கோபி வல்லபபுர்

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌர ஹரி தாஸ்

இன்றைய இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபுர் மாவட்டத்தில் அமைந்திருப்பதே கோபி வல்லபபுர் என்னும் திருத்தலம். வெளியுலக மக்களுக்கு பரவலாக அறியப்படாதபோதிலும், கௌடீய வைஷ்ணவர்களுக்கு மத்தியில் கோபி வல்லபபுர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலமாகும். கரக்புரிலிருந்து சுமார்ƒ200 கி.மீ. தொலைவில், ஒடிசா மாநிலத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தை வைஷ்ணவர்கள் “குப்த விருந்தாவனம்” என்றும் அழைப்பதுண்டு.

ரஸிகானந்த பிரபுவினால் புகழ்பெற்ற இத்திருத்தலத்தைப் பற்றி அறிவதற்கு முன்பாக, ரஸிகானந்த பிரபுவின் வரலாற்றை சற்று அறிவோம்.

ரஸிகானந்தரின் தெய்வீகத் தோற்றம்

ரஸிகானந்த பிரபு 1590ஆம் ஆண்டில், ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டத்தில் ரோகிணி நகர் என்னும் ஊரில், அச்யுதர், பவானி என்ற தம்பதியருக்கு தெய்வீக மகனாகத் தோன்றினார். அவரை சிறுவயதில் ரஸிக முராரி என்று அழைத்தனர். அவர் தன் தந்தையைப் போன்றே கிருஷ்ண நாமத்தை சிறு வயதிலேயே உச்சரிக்க ஆரம்பித்தார், துளசி, பசு மற்றும் வைஷ்ணவர்களின் மீது அதீத பற்றுதலை வெளிப்படுத்தினார்.

விளையாட்டில் ஆர்வம் காட்டாமல், மற்ற சிறுவர்களுடன் இணைந்து கிருஷ்ண லீலைகளை பல்வேறு நாடகங்களாக அரங்கேற்றுவதில் முழுமையாக மூழ்கியிருந்தார், ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்பதில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார்.

ரஸிகானந்த பிரபு தனது இளமைப் பருவத்திலேயே மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார். தன் தந்தையின் நண்பரான பலபத்திரரின் மகளான ஈச்சா தேவியை மணம் புரிந்தார். அவரது ஆன்மீகத் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

அவரது இளமை பருவத்தை உத்கல என்று அழைக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் கழித்தார். விருந்தா வனத்தில் ஜீவ கோஸ்வாமியின் மேற்பார்வையில் ஆன்மீக விஷயங்களைக் கற்ற சியாமானந்த பிரபு தெய்வீகக் கட்டளையின்படி ரஸிகானந்தரைச் சந்திக்க ரோகிணி நகருக்கு விரைந்தார்.

ரஸிகானந்தரும் சியாமானந்தரும் சந்தித்தல்

சியாமானந்த பிரபுவை தரிசித்த ரஸிகானந்தர் தன்னையறியாமலேயே மெய் சிலிர்த்துப் போனார். சியாமானந்த பிரபு, பின்னர் கிருஷ்ண பக்தியின் ஆழத்தை ரஸிகானந்த பிரபுவிற்கு உபதேசித்தார். சியாமானந்தரும் ரஸிகானந்தரும் பல மாதங்கள் கண்டசிலா என்னுமிடத்தில் நாம ஸங்கீர்த்தனம் புரிந்தனர். ரஸிகானந்த பிரபுவும் அவரது மனைவியும், சியாமானந்த பிரபுவை குருவாக ஏற்று, தங்களை முழுமையாக அவரது சேவையில் அர்ப்பணித்தனர்.

சியாமானந்தர் விருந்தாவனம் செல்ல விரும்பியபோது, ரஸிகானந்தரும் அவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். அதற்கு சியாமானந்தர், “நீங்கள் தற்போது உத்கல (ஒடிசா) தேசத்தில் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்யுங்கள். அதன்பிறகு என்னுடன் விருந்தாவனத்தில் முழுமையாக வசிப்பதற்கு வருகை தாருங்கள்,” என பதிலளித்தார். அதனை ரஸிகானந்த பிரபுவும் சிரமேற்றுக் கொண்டார்.

சியாமானந்தரும் ரஸிகானந்தரும் உரையாடுதல்(கோபி வல்லபபுரில் இருக்கும் சித்திரம்)

உன்னதமான சேவை

சியாமானந்த பிரபுவின் கருணையினால் கிருஷ்ணரின் மீதான அன்பும் பக்தியும் ரஸிகானந்தருக்கு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ரஸிகானந்த பிரபு வைஷ்ணவர்களுக்கு சேவை செய்வதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். வைஷ்ணவர்களுக்கு கிருஷ்ணருக்கு சமமான மரியாதையை வழங்கினார். அவர் தன் இல்லத்திற்கு வருகை தரும் ஒவ்வொரு வைஷ்ணவர்களின் பாதங்களையும் கழுவி அந்நீரினை பருகி பரவசத்தை வெளிப்படுத்துவார்.

காலப்போக்கில் அவர் ஸ்வர்ணரேக நதிக்கரைக்குக் குடிபெயர்ந்தார். இவ்விடத்திற்கு சியாமானந்த பிரபு ஒருநாள் வருகை புரிந்தார்.

கோபி வல்லபபுர்

ரஸிகானந்தர் தன் குருவான சியாமானந்த பிரபுவிடம், தங்கள் இல்லத்தில் வழிபடப்படும் விக்ரஹத்திற்கு பெயர் சூட்டும்படி வேண்டுகோள் விடுத்தார். சியாமானந்தர், அவ்விக்ரஹங்களுக்கு “கோபி வல்லப ராயர்” என்று பெயரிட்டு, அந்த ஊரும் “கோபி வல்லபபுர்” என்று அழைக்கப்படும் எனக் கூறினார். அங்கே கிருஷ்ணரும் அவரது பக்தர்களும் சிறந்த முறையில் சேவை செய்யப்படுவர் என்றும் அவ்விடமும் விருந்தாவனத்தைப் போன்று புகழ்பெறும் என்றும் சியாமானந்தர் முன்மொழிந்தார்.

சியாமானந்தரும் ரஸிகானந்தரும் ஒடிசா முழுவதும் கிருஷ்ண பக்தியை பிரச்சாரம் செய்து, சூத்திரர்கள், சண்டாளர்கள், மிலேச்சர்கள், கீழ்நிலை மக்கள், நாத்திகர்கள், திருடர்கள், வணிகர்கள், மன்னர்கள், இழிவடைந்தவர்கள் என பாரபட்சமின்றி அவர்களது உணர்வு நிலையை மேம்படுத்தினர். ரஸிகானந்தரும் தன் குருவான சியாமானந்தரின் கட்டளைப்படி பல சீடர்களை ஏற்றுக் கொண்டார்.

ஆனந்த நடனமாடும் பக்தர்கள்

நாம ஸங்கீர்த்தனம் செய்தபடி பக்தர்கள் கோயிலினுள் நுழைதல்.

ஆனந்த நடனமாடும் பக்தர்கள்

ரஸிகானந்தரின் அற்புத லீலைகள்

ரஸிகானந்த பிரபுவின் லீலைகள் எண்ணற்றவை, அவற்றில் இரண்டினை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

வனபுர் என்னுமிடத்தை அகமது பேகம் என்னும் முஸ்லீம் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ரஸிகானந்தரின் புகழைக் கேட்டு அவர்மீது மிகவும் பொறாமை கொண்டிருந்தான். அறியாமையில் மூழ்கியிருந்த அக்கொடூர மன்னனுக்கு கருணை காட்ட விரும்பிய ரஸிகானந்தர் அவனைச் சந்திக்க அங்கு சென்றார். அச்சமயத்தில், அவர்களின் கண்களுக்கெட்டிய தூரத்தில் மதம்பிடித்த யானை ஒன்று தென்பட்டது. அந்த யானை தன் கண்முன் வந்தவர்களை மிதித்துக் கொன்று கொண்டிருந்தது. அதைக் கண்ட முஸ்லீம் மன்னன், உடனடியாக ரஸிகானந்தரிடம், “நீங்கள் இந்த யானையை அடக்கினால், நான் உங்களுடைய நாராயணரை ஏற்றுக்கொள்கிறேன்,” என சவால் விடுத்தான்.

வேகமாக ஓடி வந்த மதயானை ரஸிகானந்தரைக் கண்டவுடன் வேகத்தைக் குறைத்துக் கொண்டு அவர் முன் நின்றது. அப்போது ரஸிகானந்த பிரபு யானையிடம், “ஏன் இவ்வாறு மற்றவர்களை துன்புறுத்துகிறாய்? கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரித்து, அவரை தியானித்து, அவரின் திருப்பாதங்களை வழிபடு. கிருஷ்ணரே உனது தாய், தந்தை, நண்பர் மற்றும் உயிர்மூச்சு. உனது ஆணவத்தை கைவிட்டு கிருஷ்ணரை வழிபட்டு வாழ்வை புனிதப்படுத்திக் கொள்வாயாக,” என உபதேசித்தார்.

யானையின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைத்தாரையாக வடிந்தது. கண்ணீரினால் ரஸிகானந்த பிரபுவின் திருப்பாதங்களைக் கழுவிய பின்னர், யானை அவரின் முன்பாக விழுந்து வணங்கியது. “இன்றிலிருந்து உன்னை நான் எனது சீடனாக ஏற்றுக்கொள்கிறேன்,” என்று கூறிய ரஸிகானந்தர், அந்த யானைக்கு கோபால தாஸ் என பெயரிட்டு தீட்சையளித்தார். அந்த யானை அனைவரின் முன்னிலையிலும் ரஸிகானந்தரை நூறு முறை விழுந்து வணங்கியது.

இதைக் கண்ட அகமது பேகம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தான், ரஸிகானந்தரின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னித்து தனது அறியாமையைப் போக்க வேண்டும் என்று வேண்டினான்.

ஒருமுறை புரி ரதயாத்திரைக்கு ரஸிகானந்தர் கால தாமதமாக வந்தார். யானை, குதிரை, எண்ணிலடங்கா மக்கள் என அனைவரும் எவ்வளவு முயன்றும் ரதம் சற்றும் அசையவில்லை. அப்போது, புரி மன்னரின் கனவில் தோன்றிய ஜகந்நாதர், “எனது பக்தன் ரஸிகானந்தரை நான் பார்த்த பின்னரே இவ்விடத்தை விட்டு நகருவேன்,” எனத் தெரிவித்தார். அதை மெய்ப்பிக்கும் வகையில் சில நாள்கள் கழித்து, ரஸிகானந்தர் புரிக்கு வருகை தந்து தனது திருக்கரங்களால் ரதத்தைத் தொட்ட பிறகு ரதம் நகரத் தொடங்கியது.

கோபி வல்லபபுருக்கு பக்தர்களுடன் விஜயம்

சென்ற ஆண்டு பகவத் தரிசன குழுவினருடன் இணைந்து கோபி வல்லபபுர் செல்வதற்கு அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. ஒடிசாவின் பிரபலமான ரேமுணாவில் தங்கியிருந்த நாங்கள் அனைவரும் இரண்டு பேருந்துகளில் கோபி வல்லபபுர் நோக்கி (சுமார் 120 கிமீ) புறப்பட்டோம். மேற்கு வங்க எல்லையைக் கடக்க வேண்டிய இடத்தில், நீண்ட சுங்கச்சாவடியின் காரணத்தினால், எங்களுடைய பயணம் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமாகியது. எங்களுடைய மதிய பிரசாதம் கோபி வல்லபபுரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பசி ஒருபுறம் இருந்தாலும் கோபி வல்லபபுர் தரிசனம் தாமதமாகிறதே என்ற ஏக்கம் எல்லாருடைய மனதிலும் அதிகரித்த வண்ணம் இருந்தது.

கோபி வல்லபபுரை அடைந்தோம், அதனை ஒரு சிறிய நகரம் அல்லது பெரிய கிராமம் என்று கூறலாம். மிகவும் அமைதியான அழகான ஊர், பெரு நகரங்களிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் நகர வாசனை இன்னும் இங்கே பரவவில்லை என்று கூறலாம். கோயில் அமைந்துள்ள இடம் வரை பேருந்து செல்ல இயலாது என்பதால், பேருந்திலிருந்து இறங்கி நாம ஸங்கீர்த்தனம் செய்தவாறு நடந்து சென்றோம். அந்த ஊரின் அழகையும் பக்தியுடன் கூடிய மக்களையும் கண்டவுடன் பயணக் களைப்பும் பசியும் பறந்தோடின. வானில் மேகங்கள் கூடி இதமான காற்றினை வீச, ஹரி நாமத்தின் மகிழ்ச்சியுடன் கோயிலை நோக்கி முன்னேறினோம்.

ரஸிகானந்தரால் வழிபடப்பட்ட ராதா-கிருஷ்ண விக்ரஹம்.

ரஸிகானந்தரால் வழிபடப்பட்ட ராதா-கிருஷ்ண விக்ரஹம்.

எங்களுக்காக காத்திருந்த மஹான்

ரஸிகானந்தரின் குடும்பம் ஒரு பெரிய ஜமீன்தார் குடும்பம், அதனால் அவர்களுடைய வீடு ஒரு சிறிய கோட்டையைப் போன்று அமைக்கப்பட்டிருந்தது. அவர் தனது வீட்டின் முற்பகுதியில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்த விக்ரஹங்களையும் கோபி வல்லப ராயரையும் பிரம்மாண்டமான முறையில் வழிபட்டு வந்தார். அவ்விடம் ஒரு பொதுக் கோயிலைப் போன்று ஊர் மக்கள் அனைவரும் கூடும் இடமாக இருந்து வருகிறது.

வைஷ்ணவர்களுக்கு சேவை செய்வதில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் என்பதால், அக்கோயிலை நெருங்கும் போது உன்னதமான ஆன்மீக அதிர்வுகள் தென்படுவதை அனைவராலும் உணர முடிந்தது. ரஸிகானந்த பிரபுவையும் சியாமானந்த பிரபுவையும் நினைத்தபடி பக்தர்கள் கோயிலினுள் நுழைய மழை பொழியத் தொடங்கியது. இந்த வித்தியாசமான இடத்திற்கு வந்த மகிழ்ச்சியில், பக்தர்கள்ம›ழையையும் பொருட்படுத்தாமல் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தில் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

ரஸிகானந்த பிரபுவின் வம்சாவழியான தமால் மோஹந்தி மஹாராஜாவின் தலைமையிலான பக்தர்களால் வெளிப்படுத்தப்பட்ட பண்பாடும் நடத்தையும் எங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மதியம் 02:30 மணிக்குச் செல்ல வேண்டிய நாங்கள் காலதாமதாக 04:30 மணிக்கு வந்தபோதிலும், அவர்கள் அனைவரும் உண்ணாமல் எங்களுக்காக காத்திருந்தனர். பல்வேறு பாரம்பரிய பதார்த்தங்களுடன் கூடிய மாபெரும் விருந்தினால் அவர்கள் எங்களை உபசரித்தனர். அந்த விருந்தினைச் சுவைத்தவர்கள் யாரும் அதனை வாழ்வில் என்றும் நிச்சயம் மறக்க இயலாது. எண்ணற்ற பதார்த்தங்கள், அனைத்தும் பாரம்பரிய தன்மையைக் கொண்டவை. வைஷ்ணவ பண்பாடு எத்தகையது என்பதை நன்கு எடுத்துரைப்பதுபோல அஃது அமைந்தது.

ஸ்ரீல பிரபுபாதரைப் புகழ்ந்த தமால மஹாராஜா

தமால மஹாராஜாவின் தோற்றம் மிகவும் கம்பீரமான முறையில் அவருடைய உயர்குடிக்கு பொருத்தமானதாக இருந்தது. அவர் இஸ்கான் மீதும் ஸ்ரீல பிரபுபாதரின் மீதும் பெருமதிப்பு கொண்டுள்ளார். எங்களுக்கு பிரசாதம் பரிமாறிவிட்டு, நாங்கள் அனைவரும் உணவருந்திய பின்னரே, அவர் பிரசாதம் ஏற்றார். அதுவரை அவரும் அவரைச் சார்ந்தவர்கள் அனைவரும் உணவருந்தாமல் இருந்தனர். இந்த பயணத்தினை ஏற்பாடு செய்த விஷ்ணு-சித்த தாஸ் அவரிடம் வினவினார், “மஹாராஜா, நாங்கள் சாதாரண அற்பமான மக்கள், எங்களுக்காக நீங்கள் ஏன் உணவருந்தாமல் இருந்தீர்கள்?” அதற்கு அவரளித்த பதில் எங்கள் அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்தது, இல்லை, நீங்கள் சாதாரண மக்கள் அல்ல. நீங்கள் அதனைப் பணிவினால் கூறுகிறீர்கள். மஹாபிரபுவின் கருணை உங்கள் அனைவருக்கும் உள்ளது. நாங்கள் ஷியாமானந்த பரம்பரையைச் சார்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். இருப்பினும், உங்களுடைய பிரபுபாதரும் பக்திசித்தாந்த சரஸ்வதி பிரபுபாதரும் மஹாபிரபுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள். அதனால் நீங்கள் மிகவும் விசேஷமான பக்தர்கள்.”

ஸ்ரீல பிரபுபாதரின் மீதான உயர்ந்த மதிப்பு மரியாதையினால், மஹாராஜா அவர்கள் இஸ்கான் பக்தர்களிடம் மிகுந்த அன்பையும் பணிவையும் வெளிப்படுத்தினார். அவரைக் காக்க வைத்ததை எண்ணி நாங்கள் வருந்தியபோதிலும், அவரிடமிருந்து ஸ்ரீல பிரபுபாதரின் பெருமைகளைக் கேட்டது மிகவும் ஆனந்தமாக இருந்தது. ஸ்ரீல பிரபுபாதரின் பரம்பரையில் நமக்கிருக்கும் முக்கியப் பொறுப்புகளை அஃது எடுத்துரைத்தது.

ரஸிகானந்தரின் பாதசுவடு பதிந்த பாறை இன்றும் கோபி வல்லபபுரத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

ரஸிகானந்தரின் பாதசுவடு பதிந்த பாறை இன்றும் கோபி வல்லபபுரத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் சரணாம்ருதம்

இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பம்சம், வைஷ்ணவ சரணாம்ருதத்தைச் சுவைப்பதாகும். ரஸிகானந்த பிரபுவின் காலத்தில், ஒருமுறை அவர் இலட்சக்கணக்கான பக்தர்களை வரவழைத்து, அவர்கள் அனைவரது திருப்பாதங்களையும் நீராட்டி அந்நீரை பெரிய பானையில் சேகரித்தார். அதைப் பருகுவதை அவர் தினமும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வைஷ்ணவ சரணாம்ருதம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இன்றும் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. பானையில் உள்ள அந்த தீர்த்தம் பாதியாக குறையும்போது, அதில் மேலும் நீரைவிட்டு நிரப்பி, இப்போதும் கோபிவல்லப ராயரின் கோயிலில் அத்தீர்த்தத்தினை பராமரித்து வருகின்றனர்.

மாலை நேர சந்தியா ஆரத்திக்கு உள்ளூர் மக்கள் பலரும் அங்கு கூடினர், ஆரத்தியும் விமரிசையாக ஆரம்பமாகியது. கோபி வல்லபபுரை தரிசித்த பெருமகிழ்ச்சியும், அங்கிருந்து புறப்படுகிறோம் என்ற பெருந்துயரமும் கலந்த ஒரு கலவையான மனதுடன் அனைவரும் அங்கிருந்து புறப்பட்டோம்.

வைஷ்ணவர்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதற்கு கோபி வல்லபபுர் மிகச்சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றது என்றால் அது மிகையாகாது. ரஸிகானந்த பிரபு வைஷ்ணவர்களின் மீது எந்தளவிற்கு பற்று வைத்திருந்தார் என்பதை இங்கு வருகை புரிபவர்கள் நிச்சயம் உணரலாம். வைஷ்ணவ சேவையின் முக்கியத்துவத்தை கோபி வல்லபபுர் பறைசாற்றுவதோடு, வைஷ்ணவர்களையும் பகவானையும் என்றும் பிரிக்க முடியாது என்கிற உயர்ந்த சித்தாந்தத்தையும் உலக மக்களுக்கு உணர வைக்கின்றது.

ரஸிகானந்த பிரபுவின் கருணை என்னும் கடலானது ஆழங்கான இயலாததும் எல்லை இல்லாததுமாகும். இன்றும் ரஸிகானந்த பிரபு ஒடிசா மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற பக்தராக போற்றப்படுகிறார். கிருஷ்ண லீலையில் கிருஷ்ணருடைய பேரனாக இருந்த அநிருத்தர், சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளில் பங்கெடுப்பதற்காக ரஸிகானந்தரின் வடிவில் தோன்றினார். கௌடீய வைஷ்ணவர்கள் அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது கோபி வல்லபபுரை தரிசிக்க வேண்டும், அதற்கான விருப்பத்தையாவது வளர்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பு: ரஸிகானந்தரின் வரலாற்றினைப் பற்றி கோபி-ஜன-வல்லப தாஸரால் ஒடிய மொழியில் இயற்றப்பட்ட ரஸிக-மங்கல என்னும் நூலானது, தற்போது ஆங்கிலத்தில் The Story of Rasikananda
என்ற பெயரில் தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமியினால் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம் அறிந்தோர் அதனைப் படித்து, ரஸிகானந்தரைப் பற்றி மேலும் அறியலாம்.

- தமால் மஹாராஜா அவர்கள் பக்தர்கள் அனைவருக்கும் வைஷ்ணவ சரணாம்ருதத்தை வழங்குதல்

– தமால் மஹாராஜா அவர்கள் பக்தர்கள் அனைவருக்கும் வைஷ்ணவ சரணாம்ருதத்தை வழங்குதல்

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives