அயோத்தியில் இராமர் கோயில் சில தகவல்கள்

Must read

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக இழுத்தடிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஒன்று, அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கு. நவம்பர் மாதத்தில் அதற்கான இறுதி தீர்ப்பு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் இத்தருணத்தில், இராமஜென்ம பூமி குறித்து பகவத் தரிசனத்தினால் சேகரிக்கப்பட்ட சில தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம்.

* இன்றைய உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் உள்ள இராமஜென்ம பூமியில் பகவான் ஸ்ரீ இராமர் பிறந்த இடத்தில் கலி யுகம் 3002ஆம் ஆண்டில் (சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக) அவந்தி நாட்டு அரசரான விக்கிரமாதித்தியரால் ஸ்ரீ இராமரின் கோயில் சிறப்பாகக் கட்டப்பட்டது.

* முகலாய படையெடுப்பின்போது 30,000க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதும், அவற்றில் பல்லாயிரம் கோயில்கள் மசூதிகளாக மாற்றப்பட்டதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை.

* 16ஆம் நூற்றாண்டில் பாபர் இந்த நாட்டின் மீது படையெடுத்து செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றபோது, அவனுடைய படைத் தளபதி மீர்பாகியிடம் அயோத்தியின் மீது போர் தொடுக்கும் பொறுப்பினை வழங்கினான்.

* 1528ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்துக்கள் பாபரின் படையிடம் தோற்றனர். அத்தருணத்தில், ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தடுத்ததையும் மீறி, அவர்களைக் கொன்று குவித்து விட்டு, பாபரின் உத்தரவுபடி பக்தர்களின் உயிரிலும் மேலான ஸ்ரீ இராமரின் கோயில் தகர்க்கப்பட்டது.

* முழுமையாக இடித்து விட்டு மீண்டும் கட்டுவதற்கு திறனும் காலமும் இல்லாத காரணத்தினால், கோயிலை முழுமையாக இடிக்காமல், சுற்று சுவர்களும் சிற்பங்களும் அப்படியே இருக்க, கோயில் சுவற்றின் மீது மசூதி போன்ற கட்டிடம் எழுப்பப்பட்டது. விக்ரஹங்கள் உடைக்கப்பட்டு படிக்கட்டுகளாக மாற்றப்பட்டன.

* வென்ற எல்லா இடங்களிலும் மசூதிகளைக் கட்டுவதை முகலாய அரசர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கு ஆதாரமாக இருந்த “பாபர் நாமா” என்னும் பாபரின் தினசரி நாள்குறிப்பில், சரியாக 1528 ஏப்ரல் 2 முதல் செப்டம்பர் 18 வரை 5 மாதங்கள் வரையான குறிப்புகள் பிற்காலத்தில் காணாமல் போய் விட்டன.

* இதன் பிறகு, கோயிலை மீட்பதற்காக பல முறை போராட்டங்கள் நிகழ்ந்தது வரலாறு. (சிலர் 76 முறை என்று கூறுகின்றனர்: பாபரை எதிர்த்து 4, ஹுமாயூனை எதிர்த்து 10, அக்பரை எதிர்த்து 20, அவுரங்கசீப்பை எதிர்த்து 30, நவாப் ஹைதர் அலியை எதிர்த்து 5, நவாப் நசீருதின் ஹைதரை எதிர்த்து 3, நவாப் வாஜீத் அலியை எதிர்த்து 2, ஆங்கிலேயரை எதிர்த்து 2. இத்தகவலை உறுதி செய்ய முடியாவிடினும் பல்வேறு போராட்டங்கள் நிச்சயம் நிகழ்ந்துள்ளன.)

* ஒரு சமாதான ஏற்பாடாக 1883இல் மசூதிக்கு வெளியே இந்துக்கள் வழிபடுவதற்கு “ராம் சபூதரா” என்கிற ஒரு தற்காலிக பீடம் அமைக்கப்பட்டது.

* 1885இல் மஹந்த் ரகுவர் தாஸ் என்பவர் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்: இராமர் அவதரித்த இடத்திலிருந்த கோயிலை இடித்து விட்டுதான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்றும், அந்த இடத்தில் மீண்டும் இராமருக்கு கோயில் எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்றும் வாதாடினார்.

* வழக்கை விசாரித்த ஆங்கிலேய நீதிபதி F.E.A கௌமியர், “இந்துக்களுக்குச் சொந்தமான புண்ணிய பூமியில் மசூதி கட்டப்பட்டது வருத்தத்திற்கு உரியது. ஆயினும், இது 356 வருடத்திற்கு முந்தைய சம்பவம், இதனை சரி செய்வதற்கான காலம் கடந்து விட்டது,” என்று தீர்ப்பளித்தார்.

* பல்வேறு கலவரங்கள் மற்றும் தாக்குதல்களால் சேதமடைந்த மசூதி 1934ஆம் ஆண்டு முதல் மூடி வைக்கப்பட்டது, தொழுகையும் நடைபெறவில்லை.

* நாடு சுதந்திரமடைந்தவுடன் குஜராத்தின் சோம்நாத் ஆலயத்தைப் போன்று அரசே முன் நின்று இராமஜென்ம பூமி கோயிலை மீட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

* 1949 டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவில் உள்ளூர் இந்துக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு “ராம் சபூதரா” பகுதியிலிருந்த சீதா-ராம-லஷ்மண விக்ரஹங்களை மசூதியின் மையப் பகுதியில் நிறுவியுள்ளனர்.

* டிசம்பர் 29ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின்படி பாபர் மசூதி சர்ச்சைக்குரிய இடமாக அறிவிக்கப்பட்டு, நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டு, இரும்பு கம்பிகளால் வேலி அமைக்கப்பட்டது. வேலிக்கு வெளியே நின்று இராமரை இந்துக்கள் வழிபடவும் பூஜைகள் செய்யவும் அனுமதிக்கப்பட்டது. இராமருக்கு பூஜை செய்ய ஒரே ஒரு பூஜாரியை மசூதிக்குள் அனுமதிக்கவும் வழி செய்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

* 1986இல் மசூதியின் கதவுகள் திறக்கப்பட்டு இந்துக்கள் உள்ளே சென்று இராமரை வழிபடுவதற்கு உள்ளூர் நீதிமின்றம் அனுமதி வழங்கியது.

* 1992 டிசம்பர் 6 அன்று, ஆயிரக்கணக்கான கரசேவகர்களால் 464 ஆண்டுகளுக்கு முந்தைய அந்த பாழடைந்த கட்டிடம் தரைமட்டமாக்கப்பட்டது.

* 2010 செப்டம்பர் 30அன்று, பாபர் மசூதியிருந்த இடத்தில், அதற்கு முன்பாக கோயில் இருந்ததற்கான எல்லா சான்றுகளையும் உறுதிப்படுத்திய அலகாபாத் உயர்நீதி மன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்றாகப் பிரித்து, மூன்று மனுதாரர்களுக்கும் சமமாக வழங்கியது.

* தீர்ப்பில் திருப்தியடையாத மனுதாரர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, அதன் தீர்ப்பினை தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

* மசூதி என்பதற்கு குறிப்பிட்ட இடம் என்று ஏதும் கிடையாது. இஸ்லாமிய நாடுகளில்கூட பல்வேறு மசூதிகள் இடிக்கப்பட்டு வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ளன.

* ஆயினும், இராமரின் பிறப்பிடம் என்று இருப்பது அந்த இடம் மட்டுமே. இயேசு பிறந்த பெத்லகேம், நபிகள் பிறந்த மெக்கா என பல்வேறு மதத்தவரின் முக்கிய இடங்கள் அவர்களால் பராமரிக்கப்பட்டு வருவதைப் போலவே, இராமர் பிறந்த அயோத்தியில் அவர் பிறந்த இடத்தில் அவருக்கு ஓர் அருமையான கோயில் எழும்பும் என்று கோடிக்கணக்கான இந்துக்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

பாபர் மசூதியை இடித்து விட்டு பகவான் இராமருக்காக எழுப்பப்பட்டிருக்கும் தற்காலிக கோயில்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives