வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்
ஸ்ரீ பகவான் உவாச
மய்யாஸக்த-மனா: பார்த
யோகம் யுஞ்ஜன் மத்-ஆஷ்ரய:
அஸம்ஷயம் ஸமக்ரம் மாம்
யதா ஜ்ஞாஸ்யஸி தச் ச்ருணு
“பிருதாவின் மகனே, என்னிடம் பற்றுதல் கொண்ட மனதுடன், என்னைப் பற்றிய முழு உணர்வில், யோகத்தைப் பயில்வதன் மூலம் என்னை நீ எவ்வாறு சந்தேகம் ஏதுமின்றி முழுமையாக அறிந்துகொள்ளலாம் என்பதை இனி கேட்பாயாக.” (பகவத் கீதை 7.1)
இங்கு கிருஷ்ணர் யோகத்தைப் பற்றிப் பேசுகிறார். ஆத்மாவிற்கும் பரமாத்மாவிற்கும் இடையிலான தொடர்பு யோகம் எனப்படுகிறது. யோகேஷ்வரர் என்பது கிருஷ்ணருடைய திருநாமங்களில் ஒன்றாகும். யோகேஷ்வரர் என்றால், “அனைத்து யோக முறைகளின் தலைவர்” என்று பொருள். அதாவது, யோகத்தின் இறுதி நோக்கம் கிருஷ்ணரே.
கிருஷ்ணரிடம் பற்றுதல்
பல்வேறு யோக முறைகளுக்கு ஏற்ப பல வகையான யோகிகள் உள்ளனர். யோகம் என்பது செயல் முறையைக் குறிக்கிறது. யோக முறையைப் பயிற்சி செய்பவன் யோகி எனப்படுகிறான். யோகத்தின் நோக்கம் கிருஷ்ணரை அறிவதே என்பதால், கிருஷ்ண உணர்வே மிகவுயர்ந்த யோக முறையாகும். இந்த யோக முறையை பகவான் கிருஷ்ணர் தமது நெருங்கிய நண்பனான அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.
கிருஷ்ணர் தமது விளக்கத்தின் ஆரம்பத்தில் கூறுகிறார், “என்னிடம் பற்றுதல் கொண்ட நபரால் இந்த யோக முறையைப் பயிற்சி செய்ய முடியும்.” எனவே, கிருஷ்ணரிடம் பற்றில்லாத சாதாரண மனிதனால் இந்த மிகவுயர்ந்த யோக முறையைப் பயில இயலாது என்பது தெளிவாகிறது. கிருஷ்ணரிடம் பற்றுதல் இல்லாத யோகி வேறு விதமான யோக முறையைப் பயில்கிறான்.
பகவானின் மீதான பற்றுதல்
கிருஷ்ணரின் மீதான பற்றுதலானது ஆஸக்தி எனப்படுகிறது. கிருஷ்ணரிடம் அனுகூலமான முறையில் நேரடியாக மேற்கொள்ளப்படும் பற்றுதல் பக்தி எனப்படுகிறது. அனுகூலமற்ற முறையில் கிருஷ்ணரிடம் மேற்கொள்ளப்படும் பற்றுதல் பக்தி அல்ல. இருப்பினும், அதுவும் ஒருவகையான பற்றுதலே. உதாரணமாக, கிருஷ்ணரின் தாய் மாமன் கம்சன் கிருஷ்ணரிடம் அனுகூலமற்ற பற்றுதலைக் கொண்டிருந்தான். தனது சகோதரியின் எட்டாவது மகனால் கொல்லப்படுவோம் என்பதை முன்கூட்டியே அறிந்ததால் மிகவும் கவலையுற்ற கம்சன், உடனடியாகத் தனது சகோதரி தேவகியைக் கொல்வதற்கு ஆயத்தமானான். வஸுதேவர் தமது மனைவி தேவகியை காக்கும்பொருட்டு அவனிடம் பல வகைகளில் முறையிட்டார். இறுதியாக அவர் கூறினார், “உனது சகோதரியின் மைந்தனால்தான் உனது உயிருக்கு ஆபத்து, சகோதரியால் அல்ல. எனவே, உனது சகோதரியைக் கொல்லாதே. அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளை நான் உன்னிடமே ஒப்படைக்கிறேன், நீ அக்குழந்தைகளை என்ன செய்ய வேண்டுமோ செய்துகொள்.”
அதன்படி, கம்சன் கிருஷ்ணருக்காகக் காத்திருந்தான். தேவகியின் வயிற்றில் கிருஷ்ணர் இருந்தபோது, அவன் அவரையே எப்போதும் எண்ணிக் கொண்டிருந்தான். இவ்வாறாக, கம்சனும் கிருஷ்ணரிடம் பற்றுதல் கொண்டிருந்தான். ஆயினும், அவன் கிருஷ்ணரைத் தனது பகைவனாக எண்ணியதால், அவனது பற்றுதல் அனுகூலமானதல்ல. இது பக்தித் தொண்டு அல்ல; ஏனெனில், கிருஷ்ணரின் நண்பனாக, பெற்றோராக, சேவகனாக, காதலனாக இருப்பதே பக்தியாகும்.
பகவானுடனான உறவுமுறை
தந்தை மகன் இடையிலான உறவில் மகன் தந்தையிடமிருந்து தனது தேவைகளைப் பெறுகிறான். பகவானை தந்தையாக ஏற்கும்போது நாம் அவரிடமிருந்து நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வோம். அதுவே, கிருஷ்ணரின் தந்தையாக நாம் மாறும்போது, அவருக்கு சேவை செய்யும் வாய்ப்பு நமக்கு கிடைக்கிறது. இவ்வாறாக, பகவானை தந்தையாக ஏற்பதைக் காட்டிலும் அவரை நமது மகனாக ஏற்றல் மிகவுயர்ந்ததாகும்.
இவ்வாறாக, கிருஷ்ணரின் பெற்றோரான வஸுதேவர்-தேவகி மற்றும் வளர்ப்பு பெற்றோரான நந்தர்-யசோதை ஆகியோரின் சேவை மிகவும் மேன்மை வாய்ந்ததாகும். “கிருஷ்ணருக்கு சத்தான உணவை நான் வழங்காவிடில், அவன் மடிந்துவிடுவான்,” என்று யசோதை எண்ணுகிறாள். கிருஷ்ணரே உன்னத புருஷர் என்பதையும் மூவுலகையும் பராமரிப்பவர் என்பதையும் அவள் மறந்து விடுகிறாள். நித்யோ நித்யானாம் சேதனஷ் சேதனானாம் ஏகோ பஹூனாம் யோ விததாதி காமான். “எல்லா உயிர்வாழிகளின் தேவைகளையும் பகவானே பூர்த்தி செய்கிறார்.” அந்த முழுமுதற் கடவுளே யசோதையின் மகனாக இருக்கும்போது, அவள் எண்ணுகிறாள், “நான் கிருஷ்ணருக்கு சிறந்த உணவை வழங்காவிடில் அவன் இறந்து விடுவான்.” இதுவே அன்பாகும். தனக்கு முன்பாக சிறு குழந்தையின் வடிவில் தோன்றியிருப்பவர் அந்த முழுமுதற் கடவுளே என்பதை அவள் மறந்துவிடுகிறாள்.
“அன்புள்ள பகவானே, எனக்கு தினமும் உணவு வழங்குங்கள்,” என்று அவரிடம் கேட்பதற்கு பதிலாக, “நான் இவருக்கு உணவளிக்காவிடில், இவர் இறந்து விடுவார்,” என்று எண்ணும் மனநிலை உயர்ந்ததாகும். இதுவே தீவிர அன்பின் பரவச நிலையாகும். கிருஷ்ணருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையில் இதுபோன்ற உறவுமுறை இருக்கின்றது.
ராதாராணி கிருஷ்ணரின் காதலியாக அவருக்கு சேவை செய்கிறாள். நந்த மஹாராஜரும் யசோதையும் கிருஷ்ணரது பெற்றோராக அவருக்கு சேவை செய்கின்றனர். சுதாமரும் அர்ஜுனனும் நண்பர்களாக சேவை செய்கின்றனர். அவர்கள் கிருஷ்ணருடன் நேரடியாக விளையாடுகின்றனர். இதுபோன்று எண்ணற்ற பக்தர்கள் பகவானுக்கு சேவை செய்கின்றனர்.
கிருஷ்ணரிடம் இதுபோன்ற பற்றுதலை வளர்த்துக் கொண்டவர்களால் இங்கு விளக்கப்பட்ட பக்தி யோகத்தைப் பயில இயலும், மற்றவர்களால் இயலாது. இதுபோன்ற பற்றுதலை எவரேனும் வளர்த்துக் கொண்டால் அவரால் பகவானை அல்லது கிருஷ்ணரை பக்குவமாகப் புரிந்துகொள்ள முடியும்.
பகவானை அறிதல்
இதை விடுத்து, சில கொள்கைகளின் மூலமாகவோ அனுமானங்களின் மூலமாகவோ பகவானை அறிந்துகொள்ள முயன்றால், அஃது இயலாது. “நாங்கள் பகவானை அறிந்து விட்டோம்,” என்று சிலர் கூறலாம். ஆனால் பகவானை உள்ளவாறு அறிந்துகொள்ளுதல் சாத்தியமில்லை; ஏனெனில், நமது புலன்கள் எல்லைக்கு உட்பட்டவை, பகவானோ எல்லைக்கு அப்பாற்பட்டவர். எல்லைக்கு அப்பாற்பட்டவரை எல்லைக்கு உட்பட்ட புலன்களைக் கொண்டு அறிதல் எவ்வாறு சாத்தியம்?
பகவானை எவ்வாறு அறிந்துகொள்வது என்பதை சாஸ்திரங்கள் நமக்கு விளக்குகின்றன. அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை:, நமது புலன்கள் குறைபாடுகள் கொண்டவை. நம்மால் பௌதிக உலகைக்கூட பக்குவமாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. இரவு நேர வானில் பல நட்சத்திரங்களையும் கிரகங்களையும் காண்கிறோம். ஆனால் அவை என்னவென்று நமக்குத் தெரியாது. சந்திரனைப் பற்றிக்கூட நமக்கு எதுவும் தெரியாது. பூமியில் உள்ளவற்றைப் பற்றியும் நமக்குத் தெரியாது. நமது அறிவானது இவ்வாறு எப்போதும் பக்குவமற்றதாக உள்ளது. இதனை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும்.
நிலை இவ்வாறு இருக்க நாம் எல்லா வகையான அறிவையும் பெற்றுள்ளோம் என்று பெருமைப்படுவதும் விஞ்ஞானத்தில் முன்னேற்ற
மடைந்துள்ளோம் என்று உளறுவதும் முட்டாள்தனமாகும். அன்றாடம் காணும் பௌதிகப் பொருட்களைக்கூட நம்மால் பக்குவமாக அறிந்துகொள்ள இயலாதபோது, ஆத்மாவை எவ்வாறு நம்மால் அறிந்துகொள்ள இயலும்? நமது குறைமதியைக் கொண்டு ஆன்மீகமானவரான கிருஷ்ணரை அறிவது சாத்தியமல்ல.
அதற்கு சாத்தியமே இல்லை என்றால், கிருஷ்ண உணர்வைப் பற்றி நாம் எதற்காக பெரிதும் கவலைப்படுகிறோம்? சாஸ்திரம் விளக்குகிறது:
அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி
ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை:
ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ
ஸ்வயம் ஏவ ஸ்புரத்யத:
உங்களது பக்குவமற்ற புலன்களால் கிருஷ்ணரை உள்ளவாறு உணர இயலாது. ஆயினும், சேவகனாக, நண்பனாக, பெற்றோராக அல்லது காதலராக ஏதேனும் ஒரு முறையில் கிருஷ்ணரது சேவையில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை நாம் வளர்த்துக் கொள்ளும்போது, கிருஷ்ணர் தம்மை வெளிப்படுத்துகிறார்
கிருஷ்ணருக்கு அன்புடன் சேவை செய்தல்
ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதெள:. ஜிஹ்வா என்றால் “நாக்கு” என்று பொருள். நாவினைக் கொண்டு நாமத்தை உச்சரிப்பதிலிருந்தே சேவை தொடங்குகிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தல், பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரசாதத்தைச் சுவைத்தல் ஆகிய சேவைகளில் நாவை ஈடுபடுத்தலாம்.
அன்புடனும் பக்தியுடனும் சேவை செய்வதற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டவனால் கிருஷ்ணரை அறிந்துகொள்ள முடியும். கிருஷ்ணரிடம் நம்பிக்கை இருந்தால் ஒரு குழந்தையால்கூட அவரை அறிந்துகொள்ள இயலும்.
கிருஷ்ணரைவிட உயர்ந்தவர் எவருமில்லை
கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்பதை எப்படி அறிவீர்கள்? என்று நீங்கள் வினவினால், சாஸ்திரங்களிலிருந்தும் பூர்வீக ஆச்சாரியர்
களிடமிருந்தும் அறிகிறோம். சைதன்ய மஹாபிரபு ஒரு சிறந்த அதிகாரி. அவர் கிருஷ்ணரின் மீது பைத்தியமாக இருந்தார். அவருக்குப் பிறகு அவரது சீடர்களான ஆறு கோஸ்வாமிகள்—குறிப்பாக ஜீவ கோஸ்வாமி—கிருஷ்ணரைப் பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். இவ்வாறாக, சீட பரம்பரையின் வாயிலாக கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் எனும் முடிவிற்கு நாங்கள் வந்துள்ளோம்.
பன்னெடுங் காலத்திற்கு முன்பு வேத வியாஸர் கிருஷ்ணரைப் பற்றிய ஸ்ரீமத் பாகவதத்தை எழுதினார். ஸ்ரீமத் பாகவதம் என்பது கிருஷ்ணரைப் பற்றிய விவரமே அன்றி வேறல்ல. பகவத் கீதையின் ஆசிரியரும் வியாஸதேவரே. பகவத் கீதை கிருஷ்ணரால் பேசப்பட்டு வியாஸதேவரால் எழுதப்பட்டது.
கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதை வியாஸதேவர் ஏற்கிறார். ஸ்ரீமத் பாகவதத்தில், க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். பகவானின் இருபத்தைந்து அவதாரங்களைப் பற்றி விவரிக்கும் அவர், இறுதியில், ஏதே சாம்ஸ-கலா: பும்ஸ: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம், “எல்லா அவதாரங்களும் பகவானின் அம்சத்தின் அம்சங்களாகும், ஆனால் கிருஷ்ணரோ பரம புருஷ பகவான், அனைத்து அம்சங்களுக்கும் மூலமானவர், அவர் ஸ்வயம் பகவான்.” எனவே, இந்த அதிகாரபூர்வமான சான்றானது கிருஷ்ணரே பரம புருஷ பகவான் என்பதை தத்துவரீதியில் எடுத்துரைக்கிறது.
சாஸ்திரங்கள் மற்றும் ஆச்சாரியர்களின் மீது நாம் நம்பிக்கைகொள்ளும்போது, கிருஷ்ணரைவிட அதிக சக்தி வாய்ந்தவரோ அழகுடையவரோ புகழுடையவரோ எவருமில்லை என்பதை நம்மால் காண இயலும். கிருஷ்ணரே பகவான் என்பதற்கு அத்தகு பார்வையே நடைமுறை புரிந்துணர்வாகும். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிருஷ்ணர் தோன்றினார், ஆனால் பகவத் கீதையின் வடிவில் அவர் வழங்கிய அறிவு இப்போதும் வழிபடப்பட்டு வருகிறது. அஃது இந்துக்கள் மட்டுமின்றி உலகிலுள்ள அனைவராலும் படிக்கப்படுகிறது. உங்களது நாட்டில் குறைந்தபட்சம் கீதையின் ஐம்பது பதிப்புகள் அமெரிக்க சிந்தனையாளர்களால் வழங்கப்பட்டுள்ளன. இதே போல இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பிற நாடுகளிலும் கீதைக்கு நூற்றுக்கணக்கான பதிப்புகள் உள்ளதை நீங்கள் காணலாம்.
எனவே, கிருஷ்ணரைவிட அதிக புகழுடையவரோ அதிக அறிவுடையவரோ யார் இருக்க இயலும்? நாம் சாஸ்திரத்தை நம்பினால், கிருஷ்ணரைப் பற்றிய பல சான்றுகளைக் காணலாம். கிருஷ்ணர் 16,108 ராணியாரை திருமணம் செய்து கொண்டார், அவர் அவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரே சமயத்தில் தனித்தனி அரண்மனைகளில் வாழ்ந்தார், ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்தார், அந்த பத்துக் குழந்தைகள் பற்பல குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
இவற்றை நாம் சாஸ்திரங்களிலிருந்து அறிகிறோம். பிரம்ம சம்ஹிதையில் கிருஷ்ணரே புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்று ஏற்கப்பட்டுள்ளது. இது பிரம்மதேவரால் எழுதப்பட்ட மிகவும் பழமையான நூலாகும். இதில் ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: என்று கூறப்பட்டுள்ளது. ஈஷ்வர: என்பது இறைவனைக் குறிக்கிறது. தேவர்கள் பலர் உள்ளனர், ஆனால் அவர்கள் அனைவருக்கும் தலைவனாக தேவாதிதேவனாக இருப்பவர் பரம புருஷரே. “கிருஷ்ணரே அந்த பரம புருஷர், முழுமுதற் கடவுள். அவரது உடல் நித்தியமானதும் ஆனந்தமயமானதும் அறிவுநிறைந்ததுமாகும். அநாதிர் ஆதிர் கோவிந்த:, “அவர் ஆரம்பமற்றவர், அனைத்திற்கும் ஆரம்பமாக இருப்பவர். அவரே கோவிந்தர்.”
நாம் புலனின்பத்தில் நாட்டம் கொண்டுள்ளோம். ஆனால் கிருஷ்ணரது இன்பத்துடன் நமது இன்பத்தைப் பரிமாற்றம் செய்து கொண்டால், நமது புலனின்பம் பக்குவத்தை அடையும். ஆகவே, அவரது பெயர் கோவிந்தர். கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி, “கோவிந்தர் உன்னதமானவர், முழுமுதற் கடவுள்.”
வாழ்வின் பக்குவம்
அதே முழுமுதற் கடவுள் தம்மைப் பற்றி அர்ஜுனனிடம் பேசுகிறார். பகவானைத் தவிர தம்மைப் பற்றி யாரால் சிறப்பாகப் பேச முடியும்? இறைவனைப் பற்றி இறைவனைவிட வேறு எவராலும் சிறப்பாகப் பேச இயலாது. உங்களைப் பற்றி உங்களைவிட வேறு யாரால் சிறப்பாகப் பேச முடியும்?
இறைவனுடனான நமது உறவுமுறை, அந்த உறவில் செயலாற்றுதல், வாழ்வின் குறிக்கோளான இறையன்பை அடைதல் ஆகிய மூன்று விஷயங்கள் குறித்தே வேத சாஸ்திரங்கள் அனைத்தும் போதிக்கின்றன.
இறைவனுடனான நமது உறவுமுறையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அந்த உறவுமுறை முக்தி பெற்ற நிலையில் வெளிப்படுத்தப்படுகிறது. அனைத்து உயிர்வாழிகளும் இறைவனுடன் குறிப்பிட்ட வகையில் உறவு கொண்டுள்ளனர். ஆனால் நாம் அதனை தற்போது மறந்துள்ளோம். கிருஷ்ண உணர்வில் அல்லது பக்தித் தொண்டில் அந்த உறவு முறை வெளிப்படுத்தப்படும்போது, நாம் வாழ்வின் பக்குவநிலையை அடைந்துவிட்டோம் என்பதை அறியலாம்.
கிருஷ்ண உணர்வு மிகப்பெரிய விஞ்ஞானமாகும். இது மனவெழுச்சியோ அனுமானமோ ஏமாற்று வேலையோ அல்ல, இது விஞ்ஞானபூர்வமானது; பகவத் கீதை, வேத நூல்கள், பிரம்ம சம்ஹிதை முதலியவற்றில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், சைதன்ய மஹாபிரபு, இராமானுஜாசாரியர், மத்வாசாரியர், நாரதர், அஸிதர், வியாஸர் முதலிய அதிகாரிகளால் இஃது ஏற்கப்பட்டுள்ளது.
கிருஷ்ண உணர்வு என்பது ஏமாற்றும் செயலோ பணம் சம்பாதிக்கும் தொழிலோ அல்ல. இஃது உண்மையானது. இதனை நீங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டால், வாழ்க்கை வெற்றி பெறும்.