தெளிவற்ற, போலியான, நேரத்தை வீணாக்கும் வழிமுறை
பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் அருவவாத தன்மை கொண்ட ரோஸிகுருசியன் திருச்சபையின் அதிகாரியான திரு பேல்ஃபியோரி என்பவருக்கும் இடையிலான கலந்துரையாடல்.
(சென்ற இதழின் தொடர்ச்சி…)
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் கூறிய அந்த ஆன்மீக வாழ்க்கை என்ன? இதை நான் அறிய விரும்புகிறேன். நீங்கள் எதைஎதையோ பேசுகிறீர். உங்களுடைய நோக்கம் என்ன? இலக்கு என்ன? ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன? இதில் எதுவும் உங்களுக்குத் தெரியவில்லை. இது பயனற்ற நிலை. நான் விசாரித்த எதைப் பற்றியும் உங்களிடம் தெளிவான அறிவு இல்லை. ஆன்மீக வாழ்க்கை என்றால் என்ன என்பதை உங்களிடம் வினவினேன். உங்களால் அதனை விவரிக்க இயலவில்லை. இந்த நிலையில், ஆன்மீக வாழ்வையும் பௌதிக வாழ்
வையும் உங்களால் எவ்வாறு வேறுபடுத்த முடியும்?
பேல்ஃபியோரி: நாம் இந்த பெளதிக உலகில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஆன்மீக உணர்வுடன் இருக்க முடியும்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், ஆன்மீக வாழ்வு என்றால் என்ன? ஆன்மீக வாழ்விற்கும் பெளதிக வாழ்விற்குமான வேறுபாடு என்ன? வாழ்வின் இலட்சியம் என்ன? இவற்றை ஏன் உங்களால் வரையறுக்க முடியவில்லை?
பேல்ஃபியோரி: உண்மையான ஆன்மீக உணர்வைப் பெற்றிருப்பவரின் பக்குவமான வாழ்வைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆம்.
பேல்ஃபியோரி: சகிப்புத்தன்மை. ஆன்மீக உணர்வுடையவர் மற்றவர்கள் அனைவரையும்விட சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: “சகிப்புத்தன்மை.” இஃது ஆன்மீக வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால், (எனது கேள்வி) உங்களுடைய ஆன்மீகப் பாதையில், நீங்கள் பின்பற்றும் வழிமுறை என்ன? வழிமுறை என்று ஏதேனும் ஒன்று இருந்தாக வேண்டுமே.
பேல்ஃபியோரி: இயக்கத்தில் தீக்ஷை பெறும்போது, உங்களுக்கு வழிமுறை வழங்கப்படும், அது சகிப்புத்தன்மையை அடைவதற்கான வழிமுறையாக இருக்கும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அது சரி. இருப்பினும், நான் இதில் இணைய விரும்புவதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் எனக்கு சில விதிமுறைகளை—அதாவது, “இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும்,” என்று கூற வேண்டும். இல்லாவிடில், நான் எவ்வாறு இணைவது?
பேல்ஃபியோரி: அதில் பற்பல நுணுக்கங்கள் இருக்கின்றன, இருப்பினும், இறுதியில் அவை அனைத்தும் ஒன்றுதான்; ஏனெனில், அவை ஒரே முடிவை நோக்கி வழிநடத்துகின்றன.
ஸ்ரீல பிரபுபாதர்: அந்த நுணுக்கங்களை நீங்கள் ஏன் எங்களிடம் கூறக் கூடாது?
பேல்ஃபியோரி: முதல் விஷயம் யாதெனில், நம்முள் தொண்ணூறு சதவிகிதம் உறங்கிக் கொண்டுள்ள உள்ளுணர்வை எழுப்ப வேண்டும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அதற்கான வழிமுறை என்ன?
பேல்ஃபியோரி: அதனை நான் இங்கு வெளிப்படுத்த விரும்பவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், நான் அதனை எவ்வாறு ஏற்க முடியும்? தெளிவற்ற விஷயத்திற்குள் என்னால் நுழைய முடியாது.
பேல்ஃபியோரி: எல்லா வழிமுறைகளும் தியானம், ஒருமுகப்படுத்துதல் போன்றவற்றுடன் இணைந்தே மேற்கொள்ளப்படும். இவை உங்களுடைய உணர்வை மீண்டும் எழச் செய்யும்.
ஸ்ரீல பிரபுபாதர்: தியானிக்கப்படும் விஷயம் என்ன?
பேல்ஃபியோரி: எண்ணற்ற பொருட்களை தியானிக்கலாம்.
ஸ்ரீல பிரபுபாதர்: அவற்றுள் ஒன்றைக் கூறுங்கள்.
பேல்ஃபியோரி: உடலை தியானிக்கலாம். இது நித்தியமான தியானத்தில் மூன்றாவதாக வருகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், “முதலாவது” என்ன?
பேல்ஃபியோரி: மூன்றாவதாக உள்ள இந்த தியானமே எங்களுக்கு அடிப்படையாக உள்ளது. எங்களுடைய எல்லா சீடர்களுக்கும் இது கற்றுத் தரப்படுகிறது.
ஸ்ரீல பிரபுபாதர்: “மூன்றாவது” இருக்கிறது, “முதலாவது” இல்லை.
பேல்ஃபியோரி: கருத்து என்னவெனில், நீங்கள் மூன்றாவது பொருளில் தியானம் செய்து, உங்களுடைய கால் விரல் நுனியில் தொடங்கி உடலின் உணர்வுகளை மேல்நோக்கி எழுப்புகிறீர். இது கேட்பதற்கு எளிதாக இருக்கலாம். ஆயினும், எங்களது மிகச்சிறந்த குருமார்கள் இதனைக் கற்பிக்கும்போதிலும், எவராலும் இதில் வெற்றி பெற முடியவில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களுடைய அறிவு பக்குவமற்றது. இவை அனைத்தும் போலியானவை. உடலை தியானித்து எதை அடையப் போகிறீர்கள்?
பேல்ஃபியோரி: உடலுக்குள் உறங்கிக் கொண்டுள்ள உணர்வினை எழுப்புவோம்.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அதற்கான வழிமுறை என்னவென்பதைக் கூறுங்கள்.
பேல்ஃபியோரி: உம், தற்போது நான் படித்துக் கொண்டுள்ள ஒரு புத்தகத்தைப் பற்றி உங்களிடம் கூற விரும்புகிறேன், அது ரஷ்யர்கள் ஆத்மாவைக் கண்டறிந்ததைப் பற்றி விவரிக்கின்றது. அவர்கள் ஆத்மாவை, ஆத்மாவின் ஒளிவட்டத்தைப் படம் பிடித்துள்ளனர். அவர்கள் ஆத்மாவைக் கண்டறிந்துள்ளனர், அவர்கள் பல்வேறு விதமான மனோவியல் நிகழ்வுகளையும், புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளையும் விவரிக்கின்றனர். ரஷ்யர்கள் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்கியுள்ளனர், நான் இன்னும் அந்தப் புத்தகத்தை படித்து முடிக்கவில்லை என்றாலும், அது பிரமிக்க வைப்பதாக உள்ளது,
ஸ்ரீல பிரபுபாதர்: அது ரஷ்யர்களுடையது. நான் உங்களுடைய வழிமுறைகளைப் பற்றி விசாரித்துக் கொண்டுள்ளேன்.
பேல்ஃபியோரி: எங்களுடைய திருச்சபைக்கு மனித வாழ்வின் இலட்சியம் தெரியும். அதனை கிறிஸ்துவ உணர்வு நிலை, அல்லது நிர்வாணம் என்று உங்களது விருப்பப்படி அழைக்கலாம். அஃது உங்களுடைய புரிந்துணர்விற்கு இலட்சக்கணக்கான மடங்கு அப்பாற்பட்டதாகும்.
ஸ்ரீல பிரபுபாதர்: அது புரிந்துணர்விற்கு அப்பாற்பட்டது என்றால், அதனை எவ்வாறு என்னால் ஏற்க முடியும்?
பேல்ஃபியோரி: இதுவே உண்மையான புரிந்துணர்வு.
ஸ்ரீல பிரபுபாதர்: யாரை நேசிப்பது என்பதே புரியாதபோது, என்னால் எவ்வாறு நேசிக்க முடியும்?
பேல்ஃபியோரி: இந்தப் புரிந்துணர்வு அனைவருடைய இதயத்திலும் இருக்கிறது. இது தவறான கர்வத்தை அடக்குவதால் அடையப்படுகிறது, கர்வம் நன்கு வளர்ந்துள்ளது.
ஸ்ரீல பிரபுபாதர்: புரியவில்லை.
பேல்ஃபியோரி: நீங்கள் ஏன் ஆட்சேபம் தெரிவிக்கின்றீர் என்பது எனக்குப் புரியவில்லை. அன்பு என்பது அனைவரிடமும் இருக்கும் பகுதி.
ஸ்ரீல பிரபுபாதர்: நான் ஆட்சேபம் தெரிவிப்பது ஏனெனில், நீங்கள் என்னிடம் “அன்பு செலுத்துங்கள்” என்று கூறுகிறீர், நானோ யாரிடம் அன்பு செலுத்துவது என்பதை அறிய விரும்புகிறேன்.
பேல்ஃபியோரி: ஒரு மாயமான நபர் எல்லாவற்றையும் நேசிக்கிறார், எல்லாரையும் நேசிக்கிறார்.
ஸ்ரீல பிரபுபாதர்: நீங்கள் அனைவரையும் நேசிப்பதாக இருந்தால், மிருகங்களைக்கூட நேசிக்கிறீர்கள் என்பதே பொருள். உங்களுடைய சமுதாயம் மிருகங்களைக் கொல்வதை அனுமதிக்கிறதா?
பேல்ஃபியோரி: நீங்கள் இயக்கத்திற்கு வரும்போது, உங்களிடம் எத்தகைய கட்டுப்பாடுகளும் தேவையில்லை. இருப்பினும், கொஞ்சம்கொஞ்சமாக அந்த நிலை அடையப்படுகிறது. அப்போது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எங்களுடைய சீடர்கள் போதை, மாமிசம் போன்றவற்றைக் கைவிட வேண்டும். இருப்பினும், நிரந்தரமாக கைவிடத் தேவையில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: கொஞ்சம் நாள் கழித்து, அவர்கள் அவற்றை மீண்டும் ஏற்றுக்கொள்ளலாமா?
பேல்ஃபியோரி: ஆமாம், கொஞ்சம் நாள் கழித்து.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், ஆரம்பத்தில் ஏன் நிறுத்த வேண்டும்? ஆரம்பத்தில் உங்களுடைய சீடர்களிடம் இவற்றைக் கைவிடுமாறு ஏன் கூறுகிறீர்?
பேல்ஃபியோரி: எங்களது திருச்சபையில் நாங்கள் யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்துவதில்லை, ஏதேனும் ஒன்றைச் செய்யுங்கள் அல்லது செய்யக் கூடாது என்று நாங்கள் கூறுவதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் கொள்கை என்பது அவசியமாயிற்றே. பின்பற்றுவதும் பின்பற்றாததும் தனிப்பட்டவரின் விருப்பமாக இருக்கலாம்.
பேல்ஃபியோரி: எங்களுடைய திருச்சபை யாரையும் புறக்கணிப்பதில்லை.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களுடைய திருச்சபை மிருகவதையை அனுமதிக்கின்றதா?
பேல்ஃபியோரி: திருச்சபையில் அதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.
ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், நாம் இத்துடன் முடித்துக்கொள்வோம். கேள்விக்கு அவசியமே இல்லை. இது நேரத்தை வீணாக்குவதாக உள்ளது.
(அடுத்த இதழில் தொடரும்)