தமிழகத்தில் ஸ்ரீ சைதன்யர்

Must read

வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பெண், பொன், பொருள் வேண்டினால் எளிதில் கொடுத்து விடுவார், முக்தியைக்கூட கொடுத்து விடுவார்; ஆனால் அவரின் மீதான தூய அன்பினை (கிருஷ்ண பிரேமையினை) அவ்வளவு எளிதில் யாருக்கும் கொடுத்து விட மாட்டார். இருப்பினும், அவர் கலி யுக மக்களின் மீதான கருணையினால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்து கிருஷ்ண பிரேமையினை அனைவருக்கும் தாராளமாக வழங்கினார். இதனாலேயே அவர் எல்லா அவதாரங்களிலும் கருணை வாய்ந்த அவதாரம் என்று அழைக்கப்படுகிறார்.

மக்களை உய்விக்கும்பொருட்டு, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்து ஹரி நாமத்தை அருளினார். ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் காணப்படும் அவரது தென்னிந்திய பயணக் குறிப்புகளில், இன்றைய தமிழ்நாட்டின் இடங்களே மிக அதிகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பது நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது.

எங்கெல்லாம் சென்றார்?

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் ஆசிரியரான ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமி அவர்கள் மஹாபிரபுவின் பயணத்தை கூடியவரை வரிசைக்கிரமமாக வழங்க முயன்றுள்ளார்; அதே சமயத்தில், ஸ்ரீ சைதன்யரின் தீர்த்த யாத்திரை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லா திசைகளிலும் இருந்தது என்றும், சில இடங்களுக்கு அவர் இருமுறைகூட விஜயம் செய்தார் என்றும், தம்மால் ஒரு சில இடங்களின் பெயர்களை மட்டுமே சுட்டிக்காட்ட முடிகிறது என்றும் அவர் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, அவர் தமிழகம் முழுவதும் பயணித்தார் என்று கூறுவதே சாலச் சிறந்தது.

ஆயினும், ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ள இடங்களும் சம்பவங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை மறுக்க முடியாது. மஹாபிரபு தமது பயணத்தில் எண்ணிலடங்காத மக்களை கிருஷ்ண பக்தர்களாக மாற்றினார், அவரால் மாற்றப்பட்டவர்கள் தத்தமது ஊர்களுக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் மாற்றினர். சுருக்கமாகச் சொன்னால், ஸ்ரீ சைதன்யர் தமிழகத்தில் இருந்தபோது, தமிழகமெங்கும் ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனம் பரவலாகியது.

கீர்த்தனம், நர்த்தனம், ஹரி நாம பிரச்சாரம், கோயில் தரிசனம்—இவையே மஹாபிரபுவின் பயணத்தின்போது எல்லா இடங்களிலும் நிகழ்ந்த பொதுவான செயல்கள். எனவே, கிருஷ்ணதாஸ கவிராஜர் பெரும்பாலும் மஹாபிரபு பயணித்த ஊர்களுடைய பெயர்களை மட்டுமே வழங்கியுள்ளார், சில இடங்களில் அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களையும் விளக்கியுள்ளார்.

இப்போது மஹாபிரபுவின் பயணத்தினுள் நுழைவோம்.

வட தமிழகம்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது பயணத்தில், திருப்பதி, திருமலை, காளஹஸ்தி ஆகிய இடங்களை தரிசித்த பின்னர், காஞ்சிபுரத்திற்கு வந்தார். காஞ்சிபுரமே தமிழகத்தில் அவரது திருவடிபட்ட முதல் திருத்தலமாகும். சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி ஆகிய இரண்டு ஊர்களிலுள்ள எல்லா கோயில்களுக்கும் அவர் சென்றுள்ளார்.

அங்கிருந்து அவர் திருக்கழுக்குன்றத்திற்குச் சென்று மலை மேல் அமைந்துள்ள வேதகிரீஸ்வரரை தரிசித்தார். அதன் பின்னர், அவர் விருத்தாசலம், வெள்ளை வராஹர் வீற்றுள்ள ஸ்ரீமுஷ்ணம், நடராஜர் நடனமாடும் சிதம்பரம், திருஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப் பாலூட்டிய சீர்காழி, வேதாரண்யம், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் ஆகிய ஊர்களைக் கடந்து ஸ்ரீரங்கத்தை அடைந்தார்.

வைகை நதியில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நீராடுதல்
ஸ்ரீரங்கம்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது வெளிப்புற லீலைகளின் பெரும்பகுதியினை நவத்வீபத்திலும் ஜகந்நாத புரியிலும் கழித்தார். அதற்கு அடுத்தாற்போல, அவர் அதிக காலம் வசித்தது ஸ்ரீரங்கத்தில்தான். ஸ்ரீ சைதன்யரின் பிரேமையினால் வசீகரிக்கப்பட்ட, வேங்கட பட்டர் என்ற ஸ்ரீ வைஷ்ணவர் மஹாபிரபுவை தமது இல்லத்தில் தங்கி அருள்புரியும்படி வேண்டினார். அதன்படி, மஹாபிரபுவும் சாதுர்மாஸ்யம் எனப்படும் நான்கு மாத மழைக் காலத்தை ஸ்ரீரங்கத்தில் கழித்தார்.

மஹாபிரபு நாள்தோறும் காவிரியில் நீராடி, ஸ்ரீரங்கநாதரை தரிசித்து, பரவசத்துடன் பாடி ஆடினார். அவரைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் குவிந்தனர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வைஷ்ணவர் அவரை தமது இல்லத்திற்கு அழைத்து உணவளித்தனர். இத்தருணத்தில், மஹாபிரபு வேங்கட பட்டருடன் நட்பு ரீதியில் ஸம்பிரதாய பேதங்களைப் பற்றி விவாதித்தார். மேலும், ஸ்ரீ சைதன்யரால் கவரப்பட்ட வேங்கட பட்டரின் மகனும் தம்பியும் பிற்காலத்தில் சைதன்யருடன் இணைந்து முறையே கோபால பட்ட கோஸ்வாமி, பிரபோதானந்த சரஸ்வதி என்று பிரபலமாயினர்.

ஸ்ரீரங்கத்தில் ஒரு லீலை: பிராமணர் ஒருவர் கீதையைச் சரியாக உச்சரிக்க முடியாவிடினும் தமது குருவின் ஆணைப்படி தினமும் அதனைப் படித்துக் கொண்டிருந்தார். பிரேமையினால் கண்களில் நீர் வழிய, அவர் படிப்பதை சிலர் ஏளனம் செய்வதும் வழக்கம். கீதையின் ஆழ்ந்த அர்த்தங்களை அவரால் புரிந்துகொள்ள முடியாவிடினும், கிருஷ்ணர் அர்ஜுனனின் தேரோட்டியாகச் செயல்படுவதையும் ரதத்தில் அமர்ந்தபடி கீதையை உபதேசிப்பதையும் எண்ணிப் பார்த்து, அவர் எப்போதும் ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார். மஹாபிரபு அவரை ஆரத்தழுவி, கீதையின் உண்மையான பொருளை அறிந்தவர் தாங்களே என்று போற்றினார்.

சாதுர்மாஸ்ய காலம் முடிவுற்ற பின்னர், ஸ்ரீ சைதன்யர் ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட முனைந்தபோது, அவரது பிரிவினை வேங்கட பட்டரால் தாங்க முடியவில்லை. இருப்பினும், ஸ்ரீ சைதன்யர் பெரிதும் முயன்று அவரை சமாதானம் செய்து விட்டு, தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

ரிஷப பர்வதம்

ஸ்ரீ சைதன்யர் ரிஷப பர்வதத்திற்குச் சென்று அங்கே தமது குருவின் ஆன்மீக சகோதரரான பரமானந்த புரியைச் சந்தித்தார், பரமானந்த புரி பிற்காலத்தில் ஜகந்நாத புரிக்கு வந்து ஸ்ரீ சைதன்யரின் சங்கத்தில் வசித்தார். ரிஷப மலை என்பது குடகாசல காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஆனாகட மலைப்பகுதியைக் குறிக்கிறது. இன்று இவ்விடம் பழனி மலை என்று அறியப்படுகிறது.

மதுரை

மதுரைக்கு வந்த ஸ்ரீ சைதன்யர் இராம பக்தர் ஒருவரின் இல்லத்தில் தங்கினார். அந்த பக்தர் “சீதையை இராவணன் கடத்திச் சென்றானே” என்பதை எண்ணி எப்போதும் தெய்வீகக் கவலையில் இருந்தார். அவரிடம், “சீதையின் திருமேனி தெய்வீகமானது, பௌதிகக் கண்களைக் கொண்டு காண இயலாதது. அவ்வாறு இருக்கையில், அவளைத் தீண்டுவதைப் பற்றி கூறத் தேவையில்லை. இராவணன் சீதையின் மாயத் தோற்றத்தையே கடத்திச் சென்றான்,” என்று மஹாபிரபு கூறினார்.

பின்னர், மஹாபிரபு இராமேஸ்வரம் சென்றபோது அங்கே கூர்ம புராண பாராயணத்தைக் கேட்டார். அதன் ஓரிடத்தில், சீதையைக் கடத்திச் செல்ல இராவணன் வந்தபோது, சீதை அக்னிதேவனிடம் தஞ்சமடைந்தாள் என்றும், அக்னிதேவனால் மறைக்கப்பட்டதால் இராவணன் மாயா சீதையையே கடத்திச் சென்றான் என்றும் கூறப்பட்டிருந்தது. இராவணனைக் கொன்ற பின்னர், இராமர் நிகழ்த்திய அக்னி பரிட்சையின்போது மாயா சீதை அக்னியில் நுழைய உண்மையான சீதை வெளியே வந்தாள். கூர்ம புராணத்தின் இப்பகுதியைக் கேட்ட மஹாபிரபு மிகுந்த மகிழ்ச்சியுடன் அந்த ஓலைச்சுவடிகளை தம்முடன் எடுத்துக் கொண்டு, மீண்டும் மதுரைக்கு திரும்பி அந்த இராம பக்தரிடம் அவற்றைக் காண்பித்து அவரது துயரத்தைப் போக்கினார்.

தென் பகுதிகள்

தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கக்கூடிய பெரும்பாலான திருத்தலங்களின் பெயர்களை நாம் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் காண்கிறோம். இவ்விடங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த லீலைகளும் இல்லை என்றபோதிலும், எல்லா இடங்களிலும் கீர்த்தனம், நர்த்தனம், தரிசனம், ஹரி நாம பிரச்சாரம் ஆகியவை சிறப்பாக நிகழ்ந்தன.

இராமநாதபுரம் பகுதியில்: திருப்புல்லாணி, சேதுபந்தம், தனுஷ்கோடி, இராமேஸ்வரம்.

திருநெல்வேலி பகுதியில்: மகேந்திர கிரி, நவதிருப்பதி எனப்படும் ஒன்பது விஷ்ணு கோயில்கள், தென்காசி, பணக்குடி.

கன்னியாகுமரி பகுதியில்: சுசீந்திரம், கன்னியாகுமரி, தோவாளை, பூதபாண்டி, திருவட்டாறு.

திருவட்டாறு ஆதி கேசவர் கோயிலில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முன்னேறிய பக்தர்களுடன் ஆன்மீக விஷயங்களை விவாதித்தபோது, பிரம்ம சம்ஹிதையின் ஓர் அத்தியாயத்தைக் கண்டுபிடித்தார். சித்தாந்தத்தில் பிரம்ம சம்ஹிதைக்கு இணையான நூல் வேறு எதுவும் இல்லை என்பதால், கோவிந்தரின் பெருமைகளை விளக்கும் அந்நூலைப் பெற்று மஹாபிரபு பேரானந்தம் அடைந்தார். அதன் ஒரு பிரதியினை தம்முடன் எடுத்துச் சென்று புரியில் வசித்த அனைத்து பக்தர்களுக்கும் வழங்கினார்.

திருவட்டாறில் இருந்து திருவனந்தபுரம், வர்கலை என்று இதர பகுதிகளுக்கு ஸ்ரீ சைதன்யர் தமது பயணத்தைத் தொடர்ந்தார்.

ஐயத்திற்குரிய இடங்கள்

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் சுமார் 400 வருடத்திற்கு முன்பாக எழுதப்பட்டதால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில இடங்களை இன்று நம்மால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. அத்தகு இடங்களை இங்கே ஐயத்திற்குரிய இடங்களாக பட்டியலிட்டுள்ளோம்.

(1) ஸ்கந்த க்ஷேத்திரம்—திருச்செந்தூராக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

(2) திரிவிக்ரமரின் கோயில் அமைந்துள்ள திரிமடம்—திருக்கோவலூரைக் குறிக்கலாம்.

(3) மலய பர்வதம்—மஹாபிரபு மலய பர்வதத்திற்குச் சென்று அகஸ்தியரை வணங்கினார் என்று கூறப்பட்டுள்ளது. இவ்விடம், (அ) தஞ்சாவூர் பகுதியிலுள்ள அகஸ்தியாம்பள்ளி, (ஆ) அகஸ்தியரால் ஏற்படுத்தப்பட்ட சிவகிரி மலைக்கோயில், (இ) கன்னியாகுமரி அருகிலுள்ள பொதிகை மலை, (ஈ) தாமிரபரணி கரையிலுள்ள அகஸ்திய மலை—இந்த நான்கில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

(4) காமகோஷ்டி புரி—திருக்கோஷ்டியூராக இருக்கலாம்.

(5) மகாபலிபுரம்—ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்படவில்லை என்றபோதிலும், மஹாபிரபு இங்கு வந்தார் என்று பரவலாக நம்பப்படுகிறது.

அறிய முடியாத இடங்கள்

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கீழ்க்காணும் இடங்கள் எங்குள்ளன என்பதைக் கண்டறிய முடியவில்லை.

(1) பௌத்த ஸ்தானம்—ஸ்ரீ சைதன்யர் பௌத்தர்களுடன் வாதம் செய்த இடம்.

(2) கோ ஸமாஜம்—வேதாரண்யத்திற்கு அருகிலுள்ள சைவத் திருத்தலம்.

(3) தேவஸ்தானம்—கும்பகோணத்திற்கு அருகிலுள்ள வைஷ்ணவத் திருத்தலம்.

(4) ஆம்லிதலம்—கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள திருத்தலம்.

பாதச் சின்னங்கள்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பயணம் செய்த எல்லா இடங்களும் புனிதமான திருத்தலங்களாக கௌடீய வைஷ்ணவர்களால் மதிக்கப்படுகின்றன. அவற்றில் சில ஏற்கனவே திருத்தலங்களாக இருந்தபோதிலும், மஹாபிரபுவின் வருகையினால் அவை விசேஷ நிலையைப் பெற்றுள்ளன. நமது பூர்வீக ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஸ்ரீ சைதன்யர் பயணித்த எல்லா இடங்களுக்கும் பக்தர்களின் சங்கத்தில் செல்ல விரும்பினார்.

அதன்படி, ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி அவர்கள் ஸ்ரீ சைதன்யர் பயணித்த பெரும்பாலான இடங்களுக்குச் சென்று, ஸ்ரீ சைதன்யரின் நினைவாக சில இடங்களில் பாதச் சின்னங்களை அமைத்தார். அவரது வழியில் வந்தவர்கள் 1964ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் சைதன்யருக்கு ஒரு சிறிய மண்டபத்தை எழுப்பி பாதச் சின்னத்தைப் பதித்துள்ளனர். ஆயினும், தமிழகத்தில் வேறெங்கும் சைதன்யரின் பாதச் சின்னங்கள் இல்லை என்பது வருத்தமாக உள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருப்பதைப் போன்ற மண்டபங்கள் வருங்காலத்தில் இதர இடங்களிலும் எழுப்பப்பட வேண்டும்.

புனித பூமியான தமிழகம்

முன்னரே கூறியபடி, ஸ்ரீ சைதன்யர் சென்ற ஊர்களில் சிலவற்றின் பெயர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர் எல்லா திசைகளிலும் பயணித்தார் என்று கூறப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதையும் மஹாபிரபுவின் திருவடிகள்பட்ட புண்ணிய பூமியாகக் கருதலாம். துரதிர்ஷ்டவசமாக இங்கே இன்று அவரது பெருமைகள் பரவலாக அறியப்படவில்லை. இதைப் போக்கும் விதத்தில், சைதன்யரின் மகிமைகளையும் அவர் வழங்கிய ஹரே கிருஷ்ண மஹா மந்திர கீர்த்தனத்தையும் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டுச் செல்வோம்.

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives