பகவத் கீதைக்கான அபத்தமான விளக்கவுரைகள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

பகவத் கீதைக்கான அபத்தமான விளக்கவுரைகள்

பின்வரும் உரையாடல் தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதருக்கும் விருந்தினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்.

விருந்தினர் (1): நாங்கள் அருவமான கடவுளையே நம்புகின்றோம்.

ஸ்ரீல பிரபுபாதர்: கடவுள் அருவமானவர் என்று யார் சொன்னது?

விருந்தினர் (1): ஜ்யோதிர்லிங்கம் அருவமானது என்று வேதம் கூறுகின்றது.

ஸ்ரீல பிரபுபாதர்: பகவத் கீதையைப் பற்றி பேசுகையில் வேறு நூலை ஏன் கொண்டு வருகின்றீர்? நாங்கள் கீதையின் பிரச்சாரகர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜ்யோதிர்லிங்கம் போன்ற கோட்பாடுகள் எல்லாம் பகவத் கீதையில் இல்லை, அவை மற்ற சாஸ்திரங்களில் இருக்கலாம். ஆயினும், நாங்கள் குறிப்பாக பகவத் கீதையின் பிரச்சாரத்தில்தான் ஆர்வம் கொண்டுள்ளோம். பகவத் கீதையானது பல்வேறு அபத்தமான விளக்கவுரைகளால் உலகம் முழுவதும் தவறாக பிரச்சாரம் செய்யப்படுகின்றது, அதனைச் சீர்ப்படுத்தவே நாங்கள் விரும்புகின்றோம். எனவேதான், எங்களுடைய இயக்கம் “கிருஷ்ண பக்தி இயக்கம்” என்று அறியப்படுகிறது.

விருந்தினர் (1): பகவத் கீதையைக் குறித்து தவறாக என்ன பிரச்சாரம் செய்யப்படுகிறது?

ஸ்ரீல பிரபுபாதர்: பல தவறான பிரச்சாரங்கள் உள்ளன. உதாரணமாக, நான் நேற்று கீதா சமிதிக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள பீடத்தில் விளக்கை வைத்துள்ளனர். கிருஷ்ணர் வைக்கப்பட வேண்டிய இடத்தில், அவருக்கு பதிலாக ஏன் விளக்கை வைத்துள்ளனர்?

விருந்தினர் (1): எனக்குத் தெரியாது.

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களுக்குத் தெரியாது. அதனால்தான் நான் இதனை தவறான பிரச்சாரம் என்று கூறுகின்றேன். கிருஷ்ணருடைய இடத்தில் ஏன் விளக்கை வைத்துள்ளனர்? கிருஷ்ணர் இவ்வாறு கூறியுள்ளாரா?

விருந்தினர் (1): கீதா சமிதி மக்கள் இதில் முன்னேற வேண்டும். ஏனெனில்…

ஸ்ரீல பிரபுபாதர்: கீதை கிருஷ்ணரால் பேசப்பட்டது. அப்படியிருக்க, ஏன் கிருஷ்ணருடைய படம் அங்கு வைக்கப்படவில்லை?

விருந்தினர் (1): அவர்கள் படத்தை வைக்கவில்லை.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். அவர்கள் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ளவில்லை என்பதே இதனுடைய அர்த்தம். இதனால்தான், கீதா சமிதி போன்றவை அங்கீகரிக்கப்படுவதில்லை. ஓர் அரசியல் கூட்டம் நடைபெறுவதாக வைத்துக்கொள்வோம். அதில் காந்தி, நேரு அல்லது அவர்களுடைய தலைவர்களின் படம் வைக்கப்பட்டிருக்கும்; ஏனெனில், அவர்கள் அக்கட்சியின் அரசியல் தலைவர்கள். ஆனால் பகவத் கீதையை பிரச்சாரம் செய்யும் கீதா சமிதியில், கிருஷ்ணரின் படம் ஒன்றுகூட இல்லை. இது தவறான பாதை. அவர்கள் பகவத் கீதையைத் தவறாக விளக்குகின்றனர். எனவே, பகவத் கீதைக்கான தவறான பிரச்சாரத்தை சீர்செய்வதே எங்களுடைய பணி.

விருந்தினர் (2): இதர தவறான பிரச்சாரங்கள் யாவை?

ஸ்ரீல பிரபுபாதர்: ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஒன்பதாவது அத்தியாயத்தின் ஸ்லோகம் ஒன்றில், கிருஷ்ணர் கூறுகிறார், மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு, “உனது மனதை என்னில் ஈடுபடுத்தி, என்னையே நினைத்து, எனது பக்தனாகி, உனது வந்தனங்களை எனக்கு சமர்ப்பித்து, என்னை வழிபடுவாயாக.” மதிப்பிற்குரிய பேரறிஞரான முனைவர் ____ கூறுகின்றார், “இது கிருஷ்ணரைக் குறிப்பிடவில்லை, நாம் கிருஷ்ணருக்குள் இருக்கும் பிறப்பற்ற ஒன்றிற்கே சரணடைய வேண்டும்.” இத்தகைய அபத்தமான எண்ணம் அறிஞருக்கு எங்கிருந்து வந்தது?

விருந்தினர் (1): முனைவர் மட்டுமல்ல, சுவாமி ____ அவர்களும்கூட அப்படித்தான் கூறியுள்ளார்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் அனைவருமே அயோக்கியர்கள். கீதையின் மூல ஸ்லோகத்திலிருந்து விலகுவோர் அனைவரும் அயோக்கியர்களே.

விருந்தினர் (2): சுவாமிஜி, மற்றவர்களுடைய விளக்கங்களை முட்டாள்தனம் என்று கூறுவதால்…

ஸ்ரீல பிரபுபாதர்: உங்களால் விளக்க முடிவதில்லை! உங்களால் விளக்க முடியாது என்பதே என்னுடைய முதலாவது வாதம்.

விருந்தினர் (2): இதனைப் பின்னர் பார்ப்போம். இருப்பினும், உங்களுடைய விளக்கம் சரியாக இல்லை என்று கூறுவதினால், நான் சரியானவன் என்பதாகி விடாது, நானும் சரியானவனாக இருக்க வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர்: என்னால் இயன்ற வரையில் நான் உண்மையை வழங்குவதால் நான் செய்வது சரியே. நான் கிருஷ்ணரை கிருஷ்ணராகவே கூறுவதால், நான் கூறுவது சரியே.

விருந்தினர் (2): மதிப்பிற்குரிய சுவாமிஜி, “நான் கூறுவது சரியே” என்பதை எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கின்றீர்கள்?

ஸ்ரீல பிரபுபாதர்: ஏனெனில், கிருஷ்ணர் கூறுவதைத்தான் நான் கூறுகின்றேன். சரியானது என்பதற்கான தரம் என்ன? சரியானதை உங்களால் உருவாக்க முடியாது. மன்மனா பவ மத்பக்த:, “என்னிடம் சரணடைந்து எனது பக்தனாவாய்” என்று கிருஷ்ணரே கூறும்போது, “சரணடைய வேண்டியது கிருஷ்ணரிடம் அல்ல” என்று எவ்வாறு நீங்கள் கூற முடியும்? இஃது அபத்தமாக இல்லையா? நான் உங்களிடம், “எனக்கு தண்ணீர் கொடுங்கள்” என்கின்றேன்; அதற்கு நீங்கள், “தண்ணீர் கொடுக்கப்பட வேண்டியது சுவாமிஜிக்கு அல்ல” என்று கூறினால், அஃது அபத்தமில்லையா?

விருந்தினர் (1): சரணடையுமாறு இயேசு கிறிஸ்து கூறியுள்ளார், முகம்மது நபி கூறியுள்ளார், அனைவருமே கூறுகின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: அவர்கள் இயேசுவிடம் சரணடைகின்றனர். ஆனால் நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லையே?

விருந்தினர் (1): உண்மைதான். ஆனால்…

ஸ்ரீல பிரபுபாதர்: உண்மைதான். ஆனால் எவ்வாறு சரணடைவது என்பது உங்களுக்குத் தெரியவில்லை.

விருந்தினர் (1): உங்களுடைய நோக்கமும் செயல்முறையும் கிருஷ்ணரே பிரபஞ்சத்தின் பகவான் என்று பிரச்சாரம் செய்வதே. அதனால்தான்…

ஸ்ரீல பிரபுபாதர்: நிச்சயமாக, கிருஷ்ணரே பிரபஞ்சத்தின் பகவான்.

விருந்தினர் (1): எங்களிடம் இதனைத்தானே சொல்ல விரும்புகிறீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம்.

விருந்தினர் (1): இந்த விஷயத்தில் நீங்கள் அனைவரையும் திருப்திப்படுத்த வேண்டும்.

ஸ்ரீல பிரபுபாதர்: நான் அனைவரையும் திருப்திப்படுத்துகின்றேன். நான் ஐரோப்பாவில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறேன். கிறிஸ்துவர்கள், முகம்மதியர்கள், யூதர்கள் என அனைவருமே கிருஷ்ணரிடம் சரணடைகின்றனர். இவ்வாறாக நான் எனது கடமையைச் செய்து கொண்டிருக்கிறேன்.

விருந்தினர் (1): நீங்கள் மிக அருமையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள், இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் விஷயம் என்னவெனில்…

ஸ்ரீல பிரபுபாதர்: எனது கருத்து என்னவெனில், நாங்கள் கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்பவர்கள் என்பதை எங்களுடைய இயக்கத்தின் பெயரே உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது. கிருஷ்ணருடைய கொள்கைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால், இங்கே வாருங்கள், இல்லையெனில் சென்றுவிடலாம்.

விருந்தினர் (1): நேற்றைய கூட்டத்தில், நாம் உடல் உணர்விற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நீங்கள் கூறியது நன்றாக நினைவில் நிற்கின்றது.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம். அதுவும் கீதையில் உள்ளது.

விருந்தினர் (2): நாம் ஆத்ம உணர்வை அடைய வேண்டும் என்று கூறினீர்கள்.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆமாம்.

விருந்தினர் (2): உடல் உணர்விற்கு அப்பாற்பட்ட நிலை என்பது, காமம், கோபம், பேராசை, மோகம், அஹங்காரம் முதலான மிருக குணங்களைத் துறப்பதாகும்.

விருந்தினர் (1): இஃது அனைத்து சாஸ்திரங்களிலும் உள்ளது. கீதையும் இவற்றைப் பற்றிக் கூறுவதால் இஃது ஆராய்ச்சிக்குரியதாகும். இத்தகைய கர்வம் மற்றும் அஹங்காரத்தின் பலனாகவே, “நாங்கள் கூறுவதே சரி, இதுவே சரியான பாதை,” என்னும் கூற்றுகள் வருகின்றன. மேலும், ஆரம்பத்திலேயே சரணடைய வேண்டும் என்னும் கருத்தும் மனிதனுடைய அஹங்காரத்தையே காட்டுகிறது.

ஸ்ரீல பிரபுபாதர்: அதற்கு நான் என்ன செய்வது? கிருஷ்ணர் கூறுகின்றார், ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ, அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி. (பகவத் கீதை 18.66) நீங்கள் எண்ணிலடங்காத பாவங்களைச் செய்திருந்தாலும்கூட, கிருஷ்ணர் உறுதியளிக்கின்றார், “என்னிடம் சரணடைவாயாக, நான் உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுவிக்கிறேன்.”

விருந்தினர் (2): கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும், அனைவரிடமும் அல்ல…

ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ணரிடமே சரணடைய வேண்டும். “எங்களிடம் சரணடையுங்கள்” என்று நாங்கள் கூறவில்லை. நாங்கள் எப்போதும் “கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்” என்றே கூறுகின்றோம். வார்த்தை ஒன்றே. நான் ஒருபோதும், “நான் கிருஷ்ணராகி விடுவேன், கடவுளாகி விடுவேன். என்னிடம் சரணடையுங்கள்,” என்றெல்லாம் கூறுவதில்லை. “கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்” என்றே நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம். இதுவே கிருஷ்ண உணர்வு. நாங்கள் கிருஷ்ணரிலிருந்து மாறுபட்டு பேசுவதில்லை. இதனைப் புரிந்துகொள்ளுங்கள். “எனக்குத் தண்ணீர் வேண்டும்” என்று நான் கூறுவதும், “ஸ்வாமிஜிக்கு தண்ணீர் கொடுங்கள்” என்று நீங்கள் கூறுவதும் ஒன்றே.

கிருஷ்ணர் கூறுகின்றார், ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). கிருஷ்ணர் தம்மிடம் சரணடையுமாறு கூறுவதால், நீங்கள் அவரை கர்வமுடையவர் என்று கூறுகின்றீர்களா?

விருந்தினர் (2): அவர் சொல்கின்றார் என்பதற்காக அனைவரும் இதனைப் பின்பற்ற முடியாதல்லவா?

ஸ்ரீல பிரபுபாதர்: இதனைப் பின்பற்றுவதும் பின்பற்றாததும் உங்களுடைய விருப்பம். கிருஷ்ணர் சரணடையுமாறு அர்ஜுனனிடம் கூறினார். அதற்காக, உலகிலுள்ள அனைவருமே அர்ஜுனனைப் போல கிருஷ்ணரிடம் சரணடைய வேண்டும் என்பதில்லை. அது சாத்தியமும் ஆகாது. இதனைக் கூறியவர் கிருஷ்ணர் அல்லது கடவுளே என்றாலும், எல்லாரும் இதனைப் பின்பற்றியாக வேண்டும் என்று அவர் கூறவில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான சுதந்திரம் உங்களுக்கு உண்டு.

இருப்பினும், “என்னிடம் சரணடைவாயாக” என்று கிருஷ்ணர் கூறுவதால், நாங்களும் மக்களிடம், “கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்” என்று வேண்டுகின்றோம், இதுவே எங்களுடைய கொள்கை. பின்பற்றுவதும் பின்பற்றாமல் இருப்பதும் உங்களுடைய விருப்பம். கிருஷ்ணரிடம் சரணடை
வதும் சிவபெருமான் அல்லது மற்றவர்களிடம் சரணடைவதும் உங்களுடைய விருப்பம். இருப்பினும், “கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்” என்று உலக மக்களுக்கு பிரச்சாரம் செய்ய முயற்சிப்பதே எங்களுடைய பிரச்சார முறையாகும். இதுவே எங்களுடைய நிலை.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives