—சோம தாஸரின் பேட்டியிலிருந்து, ஜுலை 1974,
நியூ விருந்தாவனம், மேற்கு வெர்ஜினியாவின் நினைவுகள்
நியூ விருந்தாவனத்தில் அப்போது கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது. ஸ்ரீல பிரபுபாதர் அவற்றை மேற்பார்வையிட்டபடி நடந்து வந்தார். அங்கே ஓரிடத்தில் சிமெண்ட் மூட்டைகள் குவிக்கப்பட்டு அதன்மீது பிளாஸ்டிக் தார்பாலின் போடப்பட்டிருந்தது. பிரபுபாதர், “அஃது என்ன?” என்று விசாரித்தபோது, “அவை வெறும் சிமெண்ட் மூட்டைகள்,” என்று நாங்கள் பதிலளித்தோம். பிரபுபாதர் கூறினார், “இதனை இன்னும் சிறப்பாக மூடி வைக்க வேண்டும்.”
நானும் கோஷ்ட-பிஹாரியும், “பிரபுபாதர் ஏன் அவ்வாறு கூறினார்? இது நன்றாகத் தானே மூடப்பட்டுள்ளது,” என்று நினைத்தோம். பிரபுபாதர் அங்கிருந்து புறப்பட்டு ஒரு வாரம் கழித்து, அந்த சிமெண்ட் மூட்டைகளைத் திறந்தபோது பிரபுபாதரின் கூற்றினை உணர்ந்தோம். மழைநீர் எப்படியோ உள்ளே சென்று சில சிமெண்ட் மூட்டைகளை வீணடித்து விட்டது. பிரபுபாதர் எவ்வளவு கவனமாக இருந்துள்ளார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
பிரபுபாதருடைய வருகையின்போது நிகழ்ந்த மற்றொரு சம்பவம். பிரபுபாதர் கட்டிடத்திலிருந்து வெளியே வந்தபோது, பலி மர்தனர் கூறினார், “ஸ்ரீல பிரபுபாதரே, உங்களுடைய கிருஷ்ணர் புத்தகத்தில், துவாரகையிலுள்ள கிருஷ்ணரின் அரண்மனைகள் அதன் சுவற்றில்கூட இரத்தினங்கள் பதிக்கப்பட்டு பொலிவுடன் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.”
அவர் அவ்வாறு மொழிந்தபோது, ஸ்ரீல பிரபுபாதர் ஒரு கணம் நின்று, தமது கைத்தடியை பக்தர்களை நோக்கி உயர்த்தியபடி கூறினார், “இந்த பக்தர்களே எனது இரத்தினங்கள்.”
பக்தர்களின் மீது பிரபுபாதர் வைத்திருந்த அன்பினைப் பாருங்கள்!
ஜய ல பிரபுபாத!!!