பாகவத கதைகளும் பொழுதுபோக்கும்

Must read

Sri Giridhari Dashttps://www.facebook.com/profile.php?id=100005426808787&fref=ts
திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் அவர்கள், பகவத் தரிசனம் உட்பட பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளையின் தமிழ் பிரிவில் தொகுப்பாசிரியராகத் தொண்டாற்றி வருகிறார்.

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

ஸ்ரீமத் பாகவதத்தின் முக்கியத்துவம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது லீலைகளை நிறைவேற்றி விட்டு, கோலோக விருந்தாவனத்திற்குத் திரும்பிச் சென்றவுடன், ஸ்ரீமத் பாகவதம் அவரது இலக்கிய அவதாரமாக தோன்றியுள்ளது. இந்த பாகவத சூரியன் கலி யுகத்தின் இருளில் தவிக்கும் மக்களுக்கு ஒளி கொடுப்பதற்காகவே உதயமாகியுள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.3.43)

வேத ஞானம் என்னும் கற்பக மரத்தின் கனிந்த பழமாகிய இந்த பாகவதம், ஸ்ரீல வியாஸதேவரால் அவரது முதிர்ச்சி பெற்ற பக்குவநிலையில் வேதாந்த சூத்திரத்தின் ஒரு விளக்கவுரையாக எழுதப்பட்டது. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.3) எனவே, கிம் வா பரைர், பாகவதத்தைப் படிப்பவருக்கு வேறு எந்த நூலும் அவசியமில்லை என்று சொல்லும் அளவிற்கு இது தலைசிறந்த சாஸ்திரமாக உள்ளது. (ஸ்ரீமத் பாகவதம் 1.1.2)

இதனால்தான், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, ஸ்ரீமத் பாகவதம் பிரமாணம் அமலம், “ஸ்ரீமத் பாகவதமே பரம்பொருளை நிலைநாட்டுவதற்கான சாஸ்திரங்களில் களங்கமற்ற உயர்ந்த சாஸ்திரம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகவதத்தைச் செவியுருதல்

ஸ்ரீமத் பாகவதம் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பக்தியின் 64 அங்கங்களை பட்டியலிட்ட ஸ்ரீல ரூப கோஸ்வாமி அதன் ஐந்து முக்கிய அங்கங்களில் ஒன்றாக ஸ்ரீமத் பாகவதம் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பக்தித் தொண்டின் ஒன்பது வழிமுறைகளில் முதலாவதாகவும் முதன்மையானதாகவும் வருவது ஸ்ரவணம்; அதாவது, பகவான் கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவைப் பற்றிச் செவியுருதல். இவ்வாறு செவியுருவதன் மூலமாக நம்முள் மறைந்திருக்கும் நித்தியமான கிருஷ்ண பிரேமை மீண்டும் எழுச்சி பெறும். (ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம், மத்திய லீலை, 22.107).

“கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்கள் இரு வகைப்படும்: கிருஷ்ணரால் பேசப்பட்டவை, கிருஷ்ணரைப் பற்றிப் பேசப்பட்டவை. இறை விஞ்ஞானத்தின் தத்துவத்தை எடுத்துரைக்கும் பகவத் கீதை கிருஷ்ணராலேயே பேசப்பட்டது. ஸ்ரீமத் பாகவதம் கிருஷ்ணரின் தெய்வீக செயல்களையும் லீலைகளையும் எடுத்துரைக்கிறது. இரண்டும் கிருஷ்ண கதைகளே.” (கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் அறிமுகம்)

பாகவதத்தைச் செவியுரும் மூன்று வித மக்கள்

கிருஷ்ணரைப் பற்றி பாகவதத்தின் மூலமாகவும் பகவத் கீதையின் மூலமாகவும் நாம் அறிந்துகொள்கிறோம். இவை யாருக்குப் பயன்படும்?

ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார்: “இவ்வுலகில் மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் முக்தி பெற்ற ஆத்மாக்களாவர், மற்றொரு பிரிவினர் முக்தி பெற முயல்வோர், மூன்றாவது பிரிவினர் பௌதிக மக்கள். ஒருவன் முக்தி பெற்றவனாக இருந்தாலும் சரி, முக்தி பெற முயல்பவனாக இருந்தாலும் சரி, முழுக்கமுழுக்க பௌதிகவாதியாக இருந்தாலும் சரி, பகவான் கிருஷ்ணரின் லீலைகளைப் படிப்பது பயனுள்ளதாக அமையும்.” (கிருஷ்ணர், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள், அறிமுகம்)

முக்தி பெற்ற நிலையிலுள்ள முதல்தர மனிதர்கள் பரமஹம்ஸர்கள் எனப்படுகின்றனர், அவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தினை நன்றாக சுவைத்து மகிழ்கின்றனர். இரண்டாம் நிலையில் பக்தியைப் பயிற்சி செய்பவர்களாக இருப்போர் பாகவத விஷயங்களை தினமும் கேட்டு தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றனர். மூன்றாம் நிலையிலுள்ள பௌதிக மக்கள் கிருஷ்ண கதையினை ஒரு புண்ணிய பொழுதுபோக்காக அணுகுகின்றனர்.

இவ்வாறாக, பாகவத கதை மிகவும் சக்திவாய்ந்ததாக இருப்பதால், இது மேலே குறிப்பிட்ட மூன்று தரப்பட்ட மனிதர்களுக்கும் நன்மை செய்கிறது.

கலி யுகத்தின் இருளில் தவிக்கும் மக்களுக்கு ஒளி கொடுப்பதற்காகவே உதயமாகியுள்ள சூரியன், ஸ்ரீமத் பாகவதமே ஆகும்.

தூய்மைப்படுத்தும் பாகவத கதைகள்

பகவத் தரிசன வாசகர்களில் பெரும்பாலோர் பரமஹம்ஸ நிலையிலும் கிடையாது, முழுக்க முழுக்க பௌதிகத் தளத்திலும் கிடையாது. பெரும்பாலான வாசகர்கள் தங்களை ஆன்மீகத் தளத்தில் நிலைநிறுத்த முயல்பவர்களாகவும் பௌதிக வாழ்வின் களங்கங்களை அகற்ற முயல்பவர்களாகவும் இருப்பதால், அவர்கள் பாகவதத்தை இரண்டாம் நிலையில் செவியுருகின்றனர்.

ஸ்ரீமத் பாகவதத்தை நாம் தொடர்ந்து படித்தால், தொடர்ந்து கேட்டால், நமக்கு ஏற்படும் நன்மை என்ன? (1) நமது இதயத்திலுள்ள எல்லாக் களங்கங்களும் நம்மை விட்டு படிப்படியாகச் சென்றுவிடும். (2) நாம் பக்தியில் ஸ்தரமாக நிலைபெறுவோம். (3) நம்மை பந்தப்படுத்தக்கூடிய ரஜோ குணத்திலிருந்தும் தமோ குணத்திலிருந்தும் முற்றிலுமாக விடுபட்டு தூய்மையான ஸத்வ குணத்தில் நிலைபெறுவோம். (4) பௌதிக இன்பத்திற்கு அப்பாற்பட்ட தெய்வீக இன்பத்தில் திளைத்து முக்தியின் தளத்தை அடைவோம். (5) நமது இதயத்தை பந்தப்படுத்தும் எல்லா முடிச்சுகளையும் அறுத்துவிடுவோம். (ஸ்ரீமத் பாகவதம் 1.2.17–21)

ஸ்ரீமத் பாகவதத்தை நாம் இதற்காகவே செவியுற வேண்டும். நம்மை முற்றிலும் தூய்மைப்படுத்து

வதற்கான சக்தி பாகவதத்தில் உள்ளது. நாம் அதனை முறையாக பயன்படுத்திக் கொண்டால் கிருஷ்ணரின் மீதான தூய அன்பு எனும் இலக்கினை எளிதில் அடைய முடியும்.

பொழுதுபோக்கை வழங்கும் பாகவத கதைகள்

யாரேனும் ஒருவர் பாகவத கதைகளை தூய்மையடையும் நோக்கத்திற்காக அல்லாமல், “நல்ல விஷயத்தைக் கேட்கலாமே,” “என்ன இருக்கிறது பார்க்கலாமே,” என்று ஒரு மாற்றத்திற்காக, அல்லது பொழுதுபோக்கிற்காக செவியுற்றால்கூட, சரியான நபரிடமிருந்து செவியுரும் பட்சத்தில், அவரும் படிப்படியாக தூய்மையடைந்து இரண்டாம் நிலைக்கு வருவார். அதாவது, கீழ்நிலையிலிருந்து செவியுற்றாலும் பாகவத கதைகளைக் கூறுபவர் தூய்மையானவராக இருக்க நேர்ந்தால், அப்போது அங்கே நன்மை பிறக்கும்.

மறுபுறம், சில பாகவத பேச்சாளர்கள், வயிற்றுப் பிழைப்பிற்காக பாகவதம் பேசுகின்றனர், மக்களுக்கு ஆன்மீகம் என்ற பெயரில் இன்பமான பொழுதுபோக்கை வழங்குவதே அவர்களின் நோக்கம். அவர்களிடமிருந்து பாகவதத்தைக் கேட்க நேரிட்டால், அப்போது கேட்பவர்கள் அந்த பொழுதுபோக்கின் தளத்தை விட்டு ஒருபோதும் உயர்வு பெற மாட்டார்கள்.

உலக மக்கள், அதிலும் குறிப்பாக இந்திய மக்கள், புராண கதைகளைக் கேட்பதில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். இது நிச்சயம் வரவேற்கத்தக்கது. பொழுதுபோக்கிற்காக மது, மாது என்று அலையாமல், இராமாயணம், மஹாபாரதம், பாகவதம், புண்ணிய ஸ்தலங்கள் என்று வாழ்பவர்கள் நிச்சயம் பாராட்டத்தக்கவர்கள். ஆயினும், உரைப்பவரின் நோக்கம் சரியில்லை என்றால், கேட்பவர்கள் பொழுதுபோக்கின் தளத்திலேயே இருந்து விடக்கூடும்.

ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து பாகவதத்தைக் கேட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் முற்றிலும் தூய்மையுற்று கிருஷ்ணரிடம் பூரணமாக சரணடைந்துள்ளனர்.

பொழுதுபோக்கின் அபாயம்

பாகவதத்தை ஒரு பொழுதுபோக்காக அல்லது வருமானத்தை ஈட்டும் ஒரு வழியாக நினைத்து பாகவத கதைகளை எடுத்துரைப்போர் எண்ணற்றோர். அவர்களிடமிருந்து பாகவதத்தைச் செவியுரும் இலட்சக்கணக்கான மக்கள் பாகவதத்தின் உண்மையான பயனைப் பெற முடிவதில்லை. அத்தகு பாகவத பேச்சாளர்கள் நல்ல திறனுடைய பேச்சாளராகவும் இசைக்கலை வல்லுனராகவும் இருந்து கொண்டு, பல்வேறு இசைக்கருவிகளுடன் பாகவதத்தை எடுத்துரைத்து, கேட்பவர்களின் மனதிற்கு நல்லதொரு பொழுதுபோக்கை வழங்குகின்றனர்.

ஆயினும், தூய பக்தர்கள் அதுபோன்ற பாகவத உரைகளில் ஈடுபடுவதில்லை, தூய்மையடைய விரும்பும் பக்தர்களும் அவ்வாறு பாகவதம் கேட்பதில் ஈடுபடுவதில்லை. எனவே, நாம் பாகவதத்தின் பயனை முழுமையாகப் பெற விரும்பினால், அதனை முறையாக கேட்க வேண்டும்.

பாகவதம் மற்ற புராணங்களைப் போன்று கதைகளை மட்டும் வழங்காமல், அதனுடன் பௌதிக வாழ்வின் அவலநிலையினை வன்மையாகக் கண்டித்து, மிகவுயர்ந்த தத்துவங்களையும் எடுத்துரைக்கின்றது. பாகவத பொழுதுபோக்கில் ஈடுபடுவோர் தத்துவங்களைக் கேட்பதிலோ பாகவதத்தின் வன்மையான சொற்களைக் கேட்பதிலோ விருப்பம் காட்டுவதில்லை. இந்நிலை நிச்சயம் மாற வேண்டும்.

புத்திக்கான பொழுதுபோக்கு

சிலர் பல்வேறு சாஸ்திரங்களைப் படித்தும் பல்வேறு இடங்களுக்குச் சென்றும் பல்வேறு நபர்களிடமிருந்து கேட்டும் எண்ணற்ற தகவல்களைச் சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.  இதுவும் ஒரு வகையான பொழுதுபோக்கே, அவர்கள் புத்திக்கான பொழுதுபோக்கில் ஈடுபடுகின்றனர்.

பாகவதத்தை முறையாக அணுவதை விடுத்து பல்வேறு சாஸ்திரங்களை அணுகுவோரால், தங்களது வாழ்வின் இழப்பு என்ன என்பதையும் அதை அடைவதற்கான வழி என்ன என்பதையும் தீர்மானமாக அறிய இயலாது. அவர்கள் கிருஷ்ணரிடம் சரணடைய மாட்டார்கள், மூளையில் எண்ணற்ற தகவல்களை சேகரித்து வைத்துக்கொண்டு வறட்டு தத்துவங்களையும் வெற்று கதைகளையும் பேசிக் கொண்டிருப்பர். நாம் அவ்வாறு புத்திக்கான பொழுதுபோக்கிலும் ஈடுபடுதல் நல்லதல்ல.

இதயத்தில் மாற்றம்

பாகவதத்தை உண்மையான பாகவதரிடமிருந்து செவியுற்றால், அப்போது நமது இதயத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்; கிருஷ்ணரின் மீதான பற்றுதல் அதிகரித்து, பௌதிக இன்பத்தின் மீதான பற்றுதல் குறையும். இதுவே பாகவதத்தை உண்மையாகச் செவியுருவதன் அளவுகோளாகும். புண்ணியமான பொழுதுபோக்கிற்காக பாகவத கதைகளில் ஈடுபட்டால், அப்போது அதுபோன்ற மாற்றங்கள் ஏற்படா.

ஸ்ரீல பிரபுபாதரின் பாகவத உரைகள் ஒருபோதும் பொழுதுபோக்கின் தன்மையில் அமையவில்லை, மக்களை தூய்மைப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தன. ஸ்ரீல பிரபுபாதரிடமிருந்து பாகவதத்தைக் கேட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் முற்றிலும் தூய்மையுற்று கிருஷ்ணரிடம் பூரணமாக சரணடைந்தனர். கட்டுண்ட ஆத்மாக்களுக்கு எந்த விஷயம் நன்மை பயக்கும் என்பதை ஸ்ரீல பிரபுபாதர் நன்கு அறிந்திருந்தார். ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்புவதற்காக கிருஷ்ணரால் நேரடியாக அனுப்பப்பட்டவர். நமக்கு நன்மை தரக்கூடிய பாகவத வழிமுறை என்ன என்பதை அவர் நன்கு அறிந்தவர்.

பாகவதத்தின்படி வாழக்கூடிய பக்தர்கள் “பாகவதர்கள்” என்றும், பாகவதர்களில் சிறந்தவர்கள் “மஹா பாகவதர்கள்” என்றும், மஹா பாகவதர்களில் சிறந்தவர்கள் “மஹா பாகவதோ மஹான்” என்றும் அறியப்படுகின்றனர். அத்தகு மஹா பாகவதோ மஹான் பக்தர்கள் மிகமிக அரிதானவர்கள். ஸ்ரீல பிரபுபாதர் நிச்சயம் அத்தகு அரிதான மஹா பாகவதோ மஹான்களில் ஒருவராவார். எனவே, ஸ்ரீல பிரபுபாதரின் பாகவத விளக்கங்களை கேட்பதும் படிப்பதும் நம்மைப் போன்ற கட்டுண்ட ஆத்மாக்களுக்கு மிகச்சிறந்த அருமருந்தாக திகழும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இறுதி முடிவு

வாழ்வின் பக்குவத்தை அடைவதில் ஆர்வமுடையோர் பாகவதத்தை எந்த நோக்கத்தோடு செவியுருகிறோம், யாரிடமிருந்து செவியுருகிறோம் என்பதில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

முறையான பாகவதரிடமிருந்து பாகவதத்தைக் கேட்டும் நல்வாய்ப்பு நமக்குக் கிட்டினால், அது நம்மை எல்லா நிலையிலும் தூய்மைப்படுத்தும். உண்மையான பாகவதரை பொழுதுபோக்கிற்காக அணுகினால்கூட, அவரும் அவரது பாகவதமும் நம்மைப் படிப்படியாக தூய்மைப்படுத்தும். அதே சமயத்தில், நாம் வெகுவிரைவில் பொழுதுபோக்கின் மனப்பான்மையினைக் கைவிட்டு, தூய்மையடையும் நோக்கத்தை வளர்த்துக் கொண்டு அதன்படி செவியுற்றால், அப்போது பூரண நன்மையை அடைவோம்.

ஸ்ரீல பிரபுபாதர் மஹா பாகவதோ மஹான் என்பதால், முன்னரே கூறியபடி, பக்தர்கள் அவரது விளக்கங்களை அவரது நூல்களின் மூலமாகவும் சொற்பொழிவுகளின் மூலமாகவும் கேட்பதற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். அது நம்மை விரைவில் தூய்மைப்படுத்தும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives