ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மனதை முற்றிலுமாக அறிந்த கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்
வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்
கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும் விடுவிக்கும் திருப்பணியில் அவர் தன்னுடைய அந்தரங்க சேவகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி.
கௌடீய சம்பிரதாயம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடமிருந்து தொடங்குகிறது, அவர் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார் என்றபோதிலும், சிக்ஷாஷ்டகம் என்னும் எட்டு பாடல்களைத் தவிர அவர் வேறு எதையும் எழுதவில்லை. ஸம்பிரதாயத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான எழுத்துப் பணியினை அவர் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். அதிலும் குறிப்பாக, ரூப கோஸ்வாமிக்கும் ஸநாதன கோஸ்வாமிக்கும் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. எனவே, கௌடீய சம்பிரதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள போதிலும் ரூப கோஸ்வாமியைப் பின்பற்றுபவர்கள் ரூபானுகர்கள் என்று அழைக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் வரலாற்றினை ஒவ்வொரு வைஷ்ணவரும் அறிய வேண்டியது அவசியம் என்பதால், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் உட்பட பல்வேறு நூல்களில் காணப்படும் தகவல்களை இங்கே சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.
ஆரம்பகால வாழ்க்கை
தென்னிந்தியாவின் கர்நாடகப் பகுதியைச் சார்ந்த ஸாரஸ்வத பிராமணர்கள் சிலர் வங்காளத்திற்கு இடம் பெயர்ந்து அங்கே வாழ்ந்து வந்தனர். அவர்களின் வழியில் வந்த குமாரதேவர் என்பவருக்கு இன்றைய வங்காள தேசத்தின் ஜெஷோர் மாவட்டத்தின் பேடயபாத் என்ற ஊரில் ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிறந்தார். அவருடைய மூத்த சகோதரர் ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமி, அவரது இளைய சகோதரர் ஸ்ரீல வல்லப கோஸ்வாமி. இந்த மூன்று சகோதரர்களும் இளம் வயதிலிருந்தே வைஷ்ணவ தர்மத்தின்படி வாழ்ந்து வந்தனர். பிற்காலத்தில் அவர்கள் இராமகேலி என்ற ஊருக்கு இடம் பெயர்ந்தனர். காலப்போக்கில் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணத்தினால், அவர்கள் இஸ்லாமிய மன்னன் ஹுசைன் ஷா என்பவரிடம் பணிபுரிய நேர்ந்தது. ரூப கோஸ்வாமி மன்னருடைய தலைமைச் செயலராகவும் ஸநாதன கோஸ்வாமி நிதி அமைச்சராகவும் நெருங்கி இருந்த காரணத்தினால், அவர்கள் ஏறக்குறைய இஸ்லாமியர்களாகவே கருதப்பட்டனர், அவர்கள் முறையே தபிர் காஸ், ஸாகர மல்லிக் என்று அழைக்கப்பட்டனர்.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைச் சந்தித்தல்
கி.பி 1514 ஆம் ஆண்டில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு புரியிலிருந்து வங்காளத்தின் வழியாக விருந்தாவனத்திற்குச் செல்ல முயன்றார். அச்சமயத்தில் ரூப கோஸ்வாமி தனது சகோதரர்களுடன் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை முதன் முதலாகச் சந்தித்தார். தான் யார் என்பதை அறியாமலும் இந்த உலகில் ஏன் துன்பப்படுகிறோம் என்பதை அறியாமலும் இருந்ததால், ரூப கோஸ்வாமியும் அவரது சகோதரர்களும் தங்களது ராஜ போக வாழ்க்கையினை துச்சமாகக் கருதினர். மக்கள் அவர்களை மிகுந்த புத்திசாலிகள் என்று உரைத்த போதிலும், அவர்கள் தங்களை மாபெரும் முட்டாள்களாக ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடம் ஒப்படைத்தனர். பௌதிக வாழ்விலிருந்து தங்களை விடுவிக்கும்படி அவர்கள் வேண்ட, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவர்கள் மூவரையும் அரசாங்க பணியினை விட்டுவிட்டு கிருஷ்ணரின் தொண்டில் முழுமையாக ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.
ஸ்ரீல ரூப கோஸ்வாமியும் ஸநாதன கோஸ்வாமியும்
ரூப கோஸ்வாமியின் துறவு
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அறிவுரையின் பேரில் ரூப கோஸ்வாமி உடனடியாக தனது அரசாங்க பதவியைத் துறந்தார். மாபெரும் செல்வந்தரான அவரிடம் படகுகளில் ஏற்றப்படும் அளவிற்கு எண்ணிலடங்காத தங்க நாணயங்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. அவர் அந்த நாணயங்களை தனது உறவினர்களுக்கு பகிர்ந்தளித்து விட்டு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைச் சந்திப்பதற்காக விருந்தாவனம் நோக்கி புறப்பட்டார். ஸநாதனரால் உடனடியாக பணியிலிருந்து விலக முடியவில்லை. அவருக்கு தேவைப்படலாம் என்பதற்காக ரூபர் பத்தாயிரம் தங்க நாணயங்களை ஒரு வியாபாரியிடம் கொடுத்து விட்டு இளைய சகோதரர் வல்லபருடன் இணைந்து புறப்பட்டார்.
பிரயாகையில் மஹாபிரபுவைச் சந்தித்தல்
ரூப கோஸ்வாமியும் வல்லபரும் விருந்தாவனத்திற்கான பாதையில் மஹாபிரபுவை பிரயாகையில் சந்தித்தனர். ரூபரைக் கண்டு மஹாபிரபுவும் மஹாபிரபுவைக் கண்டு ரூபரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். பிரயாகையில் உள்ள தஷாஷ்வமேத காட் என்ற படித்துறையில் மஹாபிரபு ரூப கோஸ்வாமிக்கு பக்தித் தொண்டின் ரஸங்கள் குறித்த மிக முக்கியமான தத்துவங்களை பத்து நாள்களுக்கு தொடர்ந்து விவரித்தார். அந்த உபதேசங்களே பிற்காலத்தில் ரூப கோஸ்வாமியின் மிக முக்கிய நூலான பக்தி ரஸாம்ருத ஸிந்துவிற்கு அடித்தளமாக அமைந்தது. ரூபரை விருந்தாவனத்திற்கு செல்லும்படி கட்டளையிட்ட மஹாபிரபு அங்கே அவருக்கு இரண்டு முக்கிய பணிகளை வழங்கினார்: (1) மறைந்துபோன கிருஷ்ணருடைய லீலா ஸ்தலங்களை கண்டுபிடித்து புதுப்பித்தல், (2) பக்தி கிரந்தங்களை இயற்றுதல். அத்திருப்பணிகளில் பிற்காலத்தில் ஸநாதனரும் அவரைத் தொடர்ந்து இதர பக்தர்களும் இணைந்து கொண்டனர்.
வஜ்ரநாபரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ரூப கேஸ்வாமியினால் வழிபடப்பட்ட கோவிந்தர். இவர் தற்போது ஜெய்ப்பூரில் வழிபடப்பட்டு வருகிறார்.
ரூபரின் புரி வருகை
சில வருடங்களுக்குப் பின்னர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அழைப்பின் பேரில் ரூப கோஸ்வாமி புரிக்கு வந்தார். அச்சமயத்தில் அவர் புரியில் பத்து மாதங்கள் தங்கியிருந்தார். ரத யாத்திரையின்போது மஹாபிரபு யாராலும் புரிந்து கொள்ளாத வகையில் உன்னத ரஸங்களை வெளிப்படுத்தி பாடல்களைப் பாடுவது வழக்கம். மஹாபிரபுவின் பாடலைக் கேட்ட ரூபரால், மஹாபிரபுவின் கருணையினால், அதன் பொருளை முழுமையாக உணர முடிந்தது. ரூபர் உடனடியாக அதனை அற்புதமான கவிதையின் வடிவில் எழுதி விட்டு, அந்த ஓலைச் சுவடியை கூரையில் சொருகி விட்டு நீராடச் சென்றார். அப்போது அங்கு வந்த ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்படியோ அந்த ஓலைச் சுவடியைப் பார்த்து அந்த கவிதையைப் படித்து மிகவும் வியப்படைந்தார். தனது மனோபாவத்தை ரூபரால் எவ்வாறு அறிய முடிந்தது என்று மஹாபிரபு தனது அந்தரங்க காரியதரிசியான ஸ்வரூப தாமோதரரிடம் வினவ, தங்களின் கருணையே அதற்கு காரணம் என்று ஸ்வரூபர் பதிலளித்தார்.
மஹாபிரபுவின் மனதினை துல்லியமாக அறிந்தவர் என்பதாலும் பக்தி ரஸத்தில் மூழ்கி திளைத்தவர் என்பதாலும் ரூப கோஸ்வாமி மஹாபிரபுவை பின்பற்றுபவர்களில் தலைசிறந்தவராகக் கருதப்படுகிறார். எனவே, ரூப கோஸ்வாமி பின்வரும் பிரார்த்தனையினால் வணங்கப்படுகிறார்:
“பகவான் ஸ்ரீ சைதன்யரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான இயக்கத்தை இப்பௌதிக உலகில் நிறுவிய ஸ்ரீல ரூப கோஸ்வாமி பிரபுபாதர் எப்போது தமது பாதக் கமலங்களில் எனக்கு அடைக்கலம் தருவார்?”
விருந்தாவனத்தில் ரூபரின் பணிகள்
மஹாபிரபுவின் கட்டளையின்படி ரூபர் தனது வாழ்நாள் முழுவதும் விருந்தாவனத்தில் தங்கியிருந்தார். வங்காளத்தில் மாபெரும் செல்வச் செழிப்பில் வாழ்ந்த அவர் விருந்தாவனத்தில் வெறும் கோவணமும் போர்வையும் கொண்டு வாழ்ந்தார். தினமும் ஒரு மரத்தடியில் தங்கியபடி சாஸ்திரங்களை நுணுக்கமான முறையில் அலசி ஆராய்ந்து பல்வேறு நூல்களை இயற்றினார். கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோவிந்த விக்ரஹத்தை கண்டுபிடித்து, அவருக்காக விருந்தாவனத்தில் ஏழு அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டமான கோயிலை எழுப்பினார்.
ரூப கோஸ்வாமி கூரையில் சொருகியிருந்த கவிதையை மஹாபிரபு படித்தல்
இறுதி வருடங்கள்
வல்லபரின் மகனான ஜீவ கோஸ்வாமியும் பிற்காலத்தில் விருந்தாவனத்திற்கு வந்து ரூப ஸநாதனரின் சங்கத்தில் வாழ்ந்தார். ரூப கோஸ்வாமி ஜீவ கோஸ்வாமிக்கு கௌடீய வைஷ்ணவ தத்துவத்தில் முழு பயிற்சியைக் கொடுத்தார். கி.பி 1564 ஆம் ஆண்டில் ரூப கோஸ்வாமி இவ்வுலகிலிருந்து மறைந்து ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் நித்திய லீலையினுள் பிரவேசித்தார். விருந்தாவனத்தில் உள்ள ராதா-தாமோதரரின் கோயிலிலுள்ள அவரது ஸமாதியை இன்றும் விருந்தாவனத்திற்குச் செல்பவர்கள் தரிசிக்கலாம். இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதர் அமெரிக்கா செல்வதற்கு முன்பாக அங்கே ரூப கோஸ்வாமியின் திருவடிகளில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூப கோஸ்வாமியின் நூல்கள்
ரூப கோஸ்வாமியின் பல்வேறு நூல்களில் பின்வரும் பதினாறு நூல்கள் வைஷ்ணவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவை. (1) ஹம்ஸதூத, (2) உத்தவ-ஸந்தேஷ, (3) கிருஷ்ண-ஜன்ம-திதி-விதி, (4) பிருஹத் ராதா-கிருஷ்ண-கணோத்தேஷ-தீபிகா, (5) லகு ராதா-கிருஷ்ண-கணோத்தேஷ-தீபிகா, (6) ஸ்தவமாலா, (7) விதக்த-மாதவ, (8) லலித-மாதவ, (9) தான-கேலி-கௌமுதி, (10) பக்தி-ரஸாம்ருத-ஸிந்து, (11) உஜ்ஜ்வல-நீலமணி, (12) ஆக்யாத-சந்த்ரிகா, (13) மதுரா-மஹிமா, (14) பத்யாவலி, (15) நாடக-சந்த்ரிகா, (16) லகு-பாகவதாம்ருத.
லலித-மாதவ, விதக்த-மாதவ ஆகிய இரண்டு நாடகங்களும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் நேரடி கட்டளையின் பேரில் இயற்றப்பட்டவை. பக்தி ரஸாம்ருத ஸிந்து மஹாபிரபு பிரயாகையில் வழங்கிய உபதேசங்களை வைத்து இயற்றப்பட்டது. ரூப கோஸ்வாமியின் இந்த நூல்களும் அவரது இதர நூல்களும் அவரது சாஸ்திர புலமையினை தெளிவுபடுத்துகின்றன. ரூபருடைய கையெழுத்தினையும் மஹாபிரபு மிகவும் பாராட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூப கோஸ்வாமியினால் ஏழு தளங்களுடன் எழுப்பப்பட்ட பிரம்மாண்டமான ஸ்ரீ கோவிந்தரின் திருக்கோயில். தற்போது இஸ்லாமிய தாக்குதலால் மூன்று தளங்களுடன் காணப்படுகிறது.
ரூப கோஸ்வாமியின் முக்கியத்துவம்
ரூப கோஸ்வாமி ராதா-கிருஷ்ணரின் லீலையில் ரூப-மஞ்சரியாக சேவை செய்கிறார். அதாவது, ஸ்ரீமதி ராதாராணியின் முக்கிய உதவியாளராக சேவை செய்கிறார். கௌடீய வைஷ்ணவர்களின் நோக்கம் விருந்தாவனத்தில் ராதா-கிருஷ்ணருக்கு சேவை செய்வதாகும். ரூப கோஸ்வாமியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் மூலமாகவே விருந்தாவனத்தினுள் பிரவேசிக்க இயலும். இக்கருத்தினை கௌடீய ஆச்சாரியர்கள் பலரும் பலவிதங்களில் வெளிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் தனது சைதன்ய சரிதாம்ருதத்தின் ஒவ்வோர் அத்தியாயத்தையும், ஸ்ரீ-ரூப-ரகுநாத-பதே யார ஆஷ, “ரூப கோஸ்வாமியின் தாமரைத் திருவடிகளை நான் விரும்புகிறேன்,” என்று கூறி முடிக்கிறார்.