சரஸ்வதி நதியும் ஆரிய ஆக்கிரமிப்பு கொள்கையும்

Must read

வழங்கியவர்: சக்ரபாணி தாஸ்

ஐரோப்பியர்கள் அகண்ட பாரதத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது, பண்டைய பெருமைமிகு பண்பாட்டினை அழிப்பதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமாக, மொழி, இனம், மதம் என மக்களை பல வழிகளில் பாகுபடுத்தினர். அத்தகு யுக்திகளில் முக்கியமான ஒன்று “ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை” (AIT – Aryan Invasion Theory).

“ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்தியாவை ஆக்கிரமித்தனர்” என்று கூறி, மக்களைத் தவறாக வழிநடத்தும் இந்த பொய்யான கொள்கையை பல்வேறு அறிஞர்கள் பல கோணங்களிலிருந்து முறியடித்துள்ள தருணத்தில், சரஸ்வதி நதி என்னும் பழங்கால நதியைக் கொண்டு அந்த ஆக்கிரமிப்பு கொள்கையினை முறியடிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு (ஐரோப்பியர்கள் பாரதம் வருவதற்கு முன்பு) இருந்திராத ஒரு பாகுபாட்டினை இக்கொள்கை மக்கள் மத்தியில் திணித்தது. இதனால் ஏற்படுத்தப்பட்ட ஆரிய-திராவிட பாகுபாடுகள் இன்றும் பெரும்பாலான மக்களை ஏமாற்றி வருகின்றன.

அந்த ஏமாற்று வேலையின் ஒரு முக்கிய கருத்து: “சரஸ்வதி நதி இந்தியாவைச் சார்ந்ததல்ல; சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்த ஆரியர்களின் தாய்நாடு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானாகும்; எனவே, ஆரியர்கள் அந்நியர்கள்.”

வாருங்கள், இந்தக் கட்டுக்கதையை முறியடிக்கலாம்.

சரஸ்வதி நதி எங்கே?

சரஸ்வதி இமயமலையில் தோன்றி தென்மேற்குப் பகுதியில் சுமார் 1,500 கிலோ மீட்டர் பயணித்து இன்றைய அரபிக் கடலில் கலக்கும் நதி என்பது இராமாயணம், மஹாபாரதம் முதலிய சரித்திரங்களில் தெளிவாகத் தெரிகிறது. ஆயினும், ரோம்னா தாபர் போன்ற பெயரளவு வரலாற்று அறிஞர்களோ, சரஸ்வதியை ஆப்கானிஸ்தானில் உள்ள ஹேல்மண்ட் நதியோடு ஒப்பிட்டனர். இதன் மூலம் சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்த ஆரியர்கள் இந்தியர்கள் அல்ல என்றும், அவர்களின் தாய்நாடு மத்திய ஆசியாவில் உள்ள ஈரான், ஆப்கானிஸ்தான் என்றும் உளறினர்.

ஆனால் சரஸ்வதி நதியைப் பற்றிய பல்வேறு குறிப்புகளை வழங்கும் புராதன தமிழ் மற்றும் சமஸ்கிருத நூல்களில், ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. உண்மையில், ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையை முறியடிக்க இதுவே போதுமானதாகும்.

பாரத தேசமே ஆரியர்களின் உண்மையான நிலம் என புராதன நூல்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ஆரிய வர்த்தா (ஆரியர்கள் நிலம்) என்பது ஏழு நதிகளின் நிலமாக அறியப்படுகிறது. அந்த ஏழு நதிகளில் ஒன்றுதான் சரஸ்வதி. சரஸ்வதி பலம் பொருந்திய மிகப்பெரிய நதி என்றும் கொந்தளிப்பான கர்ஜனையோடு கீழே வருகிறது என்றும் (ரிக் வேதம் VII 95-1), மற்ற துணை நதிகளோடு ஒப்பிடுகையில் சரஸ்வதி மிகவும் மேன்மையானது என்றும் (ரிக் வேதம் VII 61-3) தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வேதங்களுக்கு இயற்றப்பட்ட காலம் என்று எந்த வரம்பும் கிடையாது; இருப்பினும், நவீன கால அறிஞர்கள் ரிக் வேதத்தினை 5,000 வருடங்கள் பழமையானது என்று கூறுகின்றனர். அவர்களுடைய கூற்றின்படி பார்த்தாலே சரஸ்வதி நதியைப் பற்றிய குறிப்பு மிகமிக பழமையான ரிக் வேதத்தில் 68 முறை வருகிறதே. ரிக் வேதம் இந்தியாவைச் சார்ந்தது என்று கூறும் அறிஞர்கள், அதில் இத்தனை முறை இடம்பெறும் சரஸ்வதியை இந்தியாவிற்குத் தொடர்பில்லாத நதி என்று எவ்வாறு கூறிவிட இயலும்?

“சரி, சரஸ்வதி இந்திய நதி என்பதை ஏற்றால், அது தற்போது எங்கே?”—இது வழக்கமான வினா. “அத்தகைய மாபெரும் நதி இன்று காணாமல் போய்விட்டதா?” என்று சிலர் கிண்டல் அடிக்கலாம். ஆம், உண்மை அதுவே. சரஸ்வதி சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்படியாக வற்றத் தொடங்கி தற்போது காணாமல் போய் விட்டது. சரஸ்வதி பாரதத்தில்தான் இருந்தது என்பதற்கும் தற்போது காய்ந்து விட்டது என்பதற்கும் பல்வேறு இலக்கிய மற்றும் அறிவியல் சான்றுகளை நம்மால் வழங்க முடியும்.

இலக்கியச் சான்று: சரஸ்வதிக்கு வந்த சாபம்

சரஸ்வதி வற்றியதற்கு கங்கையின் சாபமே காரணம் என்று பிரம்ம வைவர்த புராணம் (6.17) கூறுகிறது. சாபங்களும் வரங்களும் வேத வரலாற்றின் முக்கிய அங்கமாயிற்றே. ஆயினும், சரஸ்வதி பெற்ற சாபம் முக்கியமான சாபமாகும். ஒருமுறை கங்கைக்கும் சரஸ்வதிக்கும் இடையே ஏற்பட்ட பூசலில் ஒருவரையொருவர் சபித்துக் கொண்டனர். சரஸ்வதியின் இருப்பே முடிய வேண்டும் என்று கங்கை சபித்தாள். இருப்பினும், நாராயணரின் கருணையால், சரஸ்வதி பூலோகத்தில் புண்ணியமான பாரத பூமியில் நதியாக இறங்கினாள். மேலும், யோகிகளும் முனிவர்களும் அவளது நதிக்கரையில் தவத்திலும் சடங்கிலும் ஈடுபடுவர் என்றும் நாராயணர் வரமளித்தார்; அதே சமயத்தில், யோகிகளும் முனிவர்களும் சரஸ்வதியின் கரையில் தொடர்ந்து வாழும் வரை மட்டுமே அவள் இந்த உலகத்தில் நதியாக இருப்பாள் என்றும், அதன் பின்னர் மறைந்து விடுவாள் என்றும் பகவான் கூறினார்.

அதன்படி, கலி யுகம் தோன்றிய சுமார் 1,000 வருடத்தில், நதிக்கரைகளில் நிகழ்ந்த தர்ம சடங்குகள் அனைத்தும் குறைந்ததால், சரஸ்வதி நதி படிப்படியாக வற்றி தற்போது ஏறக்குறைய முற்றிலும் காய்ந்து விட்டது.

சூரத்காரில் ரங்க மஹாலுக்கு அருகில் சரஸ்வதி நதி 8 கிலோ மீட்டர் அகலத்தில் இருந்ததாக தகவல் தெரிவித்த ஹேனா ரித்.

வரலாற்று அறிஞர்களின் சான்றுகள்

சரஸ்வதி நதி இந்தியாவில் பாய்ந்தோடிய மாபெரும் நதியே என்பதை பல்வேறு வரலாற்று அறிஞர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் கண்டறிந்துள்ளனர்.

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஹன்னா ரித்  (Hanna Rydh) என்பவரும் அவரது சக விஞ்ஞானிகளும் காய்ந்த சரஸ்வதியின் பாதை என்று ஒரு பகுதியை அடையாளம் கண்டு, அந்த நதியில் ஆழ்துளையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டு, சூரத்காரில் ரங்க மஹாலுக்கு அருகில் சரஸ்வதி நதி 8 கிலோ மீட்டர் அகலத்தில் இருந்ததாக தகவல் வெளியிட்டனர்.

அனெட் வில்கே (Annitte Wilke) என்ற ஆராய்ச்சியாளர் வரலாற்று சிறப்புமிக்க சரஸ்வதி நதி பாரதத்தில் இருந்தது நிச்சயம் என்று அறுதியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

பத்தாம் நூற்றாண்டு ஆராய்ச்சியாளரான அல்பெருனி (Al-Beruni) தமது இந்திய வருகையின்போது, சரஸ்வதி நதி இருந்ததை உறுதி செய்துள்ளார். சரஸ்வதி நதி சோம்நாத் கோயிலுக்குக் கிழக்கில் அம்பு விடும் தொலைவில் கடலில் கலக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சோம்நாத்தில் இன்றைய ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கும் உள்ளூர் சான்றுகளும் இதனை உறுதி செய்கின்றன. சோம்நாத்தில் சரஸ்வதி என்று உள்ளூர் மக்களால் அடையாளம் காணப்படும் நதி ஒன்று இன்றும் உள்ளது. அந்த நதி சோம்நாத் கோயிலிலிருந்து மூன்று மைல்களுக்குக் குறைவான தூரத்தில் காணப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டில் சோம்நாத் கோயிலுக்கு மிக அருகிலிருந்த சரஸ்வதி தற்போது குன்றிப்போய் மூன்று மைல் தொலைவிற்குச் சென்று விட்டது. காலநிலை, நீர்வளம் மற்றும் புவியியல் மாற்றக் காரணங்களே சரஸ்வதி நதிக்கான நீர்வளத்தை அழித்து விட்டது என்று தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் தெளிவாகத் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்தியாவின் மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மிகப்பெரிய பாலைவனப் பகுதி சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்டதாகவும், சரஸ்வதி நதி வற்றியதே அந்தப் பாலைவனம் உருவானதற்கான முக்கிய காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 4,000 வருடங்களுக்கு முன்பாக, தற்போதைய ராஜஸ்தான் பாலைவனப் பகுதிகளில் போதிய மழைப் பொழிவு இருந்ததாகவே தெரிகின்றது. குர்திப் (Gurdip) போன்ற ஆராய்ச்சியாளர்கள் இதனை ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சம்பார் ஏரியில் சேகரிக்கப்பட்ட மகரந்தங்களை ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.

[குறிப்பு: ராஜஸ்தானின் பாலைவனம் நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்துள்ளதை சாஸ்திரங்களில் காண்கிறோம். எனவே, அந்தப் பாலைவனம் முழுவதும் சரஸ்வதி நதி வற்றியதாலேயே உருவானது என்று நம்மால் கூறி விட இயலாது. அதே சமயத்தில், சாஸ்திரத்தையும் நவீன ஆய்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், சரஸ்வதி வற்றியதால் ஏற்கனவே சற்று தொலைவிலிருந்த பாலைவனப் பகுதி மிகப் பெரியதாக விரிவடைந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.]

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், புவியியல் வல்லுநர்கள், நில உருவாக்கவியல் வல்லுநர்கள், தொலை உணர்வு மக்கள் மற்றும் பல்வேறு இதர விஞ்ஞானிகளும் சரஸ்வதியைப் பற்றி ஆய்வு செய்து, அந்நதி பூமிக்கடியில் படிப்படியாகச் சென்று தற்போது இல்லாமலே போய் விட்டது என்னும் உண்மையைக் கண்டறிந்துள்ளனர்.

சரஸ்வதி நதி சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு வற்றியிருக்கலாம் என்பதால், சரஸ்வதி நதியைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட ரிக் வேதம், மஹாபாரதம் முதலிய வேத இலக்கியங்கள் யாவும் அந்தக் காலத்திற்கு முன்பாகவே இயற்றப்பட்டிருக்க வேண்டும். மைக்கேல் டானினோ என்ற ஆசிரியர் சரஸ்வதியைப் பற்றிய தமது நூலில், வேத சாஸ்திரங்கள் கி.மு. 3,000த்தில் இயற்றப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மொழியியல், வானவியல், மனித இனவியல் என பல ஆராய்ச்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

ஆரியர்கள் இடம்பெயர்ந்த வரலாறு

சிந்து சமவெளி நாகரிகம் சிறப்பான நகரங்கள், சுகாதாரம், நாணய அமைப்புகள், பீடங்கள், வழிபாட்டுத் தலங்கள் முதலியவற்றைக் கொண்டிருந்தது. சிந்து சமவெளி நாகரிகம் விட்டுச் சென்ற காலம் ஏறக்குறைய கி.மு. 2000ஆக இருக்கலாம் என தொல்லியல் சான்றுகள் பரிந்துரைக்கின்றன. சரஸ்வதி நதி காய்ந்த அந்த காலகட்டத்துடன் இது பொருந்துகின்றது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கு உட்பட்ட மக்கள் அனைவரும் சரஸ்வதி காய்ந்த காலகட்டத்தில், அங்கே நீர் இல்லாததாலும் பாலைவனம் அதிகரித்ததாலும் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர். ஹரப்பா நகர மக்கள் நீர் வளத்தை தேடி கிழக்கே சென்றனர். இவையனைத்தும் காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தவையே அன்றி ஆக்கிரமிப்பினால் அல்ல.

சரஸ்வதி காய்ந்ததன் விளைவாக, அங்கிருந்த மக்கள் கங்கை மற்றும் யமுனையின் சமவெளிகளுக்கு இடம்பெயர நேர்ந்தது. எனவே, வரலாற்றினை ஆய்வு செய்யும் அறிஞர்கள் பாரதத்தின் மேற்குப் பகுதியிலிருந்து (சரஸ்வதி கரையிலிருந்து) வடக்குப் பகுதிக்கு (கங்கை மற்றும் யமுனையின் கரைகளுக்கு) மக்கள் இடம்பெயர்ந்ததைக் காண்கின்றனர். இதனைச் சற்றே திரித்துக் கூற விரும்பும் அறிஞர்கள், “சரஸ்வதி ஆப்கானிஸ்தானில் இருந்தது. அங்கிருந்த ஆரியர்கள் பாரதத்திற்கு இடம் பெயர்ந்து ஆக்கிரமித்துக் கொண்டனர்,” என்று கருத்துரைக்
கின்றனர். இதில் சிறிதளவும் உண்மையில்லை.

ஏனெனில், ஆரியப் பண்பாடு என்று அறிஞர்களால் கூறப்படும் வேதப் பண்பாடு, சரஸ்வதி நதிக்கரையில் மட்டும் இருக்கவில்லை; மாறாக, கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, காவேரி என பாரதம் முழுவதும் பாய்ந்தோடிய பல்வேறு புனித நதிக்கரையில் அதே வேதப் பண்பாடு காணப்பட்டது. பன்நெடுங்காலத்திற்கு முன்பாக எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டிற்கும் (ஆரிய மொழியாகக் கருதப்படும்) சமஸ்கிருத இலக்கியங்களில் காணப்படும் பண்பாட்டிற்கும் குறிப்பிடத்தக்க வேற்றுமைகள் ஏதுமில்லை.

சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்த மக்கள் நிச்சயம் ஆரியர்களே. அதே ஆரியர்கள் கங்கைக் கரையிலும் வசித்தனர், யமுனைக் கரையிலும் வசித்தனர், காவேரிக் கரையிலும் வசித்தனர். எனவே, சரஸ்வதி வற்றிய பின்னர் அங்கிருந்து இடம்பெயர்ந்த ஆரியர்கள் பண்பாடு ரீதியாக வேறு எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கவில்லை. தனக்குச் சொந்தமில்லாத இடத்தை அபகரிப்பதே ஆக்கிரமிப்பு என்று கூற முடியும். ஆரியர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரு நிலப்பரப்பிலிருந்து தங்களுக்குச் சொந்தமான மற்றொரு நிலப்பரப்பிற்கு இடம்பெயர்ந்ததை “ஆக்கிரமிப்பு” என்று எவ்வாறு கூற முடியும்?

ஆரியர்களும் ஆரியப் பண்பாடும் பாரதம் முழுவதும் எங்கும் பரவியிருந்த ஒன்று. அதனை சரஸ்வதி நதிக்கரைக்கு மட்டும் உரிமை கொண்டாடுதல் மக்களைத் தவறாக திசைதிருப்புவதாகும். அதிலும், அந்த சரஸ்வதியை ஆப்கானிஸ்தானுக்கும் ஈரானுக்கும் சொந்தமானதாகக் கூறுதல் மடத்தனத்தின் உச்சகட்டமாகும்.

சோம்நாத்திற்கு அருகில் தற்போது காணப்படும் சரஸ்வதி நதி

காகர் நதி சரஸ்வதியா?

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இன்று காணப்படும் காகர் என்னும் நதி, மழைக் காலத்தின்போது இமயமலையில் தோன்றி பஞ்சாப், ஹரியானா மாநிலங்களின் வழியாக பாலைவனத்தினுள் செல்லும் பருவ கால ஆறாகத் திகழ்கிறது.

கிரிஸ்டியன் லாசென், மேக்ஸ் முல்லர், மார்க் ஆரல் ஸ்டெயின், C.F. ஹோல்தாம், ஜேன் மாக்கிண்டாஷ் ஆகியோர் சரஸ்வதி நதியே தற்போது வற்றிப்போய் மழைக்காலத்தில் மட்டும் தோன்றக்கூடிய காகர் நதியாக அறியப்படுவதாகக் கூறுகின்றனர். அதுபோலவே, அண்மை காலத்து தொல்லியல் மற்றும் புவியியல் வல்லுநர்களான ஃபிலிப், விர்தி, K.S. வால்தியா ஆகியோரும் சரஸ்வதி நதி தற்போதைய காகர் நதியுடன் சேர்ந்தது என்று கண்டறிந்துள்ளனர்.

பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்த யோகி நிதன்தரா (5.42) என்னும் தாந்திரீக நூல் பின்வருமாறு கூறுகிறது: “புள்ளிங்கம் என்ற இடத்தில் மோனி மலை எனப்படும் மதுர மலையில் சிவாலயம் ஒன்று உள்ளது. அந்த மலையைச் சுற்றி மாலை வடிவில் சரஸ்வதி நதி பாய்கிறது.” தற்போது அந்த மலையைச் சுற்றி காகர் நதி பாய்கின்றது. எனவே, அந்நூல் இயற்றப்பட்டபோது சரஸ்வதி நதி இருந்தது என்பதும், அதுவே தற்போது காகர் நதியாக அறியப்படுகிறது என்பதும் நிரூபிக்கப்படுகின்றது.

ஒரு சிலர் காகர் நதியினை சரஸ்வதியின் கிளை நதி என்றும் கூறுகின்றனர். எப்படிப் பார்த்தாலும், இந்தச் சான்றுகள் அனைத்தும் சரஸ்வதி நதி பாரதத்திற்குச் சொந்தமான நதியே என்பதையும், பல்வேறு காரணங்களால் காய்ந்து விட்டது என்பதையும் நிரூபிக்கின்றன.

மழைக் காலத்தின்போது இமயமலையில் தோன்றி பஞ்சாப், அரியானா வழியாகச் செல்லும் காகர் நதியின் தோற்றம்.

முடிவுரை

ஆரியர்களின் தாய்நாடு பாரதமே, ஆரியர்கள் நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து இங்குதான் வாழ்ந்து வருகின்றனர், ஆரியர்கள் பாரதத்தை ஆக்கிரமிப்பின் மூலம் அடையவில்லை ஆகிய முடிவுகளை இக்கட்டுரையிலிருந்து நாம் தெளிவாக அறியலாம்.

பாரதப் பண்பாட்டிற்கு சரஸ்வதி நதியின் தொண்டு அளப்பரியதாக இருக்கையில், சரஸ்வதியின் கரையில் வாழ்ந்த ஆரியர்களை அந்நியர்கள் என்று மனசாட்சியின்றி கூறுதல் தகுமா? சரஸ்வதியின் மீதான சாபம் ஆரியர்களை கிழக்குப் பகுதிக்கு இடம்பெயர வைத்து, இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய காரணத்தினால், அறிஞர்கள் சிலர் ஆரியர்களை அன்னியர்களாகக் கூறி ஆரிய எதிர்ப்பு கொள்கையுடன் வாழ்கின்றனர். ஆயினும் அத்தகு எதிர்ப்பு உண்மையல்ல என்பதை உணர்ந்து இனப் பாகுபாடுகளிலிருந்து விடுபடுவோமாக.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives