ஸ்ரீல பிரபுபாதர் சில நேரங்களில் தமது உபன்யாசத்தின்போது பரவசத்தில் மூழ்கி விடுவார். ஒருமுறை சான்பிரான்சிஸ்கோவில் கிருஷ்ணரின் பிரிவில் இருந்த ஸ்ரீ சைதன்யரின் பாவத்தை எடுத்துரைத்தபோது அவ்வாறு நிகழ்ந்தது. இந்தியாவின் கோரக்புரிலும் ராதா-மாதவ விக்ரஹங்களுக்கு முன்பாக அமர்ந்து கிருஷ்ண லீலைகளை விவரிக்கையில் நிகழ்ந்தது, மீண்டும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உபன்யாசத்தின்போது நிகழ்ந்தது. அத்தருணங்களில், அவரது உணர்வில் ஒரு தெளிவான மாற்றம் காணப்பட்டது. பிரபுபாதரின் பார்வையில் ஆன்மீக உலகம் திறந்திருப்பதுபோலவும், அவர் கிருஷ்ணருடன் உறவாடுவதுபோலவும், அதனால் அவரால் வெளியில் பேச முடியவில்லை என்பதுபோலவும் பக்தர்களுக்குத் தோன்றியது.
இதே போன்ற சூழ்நிலை மற்றொரு முறை மாயாபுரில் பல பக்தர்களுக்கு முன்பு நிகழ்ந்தது. கூடியிருந்த அனைவரும் மௌனமாயினர், என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. அப்போது அங்கிருந்த சந்நியாசி ஒருவர் கீர்த்தனத்தை ஆரம்பித்து, அந்தச் சூழ்நிலையை மாற்றினார். முதலில் அவருடன் இணைந்து பாடுவதற்கு யாரும் தயாராக இல்லை, ஆயினும் அவரது வற்புறுத்தலினால் மற்றவர்களும் படிப்படியாக இணைய சிறிது நேரத்தில் பிரபுபாதர் தமது ஆழ்ந்த சமாதியிலிருந்து வெளியுலகிற்குத் திரும்பினார்.
அதனைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு மத்தியில் அந்த சந்நியாசியின் செயல் சரியா என்பதுகுறித்து விவாதம் நிகழ்ந்தது. இறுதியில் அதனைப் பற்றி பிரபுபாதரிடமே கேட்டு விடலாம் என்று தீர்மானித்த பக்தர்கள் அவரது காரியதரிசியான பிரம்மானந்த ஸ்வாமியை அணுகினர்.
பிரம்மானந்த ஸ்வாமி பிரபுபாதரிடம் அன்று காலை உபன்யாசத்தின்போது ஆழ்ந்த சமாதியினுள் நுழைந்தது நினைவில் இருக்கிறதா என்று வினவினார். அது ஸ்ரீல பிரபுபாதருக்கு தர்மசங்கடமாகி விட்டது, அவர் வெட்கத்துடன் பதிலளித்தார், “நான் அடிக்கடி அவ்வாறு செய்வதில்லை.”
பிரம்மானந்தர் வினவினார், “ஆயினும், அவ்வாறு நிகழும்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அமைதியாக இருக்க வேண்டுமா, ஜபம் செய்ய வேண்டுமா?”
பிரபுபாதர் கூறினார், ”ஆம், ஜபம் செய்யுங்கள். ஹரே கிருஷ்ண மந்திரத்தைச் சொல்லுங்கள். அது சரியே.” காலையில் அந்த சந்நியாசி செய்த செயல் சரியா என்பதையும் பிரம்மானந்தர் வினவ, பிரபுபாதர் அதையும் ஆமோதித்தார்.
அதாவது, அந்த சம்பவம் முழுவதையும் பிரபுபாதர் முக்கியமற்றதாகக் கருதினார். பக்தர்கள் இதுபற்றிய கற்பனைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை குறிப்பால் உணர்த்தினார். பிரபுபாதர் பரவசத்தின் உச்சிக்குச் சென்றபோதிலும், அதுபோன்ற முன்னுதாரணத்தின் மூலம் அவர் நமக்கு பிரச்சாரம் செய்யவில்லை என்பது தெளிவு.
பக்தர்களுக்கு முறையான முன்னுதாரணத்தை வழங்கும் பொருட்டு, பிரபுபாதர் தமது பரவச உணர்ச்சிகளை எப்போதும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!