வழங்கியவர்: ஸர்வபௌம தாஸ்
டைக்கப்பட்ட உயிர்வாழிகளில் முதலானவரான பிரம்மதேவரின் மகனான ஸ்ரீ நாரத முனிவர் பன்னிரண்டு மஹாஜனங்களில் (அதிகாரம் பொருந்திய நபர்களில்) ஒருவராவார். அந்த நாரதரின் போதனைகளை குரு சீட பரம்பரையில் பெற்று தம் புத்தகங்களின் மூலமாக இலட்சோப லட்சம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர். குரு சீட பரம்பரையில் வரும் ஆன்மீக குருவானவர் நாரத முனிவரின் பிரதிநிதி என்றும், அவருடைய போதனைகளுக்கும் நாரதரின் போதனைகளுக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது என்றும் ஸ்ரீல பிரபுபாதர் தமது பாகவத விளக்கவுரையில் (6.5.22) கூறியுள்ளார். நாம் எந்த அளவிற்கு நாரத முனிவரைப் பற்றியும் அவரது சேவகரான ஸ்ரீல பிரபுபாதரைப் பற்றியும் கேட்கின்றோமோ, அந்த அளவிற்கு இவர்கள் இருவரின் உபதேசங்களிலும் செயல்களிலும் இருக்கக்கூடிய ஒற்றுமையினைக் காணலாம்.
பரவலாக பயணம் செய்த பிரச்சாரகர்கள்
ஸ்ரீமத் பாகவதத்திற்கான ஆறாவது ஸ்கந்தத்தின் விளக்கவுரையில் ஸ்ரீல பிரபுபாதர் தமக்கும் நாரதருக்கும் இடையிலான ஒற்றுமையைக் குறிப்பிட்டுள்ளார். பிரஜாபதி தக்ஷனின் 10,000 மகன்களுக்கும் பிரச்சாரம் செய்து நாரதர் அவர்களை துறவறம் மேற்கொள்ள வைத்தபோது, தக்ஷன் கோபமுற்று நாரதரை சபித்தார்: “நீ ஒரு மூடன், மற்றவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை அறியாதவன். உன்னால் பிரபஞ்சமெங்கும் செல்ல முடிந்தாலும், எங்குமே உனக்கென்று ஒரு தங்குமிடம் இருக்காது.”
ஸ்ரீல பிரபுபாதர் இதற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்: “உண்மையில் இந்த சாபம் பிரச்சாரகர்களுக்கு ஒரு வரமாகும். பிரச்சாரகர்கள் பரிவ்ராஜகாசாரியர்கள் என்று அறியப்படுகின்றனர். இவர்கள் ஆச்சாரியர்களாக, மனித குல நன்மைக்காக எப்போதும் எங்கும் பயணித்துக் கொண்டே இருப்பர். நாரதருக்கு வழங்கப்பட்ட சாபத்தை அவரிடமிருந்து வரும் இந்த குரு சீட பரம்பரையின் வாயிலாக நானும் பெற்றுள்ளேன். நான் தங்குவதற்கென எத்தனையோ இடங்கள் (கோயில்கள்) இருந்தாலும், என் சீடர்களது பெற்றோரின் சாபத்தினால் நான் எங்கும் நீண்ட காலம் தங்குவதில்லை. இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை ஆரம்பித்த பின்னர், வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை உலகத்தைச் சுற்றி வருகின்றேன். செல்லும் இடங்களில் தங்குவதற்கு நல்ல அறைகள் கிடைத்தாலும், மூன்று நாள் அல்லது ஒரு வாரத்திற்கு மேலாக தங்குவது கிடையாது.”
நாரதருக்கும் பிரபுபாதருக்கும் இடையிலான ஒற்றுமை சாபத்திலும் இருக்கிறது.
கேட்டலில் விருப்பம் கொண்டவர்கள்
ஆன்மீக குருவிடமிருந்து கேட்டலே ஆன்மீக வாழ்வில் இன்றியமையாதது. இதனை நாம் நாரத முனிவரின் வாழ்விலும் ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்விலும் காணலாம்.
நாரத முனிவர் ஒரு வேலைக்காரியின் பிள்ளையாக இருந்தபோது, உயர்ந்த பக்தர்களுக்கு பணிவிடை செய்ததன் மூலமாக அந்த பக்தர்களின் ஆன்மீக வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொண்டார். கிருஷ்ணருடைய செயல்களைப் பற்றிய அவர்களின் வர்ணனைகளை கவனத்துடன் கேட்டதிலிருந்து தமக்கு பரம புருஷ பகவானைப் பற்றிக் கேட்பதில் விருப்பம் அதிகமானது என்று நாரதர் கூறியுள்ளார்.
1933இல் ஸ்ரீல பிரபுபாதருக்கு தீக்ஷை வழங்கும் முன்பாக, அவரது ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவரை கவனித்து கூறினார்: “இவர் கேட்பதில் ஆர்வமுடையவர், நான் இவரை கவனித்துள்ளேன், சீடராக ஏற்றுக்கொள்கிறேன்.” குருவின் உபதேசங்களையும் முந்தைய ஆச்சாரியர்களின் உபதேசங்களையும் நம்பிக்கையுடன் கேட்டதாலும் அதனை அப்படியே உபதேசித்ததாலும், ஸ்ரீல பிரபுபாதர் கிருஷ்ண உணர்வை உலகெங்கிலும் பிரச்சாரம் செய்வதில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.
சாஸ்திரங்களை வழங்கியவர்கள்
ஸ்ரீ நாரத முனிவரும் ஸ்ரீல பிரபுபாதரும், பரம புருஷ பகவானைப் பற்றிய திவ்யமான நூல்களை எழுதியும் விநியோகித்தும் உன்னதமான சேவைகளைச் செய்துள்ளனர்.
ஸ்ரீமத் பாகவதத்தில் (1.5.11) நாரதர் வேத இலக்கியங்களைத் தொகுத்தவரான வியாஸருக்கு உபதேசிக்கின்றார்: “பரம புருஷ பகவானின் நாமம், ரூபம், குணம் மற்றும் லீலைகள் அடங்கிய இலக்கியங்கள் முற்றிலும் ஆன்மீக வார்த்தைகளால் நிரம்பியவை. இவை தவறான கலாச்சாரத்தினால் வழி தவறிய மக்களிடத்தில் புரட்சியைக் கொண்டு வரும்.” நாரதருடைய அறிவுரையின் பெயரிலேயே ஸ்ரீமத் பாகவதம் என்னும் அற்புத சாஸ்திரத்தை வியாஸதேவர் தொகுத்து வழங்கினார்.
நாரதர் பத்ம புராணத்தில் பக்தி தேவியிடம் பின்வருமாறு சத்தியம் அளிக்கின்றார்: “இந்த கலி யுகத்தில், நீங்கள் ஒவ்வோர் இல்லத்திலும் பிரதிஷ்டை செய்யப்படுவீர், எல்லாரின் இதயத்திலும் குடியமர்த்தப்படுவீர்; எனவே, இக்கலி யுகத்திற்கு இணையாக வேறெந்த யுகமும் கிடையாது. மேலும் குமாரர்கள் நாரதரிடம் பக்தியின் மகோன்னத தன்மையைப் பற்றிக் கூறுகின்றனர்: “எவ்வாறு சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்ட மாத்திரத்தில் நரிகள் அச்சத்தினால் ஓடிவிடுமோ, அதுபோன்று ஸ்ரீமத் பாகவதத்தினுடைய சப்தத்தின் மூலமாக இக்கலி யுகத்தின் கொடூரமான தன்மைகள் அழிக்கப்படும்.”
கலி யுகத்திற்கான பிரத்யேக மருந்தினை சைதன்ய மங்கலத்தில் பிரம்மதேவர் நாரதரிடம் கூறுகிறார்: “நாரதரே, ஸ்ரீமத் பாகவதத்திற்கு இணையான புராணம் கிடையாது. இது முற்றிலும் ஆன்மீகமயமானது. எனவே, மக்களின் விடுதலைக்காக நீங்கள் அதனை பிரச்சாரம் செய்ய வேண்டும்.”
எனவேதான், ஸ்ரீல பிரபுபாதரும் ஸ்ரீமத் பாகவதம் வெளிவர வேண்டும் என்று அரும்பாடுபட்டார். எந்த நூலினை கட்டுண்ட மக்களின் தூய்மைக்காக எழுதும்படி வியாஸரிடம் நாரதர் கூறினாரோ, அந்த நூலே நரி போன்ற கலி யுகத்தின் தீமைகளை ஒடுக்குவதற்கு ஸ்ரீல பிரபுபாதரின் தலைசிறந்த போர்க்கருவியாகத் திகழ்ந்தது. இஃது எதேச்சையாக நடந்ததல்ல. பாகவதத்தின் மூலமாக பக்தி தேவி உலகெங்கும் செல்வாள் என்பது பத்ம புராணத்திலேயே கூறப்பட்டுள்ளது. அங்கே பக்திதேவி நாரதரிடம் கூறுகிறாள்: இதம் ஸ்தானம் பரித்யஜ்ய விதேஷம் கம்யதே மயா, “நான் இவ்விடத்திலிருந்து (விருந்தாவனத்திலிருந்து) உலகெங்கும் கொண்டு செல்லப்படுவேன்.”
பாகவதத்திற்கு மொழிபெயர்ப்பும் விளக்கவுரையும் எழுதிய ஸ்ரீல பிரபுபாதர், கிருஷ்ணரின் தெய்வீக திருத்தலமான விருந்தாவனத்தினை விட்டு, அந்த ஸ்ரீமத் பாகவதத்துடன் ஜலதூதா என்னும் சரக்குக் கப்பலின் மூலமாக அமெரிக்காவிற்குச் சென்று கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவினார். மேலும், ஸ்ரீல பிரபுபாதர் தமது வாழ்நாளில் எண்ணற்ற இதர நூல்களையும் எழுதி ஆன்மீகப் புரட்சிக்கு வழிவகுத்தார்.
நாரத பஞ்சராத்திரம், நாரத பக்தி சூத்திரம் ஆகிய நூல்களை நாரதர் வழங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, பக்தித் தொண்டு சம்பந்தமான நாரதரின் பல்வேறு உபதேசங்கள் எண்ணற்ற இதர புராணங்களில் கொட்டிக் கிடக்கின்றன. நாரத பக்தி சூத்திரத்தினை ஆன்மீக அழிவினை சந்தித்துக் கொண்டுள்ள தற்போதைய மக்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி என்று ஸ்ரீல பிரபுபாதர் குறிப்பிட்டுள்ளார்.
நாரதரும் அவரது வழிவந்த ஸ்ரீல பிரபுபாதரும் எல்லா விதமான மக்களும் ஆன்மீகத்தில் படிப்படியாக முன்னேற வேண்டும் என்று விரும்பினர். வைஷ்ணவ இலக்கியங்களில் ஸ்ரீ நாரத முனிவரின் பங்களிப்பு இல்லையெனில், வேதங்களின் இறுதியான முடிவை நாம் அடைவது மிகவும் சிரமமாக அமைந்திருக்கும். அதுபோலவே, ஸ்ரீல பிரபுபாதருடைய நூல்கள் என்னும் பங்களிப்பும் அதன் பரவலான விநியோகமும் இல்லையெனில், உலகெங்கிலும் உள்ள மனித குலத்திற்கு அது பேரிழப்பாக இருந்திருக்கும்.
திருநாமங்களைப் பரப்பியவர்கள்
எங்கும் பயணிப்பவராகவும் தமது தெய்வீக வீணையில் பகவானுடைய திருநாமங்களை உச்சரிப்பவராகவும் புராணங்கள் முழுவதிலும் நாரதரைக் காண்கின்றோம். நாரதரைப் போலவே ஸ்ரீல பிரபுபாதரும் உலகம் முழுவதும் பயணம் செய்து பகவானின் திருநாமத்தை தாமும் உச்சரித்து மற்றவர்களையும் உச்சரிக்கச் செய்தார். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா என உலகின் மூலை முடுக்கிலுள்ள மக்களுக்கும் ஸ்ரீல பிரபுபாதர் பகவானுடைய திருநாமங்களை வழங்கினார்.
நாரதர் பகவானுடைய நாமத்தைப் பரப்புவதில் எவ்வாறு தமது சீடர்களை ஈடுபடுத்தினாரோ, அவ்வாறே ஸ்ரீல பிரபுபாதரும் தமது சீடர்களுக்கு சக்தியளித்து அவர்களை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்து கிருஷ்ண நாமத்தைப் பரவச் செய்தார்.
கட்டுண்ட மக்களை விடுவிப்பவர்கள்
கொடூர வேடனான மிருகாரியை உன்னத பக்தனாக மாற்றி நாரதர் பெருமை பெற்றதைப் போலவே, ஸ்ரீல பிரபுபாதரும் நிலைதவறிய ஹிப்பிகளை பொலிவு பெற்ற பக்தர்களாக மாற்றியதன் மூலம் புகழ் பெற்றார்.
போதையில் நிர்வாணமாக இருந்த நளக்கூவரன், மணிக்ரீவன் என்னும் சகோதரர்களுக்கு நாரதர் கருணை வழங்கியதைப் போலவே, LSD (போதை மருந்து) எடுத்துக் கொண்டு அரைகுறை நிர்வாணத்துடன் வாழ்ந்துவந்த ஹிப்பிகளுக்கும் கிருஷ்ணரின் கருணையை பிரபுபாதர் பெற்றுத் தந்தார்.
பாதுகாப்பற்ற கயாதுவிற்கு (ஹிரண்யகசிபுவின் மனைவிக்கு) கருணையளித்து தம்முடைய ஆஷ்ரமத்தில் நாரதர் எவ்வாறு தங்க வைத்து பக்தி நெறிகளை உபதேசித்தாரோ, அவ்வாறே ஸ்ரீல பிரபுபாதரும் பாதுகாப்பற்ற அமெரிக்க பெண்களுக்கு இடமளித்து தம்முடைய சீடர்களாக ஏற்று பக்தியைக் கற்றுக் கொடுத்தார்.
விக்ரஹ வழிபாட்டை அருளியவர்கள்
நாரத பஞ்சராத்திரத்தின் மூலமாக நாரதர் விக்ரஹ வழிபாட்டிற்கான முறைகளை—குறிப்பாக கலி யுகத்திற்கு—அருளினார். ஸ்ரீல பிரபுபாதரும் நாரதருடைய புத்தகத்தின் அடிப்படையில் உலகெங்கிலும் கோயில்களை நிறுவி விக்ரஹ வழிபாட்டினை ஆரம்பித்தார்.
பக்தியின் கருத்துகளை உலகெங்கும் பிரச்சாரம் செய்து மற்றெல்லா வழிமுறைகளைக் காட்டிலும் பக்தி விழாக்களை முக்கியமானதாக மாற்றுவேன் என்றும், அவ்வாறு செய்யாவிடில் தம்மை கிருஷ்ணரின் தொண்டனாகக் கருத இயலாதே என்றும் நாரதர் பத்ம புராணத்தில் பக்தி தேவியிடம் கூறுகிறார். ஸ்ரீல பிரபுபாதரின் செயல்கள் நாரதரின் அக்கூற்றுகளை ஒத்துள்ளன. பிரபுபாதர் உலகளவில் மிகப்பெரிய ரத யாத்திரைகளை நிகழ்த்தி, நிலைதவறிய மக்களும் கிருஷ்ணரை—ஜகந்நாதரின் உருவில்—காண்பதற்கு வழிவகுத்தார். இவ்வாறாக, “பக்தி விழாக்கள் உலகினை ஆளும்” என்னும் நாரதரின் உறுதிமொழிக்கு ஸ்ரீல பிரபுபாதர் உதவினார்.
ஸ்ரீல பிரபுபாதருடைய பக்தியின் விளைவாக, பகவானின் அழகிய விக்ரஹங்கள் உலகெங்கிலும் உள்ள இஸ்கான் கோயில்களில் அருள்பாலிக்கின்றனர்.
ஜட வஸ்துக்களைத் துறந்தவர்கள்
நாரதர் ஒரு துறவி, ஸ்ரீல பிரபுபாதரும் ஒரு துறவி; ஆயினும், இவர்கள் இருவருமே சாதாரண துறவிகளைப் போன்று வாழாமல், பெரிய அரசர்களையும் தலைவர்களையும் சந்தித்து, அவர்கள் தங்களது பற்றுதல்களைத் துறந்து பரம புருஷ பகவானிடம் சரணடையச் செய்வதில் புகழ் வாய்ந்தவர்களாக இருந்தனர்.
கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் ஸ்ரீல பிரபுபாதர் அவற்றின் மீது துளியும் பற்றுதலின்றி, அவையனைத்தும் கிருஷ்ணரின் சொத்து என்பதை உணர்ந்து, அவற்றை கிருஷ்ண சேவையில் ஈடுபடுத்தினார்.
காலத்திற்கு மேலாக
புராணங்களில் பல்வேறு இடங்களில், நாரதர் சரியான தருணத்தில் வந்து புண்ணிய ஆத்மாக்களுக்கு பக்குவமான விவரங்களை வழங்குவதைக் காணலாம்.
சில நேரங்களில் ஸ்ரீல பிரபுபாதரின் பிரச்சார வெற்றியைப் பற்றி சிலர் கூறுகையில், மேற்கத்திய இளைஞர்கள் பலர் நவீன கால ஜட வாழ்விற்கு மாற்றாக ஒன்றினைத் தேடிக் கொண்டிருந்த சரியான தருணத்தில் பிரபுபாதர் வந்தார் என்பர்.
அதே சமயத்தில், ஸ்ரீல பிரபுபாதரின் ஆச்சரியமான வெற்றி எல்லாச் சூழ்நிலைகளுக்கும் அப்பாற்பட்டது என்று பிரபுபாத லீலாம்ருதத்தில் ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். விமானங்களின் கண்டுபிடிப்பு, சந்தர்ப்ப சூழ்நிலை, அதிர்ஷ்டம், சமூக காரணம், அல்லது வரலாற்று காரணங்களால் ஸ்ரீல பிரபுபாதர் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் வேத கலாச்சாரத்தினைப் பரப்பவில்லை. இவை முற்றிலும் கிருஷ்ணரின் விருப்பத்தினால் நிகழ்ந்தவை, அவருடைய தலைசிறந்த சேவகரின் ஈடுபாட்டினால் நிகழ்ந்தவை.
கிருஷ்ண-ஷக்தி வினா நஹே தார ப்ரவர்த்தன, கிருஷ்ணரால் சக்தியளிக்கப்படாவிட்டால் ஒருவரால் ஸங்கீர்த்தன இயக்கத்தினைப் பரப்ப இயலாது என்று ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் கூறுகிறது. எனவே, நாரதரும் பிரபுபாதரும் கிருஷ்ண சக்தியைப் பெற்றே கிருஷ்ண உணர்வினைப் பரப்பினர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
நாரதருக்கு பிரியமானவர்
பிரபுபாதர் அவர்கள் நாரதரின் தலைசிறந்த சேவகராவார். உலகெங்கிலும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினைப் பரப்பியது, கிருஷ்ணரைப் பற்றிய இலட்சக்கணக்கான புத்தகங்களை பல்வேறு மொழிகளில் விநியோகித்தது, கோடிக்கணக்கான மக்களுக்கு கிருஷ்ண பிரசாதம் வழங்கியது, உலகின் பெரு நகரங்களில் முக்கியமான தேர் திருவிழாவினை நிகழ்த்தியது, கலி யுகத்தின் வீழ்ச்சியுற்ற மக்களை ஆயிரக்கணக்கில் கிருஷ்ண பக்தர்களாக மாற்றியது என பல வழிமுறையில் பிரபுபாதர், நாரதர் மற்றும் தம்முடைய ஆன்மீக குருவின் நெருங்கிய சேவகனாகச் செயல்பட்டார்.
1966இல் நியுயார்க் மாநகரிலிருந்த பக்தர்கள் மிகுந்த செலவு செய்து அரங்கம் ஒன்றினை வாடகைக்கு எடுத்து பிரபுபாதருக்காக விசேஷ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பல பெரிய மனிதர்கள் வருவர் என எதிர்பார்த்தனர். ஆனால் நிகழ்ச்சிக்கு ஏழு நபர்கள் மட்டுமே வந்திருந்தனர். அதனால் ஸ்ரீல பிரபுபாதரின் சீடர் ஒருவர் பிரபுபாதரிடம் மன்னிப்பு கோரினார். ஏறக்குறைய எவருமே வரவில்லை என அவர் குறிப்பிட்டபோது, பிரபுபாதர் ஆச்சரியத்துடன் தமது புருவங்களை உயர்த்தி, “எவரும் இல்லையா? நீங்கள் நாரதரைக் காணவில்லையா?” என வினவினார்.
பிரபுபாதர் எந்த அளவிற்கு நாரதருக்கு பிரியமானவர் என்பதை சிந்திப்போம்.