மனதை கிருஷ்ணரில் நிலைநிறுத்துங்கள்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

வைகாரிகாத் விகுர்வாணான்

மனஸ்-தத்த்வம் அஜாயத

யத்-ஸங்கல்ப-விகல்பாப்யாம்

வர்ததே காம-ஸம்பவ:

“ஸத்வ குண அஹங்காரத்திலிருந்து மற்றொரு மாற்றம் ஏற்படுகிறது. அதிலிருந்து மனம் பரிணமிக்கின்றது, அதன் எண்ணங்களும் பிரதிபலிப்புகளும் ஆசைக்கு வழிவகுக்கின்றன.” (ஸ்ரீமத் பாகவதம் 3.26.27)

மனதின் இரண்டு வேலைகள்

மனம் ஸத்வ குண பரிமாற்றத்தினால் உருவானது என்பதால், அது பெளதிகமானதாகும். பல்வேறு பெளதிக ஆசைகளினால் களங்கமடைந்து, மனம் படிப்படியாக இழிவடைகிறது. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ-குண-ஸமுத்பவ:. மனம் இழிவடையும்போது, அது ஸத்வ குணத்திலிருந்து ரஜோ குணத்திற்கு வருகிறது. ரஜோ குணம் என்பது காம ஆசைகளை, எல்லையற்ற ஆசைகளைக் குறிக்கிறது. இத்தகைய ஆசைகள் நிறைவேறாதபோது, அது க்ரோத, கோபமாக உருவெடுக்கின்றது. இவ்விதமாக, காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்ய—காமம், கோபம், பேராசை, மயக்கம், கர்வம், மற்றும் பொறாமை—முக்கியத்துவம் பெறுகின்றன, நாமும் இத்தகைய எண்ணங்களுக்கு அடிமையாகிறோம்.

மனதின் இந்தப் படிப்படியான வீழ்ச்சி அறியாமை எனப்படுகிறது. மனதின் இரு வேலைகள்: ஸங்கல்ப, விகல்ப. ஸங்கல்ப என்றால் ஏதேனும் ஒன்றை செய்ய விரும்புதல், விகல்ப என்றால் ஏதேனும் ஒன்றை நிராகரித்தல். அனைவரும் மனதில் அமைதியை விரும்புகின்றனர்; ஆனால் பெளதிக மனதின் இயல்பு—ஸங்கல்ப, விகல்ப—சஞ்சலமானது.

மனதைக் கட்டுப்படுத்த முடியுமா?

உண்மையில், ஒவ்வொருவருடைய மனமும் சஞ்சலமாகவே உள்ளது. மனதை அமைதியான தளத்திற்கு அழைத்து வருதல் கடினமானது. ஆசைகள் இருக்கும் வரை, மனதில் அமைதியையும் சமநிலையையும் ஏற்படுத்துவது அசாத்தியம். ஸங்கல்ப-விகல்பத்தினால் அஃது அசாத்தியமாக இருக்கிறது. எனவே, புண்ணியமான வழியில் செயல்படுபவர்களின் மனமும்கூட அமைதியாக இருப்பதில்லை என்று கவிராஜ கோஸ்வாமி சைதன்ய சரிதாம்ருதத்தில் எழுதுகின்றார். பாவிகளின் மன அமைதியைக் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை.

புண்ணியமான முறையில் செயல்படுவோராலும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் மட்டுமின்றி, எல்லா பெளதிகச் செயல்களையும் முற்றிலுமாக நிறுத்த விரும்புவோராலும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. உதாரணமாக, பௌத்தர்களின் கொள்கை நிர்வாண என்னும் நிலையைப் பற்றி பேசுகிறது: “மனதின் செயல்களை, அதாவது ஆசைகளை நிறுத்துங்கள்.” ஆனால், அந்த நிலையிலும்கூட, தியானத்தினால் மனதைக் கட்டுப்படுத்துதல் சாத்தியமல்ல. இறுதியாக, யோகிகளாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறு இருக்கையில், சாமான்ய மனிதனைப் பற்றிக் கூற என்ன இருக்கிறது?

முதல் தர யோகியால் முடியும்

பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்தில், மனதைக் கட்டுப்படுத்துவதற்காக யோகப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கிருஷ்ணர் அர்ஜுனனிடம் அறிவுறுத்தியபோது, அவன் அதை ஏற்க மறுத்து கூறுகின்றான், “அன்புள்ள கிருஷ்ணரே, யோகப் பயிற்சியின் மூலமாக மனதை அடக்குமாறு உபதேசிக்கின்றீர், ஆனால், அத்தகைய வாய்ப்புகள் எனக்கு இல்லை. ஏனெனில், நான் இல்லறத்தான். அதுமட்டுமின்றி, நான் ஒரு சத்திரியன், அரச குடும்பத்தைச் சார்ந்தவன். இவையனைத்திற்கும் மேலாக, குடும்ப வாழ்வில் ஆர்வம் கொண்டவன், இந்நிலையில் என்னால் எவ்வாறு மனதைக் கட்டுப்படுத்த முடியும்?”

மிகவும் வலுவான சூறாவளி வீசும்போது, நீங்கள் அதைத் தடுக்க விரும்பினாலும், அது சாத்தியமல்ல. அர்ஜுனன் மனதை சூறாவளியுடன் ஒப்பிடுகின்றான். அத்தகைய மனதை எவ்வாறு கட்டுப்படுத்த இயலும்? இருப்பினும், அர்ஜுனன் சோர்வடையத் தேவையில்லை என்று கிருஷ்ணர் கூறினார். ஏனெனில், அர்ஜுனனின் மனம் எப்போதும் கிருஷ்ணரின் தாமரை பாதங்களில் ஆழ்ந்திருக்கிறது. அர்ஜுனன் யோகிகள் அனைவரிலும் தலைசிறந்தவனாக இருந்தான்.

யோகினாம் அபி ஸர்வேஷாம்

 மத்-கதேனாந்தர்-ஆத்மனா

ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம்

 ஸ மே யுக்ததமோ மத:

கிருஷ்ணர் அர்ஜுனனை ஊக்குவிக்கின்றார்: “உனது மனம் எப்போதும் என்னில் நிலைபெற்றுள்ளது. ஆகையால், நீ விரக்தியடைய வேண்டாம்.” (இல்லறத்தான், சத்திரியன் என்று) அர்ஜுனன் எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் அவனது மனம் எப்போதும் கிருஷ்ணரில் நிலைபெற்றிருந்தது. அவன் எப்போதும் கிருஷ்ணரின் தொடர்பிலேயே இருந்தான், கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் அறியவில்லை. இதுவே முதல்தர யோகியின் நிலை.

கிருஷ்ணருக்காக ஆசைப்படுதல்

இந்த ஸ்லோகத்தில், காம-ஸம்பவ: என்று கூறப்பட்டுள்ளது. காம என்றால் “ஆசை” என்று பொருள். மனம் சஞ்சலமானது, எப்போதும் எதையாவது ஆசைப்படுகிறது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, கிருஷ்ண உணர்வை பிரச்சாரம் செய்ய ஆசைப்படுவதே. நரோத்தம தாஸ தாகூர் கூறுகின்றார், காம: க்ருஷ்ண-கர்மார்பணே, ஆசைகளை கிருஷ்ணருக்காக செயல்படுவதில் ஈடுபடுத்துங்கள்.

உங்களால் ஆசையிலிருந்து விடுபட்டிருக்க முடியாது, அது சாத்தியமல்ல. சில குருமார்கள், “ஆசையை ஒழித்து விடுங்கள்,” என்று கூறுகின்றனர். இல்லை, அது சாத்தியமல்ல. உயிரோடு வாழும் வரை ஆசை இருந்தே தீரும். ஆசைப்படுவதை உங்களால் தடுக்க முடியாது.

தற்போது நாம் இந்த பௌதிக உலகில் மகிழ்ச்சியாக இருக்க ஆசைப்படுகிறோம்; அதிகமான செல்வங்களை அடைவதற்கு, இதனை அடைவதற்கு, அதனை அடைவதற்கு என்று ஆசைப்படுகிறோம்—இதுவே காமம். ஆயினும், உங்களுடைய மனதை கிருஷ்ணரின் சேவையில் ஈடுபடுத்தினால்—கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்வது, மக்களுக்கு எவ்வாறு கிருஷ்ண உணர்வை வழங்குவது, அவர்களை எவ்வாறு கிருஷ்ணருடைய விருப்பத்திற்காகச் செயல்பட வைப்பது என்று கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்திற்கான திட்டங்களைத் தீட்டுவதில் மனதை ஈடுபடுத்தினால்—அப்போது மனம் கட்டுப்படுத்தப்படும்.

“குடும்ப வாழ்விலுள்ள என்னால் யோகப் பயிற்சியின் மூலமாக மனதை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?” என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் வினவுதல்.

தோல்வியடையும் மனிதனின் திட்டங்கள்

ஒவ்வொருவரும் ஆசைகளின் அடிப்படையில் திட்டங்களைத் தீட்டுகின்றனர். நீங்கள் பெளதிகத்தினால் பாதிக்கப்பட்டு எவ்வளவு காலம் அதற்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டுள்ளீர்களோ, அது வரை பெளதிக சக்தி மேன்மேலும் வலுவுடையதாகி, உங்களுடைய எல்லாத் திட்டங்களையும் தோல்வியடையச் செய்து, உங்களை என்றென்றும் சஞ்சலமாகவே வைத்திருக்கும். நீங்கள் திட்டமிடுகிறீர், அஃது இயற்கையின் கடுமையான சட்டங்களால் தோற்கடிக்கப்படுகின்றது. திட்டம், திட்டம், திட்டம், தீட்டிக் கொண்டேயிருங்கள்; இறுதியாக ஒருநாள் காலன் (எமன்) வந்து, “உன்னுடைய ஜனாதிபதி பதவியை காலி செய், பிரதமர் பதவியை காலி செய்,” என்று உத்தரவிடுவான்.

மனிதன் தனது திட்டங்கள் வெற்றியடைய வேண்டுமென்று மரணம் வரை போராடுகிறான். இறுதியில், அவன் அத்திட்டங்கள் அனைத்தையும் தனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து கூறுவான், “அன்புள்ள மகனே, அன்புள்ள மகளே, என்னால் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற இயலவில்லை, இனி நீங்கள் இதனைத் தொடருங்கள். இப்போது இவற்றை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” அவரது மகனும் திட்டம், திட்டம், திட்டம் என்று தொடர்கிறான். ஆனால், திட்டங்கள் ஒருபோதும் நிறைவேறுவதில்லை.

இதுவே சாஸ்திரங்களின் தீர்ப்பு: துராஷயா யே பஹிர்-அர்த-மானின:. துராஷயா என்றால் “வெற்றி அசாத்தியமானது” என்று பொருள். திட்டங்கள் ஒருபோதும் முழுமையடையப் போவதில்லை, இருந்தும்கூட, நாம் தொடர்ந்து திட்டங்களைத் தீட்டுவதற்காக ஓர் உடலை விட்டு மற்றோர் உடலை ஏற்கிறோம், ஒரு கிரகத்திலுள்ள இருப்பிடத்தை விட்டு மற்றொரு கிரகத்திற்குச் செல்கின்றோம்.

குருவை அணுகுவோம்

எல்லையற்ற திட்டங்களை உருவாக்கும் இத்தொழிலை எவ்வாறு நிறுத்துவது என்பதை புத்திசாலிகள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பொதுவான விஷயங்களை அறிந்துகொள்ள நாம் செய்தித்தாளை நாடுகிறோம். பிரம்ம-ஜிஜ்ஞாஸ எனப்படும் பிரம்மனைப் பற்றிய அறிவிற்கு யாரை நாட வேண்டும்?

தத்-விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத். குருவை நாட வேண்டும் என்பதே வேத கட்டளை. ஸமித்-பாணி: ஷ்ரோத்ரியம் ப்ரஹ்ம-நிஷ்டம். அந்த குரு பிரம்மனில் நிலைபெற்றவராகவும், சீடப் பரம்பரையின் வாயிலாகக் கேட்டறிந்தவராகவும் இருக்க வேண்டும்.

கிருஷ்ணரே ஆதி குரு. அவரே படைக்கப்பட்ட முதல் உயிர்வாழியாகிய பிரம்மதேவருக்கும் குரு. கிருஷ்ணரைவிடச் சிறந்த குருவாக யாரால் இருக்க முடியும்? தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதி-கவயே. அவர் பிரம்மதேவருக்கு உபதேசித்தார், பிரம்மதேவர் நாரதருக்கு உபதேசித்தார், நாரதர் வியாஸதேவருக்கு உபதேசித்தார். மேலும், வியாஸதேவர் நமக்கு எண்ணற்ற வேத இலக்கியங்களை வழங்கியுள்ளார். இதுவே சீடப் பரம்பரை வழிமுறையாகும்.

கிருஷ்ணரே ஆதி குரு. அவரே படைக்கப்பட்ட முதல் உயிர்வாழியாகிய பிரம்மதேவருக்கு உபதேசம் வழங்கினார்..

உண்மையான தர்மம்

பொதுவாக மக்கள் நினைக்கின்றனர், “சமயவாதிகளாக மாறுவதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேறலாம்.” உண்மையாகவே நீங்கள் தர்மத்தை அதாவது சமயக் கொள்கைகளைப் பின்பற்றினால், பொருளாதார முன்னேற்றம் தானாகவே வரும். இதில் எவ்வித ஐயமும் இல்லை. இருப்பினும், அவர்களுக்கு தர்மம் என்றால் என்ன என்பது தெரியாது. இதுதான் சிக்கல். இதனையே நாம் கிருஷ்ணரிடமிருந்து அல்லது குருவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். குரு கூறுவது என்ன? கிருஷ்ணர் கூறுவது என்ன? ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ: “எல்லாவிதமான போலி தர்மங்களையும் துறந்து என்னிடம் மட்டுமே சரணடைவாயாக.” இதுவே உண்மையான தர்மமாகும், மற்றவை எல்லாம் ஏமாற்று வேலையே.

தர்ம: ப்ரோஜித-கைதவ:. கைதவ என்றால் “ஏமாற்றுதல்” என்று பொருள். பாகவதத்தின் மூல விளக்கவுரையாளரான ஸ்ரீதர ஸ்வாமிகள், “மோக்ஷம் கூட ஏமாற்றுதலே” என்று கூறுகின்றார். மோக்ஷம் என்றால், “நான் அருவமாகி விடுவேன். எனது தனிப்பட்ட இருப்பை முடித்துக் கொள்வேன். நான் பிரம்மனுடன் ஒன்றாகக் கலந்து விடுவேன்” என்று நினைக்கின்றனர். ஸ்ரீதர ஸ்வாமி கூறுகின்றார், இவ்வாறான எண்ணங்கள் ஏமாற்றுதலே; ஏனெனில், உங்களால் பிரம்மனுடன் இரண்டறக் கலக்க முடியாது. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளபடி, மமைவாம்ஷோ ஜீவ-லோகே ஜீவ-பூத: ஸநாதன: நீங்கள் பரம புருஷரின் நித்திய அங்கம். அவ்வாறு இருக்கையில் உங்களால் எவ்வாறு ஒன்றாகக் கலக்க முடியும்?

பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகின்றார், “அர்ஜுனா, நானோ நீயோ இம்மன்னர்களோ இல்லாமலிருந்த காலம் எதுவுமில்லை, எதிர்காலத்திலும் நம்மில் எவரும் இல்லாமலிருக்கப் போவதுமில்லை.” இந்நிலையில் இரண்டறக் கலத்தல் என்பது எவ்வாறு சாத்தியம்? கடந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலத்திலும் தனித்துவம் வாய்ந்தவர்களாகவே நாம் இருக்கப் போகின்றோம்.

மனதை ஈடுபடுத்துதல்

ஆசைகள் என்றும் முடிவடைவதில்லை. எனவே, மனதை கிருஷ்ணரின் மீது பதிய வைத்து, கிருஷ்ண உணர்வில் ஈடுபடுவதே சிறந்த தீர்வாகும். மனதை எப்போதும் கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபடுத்தி, கிருஷ்ணரை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்பதைத் திட்டமிடும்போதுதான் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இதுவே புத்திசாலித்தனம். அனைவரும் தம்மிடம் சரணடைய வேண்டும் என்றே கிருஷ்ணர் விரும்புகிறார். ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ என்று அவர் அர்ஜுனனுக்காக மட்டும் கூறவில்லை, அனைவருக்காகவும் கூறுகிறார். இதுவே கிருஷ்ணரின் விருப்பம். நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பினால், அவருடைய விருப்பங்களை நிறைவேற்ற விரும்பினால், அனைவரையும் கிருஷ்ணரிடம் சரணடையச் செய்யுங்கள். இதுவே பிரச்சாரம். கிருஷ்ணரை திருப்திபடுத்துவதே உங்களின் கடமை.

பக்தரிடமிருந்து கேளுங்கள்

சில மூடர்கள் யோக ஜாலங்களால் ஏமாற்றப்படுகின்றனர், அந்த யோகியோ பற்பல பெளதிக வசதிகளை அடைகின்றான். பெளதிக வசதிகளைப் பெறுவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அரசியல்வாதிகூட தனது பேச்சின் மூலமாக இலட்சக்கணக்கான மக்களைக் கவர்கிறான். இருப்பினும், அத்தகு பேச்சினைக் கேட்பதால் விளையும் பயன் என்ன?

ஷ்ரவணம் கீர்தனம் விஷ்ணோ. பிரசங்கங்களைக் கேட்பதில் நீங்கள் ஆர்வம் கொண்டிருந்தால், சாஸ்திரம் கூறுகின்றது, “விஷ்ணுவைக் குறித்து கேளுங்கள்.” அயோக்கியர்களைக் குறித்து கேட்க வேண்டாம். விஷ்ணுவைப் பற்றிய தகவல்களைக்கூட பகவானுடைய பக்தர்களிடமிருந்து (வைஷ்ணவர்
களிடமிருந்து) கேளுங்கள். அப்போதுதான் நீங்கள் பயனடைவீர்கள், இல்லையெனில் பயன் கிடைக்காது. அவைஷ்ணவோ குருர் ந ஸ்யாத். இதுவே சாஸ்திரங்களின் கட்டளையாகும், வைஷ்ணவர் அல்லாதவர் குருவாக முடியாது.

ஷட்-கர்ம-நிபுணோ விப்ரோ மந்த்ர-தந்த்ர-விசாரத:. ஒருவர் பிராமணருக்குரிய ஆறு கடமைகளில்—படன, பாடன, யஜன, யாஜன, தான, ப்ரதிக்ரஹ [வேத பண்டிதராக இருத்தல், வேத அறிவைக் கற்பித்தல், வழிபாட்டில் ஈடுபடுதல், வழிபாட்டைக் கற்பித்தல், தானமளித்தல், தானம் பெறுதல்] ஆகியவற்றில் நிபுணராக இருந்தாலும், வேத மந்திரங்கள், தந்த்ர சாஸ்திரங்கள், ஜபம், சடங்குகள் என எல்லாவற்றிலும் நிபுணராக இருந்தாலும், அவைஷ்ணவோ குருர் ந ஸ ஸ்யாத், “வைஷ்ணவர் அல்லாதவரால் குருவாக முடியாது.” எனவே, நாம் வைஷ்ணவ குருவைக் கண்டறிய வேண்டும்.

வைஷ்ணவ: ஷ்வ-பசோ குரு. ஷ்வ-பச என்றால் நாயை உண்பவர்கள், சண்டாளர்கள், மனிதர்களில் இழிவானவர்கள். சண்டாளோ ’பி த்விஜ-ஷ்ரிஷ்டோ ஹரி-பக்தி-பராயண. ஒரு சண்டாளன்கூட வைஷ்ணவராக மாறினால், அவர் குருவாக ஏற்கப்படுகின்றார். ஆனால் வைஷ்ணவரல்லாத பிராமணர் எல்லா கலைகளிலும் நிபுணராக இருந்தாலும், அவர் குருவாக ஏற்கப்படுவதில்லை.

கிருஷ்ணரிடம் சரணடைபவர் சண்டாளராகப் பிறந்திருப்பினும், அவர் கிருஷ்ணரிடம் வருவதற்கான தகுதியைப் பெறுகின்றார். வைஷ்ணவரை இழி குலத்தவரா பிராமண குலத்தவரா என்று ஆராயக் கூடாது. அது நரக புத்தியாக, மிகவும் இழிவான செயலாகக் கருதப்படுகின்றது.

அவைஷ்ணவர் அல்லது மாயாவாதியிடமிருந்து, பாகவதம் மற்றும் பகவத் கீதையின் பிரசங்கத்தைக் கேட்கக் கூடாது. அது தவறான புரிந்துணர்வையே தரும் என்பதால், அதனை அவசியம் தவிர்க்க வேண்டும். எனவே, வைஷ்ணவரை நாடிச் சென்று, அவரை குருவாக ஏற்று, அவரிடமிருந்து அறிவைப் பெறுபவரின் வாழ்க்கை வெற்றியடைகின்றது.

மிக்க நன்றி.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives