மனித வாழ்வை வீணடிக்க வேண்டாம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

நாயம் தேஹோ தேஹ-பாஜாம் ந்ரு-லோகே

கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே

தபோ திவ்யம் புத்ரகா யேன ஸத்த்வம்

ஷுத்த்யேத் யஸ்மாத் ப்ரஹ்ம-ஸெளக்யம் த்வனந்தம்

“அன்பு மைந்தர்களே! இவ்வுலகில் பௌதிக உடல்களைப் பெற்றுள்ள உயிர்களுக்கு மத்தியில் மனித உடலைப் பெற்றுள்ளவன் இரவுபகலாக வெறும் புலனுகர்ச்சிக்காக கடினமாக உழைக்கக் கூடாது. இப்புலனுகர்ச்சி மலத்தைத் தின்னும் நாய்களுக்கும் பன்றிகளுக்கும்கூட இருப்பதே. மனிதப் பிறவியைப் பெற்றவன் பக்தித் தொண்டின் தெய்வீக நிலையை அடைவதற்காக தவத்திலும் துறவு நெறிகளிலும் ஈடுபட வேண்டும். இச்செயல்களினால், ஒருவனது உள்ளம் தூய்மை அடைகிறது. மேலும், இந்நிலையினை அடையும்பொழுது, அவன் பெளதிக இன்பத்திற்கு அப்பாற்பட்ட என்றென்றும் தொடரக்கூடிய நிரந்தரமான ஆனந்த வாழ்வினை அடைகிறான்.” (ஸ்ரீமத் பாகவதம் 5.5.1)

பதவியிலிருந்து ஓய்வு பெறுதல்

இந்த ஸ்லோகம் அரசர் ரிஷபதேவரால் தமது மகன்களிடம் பேசப்பட்டதாகும். கிருஷ்ணருடைய அவதாரமான அரசர் ரிஷபதேவர் வெகு காலத்திற்கு முன்பாக முழு உலகிற்கும் பேரரசராக வாழ்ந்தவர். அவர் அரச பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக, தமது நூறு மகன்களையும் அழைத்து உபதேசம் வழங்கினார்.

அரசர் எதற்காக ஓய்வு பெற வேண்டும்? ஏனெனில், அதுவே வேத முறை. அரசராக இருந்தாலும், சாதாரண மனிதராக இருந்தாலும் குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற்று, கிருஷ்ணரை நாடிச் செல்ல வேண்டும். வேத கலாச்சாரத்தின் நோக்கம் ஒருவனை கிருஷ்ண உணர்வின் பக்குவத்திற்காக நெறிப்படுத்துவதாகும். துரதிர்ஷ்டவசமாக, பெயரளவிலான இன்றைய நவீன நாகரிகத்தில், நாட்டின் தலைவர்களும் சரி, குடும்பத்தலைவர்களும் சரி, ஓய்வு பெற்று கிருஷ்ணரை நாடிச் செல்வதே இல்லை. ஓர் ஏழை மனிதன் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையிலும்கூட குடும்பத்துடன் இருப்பதையே விரும்புகிறான், ஓய்வு பெற விரும்புவதில்லை.

எங்களது நாட்டில் வயதான அரசியல்வாதிகள் பலரும்—எழுபத்தைந்து வயது, எண்பது வயது—பணியிலிருந்து ஓய்வு பெற மறுப்பதைக் காண்கிறோம். இந்த நாட்டில் (இங்கிலாந்தில்) திரு சர்ச்சில் அவர்கள் மரணத்தை சந்திக்கும் வரை அரசியலைக் கைவிடவில்லை. எங்களுடைய காந்தி அரசியல் காரணத்தினால் கொல்லப்பட்டுள்ளார், அப்போது அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், காந்திக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்: “மகாத்மா காந்தி அவர்களே, ஆங்கிலேயர்கள் வெளியேற வேண்டும் என்றும், இந்தியர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும் நீங்கள் போராட்டத்தைத் தொடங்கினீர்கள். தற்போது சுதந்திரம் கிடைத்து விட்டது, ஆங்கிலேயர்களும் வெளியேறி விட்டனர். எனவே, இனி நீங்கள் பகவத் கீதையை பிரச்சாரம் செய்யுங்கள். உங்களுக்கென்று தனி மரியாதை உள்ளது. உலகம் முழுவதும் நீங்கள் ஒரு சாதுவாக அறியப்படுகின்றீர். நீங்களும் உங்களை பகவத் கீதையின் மிகச்சிறந்த பண்டிதராக வெளிப்படுத்தியுள்ளீர். இந்நிலையில் நீங்கள் பகவத் கீதையை ஏற்று பிரச்சாரம் செய்யலாமே?” அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

இவ்வாறாக, எவரும் பணி ஓய்வினை ஏற்பதேயில்லை. தம்முடைய பதவி, குடும்ப உறுப்பினர்கள், மற்றும் சொத்து சுகங்களைக் கைவிட எவராலும் முடிவதில்லை. தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா, “ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுதற்கரியது.” மாயை மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், தன்னை நல்லவனாக விளம்பரப்படுத்தும் வயதான மனிதனால்கூட அரசியலைக் கைவிட முடிவதில்லை. “நான் அரசியலிலிருந்து விலகினால், எனது நாட்டு மக்கள் மிகவும் துன்பமடைவர், நிறைய அழிவுகள் ஏற்படும்,” என்று அவன் நினைக்கின்றான். ஆனால் உண்மை என்னவெனில், அவன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எல்லாச் செயல்களும் தொடர்ந்து சிறப்பாகவே நடைபெறும்.

எல்லாச் செயல்களும் கடவுளின் மேற்பார்வையில், இயற்கையின் சட்டங்களால் நடத்தப்படுவதாக பகவத் கீதையில் (3.27) கூறப்பட்டுள்ளது. எனவே, நம்மால் எதையும் மாற்றவியலாது. நாம் இல்லாவிடில் எதுவுமே நடக்காது என்று தவறாக எண்ணிக் கொண்டு, உங்களையே நீங்கள் துன்புறுத்திக் கொள்ளாதீர்.

இல்லற வாழ்விலிருந்து ஓய்வு பெறுதல்

நானும் அவ்வாறுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் கிருஹஸ்தனாக இருந்தபோது, எனது குரு மஹாராஜர் என்னிடம் சந்நியாசம் ஏற்று கிருஷ்ண பக்தி இயக்கத்தை பிரச்சாரம் செய்யுமாறு பலமுறை அறிவுறுத்தினார். ஆனால் நானோ, “நான் சென்றுவிட்டால், எனது மனைவியும் குழந்தைகளும் துன்பமடைவர்” என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆயினும், உண்மை என்னவெனில், பதினைந்து வருடங்களுக்கு முன்னர், 1954இல் நான் எனது குடும்பத்தை விட்டு வந்த பிறகும், அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர், நானும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன். நான் இல்லாமல் அவர்கள் இறந்துவிடவில்லை, நானும் எனது குடும்பம் இல்லாமல் வருந்திக் கொண்டிருக்கவில்லை.

அதே சமயத்தில், கிருஷ்ணருடைய கருணையினால், தற்போது நான் மிகச்சிறந்த குடும்ப அங்கத்தினர்களைப் பெற்றுள்ளேன். வெளிநாடுகளில் எனக்கு எண்ணற்ற குழந்தைகள் இருக்கின்றனர், அவர்கள் என்னை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக்கொள்கின்றனர். இந்த அளவிற்கான அக்கறையை நான் எனது சொந்த குழந்தைகளிடம்கூட எதிர்பார்த்திருக்க முடியாது.

இவை கடவுளின் கருணையே. நாம் கிருஷ்ணரைச் சார்ந்திருக்க வேண்டும். கிருஷ்ணர் நம்மிடம் மகிழ்ச்சியடைந்தால், நாம் எங்குச் சென்றாலும் அனைவரும் மகிழ்ச்சியடைவர், அனைவரும் அன்பு செலுத்துவர். ஆனால் கிருஷ்ணர் நம்மிடம் மகிழ்ச்சியடையவில்லை என்றால், இல்லற வாழ்க்கைகூட நமக்கு சாதகமாக இருக்காது.

மனித வாழ்வை நாய்களையும் பன்றிகளையும் போல கழிக்காமல், கிருஷ்ணரைச் சார்ந்து வாழ வேண்டும்.

பன்றிகளைப் போன்ற வாழ்க்கை வேண்டாம்

ஒரு தந்தையின் கடமை—அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, இல்லற கடமைகள், சுய கடமைகள், ஆன்மீக முன்னேற்றம் என எல்லாவற்றையும் தனது மகன்களுக்கு அறிவுறுத்த வேண்டும். எனவேதான், இங்கு ரிஷபதேவர் கூறுகிறார், “அன்பு மைந்தர்களே, இந்த உடலானது பூனைகள், நாய்கள் மற்றும் பன்றிகளின் உடலைப் போன்றது என்று கருதிவிடாதீர்கள்.” அவர் விட்-புஜாம், “மலம் உண்பவை,” அதாவது, பன்றிகள் என்று குறிப்பிடுகின்றார். நாய் உண்ணும் மனிதர்கள் எவ்வாறு மனிதர்களில் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்களோ, அதுபோலவே, மலம் உண்ணும் பன்றியானது மிருகங்களில் இழிவானதாகக் கருதப்படுகின்றது. மனிதர்களைப் போலவே, மிருகங்களுக்கு மத்தியிலும் உண்ணும் முறைக்கேற்ப தரம் பிரிக்கப்படுகின்றது.

எனவே, உண்ணுதல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நீங்கள் பூனைகளையும் நாய்களையும்போல உண்டால், அவற்றைப் போல செயல்பட்டால், அப்போது நீங்களும் பூனைகள் அல்லது நாய்களே. நீங்கள் பூனைகளையும் நாய்களையும் போல கடுமையாக உழைத்தால், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட மனித வாழ்வின் பயன் என்ன?

மனித வாழ்வு ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். மனிதன் பரிந்துரைக்கப்பட்ட உணவை மட்டுமே உண்ண வேண்டும், வகுக்கப்பட்ட வழிமுறையில்தான் உடலுறவுகொள்ள வேண்டும், குறிப்பிட்ட அளவில்தான் உறங்க வேண்டும், விதிக்கப்பட்ட செயல்களையே மேற்கொள்ள வேண்டும், எண்ணங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும், மனம்போன போக்கில் செயல்படக் கூடாது. மனித சமுதாயம் இத்தகு கட்டுபாட்டு விதிகளைப் பின்பற்றாவிடில், அது மனித சமுதாயமே அல்ல, மிருக சமுதாயமாகும்.

தவம் என்றால் என்ன?

அடுத்ததாக, மனித வாழ்வை பன்றிகளைப் போல செயல்பட்டு வீணாக்கக் கூடாது என்றால், மனித வாழ்விற்கான அர்த்தம் என்ன? ரிஷபதேவர் கூறுகின்றார், தபோ திவ்யம், மனிதர்கள் தெய்வீகமான தவத்தில் ஈடுபட வேண்டும். நீங்கள் தானாக முன்வந்து கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும், அவை உங்களுக்கு விருப்பமானவை அல்ல என்றாலும், அவற்றை ஏற்றுதான் ஆக வேண்டும். உதாரணமாக, எமது சீடர்கள் தங்களது வாழ்வின் ஆரம்ப நாள்களில், சில குறிப்பிட்ட செயல்களுக்குப் பழக்கப்பட்டிருந்தனர். ஆயினும், “இதனைச் செய்யக் கூடாது” என்று நான் கூறினால், அவர்களும் எமது அறிவுரையை ஏற்று பின்பற்றுகின்றனர். ஒருவர் புகைப்பிடிப்பதற்கு பழகியிருந்தால், ஆன்மீக குரு அவரிடம், “புகைப்பிடிக்கக் கூடாது” என்று கூறுகின்றார். புகைப்பிடிப்பதைக் கைவிடுவதில் அவருக்கு சில சங்கடங்களும் சிரமங்களும் இருக்கலாம், இருப்பினும், அஃது ஆன்மீக குருவின் உத்தரவு என்பதால், அவரும் நிறுத்தி விடுகின்றார். இதுவே தவமாகும்.

எத்தகைய கட்டளைகளை வழங்க வேண்டும் என்பதை ஆன்மீக குரு எவ்வாறு அறிவார்? ஆன்மீக குரு எந்தவொரு விதிமுறையையும் தாமாக உருவாக்குவதில்லை. அவர் சாஸ்திரங்களில் இருப்பவற்றையே குறிப்பிடுகின்றார். மாபெரும் வைஷ்ணவ ஆச்சாரியரான நரோத்தம தாஸர் கூறுகின்றார், ஸாது-ஷாஸ்திர-குரு-வாக்ய, ஹ்ருதய கரியா ஐக்ய, “சாதுக்கள், சாஸ்திரம், மற்றும் ஆன்மீக குருவின் வார்த்தைகளை இதயத்துடன் ஒன்றாக்குங்கள்.” ஒருவர் ஆன்மீக குருவா என்பதை கண்டறிவதற்கு, அவருடைய வார்த்தைகளை சாஸ்திரங்கள் மற்றும் சாதுக்களின் வாயிலாக பரிசோதிக்க வேண்டும். இந்த மூன்றும்—குரு, சாஸ்திரம், சாது—ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போக வேண்டும். ஆன்மீக குருவின் கூற்று சாஸ்திரத்தில் இல்லாவிடில், அது சரியானதல்ல. அதனைப் போலவே, சாதுவும் சாஸ்திர விதிமுறைகளைப் புறக்கணிக்க மாட்டார்.

எனவே, தபஸ்ய என்றால், சாஸ்திரங்கள், ஆன்மீக குரு மற்றும் சாதுக்களின் கட்டளைகளை தன்னிச்சையாகவே ஏற்று வாழ்வை பக்குவப்படுத்திக்கொள்வதாகும்.

ரிஷபதேவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக, தமது மகன்களை அழைத்து உபதேசம் வழங்குதல்

ஏன் இந்த கட்டளைகள்?

சிலருக்கு இதில் வினாக்கள் எழலாம், “எதற்காக இத்தகைய கட்டளைகள்? நான் ஏன் மிருகமாகவே வாழக் கூடாது? எதற்காக நான் சாஸ்திரங்கள், சாதுக்கள் மற்றும் ஆன்மீக குருவினால் வழங்கப்படும் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்?”

ரிஷபதேவர் பதிலளிக்கின்றார், யேன ஸத்த்வம் ஷுத்த்யேத், “இத்தகைய விதிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலமாக, உங்களுடைய களங்கமுள்ள பெளதிக வாழ்க்கை புனிதமடையும்.” தற்போதைய நிலையில், நாம் பெளதிக குணங்களால் களங்கமடைந்து, பெரும்பாலும் ரஜோ, தமோ குணங்களால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, ரிஷபதேவர் தமது மகன்களுக்கு, குரு, சாது மற்றும் சாஸ்திரங்களின் விதிமுறைகளைப் பின்பற்றினால், இத்தகைய குணங்களின் பாதிப்பிலிருந்து நம்முடைய வாழ்வு தூய்மையடையும் என்று அறிவுறுத்துகின்றார்.

ஏன் தூய்மையடைய வேண்டும்?

இதனையடுத்து மற்றொரு வினா எழலாம்: “தூய்மைக்கான அவசியம் என்ன?” இதற்கான பதில்: யஸ்மாத் ப்ரஹ்ம-ஸெளக்யம் த்வனந்தம். “பெளதிக வாழ்க்கை தூய்மையடையும்போது, ஆன்மீக பேரின்ப நிலையை அடைய முடியும்.” நீங்கள் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தேடி அலைகின்றீர். உங்களுடைய வாழ்க்கை தூய்மையடையும்போது, நீங்கள் உன்னத தளத்தில் நிலைபெற்று, நித்தியமான இன்பத்தை அனுபவிப்பீர்கள்.

அனைவரும் மகிழ்ச்சியைத் தேடி அலைகின்றனர். நீங்கள் ஏன் இந்த பெளதிக வாழ்விற்காக இவ்வளவு கடுமையாகப் போராட வேண்டும்? மகிழ்ச்சியாக இருப்பதற்கே. நீங்கள் ஏன் புலனின்பத்தைத் தேடி அலைகிறீர்? மகிழ்ச்சியாக இருப்பதற்கே. நீங்கள் ஏன் பற்பல விஷயங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறீர்? மகிழ்ச்சியாக இருப்பதற்கே. நீங்கள் ஏன் அழகாக இருக்க விரும்புகிறீர்? மகிழ்ச்சியாக இருப்பதற்கே. நீங்கள் ஏன் நிறைய பதார்த்தங்களை உண்ண ஆசைப்படுகிறீர்? மகிழ்ச்சியாக இருப்பதற்கே. அனைத்திலும் மகிழ்ச்சியே உங்களுடைய இறுதி இலட்சியமாக உள்ளது.

இருப்பினும், உங்களால் அடையப்பட்டுள்ள இன்பம் அனைத்தும் தற்காலிகமானவை. நீங்கள் போதையின் மூலமாக அடையப்படும் மகிழ்ச்சி, எவ்வளவு நேரம் நீடிக்கும்? இத்தகைய இன்பங்கள் நிரந்தரமற்றவை. உடலுறவின் மூலமாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் அதுவும் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும்? அனைத்தும் சில நொடிகளுக்கு அல்லது சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும். நித்தியமான, நீடித்த இன்பத்தை நீங்கள் விரும்பினால், அப்போது பெளதிக வாழ்வைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தெய்வீகத் தளத்தில் நிலைபெற வேண்டும். அப்போது நீங்கள் நித்தியமான இன்பத்தை உணர்வீர்கள்.

இன்பமாக இருப்போம், வாரீர்

வேத இலக்கியங்கள் கூறுகின்றன, ரமந்தே யோகினோ ’னந்தே. யோகிகளும் இன்பத்தை அனுபவிக்கின்றனர். ஆனால் அஃது எங்கே அனுபவிக்கப்படுகிறது? அனந்தே, பரம புருஷரிடத்தில் அனுபவிக்கப்படுகிறது. உதாரணமாக, கிருஷ்ணரு

டைய நாமங்களில் ஒன்று ராதா-ரமணர். இதனுடைய பொருள், கிருஷ்ணர் ஸ்ரீமதி ராதாராணியுடன் புலனின்பத்தை அனுபவிக்கின்றார் என்பதாகும். ஆனால் அவருடைய புலனின்பம் நம்முடையதைப் போன்றதல்ல. பெளதிக புலனின்பம் என்பது ஆன்மீக புலனின்பத்தின் திரிபடைந்த பிம்பம் மட்டுமே.

பக்தித் தொண்டின் அனைத்து வழிமுறைகளும் கிருஷ்ணருடைய புலன்களை திருப்திப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன (ஹ்ருஷிகேண ஹ்ருஷிகேஷ-ஸேவனம்). ஹ்ருஷிகேண என்றால், “புலன்களினால்” என்று பொருள்; ஹ்ருஷிகேஷ-ஸேவனம் என்றால், “புலன்களின் எஜமானருக்கு சேவை செய்தல்” என்பதாகும். புலன்களின் எஜமானர் கிருஷ்ணர். உங்களுடைய புலன்களை கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபடுத்தும்போது, அது தெய்வீகமானதாகின்றது. புலன்களை உங்களுடைய சுய புலனின்பத்திற்காக பயன்படுத்தும்போது, அது பெளதிகமானதாகின்றது. இதுவே வேறுபாடு.

நீங்கள் தெய்வீகத்தில் நிலைபெறும்போது—பெளதிக வாழ்வை தவத்தின் மூலமாகத் தூய்மைப்படுத்தும்போது—சாஸ்திரங்கள், சாதுக்கள் மற்றும் ஆன்மீக குருவின் வழிநடத்தலின் கீழ் தன்னிச்சையாகவே தியாகத்தையும் தவத்தையும் மேற்கொள்வதன் மூலமாக, கிருஷ்ணருடைய புலன்களை திருப்திப்படுத்துவது மிகவும் எளிதாகின்றது. இதன் மூலம் நீங்களும் முழுமையாக திருப்தியடைகிறீர். எப்படி? விரல்களால் அருமையாக கேக்கை எடுக்கத்தான் முடியுமே தவிர, நேரடியாக அதனை அனுபவிக்க முடியாது. இருப்பினும், அது வயிற்றில் ஜீரணிக்கப்பட்டு, இரத்தமாக மாறி, இரத்தம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பரவும்போது, விரல்களும் அங்கே ஊட்டம் பெறுகின்றன.

அதுபோலவே, நாமும் புலனின்பத்தை அனுபவிக்கலாம்—ஆனால் அது கிருஷ்ணரின் மூலமாகவே செய்யப்பட வேண்டும். நீங்கள் கிருஷ்ணருடைய புலன்களை திருப்திப்படுத்தினால், முழுமையான புலனின்பத்தை அனுபவிக்கலாம்.

இதுவே மனித வாழ்வின் வழிமுறை. தூய்மையடைந்த நிலையில் கிருஷ்ண சேவையில் புலன்களை நாம் ஈடுபடுத்தும்போது, தெய்வீக புலனின்பங்களின் வாயிலாக உண்மையான இன்பத்தை அனுபவிப்போம். மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives