வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
கொரோனா என்னும் கொடிய நோய் அனைவரையும் (நேரடியாகவோ மறைமுகமாகவோ) பாதித்துள்ளது. முக கவசம், சமூக இடைவெளி முதலியவற்றையும் மீறி, துரதிர்ஷ்டவசமாக, நமக்கும் கொரோனா வந்தால், என்ன செய்ய வேண்டும்?
அரசாங்கமும் மருத்துவர்களும் வழங்கக்கூடிய சிகிச்சைகளுக்கு பூரண ஒத்துழைப்பு தருவதுடன் இணைந்து, பக்தர்கள் (உண்மையில், எல்லா மக்களும்) கீழ்க்காணும் அறிவுரைகளைப் பின்பற்றினால் நிச்சயம் நன்மை விளையும்.
முதல் விஷயம், “கொரோனா வந்தாலும் மரணமடைய மாட்டோம்” என்பதில் நாம் பூரண நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதாவது, கொரோனாவினால் உடலுக்கு வேண்டுமானால் மரணம் நிகழலாம், ஆனால் நமக்கு (ஆத்மாவிற்கு) மரணம் கிடையாது என்பதை மீண்டும்மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
இரண்டாவதாக, ஒருவேளை இந்த உடல் மரணத்தைத் தழுவினாலும், நிச்சயம் நமது மறுபிறவி சிறப்பானதாகவே அமையும் என்பதில் பக்தர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். ஹரே கிருஷ்ண மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து, வாழ்வில் தூய பழக்கங்களுடன் வாழும் பக்தர்கள் நிச்சயம் இழிவான பிறவியை அடைய மாட்டார்கள். கிருஷ்ணரே கீதையில் (2.40) இதற்கு உறுதியளித்துள்ளார்.
மூன்றாவதாக, நாம் நம்மை முற்றிலும் மறுபிறவிக்கு தயார் செய்துகொள்ள வேண்டும். மாமன்னர் பரீக்ஷித்திற்கு ஏழு நாள் அவகாசம் கிடைத்தது. அப்போது அவர் எவ்வாறு தம்மை முற்றிலும் பக்குவப்படுத்திக் கொண்டாரோ, அதுபோல நாமும் நம்மைப் பக்குவப்படுத்த வேண்டும். மருத்துவமனைக்கு நம்முடன் மறக்காமல், பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் முதலிய நூல்களை எடுத்துச் சென்று இயன்றவரை படிக்க வேண்டும்; ஸ்ரீல பிரபுபாதரின் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும்; ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை இயன்றவரை அதிகமாக ஜபிக்க வேண்டும்; உறங்கும்போதும் ஸ்ரீல பிரபுபாதரின் கீர்த்தனம் நம்மைச் சுற்றி ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.
இவ்வாறு நோயை எதிர்கொண்டால், மருத்துவர்களின் சிகிச்சை ஒருபுறம் இருந்தாலும், நமது கர்மம், பக்தி, கிருஷ்ணரின் விருப்பம் ஆகியவற்றிற்கு ஏற்ப, நாம் வேறு உடலை ஏற்கலாம் (மரணமடையலாம்), அல்லது இதே உடலில் பக்தியைத் தொடரலாம் (பிழைத்துக்கொள்ளலாம்). இரண்டும் நமக்கு இலாபமே.