—வர்ஷாணா ஸ்வாமியின் பேட்டியிலிருந்து, ஜுலை 1974,
நியூ விருந்தாவனம், மேற்கு வெர்ஜினியாவின் நினைவுகள்
பிரபுபாதர் தாலவனப் பகுதியில் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றார். அவர் மரங்கள் நிறைந்த பகுதியிலிருந்து வெளியேறி நிலப்பகுதியில் கால் வைத்தவுடன், அங்கேயே நின்றபடி பக்தர்களை உற்று நோக்கினார். அவரது பார்வையில் ஒரு பெரிய முக்கியமான கவலை தெரிந்தது. அவர் வினவினார், “ஏன் இந்த நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன? நமது ஆட்கள் ஏன் இந்த நிலத்தில் வேலை செய்யவில்லை, எருதுகள் எங்கே சென்றன?”
பிரபுபாதரின் அக்கூற்று எனக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. அச்சமயத்தில் நான் மட்டுமே அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்தேன். நான் பதில் ஏதும் கூறவில்லை. ஆயினும், விவசாய நிலத்தில் என்ன செய்யப்படுகிறது என்பதில் பிரபுபாதர் மிகவும் கவனமாக இருந்ததைப் பார்த்தபோது, அஃது என்னை மிகவும் கவர்ந்தது. அவர் விவசாய பண்பாட்டின் முக்கியத்துவத்தை முற்றிலுமாக அறிந்திருந்தார். விவசாயம் என்பது நம்முடைய உணவுத் தேவை, பொருளாதாரத் தேவை ஆகியவற்றிற்காக மட்டுமல்ல; மாறாக, நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் உறவு கொண்டு உதவி செய்து, நம்மைச் சுற்றியிருப்பவை ஒவ்வொன்றும் மற்றவற்றுடன் உறவு கொண்டு உதவி செய்து, அதன் மூலமாக இயற்கையின் பரிசுகளுடன் கிருஷ்ண சேவையில் வாழ்வதே விவசாயம் என்பதை அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.
நாம் அத்தகு மனப்பான்மையுடன் வாழ்ந்தால், அது நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றையும் பாராட்டத் தூண்டும், அப்போது ஒட்டுமொத்த உலகையும் பக்குவமாக ஏற்படுத்தியுள்ள படைப்பாளியை நிச்சயம் அதிகமாகப் பாராட்ட முடியும். மேலும், உணவினை வெறும் உணவாகக் காணாமல், நீரினை வெறும் நீராகக் காணாமல், அவற்றை இறைவனின் தொடர்பில் காண முடியும்.
ஸ்ரீல பிரபுபாதரின் கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் வெறும் கேள்வியை எழுப்பவில்லை. நியூ விருந்தாவன பக்தர்களுக்கு நிகழவுள்ள அபாயத்தினை அவரால் காண முடிந்தது. அவர் டிராக்டரை “காளையைக் கொல்பவன்” என்று வரையறுத்தார். நீங்கள் உங்களை நிலத்தையும் காளையையும் சார்ந்தவர்களாக அடையாளப்படுத்தாவிடில், அப்போது உங்களால் பசுக்களை இன்பமாக வைத்தபடி பசு பராமரிப்பில் ஈடுபட வாய்ப்பு இருக்காது. பசுக்களும் காளைகளும் தங்களது பங்களிப்பினை சமுதாயத்திற்கு வழங்கும்போது மட்டுமே, அவற்றால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
பிரபுபாதர் இவற்றைப் பற்றி பேசியபோது, அவர் எந்தளவிற்கு ஆன்மீக வாழ்வின் நுணுக்கங்களில் ஆழமாகச் செயல்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!