மிருகமாகப் பிறக்கப் போகும் பிரபுபாதர்?

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

ஸ்ரீல பிரபுபாதர் ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது, அவரது பிரச்சாரத்தையும் கிருஷ்ண பக்தி இயக்கத்தையும் விரும்பாத சில பத்திரிகைகள் பல்வேறு விதமான கேலி செய்திகளை பிரசுரித்திருந்த சமயம். அந்த கேலி செய்திகளின் உச்சகட்டமாக, சன் (sun) என்ற பத்திரிகையின் நிருபர், “மிருக நிலைக்கு தாழ்ந்து விடுவோம்” என்ற பிரபுபாதரின் எச்சரிக்கையை முற்றிலுமாகத் திரித்து, பின்வருமாறு பிரசுரித்தார்:

“கிருஷ்ண இயக்கத்தின் நிறுவனர், “நான் மிருகமாகத் திரும்பி வருவேன்,” என்று கூறினார்…

“தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் விரைவில் மரணமடைய உறுதி பூண்டுள்ளார். இறந்த பின்னர், அவர் மீண்டும் மிருகமாகத் திரும்பி வருவார்…”

பக்தர்கள் பெரிதும் வருத்தமுற்றனர், அமோக தாஸ் என்னும் பக்தர் உடனடியாக மறுப்பு கடிதத்தை தயார் செய்தார். பக்தர்கள் அனைவரின் மத்தியில் இதுவே பேச்சாக அமைந்தது. காலையில் ஸ்ரீமத் பாகவத வகுப்பில் சாதுக்களின் குறிக்கோள் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை செய்வதே என்பதைப் பற்றி ஸ்ரீல பிரபுபாதர் உரையாடிக் கொண்டிருந்தார்.

“தற்போது நான் அமெரிக்கனாக இருக்கலாம், ஐரோப்பியனாக இருக்கலாம், அல்லது ஆஸ்திரேலியனாக இருக்கலாம். ஆனால் அவை தற்காலிகமானவை; ஏனெனில், இந்த உடலே தற்காலிகமானது. உடல் அழிந்த உடனேயே நான் மற்றோர் அத்தியாயத்தைத் தொடங்க வேண்டும். நான் தற்போது மனித உடலில் இருக்கலாம், ஆனால் அடுத்த பிறவியில் நான் மனிதனாக இல்லாமல் இருக்கலாம்.”

சொற்பொழிவை சில நொடிகள் நிறுத்திய ஸ்ரீல பிரபுபாதர் அறையிலிருந்த அனைவரையும் பார்த்து கூறினார், “இந்தக் கூற்றினை செய்தியாளர்கள் விரும்பவில்லை.”

பக்தர்கள் சிரிக்க, பிரபுபாதர் தொடர்ந்தார்: “அந்த நிருபரிடம் ‘நீங்கள் மிருகமாகப் போகிறீர்,’ என்று கூறினோம். அவர் அதனை எனது பெயரில் பிரசுரித்துள்ளார். ‘சுவாமி மிருகமாகப் போகிறார்.’ ஆம், ஸ்வாமிகள் மிருகமாகலாம், பெயரளவிலான போலி ஸ்வாமிகள்.” (பக்தர்கள் மேலும் சிரித்தனர்)

“பக்தர்களாகிய நாம் மிருகமாகப் போவதைக் கண்டு அஞ்சுவதில்லை. நமது ஒரே குறிக்கோள் கிருஷ்ண உணர்வை அடைவது மட்டுமே. கிருஷ்ண உணர்வில் மிருகங்கள், பசுக்கள், கன்றுகள் என பலரும் ஈடுபடலாம். நீங்கள் கிருஷ்ணரின் படத்தைப் பார்த்துள்ளீர்களா? ஆம். கிருஷ்ணரின் மிருகமாக மாறுதல் சிறந்ததாகும்.

“எனவே, இதில் எந்தப் பிழையும் இல்லை. நாம் கிருஷ்ணரின் மிருகங்களாக மாறினால், அதுவும் மிகவும் பயனுள்ளதாகும். அது சாதாரண நிலையல்ல. கிருஷ்ணருடனான எல்லா துணைவர்களும்—இடையர் குல நண்பர்கள், கன்றுகள், பசுக்கள், மரங்கள், செடிகள், பூக்கள், நீர்—என அனைவரும் கிருஷ்ணரின் பக்தர்களாவர். அவர்கள் கிருஷ்ணருக்கு வெவ்வேறு விதங்களில் சேவை செய்ய விரும்புகின்றனர். எனவே, கிருஷ்ணரின் மிருகமாகுதல் என்பது மாபெரும் பாக்கியமே…”

முட்டாள்தனமான கட்டுரையிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் ஒரு சிறப்பான விளக்கத்தை வழங்கியதைக் கேட்ட பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியுற்றனர். அவர் மேலும் தொடர்ந்து கூறினார்: ஹரே கிருஷ்ண என்று பகவானின் திருநாமத்தை அவர்கள் அச்சிட்டதன் மூலமாக அதனைப் படிப்பவர்கள் மாபெரும் நன்மையைப் பெறுவர். அப்பெயர்கள் மரியாதையுடன் எழுதப்பட்டிருந்தாலும் மரியாதைக் குறைவாக எழுதப்பட்டிருந்தாலும், திருநாமம் படிப்பவர்களுக்கு நன்மை தரும் என்று விளக்கினார்.

“செய்தித்தாள்களில் நீங்கள் பல்வேறு செய்திகளைக் கேட்கின்றீர். ஆனால் நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி ஏதேனும் செவியுற்றால், அது மட்டுமே பக்குவமானதாகும். ‘கிருஷ்ண இயக்கத்தின் தலைவர்,’ ‘இந்த ஹரே கிருஷ்ண இயக்கம்,’ என பல்வேறு செய்தித்தாள்களில் எப்படியோ ‘கிருஷ்ண’ என்னும் சொல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

“இஃது உலகைத் தூய்மைப்படுத்தும். பல்லாயிரக்கணக்கான இலட்சக்கணக்கான மக்கள் ‘கிருஷ்ண’ நாமத்தை விரும்பியோ விரும்பாமலோ படிப்பர். அஃது அவர்களுக்கு நன்மை தரும். ‘கிருஷ்ண’ நாமத்தை அவர்கள் ஒருமுறை உச்சரித்தால்கூட, அவர்கள் நன்மையடைவர். செய்தியில் என்ன உள்ளது என்பதைப் பொருட்படுத்த வேண்டாம். நாம் அதைக் கண்டுகொள்வதில்லை.”

பக்தர்கள் அனைவரும் சிரிப்பில் மூழ்கினர்.

“வாசகர்கள் ‘கிருஷ்ண’ நாமத்தை உச்சரிப்பர் என்பதால், அஃது அவர்களுக்கு இலாபம் தரும், கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கும் இலாபம் தரும். எனவே, அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.”

தம்மை இகழ்ந்துரைத்த பத்திரிகை செய்தியில்கூட நல்ல கருத்தை வழங்கிய ஸ்ரீல பிரபுபாதரின் பெருமைகளை அன்றாடம் நினைவுகூர்வோம்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives