகிறார், மயா ததம் இதம் ஸர்வம் ஜகத் அவ்யக்த-மூர்தினா, “நான் எனது தோன்றாத உருவின் மூலமாக, இந்த அகிலம் முழுவதும் பரவியுள்ளேன்.” மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்வவஸ்தித:, “எல்லா ஜீவன்களும் என்னில் இருக்கின்றனர், ஆனால் நான் அவர்களில் இல்லை.”
இந்த தத்துவம், அசிந்த்ய-பேதாபேத, “சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையும் வேற்றுமையும்” என்று அறியப்படுகிறது. இதுவே எமது தத்துவமாகும். இத்தத்துவம் வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டிருந்தாலும், இது சைதன்ய மஹாபிரபுவால் தொடங்கப்பட்டதாகும்.
இருப்பவை அனைத்தும் ஒரே சமயத்தில் பகவானோடு ஒன்றுபட்டும் வேறுபட்டும் உள்ளன. இரண்டு விதமான தத்துவ அறிஞர்கள் உள்ளனர். ஒரு வகையினர் பகவானும் ஜீவன்களும் வேறுபட்டவர்கள் என்றும், மற்றொரு வகையினர் பகவானும் ஜீவன்களும் ஒன்றே என்றும் கூறுகின்றனர். இந்த முரண்பாட்டினை அசிந்த்ய-பேதாபேத தத்துவம் சரி செய்கிறது: பகவானும் ஜீவன்களும் ஒரே சமயத்தில் ஒன்றுபட்டும் வேறுபட்டும் உள்ளனர். அவர்கள் குணத்தில் ஒன்றுபட்டவர்கள், அளவில் வேறுபட்டவர்கள்—சக்தி, சக்திமான் மற்றும் சூரிய ஒளி, சூரியன் ஆகியவற்றை உதாரணமாகக் காணலாம்.
சூரிய ஒளியில் ஒளி, வெப்பம் என்னும் குணங்கள் உள்ளன. சூரிய கோளத்திலும் ஒளியும் வெப்பமும் உள்ளன. ஆனால் அவற்றின் அளவு அவை இரண்டிலும் வேறுபடுகின்றன. சூரிய ஒளியிலுள்ள ஒளியையும் வெப்பத்தையும் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் சூரியனிலுள்ள ஒளியையும் வெப்பத்தையும் தாங்கிக்கொள்ள முடியாது. சூரிய கிரகத்திற்கு சில இலட்சக்கணக்கான மைல்களுக்கு அருகில் ஏதேனும் ஒரு கிரகம் சென்றால், அந்த கிரகம்கூட உடனடியாக எரிந்து சாம்பலாகிவிடும் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
பகவானும் நாமும்—அதாவது, கிருஷ்ணரும் ஜீவன்களும்—குணத்தில் சமமானவர்கள், ஆனால் அளவில் வேறுபட்டவர்கள். ஜீவன்கள் மிகமிகச் சிறிய நுண்ணிய துகள்களாவர், அணுக்களைவிடச் சிறியவர்கள்.
கிருஷ்ணரை எவ்வாறு அறியலாம்?
அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை. கிருஷ்ணரை அல்லது பகவானை நம்முடைய பௌதிகப் புலன்களைக் கொண்டு அறிய முடியாது. அது சாத்தியமல்ல. நாமாதி என்றால், பகவானுடைய நாமம், ரூபம், குணம், உபகரணங்கள், லீலைகள் என எதையும் நம்முடைய பௌதிகப் புலன்களைக் கொண்டு அறிய இயலாது. அப்படியெனில், அவற்றை நாம் எப்படித்தான் புரிந்துகொள்வது?
பகவானுக்கான அன்புத் தொண்டை நாம் எப்பொழுது ஆரம்பிக்கிறோமோ, அப்பொழுது பகவானே தம்மை வெளிப்படுத்துவார். நம்முடைய சொந்த முயற்சியினால் அவரைப் புரிந்துகொள்ள முடியாது. அவராக தம்மை வெளிப்படுத்தினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
ஆகையால், ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதெள. ஜிஹ்வா என்றால் நாக்கு. நம்முடைய முதல் வேலை, நாக்கை பகவானுடைய சேவையில் ஈடுபடுத்து
வதாகும். அதை எவ்வாறு ஈடுபடுத்துவது? பகவானுடைய திருநாமத்தை உச்சரிப்பதற்கும், அவருடைய குணம், புகழ், ரூபம், லீலைகள் ஆகியவற்றைப் புகழ்ந்து பேசுவதற்கும் நாம் நமது நாக்கை ஈடுபடுத்த வேண்டும். இவை மட்டுமே நாக்கின் வேலையாகும். இவ்வாறு நாக்கு பகவானுடைய சேவையில் ஈடுபடுத்தப்படும்போது, படிப்படியாக மற்ற புலன்களும் அவரது சேவையில் ஈடுபடுத்தப்படும்.
நாக்கினைக் கட்டுப்படுத்துதல்
நாக்கு நமது உடலிலுள்ள மிக முக்கிய உறுப்பு என்பதால், மற்ற புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாக நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. தார மத்யே ஜிஹ்வா அதி லோப மய ஸுதுர்மதி என்று பக்திவினோத தாகூர் கூறுகிறார்.
நாக்கு மிகவும் ஆபத்தானது. நாக்கைக் கட்டுப்படுத்தாவிடில், அஃது ஒன்றன்பின் ஒன்றாக பலவிதமான பிறவிகளுக்கு வழிவகுக்கும். இரத்தமும் இறைச்சியும் சாப்பிட வேண்டும் என்னும் நாக்கின் ஆசையை திருப்திப்படுத்த விரும்பினால், ஜட இயற்கை அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு ஒரு புலியின் உடலை நமக்குக் கொடுக்கும். நாம் உண்ணும் உணவை முறையாக வகைப்படுத்தி சாப்பிடாவிடில், ஜட இயற்கை நமக்கு ஒரு பன்றியின் உடலைக் கொடுக்கும். அப்போது மலத்தை உணவாக ஏற்க நேரிடும்.
நாம் பெற்றுள்ள உடலைப் பொறுத்து, இந்த பௌதிக உலகில் நமக்கு இன்பமும் துன்பமும் கிடைக்கின்றன. ஆகையால், இந்த மனித உடல் பகவானை உணர்வதற்காகக் கொடுக்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பாகும். பகவானின் சேவையில் நாக்கை ஈடுபடுத்துவதன் மூலம், அவரை எளிதில் உணர ஆரம்பிக்கலாம்.
நாக்கு மிகவும் ஆபத்தானது. இரத்தமும் இறைச்சியும் சாப்பிட வேண்டும் என்னும் நாக்கின் ஆசையை திருப்திப்படுத்த விரும்பினால், ஜட இயற்கை அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு ஒரு புலியின் உடலை நமக்குக் கொடுக்கும். நாம் உண்ணும் உணவை முறையாக வகைப்படுத்தி சாப்பிடாவிடில், ஜட இயற்கை நமக்கு ஒரு பன்றியின் உடலைக் கொடுக்கும். அப்போது மலத்தை உணவாக ஏற்க நேரிடும்.”
கிருஷ்ணரை அறியாத மூடர்கள்
ஸேவா என்றால் “சேவை, தொண்டு” என்று பொருள். ஜிஹ்வா அதோ என்றால் “நாக்கிலிருந்து தொடங்கி,” என்று பொருள். நாக்கை நாம் எப்பொழுதும் ஹரே கிருஷ்ண உச்சாடனத்தில் ஈடுபடுத்த வேண்டும். ஏனென்றால், கிருஷ்ண என்ற ஒலிக்கும் கிருஷ்ணருக்கும் வேறுபாடு இல்லை. கிருஷ்ணர் பூரணமானவர், எதுவும் அவரிடமிருந்து வேறுபட்டதல்ல. கிருஷ்ணருக்கும் கிருஷ்ணருடைய நாமத்திற்கும் வேறுபாடு கிடையாது. பௌதிக உலகில் அனைத்திற்கும் வேறுபாடு உண்டு. நான் என்னுடைய உடலிலிருந்து வேறுபட்டவன். நான் இந்த உடல் அல்ல. ஆனால் கிருஷ்ணர் அவ்வாறு கிடையாது. கிருஷ்ணரும் கிருஷ்ணருடைய தெய்வீக உடலும் ஒன்றே. பகவத் கீதையில் (9.11) கிருஷ்ணர் கூறுகிறார்:
அவஜானந்தி மாம் மூடா மானுஷீம் தனும் ஆஷ்ரிதம்
பரம் பாவம் அஜானந்தோ மம பூத மஹேஷ்வரம்
“மனித உருவில் நான் தோன்றும்போது முட்டாள்கள் என்னை ஏளனம் செய்கின்றனர். எனது பரம இயற்கையை, அதாவது இருப்பவை அனைத்திற்கும் நானே உன்னத உரிமையாளன் என்பதை அவர்கள் அறியார்கள்.”
அதாவது, “என்னைப் பற்றி அறியாததால், அவர்கள் ‘கிருஷ்ணரும் சாதாரண மனிதனே,’ என்று எண்ணுகின்றனர்.”
மூடா என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. மூடா என்றால், “முட்டாள், அயோக்கியன்,” என்று பொருள். இங்கே இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளபோதும், பல்வேறு அயோக்கியர்கள் தங்களை பெரிய பண்டிதர்களாகக் காட்டிக்
கொள்கின்றனர். கிருஷ்ணர், “என்னிடம் சரணடை” என்று உத்தரவிடுகிறார். ஆனால் இந்த அயோக்கியர்களோ, “நாம் சரணடைய வேண்டியது கிருஷ்ணரிடம் அல்ல, கிருஷ்ணருக்குள் இருக்கும் அந்த பிறவாத ஆத்மாவிடமே,” என்று கூறுகின்றனர். அவர்கள் பொதுவாக ஒருமைத்துவத்தை ஆதரிக்கின்றனர். ஆனால், கிருஷ்ணர் என்று வந்துவிட்டால் மட்டும், “கிருஷ்ணரும் அவருடைய உடலும் வேறுபட்டவை,” என்று கூறி பாகுபாடு பார்க்கின்றனர். உண்மையில், கிருஷ்ணர் தமது திருமேனியிலிருந்து வேறுபடாதவர், பெயரிலிருந்து வேறுபடாதவர், புகழிலிருந்து வேறுபடாதவர்—கிருஷ்ணருடன் சம்பந்தப்பட்டவை அனைத்தும் கிருஷ்ணரே; ஆனால் அவர்கள் இவற்றை அறிவதில்லை.
கிருஷ்ணருடைய நாமத்திற்கும் கிருஷ்ணருக்கும் வேறுபாடில்லை. ஆகையால், என்னுடைய நாக்கு கிருஷ்ணருடைய நாமத்தை உச்சரிக்க ஆரம்பித்தவுடன், அது நேரடியாக கிருஷ்ணருடன் தொடர்புகொள்கிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிப்பதன் மூலமாக, நீங்கள் கிருஷ்ணருடனான தொடர்பை எப்போதும் தக்கவைத்தால், நீங்கள் எளிதில் தூய்மையடைவீர்.
கிருஷ்ண பிரசாதம் சாப்பிடுங்கள்
மேலும், சுவையான உணவை உண்ண உங்களுடைய நாக்கு விரும்பினால், மிகவும் கருணைமிக்கவரான கிருஷ்ணர் உங்களுக்காக நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான உணவு பதார்த்தங்களைக் கொடுத்துள்ளார். அவர் உண்ட பின்னர் அதனை நீங்கள் பிரசாதமாக உண்ணலாம். ஓர் எளிமையான தீர்மானத்தை நீங்கள் ஏற்க வேண்டும்: “நான் கிருஷ்ண பிரசாதம் தவிர வேறு எதையும் சாப்பிட மாட்டேன், எப்பொழுதும் திருநாம உச்சாடனத்தில் நாக்கை ஈடுபடுத்துவேன்.” அவ்வாறு செய்யும்போது, பூரணத்துவம் உங்களது கைப்பிடியினுள் இருக்கும்.
இரண்டு எளிய வழிகள்: ஹரே கிருஷ்ண நாமத்தை உச்சரித்தல், கிருஷ்ண பிரசாதம் தவிர வேறு எதையும் ஏற்காமல் இருத்தல். அவ்வளவு தான். நம்முடைய கிருஷ்ண பிரசாதம் பலவித சுவைகளுடன் பலவித பதார்த்தங்களாகக் கிடைக்கிறது. உங்களுடைய நாவிற்கு எவ்வளவு இன்பம் தேவையோ அதை நீங்கள் கிருஷ்ண பிரசாதத்தை உண்பதன் மூலமாக அடையலாம். உங்களுடைய நாக்கு எந்த அளவிற்கு தூய்மையடைகிறதோ அந்த அளவிற்கு ஹரே கிருஷ்ண நாம உச்சாடனத்தின் சுவையை உணரலாம்.
அளவற்ற ஆனந்தம்
ஆனந்தாம்புதி-வர்தனம். திருநாம உச்சாடனம் தெய்வீக ஆனந்தப் பெருங்கடலின் அளவை அதிகரிப்பதாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறுகிறார். சாதாரண கடலின் அளவு அதிகரிப்பதில்லை. கடலின் அளவு அதிகரிக்கிறது என்ற அனுபவம் நமக்கு இல்லை. ஆயினும், தெய்வீக ஆனந்தப் பெருங்கடலின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆனந்தம் அதிகரிப்பதை உங்களில் சிலர் ஏற்கனவே உணர்ந்திருக்கலாம். கிருஷ்ண உணர்விற்கான மிகச்சிறந்த அதிகாரியான ரூப கோஸ்வாமி கூறுகிறார்: “ஒரே ஒரு நாக்கினைக் கொண்டு என்னால் எவ்வாறு நாமத்தை உச்சரிக்க முடியும்? கோடிக்கணக்கான நாக்குகள் இருந்தால், இன்னும் கொஞ்சம் அதிகமாக உச்சரிக்கலாம். மேலும், இரண்டு காதுகளை வைத்துக் கொண்டு எதைக் கேட்க முடியும்?” ஹரே கிருஷ்ண உச்சாடனத்தைச் சுவைப்பதற்காக, அவர் கோடிக்கணக்கான காதுகளையும் கோடிக்கணக்கான நாக்குகளையும் விரும்புகிறார். அது மிகவுயர்ந்த நிலை; அதே சமயத்தில், இந்த நாம உச்சாடனம் காதிற்கு இனிமையானதாக இருப்பதால், இதை மேலும் அங்கீகரிக்க அதிகமான காதுகளும் நாக்குகளும் தேவைப்படுவதை நாமும் உணரலாம்.
கிருஷ்ணர் நம்முடன் இருக்கிறார்
சேதோ தர்பண மார்ஜனம் பவ மஹா தாவாக்னி-நிர்வாபணம். கண்ணாடி போன்ற நமது இதயத்தில் படிந்துள்ள களங்கங்கள் அனைத்தும் நாம உச்சாடனத்தினால் தூய்மையடைகிறது. அதன் பிறகு, எவ்வித பௌதிகத் துன்பங்களும் இருக்காது. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அபராதங்கள் இல்லாமல் உச்சரிக்கும்போது, நீங்கள் பௌதிகத் துன்பங்களி
லிருந்து உடனடியாக விடுபடுகிறீர். இதை நீங்களே சோதித்துப் பார்க்கலாம். நீங்கள் நாம உச்சாடனத்தில் எந்த அளவு முன்னேறி இருக்கிறீர்கள் என்பதை பௌதிகக் கவலையிலிருந்து எந்த அளவிற்கு விடுபட்டு இருக்கிறீர்கள் என்பதை வைத்து புரிந்துகொள்ளலாம்.
நாக்கிற்கு சரியான பயிற்சியைக் கொடுத்து, பகவானுடைய அன்புத் தொண்டில் ஈடுபடுத்த வேண்டும். அதுவே மிகச்சிறந்த நிலை. நீங்கள் எளிதான முறையில் நாமத்தை உச்சரித்து கிருஷ்ண பிரசாதம் எடுத்துக்கொள்ளுங்கள். இது கடினமான காரியமா? சைதன்ய மஹாபிரபு கூறுகிறார், ஏதாத்ருஸி தவ க்ருபா பகவன் மமாபி. “பகவானே, இங்கு நீங்கள் கருணையுடன் திருநாமமாக வந்துள்ளீர்.” இதை நாம் ஏற்றுக் கொண்டால், கிருஷ்ணர் நம்முடன் இருக்கிறார்; இல்லாவிடில், அவர் நம்மை விட்டு வெகு தொலைவிற்குச் சென்று விடுகிறார். திருநாமத்தை உச்சரித்து நாக்கை அவரது தொண்டில் ஈடுபடுத்தும்போது, கிருஷ்ணர் சுலபமாக நம்முடன் இருக்கிறார்.
நன்றி.