அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்து ஒரு வருடம் தங்கியிருந்தவரின் சில உணர்வுகள்
வழங்கியவர்: ஆனந்த தாஸ்
உண்மையான பண்பாடு என்றால் என்ன?
பண்பாடு என்றால் என்ன? தனிப்பட்ட நபர்கள் தங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எவ்வாறு சிந்திக்கிறார்கள், உணர்கிறார்கள், செயல்படுகிறார்கள், பேசுகிறார்கள் என்பனவற்றை தீர்மானிக்கும் சூட்சுமமான சக்தியே பண்பாடு எனப்படுகிறது; இது பெரும்பாலும் ஒரு நாட்டினரின் (அல்லது இனத்தவரின்) நம்பிக்கையையும் வாழ்வின் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது, அந்த நம்பிக்கை அவர்களுடைய அறிவையும் கல்வியையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, மக்களுடைய அறிவும் கல்வியும் அவர்களது பண்பாட்டை வடிவமைக்கின்றன என்றும், அஃது அவர்களுடைய நடத்தையில் வெளிப்படுகின்றது என்றும், அதுவே அவர்களின் இலக்கினைத் தீர்மானிக்கின்றது என்றும் முடிவு செய்யலாம்.
பாரதத்தில் நான் வாழ்ந்த ஒரு வருட காலத்தில், ஒருமுறை “இந்து தர்மத்தை” பாதுகாப்பதற்காக உற்சாகத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த மதிப்பிற்குரிய கனவான் ஒருவரிடம், “பாரத பண்பாட்டின் நோக்கம் என்ன?” என்று வினவினேன். அந்தக் கேள்வியே அவரை ஆச்சரியப்படுத்தியதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை கேள்விப்பட்டிராத அல்லது சிந்திக்காத ஒரு விஷயத்தைப் பற்றி விசாரிக்கப்பட்டதைப் போல, அவர் பதிலளிக்க வார்த்தைகளைத் தேடினார். பெரும்பாலான மக்கள் இப்படித்தான் வாழ்கின்றனர் என்பது வருந்தத்தக்க உண்மை.
மக்கள் குருடர்களால் வழிநடத்தப்படும் குருடர்களாக உள்ளனர். தங்களின் பண்பாடு தங்களை எங்கே கொண்டு சேர்க்கின்றது என்பதையோ அந்தப் பண்பாட்டின் நோக்கம் என்ன என்பதையோ மக்கள் அறியவில்லை. கிருஷ்ண உணர்வின் (பக்தியின்) பண்பாடே உண்மையான பண்பாடாகும். ஒவ்வொருவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதன் மூலமாக இந்த தற்காலிக, துன்பகரமான வாழ்விலிருந்து விடுபட்டு, இறைவனின் திருநாட்டை அடையச் செய்வதே பண்பாட்டின் இறுதி நோக்கமாகும். பண்பாட்டின் நோக்கம் குறித்த இந்த விளக்கத்தையும் என் வாழ்வின் அனுபவங்களையும் மனதில் கொண்டு, பாரத நாட்டில் என்னுடைய ஒரு வருட அனுபவங்களை சற்றே ஆராய விரும்புகிறேன்.
முதல் அபிப்பிராயம்
புராணங்களில் பாரத-வர்ஷம் என்று அறியப்படும் இந்தியாவைப் பற்றி நினைத்த மாத்திரத்தில், அதன் பரந்துபட்ட சுறுசுறுப்பான பண்பாட்டைப் பற்றி சிந்திக்காமல் இருக்க முடியாது: பல்வேறு புனித ஸ்தலங்கள், புனித நதிகள், சாதுக்கள், கோயில்கள், எல்லா இடங்களிலும் எழுதப்பட்டுள்ள கடவுள்கள் மற்றும் தேவர்களின் பெயர்கள், பேசப்படும் பல்வேறு மொழிகள், போலி குருக்கள் மற்றும் அவதாரங்களின் பிரச்சாரங்கள், பல்சுவை உணவுகள், சங்கீதம் மற்றும் செவிடாக்கும் சப்தங்கள், அச்சுறுத்தும் பொது போக்குவரத்து, கார்களின் தொடர்ந்த ஹாரன் சப்தம், அழகிய மலைத்தொடர்கள், நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையிலான பெரிய வேறுபாடு, ஆண்டு முழுதும் நிகழக்கூடிய தேர்தல் பிரச்சாரங்கள், கிரிக்கெட் ரசிகர்கள், தெருவில் சுற்றித் திரியும் பசுக்கள், நாய்கள் மற்றும் பூனைகள்—இதுவே ஒரு பெரிய அனுபவமாகத் தோன்றலாம். ஆனால், இவை உண்மையான பாரதத்தின் ஒரு சிறு துளியையே காட்டுகின்றன. அமெரிக்காவிலிருந்து பாரதம் வந்தவனுடைய முதல் அனுபவம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்தியா என்பது பல்வேறு நாடுகளைச் சேர்த்து ஒரே பெரிய நாடாக வைத்ததுபோல் தெரிந்தது. பார்ப்பதற்கு குழப்பம் நிறைந்த இடமாகத் தோன்றும் இந்த நாட்டில் எவ்வாறு எல்லாச் செயல்களும் கட்டமைப்புடன் செயல்படக்கூடும் என்பதுகுறித்து ஆச்சரியமாக இருந்தது. ஆயினும், உண்மையில் எல்லாச் செயல்களும் ஏதோ ஓர் ஒழுக்கத்துடன் சுறுசுறுப்பாக நிகழ்கின்றன. இதுவே வேற்றுமையில் ஒற்றுமை எனப்படுகிறது.
பண்பாடுகளின் மோதல்
பாரதம் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் தூண்டும் பூமியாக உள்ளது, ஐயமில்லை. இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, இவற்றிற்கு அடியில் பண்பாடுகளின் மோதல் என்னும் போர் தற்போது நிகழ்ந்து கொண்டுள்ளது. பொதுமக்களின் பார்வைக்குப் புலப்படாதவாறு, “முன்னேற்றம், நவீனமயமாக்கல்” என்னும் போர்வையில், மேற்கத்திய பண்பாட்டின் மிகப்பெரிய அலைகளால் சிதறடிக்கப்பட்டு, பாரத நாட்டின் எஞ்சியுள்ள மிச்ச சொச்ச பண்பாடும்கூட படிப்படியாக சிதைவுற்று வருகிறது. இந்த தற்காலிக, துன்பகரமான உலகத்தை அனுபவித்து விட வேண்டும் என்ற தாகத்தின் மாயை படிப்படியாக அதிகமாகி பெரும்பாலான மக்களைப் பீடித்துள்ளது. இருப்பினும், ஒரு மேற்கத்தியனின் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இந்த பாரத பூமியில் எஞ்சியுள்ள பாரம்பரியமும் பண்பாடும்கூட முழுமையானதாகவும் சிறப்பானதாகவும் தெரிகிறது. உபநிஷதங்கள், மஹாபாரதம், இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம் மற்றும் புராணங்களை இன்றும்கூட பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்து ரசித்து படிக்கின்றனர், இந்த ஞானக் களஞ்சியமே பாரத பண்பாடு இன்றும் நிலைத்து நிற்பதற்கு ஆதாரமாக உள்ளது. இந்த சாஸ்திர நம்பிக்கை மக்களிடம் இருக்கும் வரை, இந்தப் பண்பாடும் ஏதோ ஒரு தரத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும்.
சமீப கால வரலாற்றில், இஸ்கான் (ISKCON) எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சார்பாக இந்தியாவின் வேதப் பண்பாட்டிற்கு புத்துணர்ச்சியளிக்கும் பல்வேறு பணிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; பகவத் கீதை உண்மையுருவில் நூலிலுள்ள போதனைகளை மக்களிடையே பரப்பி, ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று பொது இடங்களில் கீர்த்தனம் செய்யும் இஸ்கான் இயக்கத்தினர், ஒருவன் தன் வாழ்வை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக முற்றிலும் அர்ப்பணிக்க வேண்டும் என்ற உணர்வை மீண்டும் பிரபலப்படுத்தி வருகின்றனர். இப்போது உற்சாகமிக்க பல இளைஞர்கள் நம்முடைய இஸ்கான் கோயில்களில் முழு நேர திருப்பணியில் இணைந்து, இந்தியாவின் முழுமையான ஆன்மீகப் பண்பாட்டை உயர்த்துவதற்கு முயல்கின்றனர்.
செய்ய வேண்டிய பணிகள் ஏராளம்
இந்த பாரத நாட்டில் பரவலாக இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கும் பௌதிகவாதத்தினைத் தடுப்பதற்காக நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. நம்முடைய மையங்களிலும் கோயில்களிலும் பண்ணைகளிலும் சேர்ந்து, நம்முடைய போதனைகளை உள்வாங்கி, அதனை மற்றவர்களுக்கும் கற்றுத்தரும்படியான பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் நமக்குத் தேவைப்படுகிறார்கள். மேற்கிலிருந்து வரும் விஷப் பண்பாட்டிலிருந்து நாமும் விடுபட்டு, பாரத நாட்டையும் அந்தப் பெரும் துயரிலிருந்து பாதுகாக்க வேண்டும்!
மேற்கத்திய பண்பாட்டினை இந்திய இளைய சமுதாயத்தின் மீது பரிசோதிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்கத்திய நாடுகளில் ஏற்கனவே பல்வேறு சமூகப் பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்டு விட்டன. அமெரிக்காவில் என்னுடைய பெரும்பாலான பள்ளித் தோழர்கள் பெற்றோர்களே இல்லாமல் அல்லது விவாகரத்து பெற்ற பெற்றோர்களுடன் வளர்ந்தனர்; அவர்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அதற்கான மருந்துகளுக்கு அடிமையாகியிருந்தனர், அல்லது வெறுமனே போதைக்கு அடிமையாகி இலக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இக்காட்சியை நான் அன்றாடம் கண்டுள்ளேன். அவர்களுடைய வாழ்க்கை பாரம்பரிய நெறிமுறைகளுக்கும், குரு, சாஸ்திரம் மற்றும் சாதுக்களின் வார்த்தைகளுக்கும் எதிராக உள்ளது.
முடிவுரை
பாரத வர்ஷம் மீண்டும் ஒருமுறை தனது முழு பெருமைகளை அடையும் என்பதில் நாம் நம்பிக்கை கொள்வோம். மேலும், ஸ்ரீல பிரபுபாதர் நமக்கு வலியுறுத்தியதைப் போல, கிருஷ்ண பக்தியை நாம் தீவிரமாக ஏற்றுக் கொண்டால், இவ்வுலகம் முழுவதும் நரக நிலைக்குச் சரிந்து கொண்டிருப்பதிலிருந்து காப்பாற்றப்படும். உலகம் முழுவதும் கிருஷ்ண பக்திப் பண்பாட்டைப் பரப்புவோம்! நமக்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வடிவமைத்துள்ள வர்ணாஷ்ரம தர்மத்தின் தூய்மையான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட பக்திப் பண்பாட்டை நாம் உருவாக்குவோம்.
பாரத வர்ஷமே! உன்னுடைய முன்னோர்கள் செய்ததுபோல், நீயும் இந்த உலகத்தை மறுபடியும் ஆன்மீகத்தில் வழிநடத்த வேண்டும். உண்மையில், இதுவே உன்னுடைய பண்பாட்டின் பிறப்புரிமை!
இக்கட்டுரை தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி அவர்களாலும், அவருடைய இந்திய இளைய சமுதாயமே எழுக எனும் புத்தகத்தினாலும் ஊக்குவிக்கப்பட்டது. இதுகுறித்த மேலும் விவரங்களைப் பெற, தயவுசெய்து தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் புத்தகங்களைப் படிக்கவும்.