தெளிவான வழிமுறை வேண்டும்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

தெளிவான வழிமுறை வேண்டும்

சென்ற இதழின் தொடர்ச்சி…)

பேல்ஃபியோரி: என்னைப் பொறுத்தவரையில், விலங்குகளைக் கொல்வதை நான் விரும்புவதில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களுடைய இயக்கத்தின் கொள்கை என்ன? அதைத்தான் நான் வினவுகிறேன்.

பேல்ஃபியோரி: மனிதர்களுக்கு இடையிலான அன்பு, புரிந்துணர்வு.

ஸ்ரீல பிரபுபாதர்: விலங்குகள் என்ன செய்தன? அவற்றின் மேல் அன்பு காட்டப்படாதது ஏன்?

பேல்ஃபியோரி: நான் விலங்குகளை நேசிக்கின்றேன். என்னுடன் பல விலங்குகள் வாழ்கின்றன. என்னைச் சுற்றிலும் விலங்குகள்தான். (சிரிக்கிறார்.)

ஸ்ரீல பிரபுபாதர்: நன்று. ஆயினும், விலங்குகளைக் கொல்லும் பழக்கமுடைய மனிதன் உங்களது இயக்கத்தில் அனுமதிக்கப்படுவானா?

பேல்ஃபியோரி: விலங்குகளைக் கொல்பவன் இயக்கத்தினுள் வருவானா என்பது சந்தேகமே. ஆயினும், கசாப்புக் கடைக்காரன் இயக்கத்திற்கு வர விரும்பினால், கண்டிப்பாக வரலாம், நாங்கள் அவரை படிப்படியாக உயர்த்துவோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆக, உங்களது இயக்கத்தினுடைய கொள்கையில் நீங்கள் மிருகவதையை அனுமதிப்பதில்லை என்று கூறலாமா?

பேல்ஃபியோரி: உயர்ந்த நிலையின்படி, எங்களது இயக்கத்தினருக்கு விலங்குகள் மட்டுமின்றி யாரைக் கொல்வதும் பிடிக்காது.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், உங்களது இயக்கத்தின் கொள்கைகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

பேல்ஃபியோரி: எங்களின் கொள்கைகள்: அன்பு, அழகு, நல்லிணக்கம், அமைதி. ஒருவனின் முன்னேற்றத்திற்கு ஏற்ப ஒன்றன்பின் ஒன்றாக தீக்ஷைகளைப் பெறுகிறான். கசாப்புக்கடைக்காரன் இயக்கத்தில் இணையும்போது, அவன் படிப்படியாக உணர ஆரம்பிக்கிறான். அவன் தானாகவே அதைக் கைவிட விரும்புவான். ஆனால், இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: “ஒன்றன்பின் ஒன்றாக தீக்ஷைகளைப் பெறுகிறான்,” ஆனால் அதற்கான விதிமுறைகளில் எந்த உயர்வும் கிடையாதா?

பேல்ஃபியோரி: எங்களின் இயக்கம் அசைவ உணவைக் கைவிட வேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. நாங்கள் இதில் சாமர்த்தியமாகச் செயல்படுகிறோம். நாங்கள் மக்களிடம் சென்று, “இதைச் செய்யாதீர்கள், அதைச் செய்யாதீர்கள்,” என்று கூறினால், யாரும் எங்களுடன் இணைய மாட்டார்கள். உண்மையான யோகி என்பவன் தனது உடலை முற்றிலும் கட்டுப்படுத்தியவனே.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உடலை எப்படி கட்டுப்படுத்த முடியும் என்பதை உங்களால் விளக்க முடியாது.

பேல்ஃபியோரி: அஃது உடனடியாக நடக்கலாம், அல்லது சிறிது காலம் கழித்து நடக்கலாம்.

ஸ்ரீல பிரபுபாதர்: என்னால் இதை ஏற்க இயலாது. உங்களிடம் தெளிவான வழிமுறை அல்லது அணுகுமுறை இருந்தால் மட்டுமே நம்மால் மேலும் விவாதிக்க முடியும். நான் உங்களது இயக்கத்தில் சேர விரும்புகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு நான் சேர்ந்தால், நான் முன்னேற்றம் பெறுவதற்கென்று, நீங்கள் தெளிவான பரிந்துரையையும் வழிகாட்டுதலையும் வழங்கியாக வேண்டும். ஆனால் உங்களிடம் அவ்வாறு எந்தவொரு பரிந்துரையும் இருப்பதாகத் தெரியவில்லை.

பேல்ஃபியோரி: உங்களின் வேண்டுகோளை நான் எங்களது குருவிடம் எடுத்துரைத்து, உங்களுக்கென்று பிரத்யேகமான பரிந்துரையை வழங்கச் செய்கிறேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களது இயக்கத்திற்கென்று, கொள்கையின் அடிப்படையில் எந்தவொரு பரிந்துரையும் இல்லையா?

பேல்ஃபியோரி: நாங்கள் உங்களுக்காக பிரத்யேக வழிமுறையை ஏற்பாடு செய்கிறோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால் பொதுமக்களுக்கு ஏதும் இல்லை.

பேல்ஃபியோரி: ஆம். புலால் உண்ணக் கூடாது, போதைப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது, திருமணத்திற்கு முன்பாக அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்ட பாலுறவு கூடாது என்று நீங்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்குவது மிகவும் நன்று. இந்த நல்ல கொள்கைகளை நீங்கள் கடைப்பிடிக்கின்றீர். நீங்கள் இந்த முடிவிற்கு—உங்களது சொந்த முடிவிற்கு—ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னர் வந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதுபோலவே, நாங்களும் ஒருநாள் எங்களது சொந்த முடிவிற்கு வருவோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: அப்படியெனில், இப்போதைக்கு உங்கள் இயக்கத்தில் எந்த சட்டதிட்டங்களும் கிடையாதா?

பேல்ஃபியோரி: எங்களது இயக்கம் சில அறிவுரைகளை மட்டுமே வழங்குகிறது. அவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: அந்தப் பரிந்துரைகள் என்ன?

பேல்ஃபியோரி: எங்களுடைய இயக்கம் உங்களுடையதைப் போலவே, தூய்மை, தூய எண்ணங்கள், ஒழுக்கமான வாழ்க்கை, சில கொள்கைகளைக் கடைபிடித்தல் ஆகியவற்றைப் பரிந்துரை செய்கிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உலகில் நான் கூறிய தூய்மையற்ற செயல்கள் நடைபெற்று வருகின்றனவே, நீங்கள் அவற்றிற்கு எதிராக எதுவும் சொல்வதில்லையா? உதாரணமாக, ஒரு மனிதன் விலங்குகளைக் கொல்கிறான். நீங்கள் அவனைத் தடுப்பதில்லை. அவன் ஒழுக்கமற்ற வாழ்க்கை வாழ்கிறான், அதையும் நீங்கள் தடுப்பதில்லை. இப்படியிருந்தால், அவன் எப்படி ஒழுக்கமடைவான்? விலங்குகளைக் கொல்வதும் ஒழுக்கமும் இணைந்து பயணிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பேல்ஃபியோரி: எங்கள் இயக்கம் அழகு, இணக்கம், ஒழுக்கம் ஆகியவற்றை மிகவும் விரும்புகிறது. ஆனால் அவற்றை நாங்கள் யார் மீதும் திணிக்க முடியாது.

ஸ்ரீல பிரபுபாதர்: உதாரணத்திற்கு, பைபிள் ஒரு சட்டதிட்டத்தை வகுத்துள்ளது, “கொல்லாதிருப்பாயாக.” ஆயினும், உங்களிடம் அப்படி எந்தச் சட்டமும் கிடையாதா?

பேல்ஃபியோரி: தன்னுணர்வுதான் முக்கியம்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், ஆனால் அந்த தன்னுணர்வு என்றால் என்ன என்பதை உங்களால் விளக்க முடியவில்லை. விளக்க முடியாத பட்சத்தில், அந்த உணர்விற்கு அர்த்தம் உண்டா?

பேல்ஃபியோரி: நான் எதையும் உணராதவனாக இருந்திருந்தால், இப்போது இங்கிருக்க மாட்டேன்.

ஸ்ரீல பிரபுபாதர்: சரி, முதலில் நீங்கள் யார் என்பதை உங்களால் விளக்க முடிகிறதா பார்க்கலாம்.

பேல்ஃபியோரி: மோசஸ் அவர்கள் எரியும் புதரைப் பார்த்து, அதனிடம், “நீ யார்?” என்று கேட்க, அந்த நெருப்பு கூறியது, “நான் நான்தான்.” நான் யார்? இதற்கான விடையை நீங்கள் உங்களது சொந்த தியானத்தினால் அறிய வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், உங்களுடைய தியானம்தான் என்ன? நீங்கள் என்ன கற்றுள்ளீர்கள்?

பேல்ஃபியோரி: நாம் உணர வேண்டியது “அமைதி.” எங்களது இயக்கத்தில் ஒருவர் சேரும்பொழுது, அவருக்கு ஒரு கடிதம் வழங்கப்படும். அக்கடிதத்தின் கீழ்ப்பகுதியில், “உங்களின் அமைதிக்கும் ஆனந்தத்திற்குமான எங்களது வாழ்த்துக்களுடன்” என்று எழுதப்பட்டிருக்கும்.

ஸ்ரீல பிரபுபாதர்: அஃது இருக்கட்டும். அனைவரும் அதை விரும்புகின்றனர். ஆனால், அதை அடைவதற்கான உங்களின் வழிமுறை என்ன?

பேல்ஃபியோரி: பிரார்த்தனை, தைரியம், நம்பிக்கை. எந்தவொரு சீரிய இயக்கமும் உடனடி பலனிற்கு ஒருபோதும் உத்தரவாதம் தராது.

ஸ்ரீல பிரபுபாதர்: அதை நாங்களும்கூட கூறுகிறோம். ஆனால் நம்மிடம் ஒரு தெளிவான வழிமுறை இருந்தாக வேண்டும். உதாரணமாக, ஒருவன் தான் யார் என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால், “நீங்கள் யார்?” என்று நான் வினவினேன். நீங்களோ, “நான் நானாக இருக்கிறேன்” என்று தெளிவற்ற பதிலைக் கொடுத்தீர்கள். நீங்கள் என்னிடம், “ஐயா, நீங்கள் யார்?” என்று வினவினால், “நான் நானாக இருக்கிறேன்” என்று நான் பதில் சொன்னால், அது சரியான பதிலாக இருக்குமா? (சிரிக்கிறார்). அது முட்டாள்தனமான பதில்.‌

[உண்மையான ஆன்மீக முன்னேற்றத்தை விரும்புபவர் அதற்கான வழிமுறையைப் பற்றியும் தெளிவான அறிவுடன் வாழ வேண்டும். அதை விடுத்து, வெறும் வார்த்தைகளால் ஜாலம் காட்டினால், அஃது உதவாது.

(மொழிபெயர்ப்பு: மாலினி கருணா தேவி தாஸி)

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives