உண்மையான யோகத்தின் இரகசியங்கள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

யோகா குறித்த பல்வேறு புத்தகங்களை சந்தையில் காண்கிறோம். ஆனால் உண்மையான யோகம் முற்றிலும் வேறானது. அதன் புராதன இரகசியங்களை ஸ்ரீல பிரபுபாதர் இங்கு நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

சேதோ-தர்பண-மார்ஜனம் பவ-மஹா-தாவாக்னி-நிர்வாபணம்

ஷ்ரேய:-கைரவ-சந்த்ரிகா-விதரணம் வித்யா-வதூ-ஜீவனம்

ஆனந்தாம் புதி-வர்தனம் ப்ரதி-பதம் பூர்ணாம்ருதாஸ்வாதனம்

ஸர்வாத்ம-ஸ்நபனம் பரம் விஜயதே ஸ்ரீ-க்ருஷ்ண-ஸங்கீர்தனம்

ஸங்கீர்த்தன இயக்கத்திற்கு எல்லாப் புகழும் உரித்தாகட்டும். பரம் விஜயதே ஸ்ரீ-க்ருஷ்ண-

ஸங்கீர்தனம். இந்தியாவின் நவத்வீபத்தில் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, பகவான் சைதன்ய மஹாபிரபு பதினாறு வயது சிறுவனாக இருந்தபோது இந்த ஸங்கீர்த்தன இயக்கத்தைத் துவக்கி வைத்தார். இப்போது பலர் பல மதங்களை உற்பத்தி செய்வதுபோல் சைதன்யரும் ஏதோ ஒரு மதத்தை உண்டாக்கினார் என்பதல்ல. உண்மையில் மதத்தை (தர்மத்தை) யாரும் உண்டாக்க முடியாது. தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம், தர்மம் என்றால் கடவுளின் கட்டளைகள், கடவுளின் சட்டங்கள் அவ்வளவே. அரசாங்கத்தின் சட்டங்களுக்குக் கீழ்ப்படியாமல் நம்மால் வாழ இயலாது. அதுபோலவே, கடவுளின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் நம்மால் வாழ இயலாது.

எங்கெல்லாம் தர்மத்திற்குத் தொல்லைகள் ஏற்பட்டு (யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத) அதர்மம் ஆதிக்கம் செலுத்துகின்றதோ (அப்யுத்தானம் அதர்மஸ்ய), அப்போதெல்லாம் நான் (கிருஷ்ணர்) தோன்றுகிறேன் (ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்) (பகவத் கீதை 4.7). பௌதிக உலகிலும் இதே கோட்பாடு செயல்படுவதைக் காணலாம். அரசாங்கத்தின் சட்டங்கள் மீறப்படும்போது நிலைமையைச் சரி செய்ய எந்தவொரு குறிப்பிட்ட அரசு அதிகாரியோ போலீஸாரோ அந்த இடத்திற்கு வருகிறார்.

சைதன்ய மஹாபிரபு கோஸ்வாமிகளால் வழிபடப்படுகிறார். ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி, ரகுநாதபட்ட கோஸ்வாமி, ஜீவ கோஸ்வாமி, கோபாலபட்ட கோஸ்வாமி, ரகுநாததாஸ கோஸ்வாமி ஆகியோர் ஆறு கோஸ்வாமிகளாவர்.

ஸ்ரீ சைதன்யரின் பெருமை

இந்த ஆறு கோஸ்வாமிகளின் தலைவரான ரூப கோஸ்வாமி சைதன்ய மஹாபிரபுவைப் பாராட்டி ஒரு நேர்த்தியான கவிதையை எழுதினார்.

அனர்பித-சரீம் சிராத் கருணயாவதீர்ண: கலௌ

ஸமர்பயிதும் உன்னதோஜ்வல-ரஸாம் ஷ்வ-பக்தி-ஷ்ரியம்

ஹரி: புரட-ஸுந்தர-த்யுதி-கதம்ப-ஸந்தீபித:

ஸதா ஹ்ருதய-கந்தரே ஸ்புரது வ: ஷசீ-நந்தன:

(சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 1.4)

கலௌ என்பது இந்த யுகமான கலி யுகத்தை, மாசு படிந்த இரும்பு யுகத்தை, பூசல்களும் வேற்றுமைகளும் நிறைந்த யுகத்தைக் குறிக்கின்றது. ரூப கோஸ்வாமி கூறுகிறார், “வேற்றுமைகளும் பூசல்களும் நிறைந்த இந்த கலி யுகத்தில் மிக உயர்ந்த இறையன்பை வழங்குவதற்காக நீங்கள் அவதரித்திருக்கிறீர்கள்.” ஸமர்பயிதும் உன்னதோஜ்வல-ரஸாம்—மிகவுயர்ந்தது மட்டு

மின்றி உன்னதமான ரஸமுமாகும். புரட-ஸுந்தர-த்யுதி—உங்கள் மேனி நிறம் தங்கம் போன்றது, தங்கத்தின் ஜொலிப்பைப் போன்றது. “நீங்கள் கருணைமிக்கவராகையால், எல்லாருடைய இதயத்திலும் சைதன்ய மஹாபிரபுவாகிய உங்களின் இவ்வடிவம் நடனமாடிக் கொண்டிருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.” (புலன்களை வென்றுள்ள கோஸ்வாமிகள் எல்லாரையும் வாழ்த்தும் தகுதி பெற்றவர்கள்).

ரூப கோஸ்வாமி பகவான் சைதன்ய மஹாபிரபுவை பிரயாகையில் முதன்முதலாக சந்தித்தபோது, சைதன்ய மஹாபிரபு, “ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண” என கீர்த்தனம் செய்தபடி தெருவில் ஆடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்திலும் ரூப கோஸ்வாமி பிரார்த்தனை செய்தார். நமோ-மஹா-வதான்யாய க்ருஷ்ண-ப்ரேம-ப்ரதாய தே, “எல்லா அவதாரங்களிலும் மிகவும் தயாள குணமுடையவர் நீரே; ஏனெனில், நீர் கிருஷ்ண பிரேமையை விநியோகிக்கிறீர்.” க்ருஷ்ண-ப்ரேம-

ப்ரதாய தே/ க்ருஷ்ணாய க்ருஷ்ண-சைதன்ய நாம்னே கௌர-த்விஷே நம:, “நீர் கிருஷ்ணரே, கிருஷ்ணராக இல்லாவிடில் உம்மால் கிருஷ்ண பிரேமையை (இறையன்பை) வழங்க முடியாது.” கிருஷ்ண பிரேமை அவ்வளவு எளிதில் பெறக்கூடியதல்ல. ஆனால், நீர் அந்த பிரேமையினை எல்லாருக்கும் தாராளமாக வழங்குகிறீர்.”

இவ்வாறாக இந்தியாவின் வங்காளத்தில் உள்ள நவத்வீபத்தில் இந்த ஸங்கீர்த்தன இயக்கம் தொடங்கப்பட்டது. இது வங்காளத்தில் துவக்கப்பட்டது அப்பகுதி மக்களின் நல்லதிர்ஷ்டமே. அவர் தீர்க்க தரிசனமாகக் கூறினார்:

ப்ரிதிவீதே அசே ஜத நகராதி க்ராம

ஸர்வத்ர ப்ரசார ஹஇபே மோர நாம

“உலகின் எல்லா நகரங்களிலும் கிராமங்களிலும் எங்கும் இந்த ஸங்கீர்த்தன முறை போதிக்கப்படும்.” இதுவே அவரது தீர்க்க தரிசனம்.

உலகெங்கும் ஹரி நாம ஸங்கீர்த்தனம்

இவ்வாறாக, சைதன்ய மஹாபிரபுவின் கருணையால் ஏற்கனவே இந்த ஸங்கீர்த்தன இயக்கம் 1966இல் நியூயார்க்கில் தொடங்கி மேல்நாடுகளில் பிரபலமாகியுள்ளது. அப்போது நான் டாம்ப்கின்ஸ் சதுக்கத்தில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை கீர்த்தனம் செய்யத் தொடங்கினேன். ஒரு சிறிய மிருதங்கத்துடன் மூன்று மணி நேரம் கீர்த்தனம் செய்தேன். அங்கு கூடிய அமெரிக்க இளைஞர்கள் மெல்ல மெல்ல என்னோடு சேர்ந்து பாடத் தொடங்கினர். அவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது. முதன்முதலாக நியூயார்க்கின் இரண்டாவது அவென்யூ, 26ம் எண் கொண்ட இடத்தில் இவ்வியக்கம் துவக்கப்பட்டது.

பின்னர் எங்கள் கிளைகளை சான்பிரான்சிஸ்கோ, மாண்ட்ரியல், போஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், பஃபலோ, கொலம்பஸ் ஆகிய நகரங்களில் தொடங்கினோம். இப்போது [1969] இருபத்துநான்கு கிளைகள் உள்ளன, இதில் இலண்டன், ஹாம்பர்க் ஆகிய இடங்களும் அடங்கும். இலண்டன் கிளையில் உள்ளவர்கள் எல்லாரும் இளைஞர்களும் யுவதிகளுமே. அவர்களும் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்கள் சந்நியாசிகளோ வேதாந்திகளோ இந்துக்களோ இந்தியர்களோ அல்ல; ஆனால் இந்த இயக்கத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

“கிருஷ்ண கீர்த்தனம் இலண்டனை உசுப்புகிறது,” எனும் தலைப்பில் இலண்டன் டைம்ஸ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. என் சீடர்கள் எல்லாரும்—குறைந்தபட்சம் இந்த நாட்டிலுள்ள சீடர்கள் எல்லாரும்—அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே. இவர்கள் ஆடிப்பாடி கீர்த்தனம் செய்து பகவத் தரிசனம் (Back to Godhead) பத்திரிகையை விநியோகிக்கின்றனர். நாங்கள் தற்போது ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை உண்மையுருவில், சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள், ஈஷோபநிஷத் முதலிய பல புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். இந்த இயக்கம் வெறும் உணர்ச்சிபூர்வமான இயக்கமல்ல. இந்த இளைஞர்கள் மத உணர்ச்சியாலோ மத

வெறியினாலோ உந்தப்பட்டு ஆடிப்பாடுகிறார்களென்று எண்ணாதீர்கள். நாங்கள் மிகவுயர்ந்த தத்துவத்தையும் சாஸ்திரப் பின்னணியும் கொண்டுள்ளோம்.

பிரயாகையில் சைதன்ய மஹாபிரபு ரூப கோஸ்வாமிக்கு உபதேசம் அளித்தல்

ஆடிப்பாடுதல் மட்டுமா?

சைதன்ய மஹாபிரபுவைப் பாருங்கள். அவர் பிரச்சாரம் செய்த காலத்தில், ஒருமுறை மாயாவாத சந்நியாசிகளின் இருப்பிடமான வாரணாசிக்குச் சென்றார். அங்கு அவர் கீர்த்தனம் புரிந்து ஆடிக் கொண்டிருந்தார். சிலர் அதனை மிகவும் விரும்பி ரசிக்க, அவர் வெகுவிரைவில் பிரபலமானார். ஆயிரக்கணக்கான மாயாவாத சந்நியாசிகளின் தலைவரான பிரகாசானந்த சரஸ்வதிக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது: “வங்காளத்திலிருந்து இளம் சந்நியாசி ஒருவர் வந்துள்ளார். இவர் மிகவும் இனிமையாக கீர்த்தனம் செய்து ஆடுகிறார்.” மாபெரும் வேதாந்தியான பிரகாசானந்த சரஸ்வதிக்கு அது பிடிக்கவில்லை. “அவர் ஒரு போலி சந்நியாசி; ஆடிப்பாடுவது சந்நியாசி செய்யும் காரியமல்ல. உண்மையான சந்நியாசி எப்போதும் தத்துவத்தையும் வேதாந்தத்தையும் படித்துக் கொண்டிருக்க வேண்டும்,” என்று பிரகாசானந்தர் கூறினார்.

பிரகாசானந்த சரஸ்வதியின் கூற்றை விரும்பாத பக்தர் ஒருவர் சைதன்ய மஹாபிரபுவிடம் சென்று, அந்த குற்றச்சாட்டைப் பற்றி தெரிவித்தார். பின்னர், அந்த பக்தர் சந்நியாசிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அதில் பிரகாசானந்த சரஸ்வதிக்கும் சைதன்ய மஹாபிரபுவிற்கும் இடையே வேதாந்தம் பற்றி தத்துவரீதியிலான விவாதம் நடைபெற்றது. சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள் (Teachings of Lord Caitanya) என்னும் எமது நூலில் இதைப் பற்றிய விவரங்களும் தத்துவ வாதங்களும் தரப்பட்டுள்ளன. பிரகாசானந்தரும் அவரது சீடர்களும் வைஷ்ணவர்களாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோலவே, அக்காலத்தின் மாபெரும் தர்க்கசாஸ்திரியும் மாயாவாத அருவவாதியுமான ஸார்வபௌம பட்டாச்சாரியருடன் சைதன்ய மஹாபிரபு மிகப்பெரிய விவாதமொன்றை நிகழ்த்தி அவரையும் வைஷ்ணவத்திற்கு மாற்றினார். எனவே, சைதன்ய மஹாபிரபுவின் இயக்கம் வெறும் உணர்ச்சிபூர்வமானதல்ல. இந்த ஸங்கீர்த்தன இயக்கம் தத்துவபூர்வமானது, தர்க்கபூர்வமானது. இந்த இயக்கம் விஞ்ஞானம் மற்றும் வேத அதிகாரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதே சமயத்தில், அனைத்தும் எளிதாக்கப்பட்டுள்ளது. இதுவே இந்த இயக்கத்தின் சிறப்பு. ஒருவர் பெரிய பண்டிதரானாலும் தத்துவ ஞானியானாலும் குழந்தையானாலும் இதில் எந்த சிரமமுமின்றி பங்கு பெறலாம்.

நாம ஸங்கீர்த்தனமே தீர்வு

தன்னுணர்வு பெறுவதற்கு இதர முறைகளான ஞான முறையும் யோக முறையும் அங்கீகரிக்கப்பட்டவையே எனும்போதிலும், அவற்றை இந்த யுகத்தில் பயில்வது சாத்தியமல்ல. இதுவே வேதங்களின் தீர்ப்பு:

க்ருதே யத் த்யாயதோ விஷ்ணும்

த்ரேதாயாம் யஜதோ மகை:

த்வாபரே பரிசர்யாயாம்

கலௌ தத் தரி-கீர்தனாத்

(ஸ்ரீமத் பாகவதம் 12.3.52)

பொற்காலமாகிய ஸத்ய யுகத்தில் தியான முறையைப் பயில்வது சாத்தியமாக இருந்தது. முனிவர்கள் பக்குவம் பெறுவதற்காக அறுபதாயிரம் ஆண்டுகள்கூட தவமிருந்தனர். ஆனால் இப்போது நம் அதிகபட்ச வயது என்ன? மேலும், பகவத் கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளபடி, ஒருவர் தியானம் செய்வதற்கு தனிமையான இடத்தைத் தேர்ந்தெடுத்து தனிமையில் அதை நிறைவேற்ற வேண்டும்; நிமிர்ந்து உட்கார வேண்டும், உடலுறவு அறவே இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. ஆகையால், அஷ்டாங்க யோக வழிமுறை சாத்தியமில்லை. அதனை நகல் செய்வதில் ஒருவர் மகிழ்ச்சி கொண்டால் அது வேறு விஷயம். ஆனால், முழுமையான பக்குவநிலையை அடைய விரும்புபவர்கள் அஷ்டாங்க யோகத்தின் எட்டு நிலைகளையும் அனுஷ்டிக்க வேண்டும். இது சாத்தியமில்லாவிடில், அவை வெறும் கால விரயமே.

யோகம் அல்லது தியானத்தின் இறுதி இலக்கு என்ன? உன்னதமானவரும், முழுமுதற் கடவுளுமான பரமாத்மாவுடன் தொடர்புகொள்வதுதான் எல்லா யோக முறைகளின் நோக்கம். அதுபோலவே, தத்துவ ஆராய்ச்சியான ஞான முறையும் பரபிரம்மனை அறிவதற்காக ஏற்பட்டது. இவையெல்லாம் சந்தேகமின்றி அங்கீகரிக்கப்பட்ட முறைகளே; எனினும், அதிகாரபூர்வமான கருத்தின்படி இரும்பு யுகமாகிய இந்த கலி யுகத்தில் இவை நடைமுறையில் சாத்தியமானவை அல்ல. எனவே, ஹரி கீர்த்தன முறையை மேற்கொள்ள வேண்டும், இதனை முன் தகுதிகள் ஏதுமின்றி அனைவரும் பயிலலாம். ஒருவன் தத்துவமோ வேதாந்தமோ பயில வேண்டிய அவசியமில்லை. பிரகாசானந்த சரஸ்வதியுடன் சைதன்ய மஹாபிரபு நடத்திய விவாதத்தின் முடிவு இதுவே.

எனவே, சைதன்ய மஹாபிரபு காட்டியுள்ள ஹரே கிருஷ்ண மந்திர கீர்த்தன வழியைப் பின்பற்ற வேண்டும். இதனால் கிடைக்கும் முதல் நன்மை, சேதோ-தர்பண-மார்ஜனம்—கீர்த்தனம் செய்வதால் இதயத்தின் மாசுகள் அனைத்தும் நீங்கிவிடும். கீர்த்தனம் செய்யுங்கள். இதில் செலவோ நஷ்டமோ இல்லை. ஒரு வாரம் ஒருவன் கீர்த்தனம் செய்தால்கூட ஆன்மீக ஞானத்தில், உணர்வில் முன்னேற்றம் ஏற்படுவதை அவன் காணலாம்.

நாங்கள் பல மாணவர்களை கீர்த்தனத்தின் மூலமாகக் கவர்கிறோம். மேலும், அவர்கள் முழு தத்துவத்தையும் புரிந்துகொண்டு பரிசுத்தமடைந்து வருகிறார்கள். இந்த இயக்கம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1966இல் தான் தொடங்கப்பட்டது. தற்போது பல கிளைகளைக் கொண்டிருக்கிறது. அமெரிக்க இளைஞர்களும் இளம் பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். அவர்களில் யாரையும் கேளுங்கள். சேதோ-தர்பண-மார்ஜனம். ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே/ ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே என்று கீர்த்தனம் செய்வதன் மூலம் இதயத்திலுள்ள எல்லா களங்கங்களையும் நீக்கிக் கொள்கிறார்கள்.

ஸ்ரீல பிரபுபாதர் டாம்ப்கின்ஸ் சதுக்கத்தில் ஹரே கிருஷ்ண மந்திரத்தை கீர்த்தனம் செய்தல்

துன்பங்களைப் போக்கும் ஹரி நாமம்

அடுத்து, பவ-மஹா தாவாக்னி-நிர்வாபணம், இதயத்தின் களங்கங்கள் எல்லாம் நீங்கியபின் ஜட வாழ்வின் பிரச்சனைகள் எல்லாம் உடனடியாகத் தீர்ந்து விடுகின்றன. இந்த உலகம் தாவாக்னி, அதாவது காட்டில் கொழுந்து விட்டெரியும் பெருநெருப்பிற்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பௌதிக வாழ்வில் யாரும் துன்பத்தை விரும்புவதில்லை. ஆனால் அது வந்தே தீருகிறது. இதுவே பௌதிக இயற்கையின் நியதி. யாரும் நெருப்பை விரும்புவதில்லை. ஆனால் நகரங்களில் தீயணைக்கும் படை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. எப்போதும் எங்காவது தீப்பற்றிக் கொள்கிறது. அதுபோலவே, எவரும் விரும்பாத பல விஷயங்கள் உள்ளன. யாரும் மரணத்தை விரும்புவதில்லை, ஆனால் மரணம் ஏற்படுகிறது. யாரும் நோயை விரும்புவதில்லை, ஆனால் நோய் வருகிறது. யாரும் முதுமையை விரும்புவதில்லை, ஆனால் முதுமை வருகிறது. அவையெல்லாம் நாம் விரும்பாவிட்டாலும் நேரிடுகின்றன.

எனவே, இந்த பௌதிக வாழ்வின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மனிதப் பிறவி சிந்தித்து புரிந்துகொள்வதற்காக ஏற்பட்டது. விலங்குகளைப் போல் உண்பதிலும் உறங்குவதிலும் உடலுறவிலும் தற்காப்பிலும் பொன்னான வாழ்வை வீணாக்குவதற்கல்ல. இவையெல்லாம் மனித நாகரிகத்தின் முன்னேற்றங்கள் அல்ல. இந்த உடல் புலனின்பத்தைப் பெற கடினமாக உழைப்பதற்காக ஏற்பட்டதல்ல என்று பாகவதம் கூறுகிறது (5.5.1):

நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ருலோகே

கஷ்டான் காமான் அர்ஹதே வித்-புஜாம் யே

மிக கடினமாக உழைத்து புலனுகர்ச்சியினால் திருப்தியடைதல் பன்றிகளின் செயல், மனிதர்களுக்கான செயலல்ல. மனிதனாகப் பிறந்தவன் தவத்தை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இந்தியாவில் பற்பல முனிவர்களும் அரசர்களும் பிரம்மசாரிகளும் சந்நியாசிகளும் அறியாமையில் மேலும் ஆழ்ந்துவிடாமல் இருக்க வாழ்க்கை முழுவதும் தவத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தியா ஒரு தவ பூமி என்பதை மறந்து தற்போது அதை தொழில்நுட்ப நாடாக்கி வருகிறோம். தர்ம பூமியான இந்தியா (தர்ம-க்ஷேத்ரே குரு-க்ஷேத்ரே) இப்போது தவத்தை வளர்ப்பதில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

இரும்பு யுகமான தற்போதைய யுகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி எல்லா இடங்களிலும் எல்லாமே சீர்கெட்டுப் போயுள்ளது. அதாவது, ப்ராயேணால்பாயுஷ: ஸப்ய கலாவ் அஸ்மின் யுகே ஜனா: (ஸ்ரீமத் பாகவதம் 1.1.10). இந்த கலி யுகத்தில் மனிதனின் ஆயுள் மிகவும் குறுகியுள்ளது. மக்கள் தன்னுணர்வு பெறுவதில் ஆர்வமற்று இருக்கின்றனர். அப்படியே ஆர்வம் இருந்தாலும், ஏமாற்றும் தலைவர்களால் திசைதிருப்பப்படுகிறார்கள். இந்த யுகம் மிகவும் தரம்தாழ்ந்தது. எனவே, சைதன்ய மஹாபிரபுவின் ஹரே கிருஷ்ண மந்திர உச்சாடனம் இந்த யுகத்திற்கு மிகவும் சிறந்ததும் எளிதானதுமாகும்.

ஹரேர் நாம ஹரேர் நாம

ஹரேர் நாமவை கேவலம்

கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ

நாஸ்த்யேவ கதிர் அன்யதா

“இந்த கலி யுகத்தில் பகவானின் திருநாமத்தை உச்சாடனம் செய்து அவரைப் புகழ்ந்துரைப்பதைத் தவிர இதர தர்மம் எதுவும் கிடையாது. இதுவே அனைத்து சாஸ்திரங்களின் கருத்தாகும். இதைத் தவிர வேறு கதியில்லை, வேறு கதியில்லை, வேறு கதியில்லை.” இந்த ஸ்லோகம் ப்ருஹன்-நாரதீய புராணத்தில் வருகிறது. ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம். எளிமையாக ஹரே கிருஷ்ண என்று உச்சாடனம் செய்யவும். இதைத் தவிர வேறு உபாயம் இல்லை. கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா. இக்கலி யுகத்தில் தன்னுணர்விற்கு இதைத் தவிர வேறு உபாயம் இல்லை. எனவே, நாம் இதனை ஏற்றுக் கொண்டாக வேண்டும்.

இது நடைமுறைக்கு சாத்தியமானது, அங்கீகரிக்கப்பட்டது. மேலும், எளிமையான இந்த உச்சாடனத்தின் மூலம் எவ்வாறு ஒருவர் முன்னேற்றமடைகிறார் என்பதை அவரே சோதித்து உணர முடியும். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் புதிதான ஒன்றல்ல, நாங்கள் அறிமுகப்படுத்தியதோ தயாரித்ததோ அல்ல. இது வேதக் கொள்கைகளாலும் சைதன்ய மஹாபிரபு போன்ற ஆச்சாரியர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், வழிமுறையோ மிகவும் எளிமையானது; எந்த இழப்பும் இல்லாதது. நாங்கள் பணம் எதுவும் வசூலிப்பதில்லை, கட்டணம் வாங்கிக் கொண்டு ஏதோ இரகசியமான மந்திரத்தை உபதேசித்து ஆறு மாதத்தில் கடவுளாகி விடலாம் என்று உறுதியளிப்பதில்லை. இவ்வியக்கம் குழந்தைகள், பெண்கள், யுவதிகள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் உரித்தானது. அனைவரும் இம்மந்திரத்தை உச்சாடனம் செய்து அதன் விளைவுகளைக் காணலாம்.

எனவே, இந்த இயக்கத்தில் இணைந்து இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதுவே எங்களின் வேண்டுகோள். மிக்க நன்றி.

மாயாவாத சந்நியாசிகளின் கூட்டத்தின் மத்தியில் சைதன்ய மஹாபிரபு தத்துவரீதியிலான விவாதம் நடைபெறுதல்

சைதன்ய மஹாபிரபு காட்டியுள்ள ஹரே கிருஷ்ண மந்திர கீர்த்தன வழியைப் பின்பற்றவதே கலி யுகத்தின் தர்மமாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives