—ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)
இப்படியொரு வினோதமான கேள்வியை சமீபத்தில் ஒரு நண்பர் எழுப்பினார். கேட்டவுடன் குபீர் என்று சிரிப்பு வந்தது. ஆயினும், அந்த நண்பர், “குலதெய்வ கோயிலுக்குப் போகாமல் திருப்பதி கோயிலுக்குச் சென்றால், குலதெய்வத்திற்கு கோபம் வந்து விடும்,” என்று ஒரு திரைப்படத்தில் காண்பிக்கப்பட்டதாகக் கூறினார். அவருக்கு வழங்கிய பதிலை இங்கு அனைவருக்கும் வழங்குகிறேன்.
முதல் விஷயம், திரைப்படங்கள் பெரும்பாலும் போதிய ஆன்மீக அறிவற்ற நபர்களால் பல்வேறு உள்நோக்கங்களுடன் இயற்றப்படுவதால், அவற்றில் வரும் ஆன்மீகத் தகவல்கள் சரியாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. கதையில் சுவாரஸ்யத்தை அதிகரித்தல், மக்களுடைய கடவுள் நம்பிக்கையைச் சிதைத்தல், கற்பனையான பழக்கங்களைப் புகுத்துதல் முதலிய நோக்கங்களுக்காக பெருமாளுக்கும் அம்மனுக்கும் போட்டியிருப்பதாக காட்டப்பட்டிருக்கலாம். இதற்கெல்லாம் மதிப்பளிக்க வேண்டாம்.
இரண்டாவது விஷயம், பெருமாளுடைய உண்மை நிலை என்ன என்பதை அம்மன் முழுமையாக அறிந்தவள். முழுமுதற் கடவுளாகிய பெருமாளின் தொண்டில் எப்போதும் அம்மன் ஈடுபட்டிருக்கிறாள். அனைத்து ஜீவன்களையும் இந்த பிரபஞ்சத்தில் கட்டிப்போட்டு வைத்திருப்பதே அம்மனின் பணியாகும். அவள் இதனை ஸ்ரீ கிருஷ்ணருக்கான சேவையாகச் செய்கிறாள். அம்மன் சிவபெருமானிடம், “பல்வேறு மக்கள் பல்வேறு தேவர்களை வழிபடுகின்றனர். சிலர் என்னை வழிபடுகின்றனர், சிலர் உங்களை வழிபடுகின்றனர், சிலர் விஷ்ணுவை வழிபடுகின்றனர். இந்த வழிபாடுகளில் சிறந்தது என்ன?” என்று விசாரித்தபோது, சிவபெருமான், “எல்லா வழிபாட்டிலும் விஷ்ணுவை வழிபடுவதே மிகச்சிறந்தது,” என்று கூறி தெளிவுபடுத்தியதாக பத்ம புராணம் விளக்குகிறது. மேலும், அம்மன் கிருஷ்ணரின் தங்கையாகப் பிறந்து கம்சனுக்கு எச்சரிக்கை விடுத்த வரலாற்றையும் அனைவரும் அறிவோம். எனவே, அம்மனுக்கும் பெருமாளுக்கும் போட்டியிருக்கலாம் என்று கூறுதல் நகைப்பிற்குரிய கூற்றாகும்.
மூன்றாவது விஷயம், பல்வேறு தேவர்களை வழிபடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளபோதிலும், பகவான் கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும் மூல வேர் என்றும் ஸநாதன தர்மம் தெளிவாக எடுத்துரைக்கின்றது. வேருக்கு நீரூற்றுவதால் எவ்வாறு கிளைகள், இலைகள் என அனைத்து பாகங்களும் ஊட்டம் பெறுகின்றனவோ, அவ்வாறே கிருஷ்ணருக்கு பக்தி செய்வதால் எல்லா தேவர்களும் குலதெய்வங்களும் தாமாக திருப்தியடைவர். எனவே, பெருமாளை வணங்குவதால், குலதெய்வம் ஒருபோதும் கோபமடைய வாய்ப்பில்லை; உண்மையில், குலதெய்வங்கள் அப்போதுதான் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறுவர்.