பகவத் கீதை விநியோகமா? வியாபாரமா?

Must read

வழங்கியவர்: லக்ஷ்மி நாராயண தாஸ்

பகவான் கிருஷ்ணர் தமது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனை உடல் சார்ந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க அருளிய ஞானமே பகவத் கீதை. இது அர்ஜுனனுக்கு மட்டுமின்றி எல்லா மக்களுக்கும் உதவக்கூடிய வகையில் அருளப்பட்டுள்ளது. பகவத் கீதையின் இந்த ஞானம் சாதாரண மனிதனை பண்பட்ட மனிதனாக மாற்றி, வாழ்வின் மிக முக்கிய பிரச்சனையான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் சக்கரத்திலிருந்து அவனை விடுவிக்கிறது.

விநியோகத்தின் நோக்கம்

பகவானையும் பகவத் கீதையையும் மையமாக வைத்து வாழ்ந்து கொண்டிருந்த சமுதாயம் இன்று உண்ணுவது, உறங்குவது, உடலுறவுகொள்வது, தற்காத்துக்கொள்வது எனும் நான்கு செயல்களில் மட்டுமே கவனத்தை செலுத்துகிறது; இதுவே வாழ்க்கை, இதுவே ஆனந்தம் என நினைக்கின்றது. ஆனால், இவற்றிலிருந்து ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை; ஏனெனில், இவற்றின் மூலம் உடலை மட்டுமே திருப்திப்படுத்துகிறோம். அதாவது, எது நாம் இல்லையோ (உடல்) அதை நாம் திருப்திப்படுத்த முயல்கிறோம், எது நாமோ (ஆத்மா) அதை நாம் கண்டுகொள்வதே இல்லை.

மேற்கூறிய நான்கு செயல்களும் உடலுக்கானவை. இவை வாழ்க்கையில் தேவையாக இருந்தாலும், இவை மட்டுமே வாழ்க்கை அல்ல. நாம் கவனிக்க வேண்டியது ஆத்மாவை, அதற்கான உணவான ஞானத்தை இந்த பகவத் கீதையின் மூலம் பெறலாம். இதுவே நமக்கு நித்தியமான ஆனந்தத்தையும் மன அமைதியையும் தரும். இதன் மூலம், முதலில் நாம் யார் என்பதை உணர்ந்து, நாம் செய்யவேண்டிய காரியங்களை அறிந்துகொண்டு, நமது உண்மையான பிரச்சனையான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் சம்சாரக் கடலிலிருந்து வெளியேற முடியும். இந்தக் கடலை கடக்க பகவத் கீதை ஒரு பாடமாக அமைகிறது.

கருணையுள்ள காப்பாளன்

இதை கிருஷ்ணர் பகவத் கீதையில் (4.36) பின்வருமாறு உறுதி செய்கிறார்: “பாவிகளில் எல்லாம் பெரும் பாவியாக நீ கருதப்பட்டாலும் உன்னதமான ஞானமெனும் படகில் நிலைபெற்றுவிட்டால், உன்னால் துன்பக் கடலைக் கடந்து விட முடியும்.” அறியாமைக் கடலில் நடக்கும் வாழ்வுப் போராட்டத்திலிருந்து இஃது ஒருவனை உடனடியாக உயர்த்திவிடுகிறது. இந்த ஜடவுலகம் சில சமயம் அறியாமைக் கடலுக்கும், சில சமயம் காட்டுத் தீக்கும் உவமிக்கப்படுகின்றது. எவ்வளவுதான் நன்றாக நீச்சல் அறிந்தவனாயினும், கடலில் அவனது போராட்டம் கடினமானதே. தத்தளிக்கும் மனிதனை கடலிலிருந்து காக்க யாரேனும் முன்வந்தால், அவனே மிகச்சிறந்த காப்பாளன். ஆகவே, பௌதிக வாழ்வெனும் துன்பப் பெருங்கடலில் தத்தளிக்கும் ஜீவனிடம் கீதையின் ஞானத்தை விநியோகித்து, கிருஷ்ணரிடம் சரணடைதல் எனும் கரைக்கு அழைத்துச் சென்று இளைப்பாறுதலை அளிக்கும் பக்தன் கருணையுள்ள காப்பாளனாகிறான்.

ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பக்தர்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் இலட்சக்கணக்கில் பகவத் கீதையை விநியோகம் செய்கிறார்கள். இது விநியோகமே அன்றி வியாபாரம் அல்ல.

விநியோகமே அன்றி வியாபாரம் அல்ல

ஒருவன் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகத்தை அல்லது பாதி ஸ்லோகத்தை அல்லது அதிலிருந்து ஒரே ஒரு வரியைக்கூட நம்பிக்கையுடன் படித்து, அதன்படி நடந்தால், அவன் வாழ்வில் வெற்றியடைய முடியும். இதுவே நாம் பகவத் கீதையை அனைவருக்கும் விநியோகம் செய்வதன் நோக்கமாகும். ஆதலால்தான் ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பக்தர்கள் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள நகரங்கள், கிராமங்கள், சிற்றூர்கள் என அனைத்து இடங்களிலும் இலட்சக்கணக்கில் பகவத் கீதையை விநியோகம் செய்கிறார்கள். இது விநியோகமே அன்றி வியாபாரம் அல்ல.

பகவத் கீதையை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்று, சிறிதளவு நன்கொடையைப் பெற்று அதனை விநியோகம் செய்யும் பக்தர்கள் எவரும் அதனை வியாபாரமாகச் செய்வதில்லை. அவர்கள் இதனை கிருஷ்ணருக்காகச் செய்கின்றனர். மேலும், கீதை ஆன்மீகமயமானது, வியாபாரத்திற்கு அப்பாற்பட்டது. உலகாயதமான வியாபாரி ஒருவன் நாள் முழுவதும் வியாபாரத்தில் ஈடுபட்டு, அதில் இலாபமடைந்தால் ஆனந்தமும், நஷ்டமடைந்தால் வருத்தமும் கொள்வான். புத்தக விநியோகத்தில் ஈடுபடும் பக்தனோ, நாள் முழுவதும் பலதரப்பட்ட மக்களிடம் போராடி வாதாடி ஒரே ஒரு புத்தகத்தை விநியோகித்திருந்தாலும், அதில் ஆனந்தமடைகிறான். ஒருவேளை அதைக்கூட விநியோகிக்க இயலவில்லை என்றால்கூட, அவன் வருத்தமடைவதே இல்லை; ஏனெனில், அந்த நாளில் அவன் எதையும் அடையாவிடினும், கிருஷ்ணரின் கருணையைப் பெறுகிறான். அதனால் அவன் எதிலும் ஆனந்தமடைகிறான். அவன் தனது பக்திக் கடமையை மட்டுமே செய்கிறான்; இலாப நஷ்டத்தின் பலனில் பற்றுதல் கொள்வதில்லை.

ஒவ்வொரு கீதையிலும் வாங்குபவரின் பெயர் உள்ளது

ஒரு பகவத் கீதை யாருக்குச் சென்று சேர வேண்டுமென கிருஷ்ணரே தீர்மானிக்கிறார். பக்தன் அதற்கு ஒரு கருவியாக மட்டும் செயல்படுகிறான். உதாரணமாக, உங்கள் நண்பர் உங்களுக்கு ஒரு தபாலை அனுப்புகிறார். அதை தபால்காரர் உங்களிடம் சேர்க்கிறார். இங்கே தபால்காரர் ஒரு கருவி மட்டுமே, அதை அனுப்பி வைத்தவர் உங்களது நண்பரே. அதுபோலவே, கடவுள் ஒரு பக்தனைக் கருவியாகப் பயன்படுத்தி (நிமித்தமாத்ரம்) பகவத் கீதையினை மற்றவர்களுக்கு வழங்கச் செய்கின்றார். நாம் உண்ணும் ஒவ்வோர் அரிசியிலும் நமது பெயர் உள்ளது என்பார்கள். அதுபோல, பக்தர் விநியோகிக்கும் ஒவ்வொரு கீதையிலும் வாங்குபவரின் பெயர் உள்ளது. அதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய மக்கள் பௌதிகமான செய்தித்தாள்களையும் இதழ்களையும் விற்பதற்கோ பணம் கொடுத்து வாங்குவதற்கோ எதையும் யோசிப்பதில்லை. ஆனால், எவ்வித சுயநலனும் இன்றி பகவத் கீதையை விநியோகம் செய்யும் பக்தனிடம், கொஞ்சம்கூட தயங்காமல், “வேண்டாம், எனக்கு படிக்க நேரம் இல்லை,” என்று பல காரணங்களைக் கூறுவதோடு மட்டுமின்றி, சில நேரங்களில் பக்தனை ஒரு தீண்டத்தகாதவனைப் போல பார்க்கவும் நிந்திக்கவும் பரிகசிக்கவும் செய்கிறார்கள். ஆயினும், பக்தனோ அவர்களுக்காக கருணையுடன் கிருஷ்ண சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு, சிறிதளவாகின் ஆர்வமுள்ள மனிதர்களிடம் எப்படியாவது பகவத் கீதையை விநியோகம் செய்கிறான்.

ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பத்திரிகையான பகவத் தரிசனத்தை ஆர்வத்துடன் விநியோகம் செய்யும் பக்தர்.

நன்கொடை எதற்காக?

புத்தக விநியோகம் செய்யும் பக்தர்களிடம் சிலர், “விநியோகம் என்றால் இலவசமாக செய்யலாமே, எதற்காக நன்கொடை வசூலிக்க வேண்டும்?” எனவும் கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் நன்கொடை பெறுவது மக்களின் நன்மைக்காகவே. வேதங்களில், ஒரு மனிதன் தனது வருமானத்தில் 50 சதவிகிதத்தை பகவானின் சேவைக்காகவும் (கிருஷ்ண உணர்விற்காகவும்), 25 சதவிகிதத்தை உறவினர்களுக்காகவும், மீதி 25 சதவிகிதத்தை அவசரத் தேவைக்காகவும் செலவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வருமானத்தில் ஒரு பகுதியை இறைவனின் தொண்டிற்காகச் செலவிட வேண்டும் என்னும் பழக்கம் இன்றும்கூட கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களிடம் காணப்படுகிறது. ஆனால், தொன்றுதொட்டு இப்பழக்கத்துடன் வாழ்ந்த ஸநாதன தர்மத்தைப் பின்பற்றும் இந்து சமுதாயத்தினரோ, இன்றைய நவீன கால உலகில், “தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்” என்று ஒரு கூற்றை உருவாக்கியுள்ளனர். மனிதனின் பேராசைக்கு அளவில்லாதபோது, அவனுக்கு மிஞ்சியது ஏதேனும் இருக்க முடியுமா? அவன் தான் சம்பாதிக்கும் அனைத்தையும் தனக்கே வைத்துக்கொள்கிறான்.

தானமளிப்பதன் மூலமாக ஒருவன் ஈட்டிய வருமானம் தூய்மையடைகிறது. தானம் என்ற சிந்தனையையே இன்றைய மக்கள் மறந்து விட்டனர். ஆகவேதான், பக்தர்கள் புத்தகங்களை அச்சடிப்பதற்காகவும் அவற்றை விநியோகிப்பதற்காகவும் ஏற்படும் தேவைகளுக்காக சிறிதளவு நன்கொடையை யாசிக்கின்றனர். மக்கள் இலவசமாக அளித்தால் நன்றாக இருக்கும் என்பார்கள். ஆனால், உண்மை என்னவெனில், அவ்வாறு இலவசமாக கிடைத்த பல பொருட்கள் மதிப்பற்று வீடுகளில் கிடப்பதை நாம் அனுபவத்தில் காணலாம். நன்கொடை பெற்று புத்தகங்களை வழங்குதல், ஒரு வகையில் மக்களிடம் படிக்கும் ஆவலைத் தூண்டும்.

விநியோகத்தின் விளைவு

பக்தர் ஒருவர் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு நன்கொடை கேட்கும் செயலை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அது பௌதிகமானதாகத் தோன்றலாம்; ஆனால், அச்செயல் முற்றிலும் ஆன்மீகமானதாகும். பகவத் கீதை உட்பட ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களையும் பகவத் தரிசன பத்திரிகையையும் விநியோகம் செய்வதால், அவற்றைப் பெறுபவர், விநியோகிப்பவர் என இருவருமே ஆன்மீக முன்னேற்றத்தை அடைகின்றனர். புத்தகத்தைப் பெறுபவர் அதன் கருத்துகளால் அறிவொளி பெற்று படிப்படியாக கிருஷ்ண உணர்வில் வளர்கின்றார். புத்தகத்தை விநியோகிப்பவர் கிருஷ்ணருக்கான அத்தொண்டின் மூலமாக மேன்மேலும் பக்தியில் உயர்வு பெறுகிறார்.

நம்முடைய இயக்கத்திற்கு புத்தகங்களே அடிப்படை என்று பிரபுபாதர் கூறுவார். உண்மையில், இந்த புத்தகங்களின் மூலமாகவே இன்று ஹரே கிருஷ்ண இயக்கம் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவி பலதரப்பட்ட மக்களாலும் அறியப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. எனவே, புத்தக விநியோகத்தின் விளைவை நம்மால் ஒருபோதும் குறைத்து மதிப்பிட இயலாது.

விநியோகிப்பதன் நன்மை

ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் பல்வேறு மக்களின் மோசமான எண்ணங்களை அழித்து மனத்தூய்மை அடையச் செய்து அவர்களுடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்துள்ளது. உடல், ஆத்மா, கிருஷ்ணர் முதலியவற்றைப் பற்றிய எவ்வித ஞானமும் இல்லாத மேற்கத்தியர்கள்கூட இப்புத்தகங்களைப் படித்து வைஷ்ணவர்களாக மாறியுள்ளனர்.

ஸ்ரீல பிரபுபாதர், “இப்புத்தகங்கள் அடுத்த 10,000 ஆண்டுகளுக்கு ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய சட்ட புத்தகங்களாக விளங்கும்என்றும், “இதன் பொருளுரைகள் எனது பக்தியின் வெளிப்பாடுஎன்றும் கூறியுள்ளார். மேலும், கிருஷ்ணரும் பகவத் கீதையில் (18.68), “இந்த ஞானத்தை மக்களுக்குக் கொடுப்பவர் எனக்கு மிகவும் பிரியமானவர்என்றும், “இந்த பரம இரகசியத்தை மக்களிடம் விளக்குபவனுக்கு தூய பக்தித் தொண்டு உறுதிப்படுத்தப்படுவதோடு அவன் இறுதியில் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருகின்றான். அவனைவிட எனக்கு பிரியமான தொண்டன் இவ்வுலகில் யாருமில்லை. அவ்வாறு அவனைவிட பிரியமானவனாக யாரும் ஆக முடியாது,” என்றும் கூறுகிறார். இதுவே பகவத் கீதையை விநியோகிப்பதன் இறுதி நன்மையாகும்.

அறிவால் வழிபடுங்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், தமக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த புனிதமான உரையாடலைக் கற்பவர் அறிவால் தம்மை (கிருஷ்ணரை) வழிபடுகின்றனர் என்று பகவத் கீதையில் அறிவித்துள்ளார். ஆகவே, அறிவு மிக்கவர்களே, புத்திசாலிகளே, நீங்களும் பகவத் கீதையின் ஞானத்தைக் கற்று கிருஷ்ணரை உங்களது அறிவால் வழிபடுங்கள், மற்றவர்களுக்கும் பகவத் கீதையை விநியோகம் செய்யுங்கள்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives