பல்வேறு வர்ஷங்களில் நிகழும் வழிபாடுகள்

Must read

Vanamali Gopala Dasa
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்

அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.

தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இந்த இதழில்: ஐந்தாம் ஸ்கந்தம், அத்தியாயம் 17–18

சென்ற இதழில் பரத மன்னரின் வம்சத்தைப் பற்றியும் ஜம்பு த்வீபத்தின் வர்ணனையைப் பற்றியும் பார்த்தோம். இந்த இதழில் கங்கை நதியைப் பற்றியும் வெவ்வேறு வர்ஷங்களில் (நிலப்பரப்புகளில்) நடைபெறும் வழிபாட்டு முறைகளைப் பற்றியும் காணலாம்.

துருவ லோகத்தில் கங்கை

பகவான் விஷ்ணு, பலி மஹாராஜரின் வேள்விச் சாலையில் வாமன தேவராகத் தோன்றி மூன்றடி நிலம் கேட்டு மூவுலகையும் அளப்பதற்காகத் தமது திருவடியைத் தூக்கியபோது, அவரது இடது திருவடியின் பெருவிரல் நகம்பட்டு, பிரபஞ்சத்தின் மேல்பாகம் பிளந்தது. அந்தத் துளை வழியாக காரணக் கடலின் தூய நீரானது கீழிறங்கி கங்கை நதியாக இப்பிரபஞ்சத்திற்குள் வந்தது. ஓராயிரம் வருடங்கள் கீழ்நோக்கிப் பயணித்து, பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த இடத்திலுள்ள துருவ லோகத்தை வந்தடைந்தது.

பகவானின் திருவடிகளை நீராட்டிவரும் அப்புனித கங்கையின் மகிமையை உணர்ந்திருந்த மாபெரும் பக்தரான துருவ மஹாராஜர், அந்நீரை பக்தியுடன் தலையில் தாங்கி ஆனந்த பரவசமடைந்தார். அதன் பின் கங்கை சப்த ரிஷி மண்டலம் வழியாக ஓடியபோது, பக்தித் தொண்டே நிறைவான வாழ்வு என்பதை உணர்ந்த சப்த ரிஷிகள் கங்கை நீரை மிகுந்த மரியாதையுடன் தங்கள் ஜடாமுடிகளில் தாங்கிக் கொண்டனர்.

கங்கை பூமிக்கு வந்தடைதல்

அங்கிருந்து கங்கை நதி கோடிக்கணக்கான விமானங்கள் வட்டமிடும் வானவீதி வழியாக இறங்கி, சந்திரமண்டலத்தை நனைத்து, மேரு பர்வதத்தின் முகட்டிலுள்ள பிரம்ம தேவரது பட்டணத்தை அடைகிறது. அங்கு சீதா, அலகநந்தா, சக்ஷு, பத்ரா என்ற பெயர்களில் நான்காகப் பிரிந்து தனித்தனியாக நான்கு திசைகளிலும் பரவி ஓடி, முடிவில் சமுத்திரத்தில் கலக்கின்றது.

இலாவ்ருத வர்ஷத்தில் சிவபெருமான் ஸங்கர்ஷணரை வழிபடுதல்

மண்ணுலக ஸ்வர்கங்கள்

இப்பூமண்டலத்தில் ஒன்பது வர்ஷங்கள் (நிலப்பரப்புகள்) உள்ளன. இந்த அனைத்து வர்ஷங்களிலும் பாரத வர்ஷம்தான் கர்ம வினைகள் செய்வதற்கு உகந்த இடம். மற்ற எட்டு வர்ஷங்களும் மண்ணுலக ஸ்வர்கங்களாகும். உயர்ந்த புண்ணியங்களில் ஈடுபட்டு மேலுலக ஸ்வர்கங்களில் வாழ்ந்த ஜீவன்கள் அங்கிருந்து திரும்பி வந்தபின் எஞ்சியிருக்கும் புண்ணிய பலன்களை இந்த எட்டு வர்ஷங்களில் வாழ்ந்து அனுபவிக்கின்றனர். ஆகையால், இவை மண்ணுலகின் ஸ்வர்கங்கள் என்று அறியப்படுகின்றன.

அங்குள்ள மனிதர்கள் ஏறக்குறைய தேவர்களைப் போல வாழ்கின்றனர், அவர்களின் ஆயுள் நம்முடைய கணக்குப்படி பத்தாயிரம் வருடங்கள். அவர்களது உடல் பத்தாயிரம் யானை பலம் கொண்டது, வலிமைமிக்கது, இளமையானது, பெருமகிழ்ச்சி தரவல்லது. அதனால், இவர்கள் நீண்ட காலம் வரை புலனின்பச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அதற்காக தோட்டங்கள், அருவிகள், நந்தவனங்கள், குளங்கள், மலர்கள், இனிய ஒலி எழுப்பும் வண்டுகள், பறவைகள் என எல்லா வசதிகளும் அங்கு நிறைந்துள்ளன. இங்கே தடையின்றி புலனின்பம் அனுபவித்தபின், ஆயுளின் இறுதியாண்டில் அவர்களின் மனைவி கருவுறுகிறாள்.

(குறிப்பு: மேலுலகம், மண்ணுலகம், கீழுலகம் என்னும் மூவகை ஸ்வர்க போக வசதிகளிலும் பக்தர்கள் சிறிதும் நாட்டம் கொள்வதில்லை. ஏனெனில், கிருஷ்ணரது பக்தித் தொண்டு உன்னத சுவையுடையது. அது ஸ்வர்க லோக இன்பங்களைவிட பல கோடி மடங்கு உயர்ந்ததும் தூய்மையானதும் ஆத்மாவை பூரணமாக திருப்திப்படுத்துவதும் ஆகும்.)

ஸங்கர்ஷண வழிபாடு

இந்த ஒன்பது வர்ஷங்களில் வாழும் பக்தர்களுக்கு பகவான் கிருஷ்ணர் தமது பல்வேறு வடிவங்களில் அருள்பாலிக்கிறார். இலாவ்ருத வர்ஷம் எனும் நிலப்பகுதியில் சிவபெருமான் தம் துணைவியான துர்கையுடன் வாழ்கிறார். அந்நிலப்பரப்பில் நுழையும் எந்தவோர் ஆணும் உடனே பெண்ணாக மாறிவிடுவார். (இதன் விளக்கத்தை ஒன்பதாவது ஸ்கந்தத்தில் காணலாம்). இங்கே சிவபெருமான் ஓம் நமோ பகவதே மஹா புருஷாய ஸர்வ குண ஸங்க்யானாய அனந்தாய அவ்யக்தாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்தபடி பகவான் ஸங்கர்ஷணரை வழிபட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த அழகிய இடத்தில், சிவபெருமான் பகவான் ஸங்கர்ஷணருக்கு பின்வருமாறு பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கிறார்.

“முழுமுதற் கடவுளே! நீங்கள் அளப்பரியவர் என்றபோதிலும், பக்தர் அல்லாதோருக்கு தங்களை வெளிப்படுத்துவதில்லை. விருப்பு, வெறுப்பு உணர்வுகளால் பாதிக்கப்படாத தங்களிடம் சரணாகதி அடைவதால் மட்டுமே, ஒருவனால் மாயா சக்தியின் பாதிப்பிலிருந்து விடுதலை அடைய முடியும். தாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் சற்றும் கிளர்ச்சி அடைவதே இல்லை.

“எப்போதும் தாங்கள் சமத்துவம் உடையவராக இருக்கிறீர்கள். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களுக்கும் மூல காரணமாக இருப்பினும், தாங்கள் நேரடியாக இவற்றில் ஈடுபடுவதில்லை. தங்களின் அவதாரமான ஆதிசேஷன் எல்லா பிரபஞ்சங்களையும் தலையில் கடுகுகளைப் போல் தாங்கிக் கொண்டுள்ளார்.

“தங்களிடமிருந்தே பிரம்மதேவர் தோன்றினார், அவரிடமிருந்தே நான் தோன்றினேன். எல்லா ஜீவன்களும் தங்களது மாயா சக்தியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர். தங்களது கருணையின்றி ஒருவரும் மாயையின் பிடியிலிருந்து விடுதலை பெற இயலாது. தங்களுக்கு என் மரியாதை கலந்த வணக்கங்களை மீண்டும்மீண்டும் சமர்ப்பிக்கிறேன்.”

ஹயக்ரீவர் அசுரனால் களவாடப்பட்ட வேதங்களை மீட்டு பிரம்மதேவரிடம் அளித்தல்

ஹயக்ரீவ வழிபாடு

பகவானின் ஹயக்ரீவ அல்லது ஹயஸீர்ஷ வடிவத்தை வழிபட்டு பின்வருமாறு தம் பிரார்த்தனைகளைச் செலுத்துகிறார்.

“சமய அறநெறிகளின் காவலரே! கட்டுண்ட ஆத்மாக்களின் இதயங்களைத் தூய்மை செய்பவரே, தங்களுக்கு என் மரியாதை கலந்த வந்தனங்களை சமர்ப்பிக்கின்றேன். மிகப்பெரிய தத்துவ அறிஞர்களும் தர்க்கவாதிகளும் உமது மாயா சக்தியால் குழப்பமடைகின்றனர். எல்லாவற்றிலிருந்தும் நீர் தனித்து விளங்கும்போதிலும் எல்லாவற்றிலும் நீரே செயல்படும் சக்தியாகத் திகழ்கிறீர்கள். உமது கற்பனைக்கெட்டாத சக்திகளின் மூலமே எல்லாம் நிகழ்கிறது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அசுரனால் களவாடப்பட்டு ரஸாதள லோகத்தில் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை பிரம்மதேவரின் வேண்டுதலின் பேரில் கைப்பற்றி மீட்டுத் தந்தவர் நீரே, தோல்வி காணாத உறுதி கொண்ட பரம புருஷராகிய உங்களுக்கு எம் மரியாதை கலந்த வணக்கங்கள்.”

நரசிம்ம வழிபாடு

ஹரி வர்ஷத்தில் பிரகலாத மன்னரும் அவரைச் சார்ந்தவர்களும், பகவான் நரசிம்ம தேவரிடம் பின்வருமாறு பிரார்த்திக்கின்றனர்.

“வஜ்ராயுதம் போன்ற நகங்களையும் பற்களையும் உடைய பகவானே! எங்கள் இதயங்களில் அன்புடன் எழுந்தருளுங்கள். எங்களது அறியாமையையும் அசுர ஆசைகளையும் தயவுகூர்ந்து நீக்கி அருள்வீராக! அப்போதே நாங்கள் பயமற்றவர்களாவோம். பக்தித் தொண்டை மேற்கொண்டு உயிர்வாழிகள் அனைவரும் சாந்தி பெறட்டும். இதனால், அவர்கள் பிறர் நலன் பற்றிச் சிந்தித்து, உமது புகழ்பாடி, பிரபஞ்சம் முழுவதற்கும் மங்கலத்தை உண்டாக்கட்டும்.

“தங்களது பக்தர்களிடம் நாங்கள் பற்றுடையவர்களாக இருக்க வேண்டும். எங்கள் காதுகள் எப்போதும் உமது ஆற்றல்மிக்க செயல்களைக் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அனைத்திலும் புனிதமான உங்கள் நாமங்கள் எங்களைப் புனிதப்படுத்துகின்றன. உங்கள் பக்தர்கள் அனைத்து நற்குணங்களையும் தாமாகவே பெறுகின்றனர். பக்தரல்லாதோர் மன யூகத்தால் கவரப்பட்டு வாழ்வின் குறிக்கோளை மறந்து, எல்லா நற்குணங்களையும் இழந்து விடுகின்றனர். தாங்களே பயமின்மையின் அடைக்கலம் ஆவீர். நாங்கள் உங்களிடம் என்றென்றும் சரணடைகின்றோம்.”

ரம்யக வர்ஷத்தில் வைவஸ்வத மனு பகவான் மத்ஸ்யரை பிரார்த்தனையின் மூலம் வழிபடுதல்

பிரத்யும்ன வழிபாடு

கேதுமால வர்ஷத்தில், ஸ்ரீ லக்ஷ்மிதேவி (காமதேவர்) ஸம்வத்ஸரன் எனப்படும் பிரஜாபதியின் புதல்வர்கள் மற்றும் புதல்விகளின் துணையோடு, மூல காமதேவனான பிரத்யும்னருக்கு தமது பிரார்த்தனைகளைப் பின்வருமாறு சமர்ப்பிக்கிறார்.

“பகவானே, தாங்கள் புலன்களை நெறிப்படுத்துபவரும் அனைத்து ஜீவராசிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்பவரும், அனைவரின் உண்மையான கணவரும் ஆவீர். வேத இலக்கியங்களைக் கற்றுணர்ந்தோர், உங்களது மேலாண்மையை உணர்ந்து, தாங்களே நாயகர் என ஏற்றுக் கொண்டுள்ளனர். தாங்கள் தங்களை வணங்கும் அனைத்து பெண்களின் ஜட மற்றும் ஆன்மீக ஆசைகளைப் பூர்த்தி செய்கிறீர்கள்.

“நான் தங்கள் பக்தர்களுக்கே என்றும் அருள் பாலிக்கிறேன், பக்தரல்லாதோருக்கு ஒருபோதும் கருணை காட்ட மாட்டேன். தாங்கள் என்னைவிட உங்கள் பக்தர்களிடமே அதிக கருணையைப் பொழிகிறீர்கள். தயவுசெய்து என் தலைமீது உங்கள் திருக்கரங்களை வைத்து ஆசீர்வதிப்பீராக.”

மத்ஸ்ய வழிபாடு

ரம்யக வர்ஷத்தில் வைவஸ்வத மனு ஆட்சி புரிகிறார். அவர் பகவான் மத்ஸ்யரை பின்வரும் பிரார்த்தனைகளால் வழிபடுகிறார்.

“அனைவரின் உடல் பலம், மனோ பலம், புலன் திறன் ஆகிய அனைத்திற்கும் தாங்களே ஆதாரமாவீர். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வர்ணங்கள் மற்றும் ஆஷ்ரமங்களில் அமைந்துள்ள எல்லா உயிர்வாழிகளையும் கட்டுப்படுத்துபவர் தாங்களே. உங்களை பக்தித் தொண்டால் மட்டுமே அறிய முடியும். பிரம்மா மற்றும் தேவர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் தனித்தோ சேர்ந்தோ இப்பிரபஞ்சத்தில் உள்ள எண்ணிலடங்காதோரைக் காக்க முடியாது. உண்மையில் மனிதர்கள், விலங்குகள், செடிகள், ஊர்வன, பறப்பன, மலைகள் போன்ற அனைத்தையும் பாதுகாப்பவர் நீங்களே. யுக இறுதியில் எல்லாவித மூலிகைகள், மருந்துகள், மரங்கள் போன்றவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் இப்பூமியைக் காத்து, அதீத வேகத்துடன் கடலில் சுற்றிக் கொண்டிருந்த மத்ஸ்ய (மீன்) ரூப பகவானே! தங்களுக்கு எங்கள் மரியாதையான வணக்கங்கள்!”

கூர்ம வழிபாடு

ஹிரண்மய வர்ஷத்தில் ஆளும் அர்யமான் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள் கூர்ம (ஆமை) வடிவில் உள்ள பரம புருஷ பகவானை பின்வருமாறு பிரார்த்தித்து வழிபடுகின்றனர்.

“பெளதிகத்தால் பாதிக்கப்படாதவரும் தூய ஸத்வ குணத்தில் இருப்பவருமான தாங்கள் கடந்த, நிகழ், எதிர் காலங்களில் ஆளுமைக்குக் கட்டுப்படாதவர் ஆவீர். இப்பிரபஞ்சத்தின் தோற்றம் தங்கள் படைப்புச் சக்தியின் தோற்றமாகும். தங்களின் உன்னத உருவத்தை பக்தியின்றி ஒருவராலும் உணர முடியாது. தங்களுக்கு மேலாகவோ சமமாகவோ ஒருவரும் இல்லை. இந்த உலகம் பொய்யானதல்ல. ஆனால் தற்காலிகமானது. இந்த பிரபஞ்ச படைப்பின் விஞ்ஞானத்தினை தாங்கள் கபிலதேவரின் வடிவத்தில் ஸாங்க்ய யோகமாக விளக்கி அருளியிருக்கிறீர். அனைத்திற்கும் அடைக்கலமாக விளங்கும் கூர்ம மூர்த்தி பகவானுக்கு எமது மரியாதை கலந்த வணக்கங்கள்.”

வராஹ வழிபாடு

உத்தர குரு வர்ஷத்தில் அன்னை பூமியும் அங்கு வசிப்பவரும் வராஹ ரூபத்தில் உள்ள பகவானை பின்வருமாறு போற்றித் துதிக்கின்றனர்.

“அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவர் தாங்களே, எல்லா வேள்விகளாகவும் சடங்குகளாகவும் இருப்பவர் தாங்களே. ஆறு செல்வங்களையும் முழுமையாக உடையவரான தாங்கள் கலி யுகத்தில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றுகிறீர்கள்.

“நீங்கள் உங்களை இதயபூர்வமாகத் தேடுபவனிடம் தங்களை வெளிப்படுத்துகிறீர்கள். ஜட சக்தியானது உங்களது புறச்சக்தி என்பதை அறிந்த யோகிகளால், அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாகவும் அனைத்திற்கும் பின்னணியாகவும் தாங்கள் விளங்குவதைப் புரிந்துகொள்ள முடியும். கட்டுண்ட ஆத்மாக்களின் மீது கருணை கொண்டு தாங்கள் ஜடத்தின் மீது பார்வையைச் செலுத்துவதால் அங்கு படைப்பு உண்டாகிறது. என்னைக் காக்க, நீங்கள் அசுரனான ஹிரண்யாக்ஷனுடன் போர் புரிந்து அவனை அழித்தீர்கள். என்னை உங்கள் தந்தத்தினால் தூக்கி, கர்போதகக் கடலிலிருந்து வெளியேற்றினீர்கள். உங்களின் திருவடிகளுக்கு அடிபணிந்து என்றென்றும் உம்மைப் போற்றுகின்றோம்.”

பிற நிலப்பகுதிகளையும் அங்கு நடக்கும் வழிபாடுகளையும் அடுத்த இதழில் காணலாம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives