தேவர்களை வழிபடலாமா?

Must read

Jivana Gaurahari Dasa
திரு. ஜீவன கௌர ஹரி தாஸ் அவர்கள், சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த வண்ணம் கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்து வருகிறார்.

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்

கோயில் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்பர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தெய்வீக வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. பக்திக்கு பெயர் போன திராவிட தேசத்தில் இன்றும் ஏராளமான வழிப்பாட்டு தலங்கள், கோயில்கள், குளங்கள் காணப்படுகின்றன, இறைவனை வழிபடும் கலாச்சாரம் தமிழ் மக்களின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாகும். அதே சமயத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் இந்தியாவிலேயே மனிதர்கள் மனிதர்களையே வழிபடும் அவலநிலை கலாச்சாரம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் பெருகியுள்ளது என்றால் அது நிச்சயம் மிகையல்ல.

அரசியல்வாதிகளையும் பிரபல திரைப்பட நட்சத்திரங்களையும் விளையாட்டு வீரர்களையும் தலையில் தூக்கி வைத்து ஆடுவது சிறந்த உதாரணங்களாகும். அதற்கும் மேலாக, என்னைப் பார் யோகம் வரும் என்கிற வாசகத்துடன் சுவற்றில் இருக்கும் கழுதை படத்திற்கும் சூடம் ஏற்றி வழிபடுகின்ற கலாச்சாரம் ஆங்காங்கே தென்படுகிறது. எது எப்படி இருப்பினும் யாரையாவது வழிபட வேண்டும் என்கிற உந்துதல் அனைத்து மக்களிடமும் பரவலாக காணப்படுகிறது. இந்த தருணத்தில் தேவர்களின் வழிபாட்டை பற்றி நாம் சற்று காண்போம்.

பிரபஞ்சத்தின் நிர்வாகிகள்

ஒரு மாநிலத்தை ஆளும் முதல் மந்திரிக்கு எவ்வாறு சில நூற்றுக்கணக்கான எம்எல்ஏக்கள் உள்ளனரோ, ஒரு நாட்டை ஆளும் பிரதம மந்திரிக்கு எவ்வாறு பல நூற்றுக்கணக்கான எம்பிக்கள் உள்ளனரோ, அதே போன்று இப்பிரபஞ்சத்தை ஆளும் பகவானுக்கு முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். உள்துறை, நிதித்துறை, பொதுப்பணித் துறை, என பல இலாக்காக்கள் சீரான நிர்வாகத்திற்காக ஒதுக்கப்படுவதைப் போன்று, பிரபஞ்சத்தை நிர்வகிப்பதற்கும் முப்பத்து முக்கோடி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, காற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வாயு தேவனும், நெருப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அக்னி தேவனும், மழையைக் கட்டுப்படுத்துவதற்கு வருண தேவனும், வெளிச்சத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சூரிய தேவனும், குளுமையையும் மனதையும் கட்டுப்படுத்துவதற்கு சந்திர தேவனும் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். பிரதமர், முதல்வர் என்பது எவ்வாறு ஒரு பதவியோ, அதுபோல இந்திரன், சந்திரன், சூரியன், வருணன், பிரம்மா, எமராஜன் என்பனவும் பதவிகளே. பிரதமருக்கும் முதல்வருக்கும் தனிப்பட்ட பெயர்கள் இருப்பதைப் போலவே தேவர்களுக்கும் பெயர்கள் உள்ளன. உதாரணமாக, தற்போதைய சந்திர தேவனின் பெயர் சோமன், இந்திரனின் பெயர் புரந்தரன், சூரியதேவனின் பெயர் விவஸ்வான்.

பதவிக்காலம்

இன்றைய அரசு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறுவதைப் போல, தேவர்கள் 30,77,20,000 வருடங்கள் அப்பதவிகளை அனுபவிக்கின்றனர். அதன் பிறகு, வேறு தகுதியான நபர்கள் அப்பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர். தேவர்களின் பதவிக்காலம் ஒரு மனுவின் ஆயுளாகும். அதாவது ஸத்ய, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு திவ்ய யுகம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு எழுபத்தொரு திவ்ய யுகங்கள் கொண்டது மனுவின் ஆயுளாகும்.

எறும்பிற்கு மனிதனின் நூறு வருடம் மலைப்பாக இருப்பதைப் போன்று, மனிதனுக்கு தேவர்களின் ஆயுள் மலைப்பைக் கொடுக்கின்றது. எது எப்படி இருப்பினும் நித்தியமான காலத்தின் பார்வையில் எறும்பு, மனிதன், தேவர்கள் என அனைவரின் ஆயுளும் மிகமிக அற்பமானதே. நூறு அஸ்வமேத யாகங்கள் செய்பவன் இந்திர பதவிக்குத் தகுதி பெறுகிறான். நூறு பிறவிகளுக்கு வர்ணாஷ்ரம தர்மத்தை நெறியுடன் கடைபிடிப்பவன் பிரம்மாவின் பதவிக்குத் தகுதி பெறுகிறான். எனவே, முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது வெறும் பதவியையே குறிக்கின்றது, முறையான தர்மத்தை கடைபிடிப்பவர்கள் யார் வேண்டுமானாலும் அப்பதவிகளில் அமரலாம்–இதனை தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

தேவர்கள் அவ்வப்போது அசுரர்களுடனான போரினால் பாதிக்கப்படுகின்றனர், தலைமறைவாகவும் வாழ வேண்டியுள்ளது.

கிருஷ்ணரின் சேவகர்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக ஏற்று முறையான தர்மநெறிகளை கடைபிடிப்பவர்களே தேவர்களின் பதவியில் அமர்த்தப்படுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், முப்பத்து முக்கோடி தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பணிவான பக்தர்களே. அவர்கள் அனைவரும் பகவான் கிருஷ்ணரால் படைக்கப்பட்டவர்கள் என்பதால், அவர்கள் அனைவரையும் கிருஷ்ணரின் ஐஸ்வர்யத்தில் ஒரு சிறு துளியாக வேத சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதி பெற்ற பிறகே தேவர்களால் மற்ற ஜீவராசிகளுக்கு வரத்தை அளிக்க முடியும். சுருக்கமாகக் கூறினால் தேவர்கள் சுதந்திரமானவர்கள் அல்லர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கட்டளைக்கு பணிந்தே செயல்படுகின்றனர். சூரியன் தினமும் பகவான் கிருஷ்ணரின் மீதான பயத்தினாலேயே நேரம் தவறாது உதிக்கிறார். இதர தேவர்களும் அவ்வாறே செயல்படுகின்றனர்.

கர்ம வினைக்கு உட்பட்டவர்கள்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் படைக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும் இயற்கையின் சட்டத்திற்கு உட்பட்டவர்களே. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சட்டதிட்டங்களை மீறும்போது அந்த தேவர்களும்கூட தண்டிக்கப்படுகின்றனர். இந்த உலகிலுள்ள ஜீவன்கள் புண்ணியச் செயல்களில் ஈடுபட்டு, கற்பனைக்கும் எட்டாத தேவலோக புலனின்பத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் தேவர்கள் வாழும் ஸ்வர்க லோகமும்கூட பௌதிக உலகத்தினுள் இருப்பதால், அங்கும் பிறப்பு, இறப்பு தவிர்க்க முடியாததாகும்.

பிரகலாதரின் தந்தையான ஹிரண்யகசிபு கடுந்தவம் மேற்கொண்டு பிரம்மாவின் தரிசனத்தைப் பெற்றபோது சாகா வரம் வேண்டினான். பிரம்மா அப்போது தானே மரணத்திற்கு உட்பட்டவன் என்று தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். தேவர்களை வழிபடுபவர்கள் தேவலோகத்தையே அடைவர் என கிருஷ்ணர் பகவத் கீதையில் குறிப்பிடுகிறார். தேவலோகவாசிகளின் புண்ணியம் தீரும் பட்சத்தில், அவர்களுடைய கழுத்திலுள்ள மலர்மாலை வாட ஆரம்பித்து விடும், பாதமும் தரையைத் தொட ஆரம்பிக்கும். இவ்விரு அறிகுறிகளும் தேவலோகவாசிகளிடம் பெரும் பயத்தை ஏற்படுத்தும்.

தேவலோக இன்பம் வெறும் காலவிரயம் என்பதை நன்கறிந்துள்ள வைஷ்ணவ பக்தர்கள், தேவலோகம் செல்ல வேண்டும் என்பதை சிறிதும் விரும்புவதில்லை. தேவர்களும் ஸத்வ, ரஜோ, தமோ குணங்களின் பிடியில் சிக்கியவர்கள் என்பதால், அவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருப்பாதங்களில் தஞ்சமடைந்து பௌதிக பந்தத்திலிருந்து வெளிவர அரும்பாடுபடுகின்றனர்.

 நாரதரைப் போன்ற தூய பக்தர்கள் எல்லா தேவர்களிலும் மேலானவர்கள்.

தேவர்களின் உண்மை நிலை

தேவர்கள் விண்ணுலக வாழ்வை தக்கவைத்துக் கொள்ள பெரும் துன்பத்தை எதிர்கொள்கின்றனர். அசுரர்கள் சில சமயம் வெற்றியடையும்போது, தேவர்கள் தலைமறைவான வாழ்விற்கு தள்ளப்படுகின்றனர். தங்களின் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று தெரிந்தால், அவர்கள் எந்த தந்திரத்தையும் உபயோகிக்கத் தயங்க மாட்டார்கள். கடுந்தவம் மேற்கொள்ளும் முனிவர்கள் தங்கள் பதவியை பிடித்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில், அவர்களுடைய தவத்தைக் கலைப்பதற்கு தேவர்கள் கூர்மையான திட்டத்தை வகுப்பர். இதற்கு சிறந்த உதாரணம், விஸ்வாமித்திரர் தன்னுடைய பதவியைப் பிடித்து விடுவாரோ எனும் பயத்தில், இந்திரன் தேவலோக மங்கையர்களான மேனகை, ரம்பை ஆகியோரை அனுப்பி, காமம் மற்றும் கோபத்தினால் தவத்தின் பலனை கரைத்தார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், முப்பது முக்கோடி தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள் என்றபோதிலும், அவர்கள் அவரிடம் முழுமையாக சரணடையாத பக்தர்களாவர்.

எனவே, ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் தூய கிருஷ்ண பக்தியை பயிற்சி செய்வதற்கு தேவர்களின் உடலைவிட மானிட உடலே சிறந்தது என குறிப்பிடுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் (ˆ7.20) பௌதிக விருப்பத்தினால் புத்தியை இழந்தவர்களே தேவர்களிடம் சரணடைகின்றனர் என கூறுகிறார்.

மதியை இழந்தவர்கள்

பௌதிக உலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஜீவனின் தேவைகளையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தேவர்களின் மூலமாக நிறைவேற்றுகிறார். சில சமயம் அந்த தேவர்கள் அகந்தை கொண்டு தடுமாறும்போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தற்காலிகமாக தேவர்களின் சக்தியை மறையச் செய்கிறார். உடனே தேவர்கள் பகவானிடம் சரணடைந்து தங்களுடைய நற்பண்பை வெளிப்படுத்துகின்றனர்.

கண்பார்வை இல்லாத பிச்சைகாரன் இரயிலில் பிச்சையெடுக்கும்போது, மேற்படுக்கையில் அமர்ந்திருப்பவர் கீழ் படுக்கையில் அமர்ந்திருப்பவரிடம் பத்து ரூபாயை கொடுத்து பிச்சை போட சொல்கிறார். அதை வாங்கி கொண்ட பார்வையில்லாத பிச்சைகாரன் கீழ் படுக்கையில் அமர்ந்திருப்பவரையே கையெடுத்து கும்பிடுகிறான். அதைப் போன்று மதியை இழந்தவர்கள் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் மூலமான கிருஷ்ணரை வழிபடுவதை விடுத்து, கிருஷ்ணரிடமிருந்து பலனை வாங்கிக் கொடுக்கும் தேவர்களை இஷ்ட தெய்வமாக வழிபடுகின்றனர் (பகவத் கீதை 9.25).

தேவர்களால் ஜீவனின் தலையெழுத்தை மிகக்குறைந்த அளவிற்கு மட்டுமே மாற்ற இயலும். அதே சமயம் பகவான் கிருஷ்ணரின் தூய பக்தர்களால் ஜீவனின் தலையெழுத்தை முழுமையாக மாற்றவியலும். அதனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தூய பக்தர்கள் தேவர்களைக் காட்டிலும் எல்லா விதத்திலும் சிறந்தவர்கள் என வேத சாஸ்திரங்கள் ஆணித்தரமாகக் கூறுகின்றன.

பிரபஞ்சத்தின் நிர்வாகிகளான அனைத்து தேவர்களும் எப்போதும் பகவான் விஷ்ணுவைச் சார்ந்தே உள்ளனர்.

தேவர்களின் வழிபாடு எதற்காக?

இவ்வாரிருக்கையில், தேவர்களின் வழிபாடு சாஸ்திரங்களில் ஏன் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என கேள்வி எழலாம். ஒவ்வொரு தேவர்கள் அல்லது தேவதைகளின் ஆலயங்களிலும், ஓம் கேஷவாய நம:, ஓம் நாராயணாய நம:, ஓம் கோவிந்தாய நம: என்று பகவானின் மந்திரத்தைக் கூறியே தங்களது பூஜையினைத் தொடங்குகின்றனர். அதன் பின்னர், உத்தியோகம், செல்வம், குடும்பம், ஆயுள், ஐஸ்வர்யம் விருத்தி உண்டாகட்டும் என்று கூறிய பிறகு, இறுதியிலும் இதி நாராயண ஸமர்ப்பயாமி என்று முடிக்கப்படுகிறது.

அதாவது, தேவர்களுடைய வழிபாட்டின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பரம புருஷ பகவானின் பெயர் உச்சரிக்கப்படுகிறது. அவ்வாறு பகவானுடைய நாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதால், ஒருவனின் இதயம் தூய்மையடைந்து உணர்வு மேம்படுகிறது. இவ்வாறாக தேவர்களின் வழிபாடு படிப்படியாக ஒருவரை கிருஷ்ண உணர்விற்கு மேம்படுத்தக்கூடிய மறைமுகமான வழிமுறையாகும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நேரடியாக வழிபட முடியாதவர்களுக்கு மறைமுகமாக அவரை வந்தடைவதற்கு வகுக்கப்பட்ட பாதையே தேவர்களின் வழிபாடு. ஆயினும், முப்பத்து முக்கோடி தேவர்களை நடைமுறையில் வழிபடுவது சாத்தியமா என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

துர்வாஸ முனிவரின் வருகை

ஒருமுறை துர்வாஸ முனிவர் தனது அறுபதாயிரம் சீடர்களுடன் பாண்டவர்களின் ஆசிரமத்திற்கு துரியோதனின் தூண்டுதலின் பேரில் வருகை புரிந்தார். நதியில் நீராடி விட்டு உணவருந்த வருகிறேன் என்று யுதிஷ்டிரரிடம் கூறி விட்டு அவர் சீடர்களுடன் நதியை நோக்கி புறப்பட்டார். திரௌபதியின் வசம் ஓர் அட்சய பாத்திரம் இருந்தது, அதனைக் கொண்டு எவ்வளவு விருந்தினர்கள் வந்தாலும் உணவளிக்க முடியும். ஆயினும், திரௌபதி உண்ட பிறகு அந்த அட்சய பாத்திரம் அன்றைய தினத்திற்கு மேலும் உணவை வழங்காது. துர்வாசர் வந்த அச்சமயத்தில் திரௌபதி ஏற்கனவே உணவருந்தி இருந்தாள்.

அறுபதாயிரம் சீடர்களுக்கு எவ்வாறு உணவளிப்பது என்று யோசித்த திரௌபதி, பகவான் கிருஷ்ணரை நினைத்து வழிபட பகவான் அவ்விடத்திற்கு விரைந்தார். அட்சய பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பருக்கையை திரௌபதியிடமிருந்து பெற்று உண்டார். அப்பருக்கை கிருஷ்ணரின் தொண்டையை அடைந்தவுடன் துர்வாஸ முனிவரும் அவரது அறுபதாயிரம் சீடர்களும் ஏப்பமிட்டனர். தங்களின் வயிறு நிறைந்திருப்பதைப் போன்று உணர்ந்த அவர்கள் பாண்டவர்களின் ஆசிரமத்திற்கு வராது சென்றுவிட்டனர். பகவான் கிருஷ்ணரை திருப்தி செய்வதன் மூலம் அனைத்து தேவர்களும் திருப்தியடைவார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் உண்டா?

நாம் தினந்தோறம் நூறு தேவர்களை வழிபட்டாலும் நமது வாழ்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களை வழிபட முடியாது. அதற்கும் மேலாக நமக்கு முப்பத்து முக்கோடி தேவர்களின் பெயரே தெரியாத பட்சத்தில் எங்ஙனம் அவர்களை வணங்குவது. செடிக்கு நீர் ஊற்ற வேரை தேர்ந்தெடுத்தால், இயற்கையாகவே, கிளை, இலை, பூ, காய்கள் புத்துணர்ச்சி பெற்று விடுகின்றன, அதைப் போன்று பகவான் கிருஷ்ணரே அனைவருக்கும் மூலம் என்பதால், அவரை வழிபடுவதன் மூலம் அனைத்து தேவர்களையும் இயற்கையாக வழிபடும் பலனைப் பெற்றுவிடலாம்.

பக்தர்களின் அணுகுமுறை

ஒருவர் முதலமைச்சரைச் சந்திக்கச் செல்லும்போது, முதல் மாலையை முதல்வருக்கு அருகிலிருக்கும் காவல்துறை உயர் அதிகாரிக்கு அணிவித்தால், அவர் நிச்சயம் தர்ம சங்கடப்படுவார். மாறாக, முதல் மலர்மாலையை முதல்வருக்கு அணிவித்து விட்டு, அதன் பின்னர் காவல்துறை அதிகாரிக்கு அணிவித்தால், அது முறையாக அமையும். கிருஷ்ண பக்தர்கள் தேவர்களை அணுகுவதும் அதுபோலவே இருக்கும்.

கிருஷ்ணரின் நண்பரான உத்தவர் ஏகாந்த பக்தி காரணமாக என்றுமே தேவர்களை வழிபட்டதில்லை. கிருஷ்ணரின் மற்றொரு நண்பரான அர்ஜுனன் சிலசமயம் தேவர்களை அவர்களின் நிலைக்கு தகுந்தவாறு வழிபட்டு மரியாதை செலுத்தினார். இவ்விரு பாதைகளும் சிறந்ததே. அதேசமயம் தேவர்களை தன்னிச்சையாக வழிபடுவதும், கிருஷ்ணருக்குச் சமமாகக் கருதுவதும், கிருஷ்ணரிடமிருந்து சுதந்திரமானவராக வழிபடுவதும் மிகவும் அபத்தமான கண்டிக்கத்தக்க செயல்களாகும்.

கணபதியும் வியாஸதேவரும்

மஹாபாரதத்தை எழுத்து வடிவில் இயற்றுவதற்கு கணபதியின் உதவியை வியாஸதேவர் நாடினார். மஹாபாரதத்தை இடைவெளியின்றி தொடர்ச்சியாக சொல்ல வேண்டும் என கணபதி வியாஸதேவரிடம் நிபந்தனை ஒன்றை விதித்தார். அதற்கு வியாஸதேவரும் தான் சொல்வதைப் புரிந்து கொண்டு எழுத வேண்டுமென கணபதிக்கு நிபந்தனை விதித்தார். அதன்படி கணபதி தன் கைப்பட புரிந்து எழுதிய மஹாபாரதத்தில் வரும் பகவத் கீதையின் சில ஸ்லோகங்களைப் பாருங்கள்.

ஸ்ரீ கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் (பகவத் கீதை 7.7); பௌதிக ஆன்மீக உலகங்களின் மூலம் கிருஷ்ணரே (பகவத் கீதை  10.8); தேவர்களிடம் சரணடைபவர்கள் அறிவில் குறைந்தவர்கள் (பகவத் கீதை 7.23); தேவர்களின் வழிபாடு உட்பட எல்லா தர்மங்களையும் துறந்து கிருஷ்ணரிடம் மட்டுமே சரணடைய வேண்டும் (பகவத் கீதை 18.66).

தேவர்களை வழிபடலாமா

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் தேவர்களின் வழிபாட்டைக் கண்டிக்கின்றார், அது அறிவில் குறைந்தவர்களின் மறைமுகமான முறையற்ற வழிபாடு என உரைக்கிறார். தேவர்களின் வழிபாடு படிக்கட்டில் மெதுவாக செல்வதைப் போன்றது, கிருஷ்ணரின் வழிபாடு மின்தூக்கியில் (லிப்டில்) பயணம் செய்வதைப் போன்றதாகும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒவ்வொரு ஜீவன்களையும் தன்னை நேரடியாக அணுகும்படி பகவத் கீதையில் அறிவுறுத்துகிறார். அதுவும் குறிப்பாக, தற்போதைய கலி யுகத்தில் தேவர்களை வழிபட்டு அவர்களை திருப்திசெய்தல் என்பது இயலாத காரியம் என்பதால், அனைவரும் நேரடியாக கிருஷ்ணரை வழிபடும் பாதையினை ஏற்றல் சாலச் சிறந்ததாகும்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives