விருத்ராசுரனின் பிறப்பு

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஆறாம் ஸ்கந்தம், அத்தியாயம் 9

சென்ற இதழில் விஸ்வரூபர் இந்திரனுக்கு விவரித்த நாராயண கவசத்தைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில் இந்திரன் விஸ்வரூபரைக் கொன்றதையும் விஸ்வரூபருடைய தந்தையின் யாகத்தினால் விருத்ராசுரன் தோன்றியதையும் அவனைக் கொல்வதற்காக தேவர்கள் மேற்கொண்ட பிரார்த்தனைகளையும் காணலாம்.

விஸ்வரூபர் கொல்லப்படுதல்

விஸ்வரூபரின் தந்தைவழி உறவினர்கள் தேவர்கள், தாய்வழி உறவினர்கள் அசுரர்கள். அவர் யாகம் செய்தபோது வெளிப்படையாக தேவர்களுக்காகவும் இரகசியமாக அசுரர்களுக்காகவும் யாகத் தீயில் நிவேதனம் அளித்தார். இதைப் புரிந்து கொண்ட இந்திரன் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில், கோபத்துடன் விஸ்வரூபரின் மூன்று தலைகளையும் வெட்டி வீழ்த்தினார்.

அந்த மூன்று தலைகளில், உணவு உண்ணும் தலை தித்திரிப் பறவையாகவும் சோம பானத்தைப் பருகும் தலை கௌதாரிப் பறவையாகவும் மதுபானத்தைப் பருகும் தலை சிட்டுக்குருவியாகவும் மாற்றப்பட்டன.

பாவம் பகிர்ந்தளிக்கப்படுதல்

ஒரு பிராமணரைக் கொன்றதற்கான பாவ விளைவுகளைக் கூப்பிய கரங்களுடன் ஏற்றுக் கொண்ட இந்திரன், ஓராண்டு காலம் துன்புற்றபின், தன்னைத் தூய்மைப்படுத்தும் பொருட்டு அப்பாவ விளைவுகளைப் பின்வருமாறு சமமாகப் பகிர்ந்தளித்தார்.

அவரது பாவ விளைவுகளில், நான்கில் ஒரு பகுதியை நிலம் ஏற்றுக் கொண்டதால், பாலைவனங்கள் தோன்றின. அதற்குக் கைம்மாறாக அதன் பள்ளங்கள் தானாகவே நிரப்பப்படும் என்ற வரத்தை இந்திரன் நிலத்திற்கு தந்தார்.

மற்றொரு பங்கை மரங்கள் ஏற்றதால், பருகுவதற்குத் தடை செய்யப்பட்ட ஒருவித திரவம் அவற்றிலிருந்து வழிகிறது. அதற்குக் கைம்மாறாக, மரங்களின் கிளைகளும் உப கிளைகளும் வெட்டப்பட்டால், அவை மீண்டும்மீண்டும் வளரும் என்ற வரத்தை இந்திரன் அளித்தார்.

மூன்றாவது பங்கை பெண்கள் ஏற்றதால், மாதவிடாய் உண்டாகிறது. அதற்குக் கைம்மாறாக அவர்களின் காம இச்சைகளை தடையின்றி தொடர்ந்து அனுபவிக்கலாம் என்று வரம் அளிக்கப்பட்டது.

பாவத்தின் நான்காவது பங்கினை நீர் ஏற்றதால், அதில் நுரையும் குமிழிகளும் உண்டாயின. பிற பொருளோடு நீர் கலந்தால், அவற்றின் அளவு அதிகரிக்கும் என்ற வரம் நீருக்கு அளிக்கப்பட்டது.

யாகத் தீயிலிருந்து விருத்ராசுரன் தோன்றுதல்

விருத்ராசுரன் தோற்றம்

தமது மகன் விஸ்வரூபர் கொல்லப்பட்டதால், துவஷ்டா, இந்திரனைக் கொல்லும் எண்ணத்தில் ஒரு யாகத்தைத் தொடங்கினார். ஆனால், உச்சரிப்பில் சிறு தவறு ஏற்பட்டதால், ‘இந்திரனின் எதிரி’ என்பதற்கு பதிலாக, ‘இந்திரனை எதிரியாகக் கொண்டவன்’ என்பதாக அர்த்தம் மாறியது. அதன் விளைவாக, அந்த விருத்ராசுரன் தோன்றினான். யாகத் தீயின் தென்பகுதியிலிருந்து கோரமான உருவத்துடன் தோன்றிய அந்த அசுரனின் உடல் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போனது. அவனது உடல் கருமை நிறமாக, மேகக் கூட்டங்களின் பளபளப்புடன் காணப்பட்டது. அவ்வுடலின் ரோமங்கள் உருக்கிய தாமிரம் போலவும், கண்கள் நடுப்பகல் சூரியக் கதிர்களைப் போலவும் இருந்தன.

அவன் ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள் அனைத்தையும் உறிஞ்சி விடுவதுபோலவும் முழு பிரபஞ்சத்தையும் விழுங்கி விடுவதுபோலவும் பயங்கரமாகத் தோற்றமளித்ததால், அனைவரும் பீதியுடன் சிதறியோடினர். அவன் தம் தவ வலிமையால் எல்லா கிரக அமைப்புகளையும் இருளால் மூடியதால் ‘விருத்ராசுரன்’ எனப் பெயர் பெற்றான்.

தேவர்களின் பிரார்த்தனைகள்

விருத்ராசுரனின் தோற்றத்தையும் பலத்தையும் கண்ட மாத்திரத்தில், தேவர்கள் தங்களது சொந்த பலத்தை இழந்தவர்களாக பரம புருஷ பகவான் நாராயணரை வழிபட்டு, அவரை திருப்திப்படுத்த முயன்றனர். அவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்தனர்:

“பிரம்மா முதலான பல்வேறு தேவர்களான நாங்கள் காலத்தின் ஆதிக்கத்திற்கு பயந்து எங்களது கடமைகளைச் சரிவர செய்து வருகிறோம். அந்த கால ஸ்வரூபமே பரம புருஷ பகவானைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது. அத்தகைய பகவானை நாங்கள் இப்போது வழிபடுவதாகட்டும்.

“பௌதிக எண்ணங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு தன்னில் பூரண திருப்தி பெற்றவரும், பௌதிகக் கடமைகள் ஏதும் இல்லாதவருமான பரம புருஷ பகவானே அனைவருக்கும் உண்மையான புகலிடமாவார். அவரைத் தவிர்த்து பிறரது பாதுகாப்பை நம்புபவர்கள் நாயின் வாலைப் பிடித்துக் கொண்டு கடலைக் கடக்க முயலும் மூடர்களே.

“மச்ச அவதார பகவான் துவஷ்டாவின் மகனால் விளைந்துள்ள பயங்கர ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாராக! பிரம்மதேவரைப் பிரளய நீரில் விழாமல் காப்பாற்றிய பகவான் இப்போது நம்மைக் காப்பாராக!

“பகவானின் கருணையால் படைக்கப்பட்டவர்

களாக இருந்தும், அவர் நம் முன் எப்போதும் இருந்தபோதிலும், நாம் நம்மை சுதந்திரமானவர்கள் என்றும், அவருக்கு சமமானவர்கள் என்றும் நினைப்பதால், நம்மால் அவரைக் காண முடிவதில்லை.

“பகவான் மச்ச, கூர்ம, வராஹ, நரசிம்ம, ராம மற்றும் கிருஷ்ணராகத் தோன்றி, அசுரர்களால் துன்பப்படும் தேவர்களான நம்மைக் காத்தார். அச்சம் தரும் இச்சூழ்நிலையில் நாம் அவரை சரணடைவோமாக!”

தேவர்களின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் ஸ்ரீ ஹரி அவர்கள் முன் தோன்றுதல்

பகவான் ஹரியின் புகழ்

தேவர்களின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் ஸ்ரீ ஹரி அவர்கள் முன் தோன்றினார். அவர் தமது நான்கு கரங்களில், சங்கு, சக்கரம், கதை, பத்மம் ஆகியவற்றை ஏந்தி தோன்றியபோது, அவரது பதினாறு அந்தரங்க சகாக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். அவரைக் கண்ட தேவர்கள் பெருமகிழ்ச்சியுடன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து பின்வருமாறு பிரார்த்தனைகளைச் செலுத்தினர்.

“அசுரர்களை அழிக்கும் சுதர்ஸன சக்கரத்தை ஏந்திய பகவானுக்கு எங்கள் பணிவான வணக்கங்கள். சிருஷ்டிக்கு முன்னும் பின்னும் இருப்பவரான பரம புருஷ பகவானை அவரால் சிருஷ்டிக்கப்பட்ட நாங்கள் முழுமையாக அறியோம். எப்போதும் அழிவுக்குட்படாத வைகுண்டத்தின் நாதரே, உங்களுக்கு எங்களின் பணிவான வணக்கங்கள்!

“நாராயணரே, வாசுதேவரே, ஆதி புருஷரே, மகா புருஷரே, மஹானுபாவரே, மங்கல மூர்த்தியே, பரம கல்யாண ஸ்வரூபியே, பரம கருணா மூர்த்தியே, அகில லோக நாயகரே, அச்யுதரே, அனந்தரே, கோவிந்தரே, மாதவரே, உங்கள் புகழைப் பரப்பும் பக்தர்களால் மட்டுமே உங்களை உணர்ந்தறிய இயலும். தங்களுக்கு எங்கள் பணிவான வணக்கங்கள்.

“எல்லா காரணங்களுக்கும் காரணமானவரே! இப்பிரபஞ்சத் தோற்றத்தைப் படைத்து, காத்து, அழிப்பவரே! தங்களது திவ்ய செயல்களை நாங்கள் புரிந்துகொள்வது கடினம்; ஏனெனில், நாங்கள் முக்குணங்களில் கட்டுண்டு இருப்பவர்கள்.

“சில சமயங்களில் மக்கள் உங்களை சாதாரண நபர் என்றும், பாவ புண்ணியத்திற்கும் இன்ப துன்பத்திற்கும் உட்பட்டவரென்றும் தவறாக நினைக்கின்றனர். உண்மை நிலையை தயவுசெய்து நீங்களே விளக்கியருள பணிவுடன் வேண்டுகிறோம்.

“நீங்கள் இரண்டற்ற ஒருவர்; உங்கள் சக்தியால் எதைவேண்டுமானாலும் உங்களால் செய்ய முடியும். பயத்தையும் பயமின்மையையும் தூண்டுபவர் நீரே, உங்களை சரணடைந்த பக்தர்கள் பயமின்றி வாழ்கின்றனர். அபக்தர்களோ ஒவ்வொரு கணமும் பயத்துடனே வாழ்கின்றனர்.

“நீங்களே பரம ஆளுநர்; எல்லா சக்திகளுக்கும் மூலம் நீரே. உங்களின் அனுமதியின்றி எதுவும் நிகழ்வதில்லை.”

பக்தர்களின் புகழ்

தேவர்கள் தொடர்ந்தனர்: “மதுசூதனரே! உங்களது மகிமைகள் என்ற கடலின் ஒரு துளி அமிர்தத்தை சுவைத்தவர்களின் மனம் உன்னத ஆனந்தத்தில் இடையறாது திளைக்கிறது. அதனால் அவர்கள் அற்பமான பௌதிக இன்பங்களை மறந்து விடுகின்றனர். இத்தகைய பக்தர்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பர்கள் என்பதால், அனைவரின் நன்மைக்காகவும் உங்கள் புகழை பிரச்சாரம் செய்கின்றனர்.

“பக்தர்கள் உங்கள் சேவைக்காக தங்களை முழுவதுமாக அர்ப்பணித்திருப்பதால், உன்னத ஆனந்தத்தையும் வாழ்க்கையின் உண்மையான இலட்சியத்தையும் அடைகிறார்கள். அவர்கள் உங்களின் திவ்யமான செயல்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பதால், உடலைவிட்ட பின்னர் மீண்டும் பௌதிக உலகிற்கு வரவேண்டிய அவசியமின்றி, உங்களின் நித்தியமான வைகுண்ட உலகிற்கே திரும்பி விடுகின்றனர்.”

தேவர்களின் வேண்டுதல்

தேவர்கள் தொடர்ந்து வேண்டினர்: “அசுரர்கள் சக்திமிக்கவர்களாகி இவ்வுலகிற்குத் துன்பம் விளைவிக்கும்போதெல்லாம் பரம புருஷ பகவானாகிய நீங்கள் பற்பல அவதாரங்களில் தோன்றி அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டி இருக்கிறீர்கள்.

“பகவான் வாமனராகத் தோன்றி மூவுலகையும் அளந்தீர்கள்! பகவான் நரசிம்மராகத் தோன்றி ஹிரண்யகசிபுவை அழித்தீர்கள்! பகவான் ஹயக்ரீவராகத் தோன்றி வேதங்களைத் திருடிய அசுரர்களிடமிருந்து அவற்றை மீட்டு பிரம்மதேவரிடம் ஒப்படைத்தீர்கள்! பகவான் இராமராகத் தோன்றி இராவணனை மாய்த்தீர்கள்! பகவான் கிருஷ்ணராகத் தோன்றி திரௌபதியின் மானம் காத்தீர்கள்!

“ஆகவே, தாங்கள் விரும்பினால் இப்போது இன்னொரு அவதாரமாகத் தோன்றி இந்த விருத்ராசுரனைக் கொல்ல வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

“பரம இரட்சகரே, பரம பிதாவே, பவித்திரமானவரே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே! உங்களது இதமான, இனிமையான அந்தப் புன்னகையாலும் உங்களது அழகிய திருமுகத்திலிருந்து வெளிப்படும் அமுத வார்த்தைகளுடன் கூடிய அன்பு ததும்பும் பார்வையாலும் இந்த விருத்ராசுரனால் எங்களது இதயத்தில் ஏற்படும் பெரும் கவலையிலிருந்து எங்களை விடுவித்தருளுங்கள்.

“அனைத்து உயிர்களுக்குள்ளும் பரமாத்மாவாக, பரம சாட்சியாக விளங்கும் பரம புருஷரே! உங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. பெருநெருப்பின் செயல்களை சிறு பொறிகள் செய்ய முடியாது. பரம புருஷ பகவானின் அம்சங்களாகிய நாங்கள் தேவர்களாக இருந்தாலும், சாதாரண ஜீவராசிகளே. நீங்களோ ஸர்வஜ்ஞ (எல்லாம் அறிந்த) நிலையில் இருப்பதால், எங்களின் நிலையையும் தேவையையும் நன்கு அறிவீர்கள். நீங்கள் பரம ஆன்மீக குரு என்பதால் உங்களின் பாத கமலங்களில் சரணடைந்து அறிவுரைக்காக காத்திருக்கிறோம்.”

பகவானின் அறிவுரை

தேவர்களின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் கருணையுடன் பின்வருமாறு கூறினார்: “பிரியமுள்ளவர்களே! உங்களிடம் திருப்தி

யடைந்தேன். ஒரு பக்தன் பூரண அறிவுடன் பிரார்த்தனை செய்தால், முழுமையாக திருப்தியடைகிறான். எனது உன்னத நிலையைப் பற்றிய ஞானமே பக்தித் தொண்டின் ஆரம்பமாகும். தூய பக்தன் பக்தித் தொண்டில் ஈடுபடும் வாய்ப்பைத் தவிர வேறெதையும் கேட்பதில்லை.”

“அறிவற்ற மூடர்கள் பௌதிகச் செல்வமே எல்லாம் என்றும், அதுவே வாழ்வின் முடிவான இலட்சியம் என்றும் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களது உண்மையான தேவை என்னவென்பதை அறிவதில்லை. ஆனால் தூய பக்தர்கள் பகவானாகிய எனக்குத் தொண்டு செய்வதே முடிவான இலட்சியம் என்பதை அறிந்திருப்பதால், பௌதிக சுகத்திற்கான பலன் கருதும் செயல்களில் ஈடுபடும்படி உபதேசிக்கவோ அதற்கு உதவுவதோ இல்லை.

“இந்திரனே! தவத்திலும் அறிவிலும் மிகவும் தேர்ந்த ததீசி முனிவரை அணுகி, அவரது வலிமையான உடலை நீங்கள் பெற வேண்டும். ஆன்மீக விஞ்ஞானத்தில் மிகவும் முன்னேறியவரான ததீசி முனிவர் அந்த ஞானத்தை அஸ்வினி குமாரர்களுக்கு அளித்தார். மேலும், நாராயண கவசத்தை உருவாக்கியவர் அவரே. அக்கவசம் துவஷ்டாவிடம் கொடுக்கப்பட்டு, அவரது மகனான விஸ்வரூபருக்கு அளிக்கப்பட்டு, அதன் பின்னர், விஸ்வரூபரால் உங்களுக்கு அளிக்கப்பட்டது. வெல்ல முடியாத அந்த நாராயண கவசத்தால் ததீசியின் உடல் வஜ்ரம்போல் ஆகியுள்ளது.”

“அவரது சீடர்களான அஸ்வினி குமாரர்கள் உங்களின் சார்பாக அவரிடம் அவ்வுடலை யாசித்தால், அன்பின் காரணமாக அவர் தனது உடலை நிச்சயம் கொடுப்பார். அவரது பலமிக்க எலும்புகளிலிருந்து, விஸ்வகர்மா ஒரு வஜ்ராயுதத்தை உருவாக்குவார். அஃது எனது சக்தியைக் கொண்டிருக்கும்; அது விருத்ராசுரனைக் கொல்வதற்கு உதவும். விருத்ராசுரன் மூவுலகையும் அழிக்கும் சக்தி பெற்றவனாக இருந்தும், எனது பக்தனாக இருப்பதால், உங்களிடம் பொறாமைகொள்ளவோ உங்களுக்குத் தீங்கிழைக்கவோ மாட்டான்.” இவ்வாறு இந்திரனுக்கு பகவான் அறிவுரை கூறினார்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives