வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அழகான கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது ஸ்ரீ ஜகந்நாத புரி க்ஷேத்திரம். கம்பீரமான ஜகந்நாதர் வீற்றிருக்கும் இந்த க்ஷேத்திரத்திற்கு, ஸ்ரீ க்ஷேத்திரம், புருஷோத்தம க்ஷேத்திரம், சங்கு க்ஷேத்திரம், நீலாச்சல க்ஷேத்திரம் என்று பல பெயர்கள் உண்டு. பாரதத்தின் நான்கு முக்கிய புனித க்ஷேத்திரங்களாக போற்றப்படுபவை: பத்ரிநாத், துவாரகை, புரி, மற்றும் இராமேஸ்வரம். இவற்றில் கலி யுகத்தில் மிக முக்கிய க்ஷேத்திரம் என்று புரி அழைக்கப்படுகிறது. ஜகந்நாதர் என்றால் பிரபஞ்சத்தை ஆள்பவர் என்று பொருள். இவரை தரிசிக்க பல கண்கள் வேண்டும் என வைஷ்ணவ ஆச்சாரியர்கள் பாடியிருக்கின்றனர்.
க்ஷேத்திரத்தின் மகிமை
புரியின் மகிமை பல புராணங்களில் சொல்லப் பட்டிருக்கின்றது. இங்கு வசிக்கும் எந்த ஜீவராசியையும் எமராஜர் தன் அதிகார வரம்பிற்குள் கொண்டு வர முடியாது, அவர்கள் நான்கு கரங்களைக் கொண்ட வைகுண்டவாசிகளாக தேவர்களின் பார்வைக்கு தெரிகின்றனர். பிரளயத்தின்போது இந்த க்ஷேத்திரம் அழிவதில்லை. ஆன்மீக உலகில் நித்தியமாக இருக்கும் துவாரகைக்கும் ஜகந்நாதரின் புரி க்ஷேத்திரத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை. பகவான் தனது கருணையின் காரணமாக இப்பௌதிக உலகத்தினுள் புரியை பதித்துள்ளார். பிறவிக் கடலை நீந்துவதற்கு சிறந்த ஸ்தலமாக விளங்கும் இவ்விடத்தில், பகவான் மரவிக்ரஹ ரூபத்தில் ஜகந்நாதராக காரணமற்ற கருணையை அனைவருக்கும் வழங்குகிறார்.
கோயிலின் அமைப்பு
இக்கோயிலின் அமைப்பை தரிசிப்பதே கண்களுக்கு விருந்தாகத் திகழும். அழகான கோபுரமும் இங்குள்ள சிற்பங் களும் பார்ப்பவர்களின் இதயத்தை கவரும் வகையில் கட்டப் பட்டுள்ளது. இத்திருக்கோயிலை தரிசிப்பதற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். முன்னொரு காலத்தில் இருந்த நீலாச்சல மலை குடையப்பட்டு, அவ்விடத்தில் தற்போதைய ஜகந்நாதர் கோயில் கட்டப்பட்டுள்ளது.
கிழக்கு திசையை நோக்கி இருக்கும் கோயிலின் முக்கிய நுழைவாயில் சிங்க நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது, இந்நுழைவாயிலின் முன்பு 11 மீட்டர் உயரம் கொண்ட அருண ஸ்தம்பம் நிறுவப்பட்டுள்ளது. இத்தூணின் உச்சியில் சூரிய பகவானின் தேரோட்டியான அருண தேவர் வீற்றிருக்கிறார். கோயிலுக்குள் வர முடியாதவர்கள் அருண ஸ்தம்பத்தின் அருகில் நின்றபடி முக்கிய நுழைவாயிலுக்கு வெகு அருகில் இருக்கும் பதித-பாவன ஜகந்நாதரை வழிபடலாம். மேற்கு நுழைவாயில் புலி நுழைவாயில் என்றும் வடக்கு நுழைவாயில் யானை நுழைவாயில் என்றும் தெற்கு நுழைவாயில் குதிரை நுழைவாயில் என்றும் அழைக்கப்படுவதுண்டு. கோயிலுக்குள் செல்வதற்கு 22 படிக்கட்டுகள் உள்ளன. வைஷ்ணவர்களின் பாத தூசி படுவதால், இப்படிக்கட்டுகள் மிகவும் புனிதமானதாக கருதப்படுகின்றது. படிக்கட்டுகள் செல்லும் பாதையில் இடதுபுறம் ஜகந்நாதருக்கு உணவு தயாரிக்க உலகிலேயே மிகப்பெரிய சமையற்கூடமும் வலதுபுறம் ஜகந்நாதரின் மஹாபிரசாதத்தினை விநியோகம் செய்ய ஆனந்த பஜார் எனப்படும் மிகப்பெரிய கடைவீதியும் உள்ளது.
ஜகந்நாதரின் தற்போதைய கோயில் மன்னர் சோடகங்க தேவரால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது வம்சத்தில் வந்த அனங்க பீமதேவரால் முடிக்கப் பெற்றது. கோயிலின் முக்கிய கோபுரத்தின் உயரம் 214 அடி, கோயிலின் மொத்த பரப்பளவு 10.7 ஏக்கர், மதில் சுவர்களின் உயரம் 6 மீட்டர். முக்கிய கோபுரத்தின் மேல் 11 அடி 8 அங்குலத்தில் அஷ்ட தாதுக்களால் செய்யப்பட்ட சுதர்சன சக்கரம் காட்சியளிக்கின்றது. கோயிலில் நான்கு மண்டபங்கள் உள்ளன: (1) போக மண்டபம்–பகவான் ஒருவேளை உணவு உட்கொள்ளும் இடம், (2) நாட்டிய மண்டபம்–கருட ஸ்தம்பத்துடன் இருக்கும் பிரார்த்தனை செய்வதற்கான இடம், (3) முக்தி மண்டபம்–பிராமணர்கள் கலந்தாய்வு செய்வதற்கான இடம், (4) முக்கிய மண்டபம்–ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவி, மற்றும் சுதர்சன சக்கரத்தின் வசிப்பிடம்.
இதர கோயில்கள்
கோயில் வளாகத்தினுள் முப்பது சிறிய கோயில்கள் உள்ளன. ஆயிரம் வருடம் பழமையான கற்பக மரத்தை இங்கே இன்றும் காணலாம். கோயிலின் மற்றொரு சிறப்பு, இங்கு இடம் பெற்றிருக்கும் ரோகிணி குண்டம். ஒருமுறை மரத்திலிருந்த ஒரு காகம் இக்குளத்தினுள் விழுந்தபோது, அஃது உடனடியாக நான்கு கைகளைக் கொண்ட வைகுண்டவாசியாக மாற்றம் பெற்றது–அத்தகு சிறப்பு வாய்ந்த குளம் இது. நீரினால் பிரளயம் ஏற்படும்போது ரோகிணி குண்டத்தில் இருந்து பெருக்கெடுக்கும் நீர் உலகினை மூழ்கடிக்கின்றது. அதேசமயம் பிரளயத்திற்குப் பிறகு அனைத்து நீரும் இங்கு ஒன்று சேர்ந்து சுருங்கி விடுகின்றது. இந்த தீர்த்தத்தை உடல் மீது தெளித்துக் கொள்வது மிகவும் விசேஷமானதாகும்.
காஞ்சிபுரத்துக்கும் புரி கோயிலுக்கும் இருக்கும் தொடர்பு இன்னொரு சிறப்பம்சமாகும். ஜகந்நாதரின் பக்தனாக இருந்த புருஷோத்தம மன்னனுக்கும், விநாயகரின் பக்தனாக இருந்த காஞ்சி மன்னனுக்கும் இடையில் போர் நடைபெற்றபோது, போர் உடன்பாடுகளில் ஒன்று என்னவெனில், தோற்றவர்கள் வழிபடக்கூடிய விக்ரஹம் வென்றவர்களின் விக்ரஹத்திற்கு பின் அமர வேண்டும் என்பதாகும். காஞ்சி மன்னனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் புருஷோத்தம மன்னன் தோற்கக்கூடிய நிலையை எட்டியபோது, ஜகந்நாதரும் பலதேவரும் மாறுவேடத்தில் புருஷோத்தம மன்னனுக்கு ஆதரவாக போர் புரிந்து வென்று விநாயகரை தங்களுக்குப் பின் அமர்த்திக் கொண்டனர். முக்கிய கோயிலின் பிரகாரத்தை சுற்றி வரும்போது காஞ்சி விநாயகர் ஜகந்நாதருக்கு பின்புறம் அமர்ந்திருப்பதைக் காணலாம்.
ஜகந்நாதர் உணவு உட்கொண்டபின், அஃது உடனடியாக பார்வதி தேவிக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பார்வதி தேவி அதனை உண்டவுடன், அது மஹாபிரசாதமாக அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. பிரம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட நரசிம்மர் கோயிலும் இங்குள்ள மற்றொரு சிறப்பாகும். சமுத்திர அலையோசையை கோயிலுக்குள் வரவிடாமல் பாதுகாக்கும் அனுமன் கோயிலையும் அங்கே காணலாம். இவ்வாறு பிரகாரத்தைச் சுற்றி வரும்போது முப்பது சிறிய கோயில்களைக் காணலாம்.
ஜகந்நாதரின் விசேஷ ரூபம்
புரியில் இருக்கும் ஜகந்நாதரின் விக்ரஹம் மற்ற கோயில்களில் இருக்கும் கிருஷ்ண விக்ரஹத்தைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாக காணப்படுவது ஏன் என்பதை பின்வரும் கதையிலிருந்து அறியலாம்.
துவாரகையில் வசித்த கிருஷ்ணரின் மனைவியர் அவரிடம் இதயபூர்வமான தூய அன்பை வெளிப்படுத்தியபோதிலும், அவரோ எப்போதும் விருந்தாவனவாசிகளை நினைத்துக் கொண்டிருந்தார். அஃது ஏன் என்பதை அறிய விரும்பிய மனைவியர், கிருஷ்ணரின் பால்ய லீலைகளை விருந்தாவனத்தில் இருந்து தரிசித்த பலராமரின் அன்னையான ரோகிணியை அணுகினர். கிருஷ்ணரின் பால்ய லீலைகளை விளக்க அவள் ஒரு நிபந்தனை விதித்தாள்: அவற்றை வர்ணிக்கும்போது அந்த அறையினுள் கிருஷ்ண பலராமரை அனுமதிக்கக் கூடாது; ஏனெனில், அந்த லீலைகளை அவர்கள் கேட்டால், அவர்களின் விருந்தாவன ஏக்கம் பல மடங்கு அதிகரித்துவிடும். கிருஷ்ண பலராமரின் தங்கையான சுபத்ரா தேவியை பாதுகாப்பிற்கான சிறந்த நபர் என்று முடிவு செய்து அவளை வாயிலில் நிறுத்தினர்.
அன்னை ரோகிணி விருந்தாவனத்தில் நிகழ்ந்த கிருஷ்ண பலராமரின் திவ்யமான பால்ய லீலைகளை ஒவ்வொன்றாக வர்ணிக்க ஆரம்பித்தாள். அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த சுபத்ரா தேவி பரவசத்தில் முழுமையாக ஸ்தம்பித்துப் போனாள். தங்களின் பால்ய லீலைகள் வர்ணிக்கப்படுவதை தெரிந்து கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அவற்றை ஒட்டுக் கேட்க மிகுந்த ஆவலுடன் அறைக்குள் விரைந்தனர். வெளியுணர்வை இழந்த சுபத்ரா தேவியின் அருகில் நின்றபடி, கிருஷ்ணரும் பலராமரும் தங்களுடைய பால்ய லீலைகளைக் கேட்டபோது, அவர்களும் ஸ்தம்பித்து விட்டனர். வெளிஉணர்வை இழந்து இம்மூவரும் பரவச கோலத்தில் ஸ்தம்பித்து இருப்பதைக் கண்ட நாரதர், தான் பார்த்த அந்த வேறுபட்ட ரூபங்களை உலக மக்களும் பார்க்க வேண்டும் என்று வேண்டினார். அந்த விசித்திரமான ரூபங்களே ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரா.
தனது சகோதரர்களின் பால்ய லீலைகளை ஆரம்பத்திலிருந்தே கேட்ட சுபத்ரா தேவியின் கைகள் முழுமையாக அவளது உடலுக்குள் சென்று விட்டன; அதனால் சுபத்ரா தேவியின் விக்ரஹத்திற்கு கை இருப்பதில்லை. தங்களின் சொந்த லீலைகளை பாதியிலிருந்து கேட்ட கிருஷ்ண பலராமரின் கைகள் பாதி அளவிற்கு உடலுக்குள் சென்று விட்டன; அதனால் ஜகந்நாதரும் பலதேவரும் பாதி கைகளுடன் இருப்பது போல காட்சியளிக்கின்றனர்.
கோயிலின் வரலாறு
ஸத்ய யுகத்தில் நீலாச்சல மலையில் வசித்த பகவான் நீலமாதவரின் இருப்பிடத்தைக் கண்டறிய மன்னர் இந்திரத்யும்னன் தனது அமைச்சர் வித்யாபதியை அனுப்பி வைத்தார். நீலாச்சல மலைக்கு வந்த வித்யாபதி மலைவாழ் இனமான ஸபர குலத்தின் மன்னன் விஸ்வவாசுவின் வீட்டில் தங்க நேர்ந்தது, அவரது மகள் லலிதாவையும் மணந்து கொண்டார். தனது மாமனார் தினந்தோறும் நீலமாதவரை தரிசித்து வருகிறார் என்பதை சில அறிகுறிகளால் தெரிந்து கொண்ட வித்யாபதி, தானும் நீலமாதவரை தரிசிக்க வேண்டும் என்று மனைவியிடம் மன்றாடினார். “கண்களை துணியால் கட்டியபடியே அழைத்துச் செல்வேன்” என்ற நிபந்தனையுடன் அவரை நீலமாதவரின் இருப்பிடத்திற்கு அழைத்து செல்ல விஸ்வவாசு ஒப்புக் கொண்டார். தான் சென்ற பாதையில் கடுகு விதைகளைப் போட்ட வண்ணம் சென்ற வித்யாபதியின் கண்களைச் சுற்றியிருந்த துணி நீலமாதவரின் இருப்பிடத்தை அடைந்த பிறகு அவிழ்க்கப்பட்டது.
வித்யாபதி நீலமாதவரை தரிசித்துக் கொண்டிருந்தபோது, “வித்யாபதி! உடனடியாக மன்னர் இந்திரத்யும்னரிடம் சென்று அவரது ஆடம்பர வழிபாட்டை ஏற்க நான் ஆவலாக இருப்பதை தெரிவிப்பாயாக,” என்று ஓர் அசரீரி கேட்டது. பகவான் தன்னை விட்டு பிரிந்து விடுவார் என்கிற பயத்தில் தனது மருமகனை சபர மன்னன் விஸ்வவாசு கட்டிப் போட்டார். பின்னர் மனைவியின் வற்புறுத்தலால் அவிழ்த்து விடப்பட்ட வித்யாபதி, சிறிது வளர்ந்த கடுகு செடிகளின் உதவியுடன் மன்னர் இந்திரத்யும்னரை நீலமாதவரின் இருப்பிடத்திற்கு அழைத்து வந்தார். ஆனால் அங்கு நீலமாதவர் இல்லை. அப்போது, “மன்னா, நீலமாதவராக இருந்த நான் கூடிய விரைவில் மர விக்ரஹ ரூபத்தில் ஜகந்நாதராக காட்சியளிக்க உள்ளேன்,” என்ற அசரீரியின் குரலை மன்னர் கேட்டார்.
பின்னர், ஒருநாள் மன்னர் கனவில் தான் சமுத்திரத்தில் மறுநாள் மரக்கட்டையாக மிதந்து வருவேன் என்று கூறினார். பகவான் விக்ரஹத்தை செதுக்க முன்வந்த அனந்த மஹாராணர் ஒரு நிபந்தனையை விதித்தார்: பூட்டிய அறையில் 21 நாள்கள் விக்ரஹத்தை செதுக்கும்போது யாரும் அறைக்குள் வரக் கூடாது. ஆயினும், பதினான்காம் நாளன்று உளியின் சத்தம் கேட்காததால், மன்னர் ஆர்வ மிகுதியினால் அறையைத் திறந்து பார்த்தார். மர விக்ரஹம் பாதி செதுக்கப்பட்ட நிலையில் இருந்தது, அனந்த மஹாராணரையும் அறைக்குள் பார்க்க முடியவில்லை.
மிகவும் வருத்தத்திலிருந்த மன்னரின் கனவில் தோன்றிய பகவான், “இஃது எனது நித்ய ரூபம். அவசரமாக அறையைத் திறந்து பார்த்ததால் ஏற்பட்ட ரூபம் அல்ல,” என்பதை தெளிவுபடுத்தினார். மரவிக்ரஹத்தை பிரதிஷ்டை செய்வதற்கு மன்னர் இந்திரத்யும்னர் பிரம்மாவை நாடினார். அதற்கு பிரம்மதேவர், “புரி க்ஷேத்திரத்தில் ஜகந்நாதர் நித்தியமாக இருப்பதால், இங்கே அவரை பிரதிஷ்டை செய்ய வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதிலாக கோயிலின் முக்கிய கோபுரத்தில் ஒரு கொடியை கட்டி விடுகிறேன்” என்று பதிலளித்தார். கோயிலுக்குள் வர முடியாதவர்கள் கோபுரத்தின் மீதிருக்கும் சுதர்சன சக்கரத்தையும் கொடியையும் வழிபட்டால் ஜகந்நாதரை வழிபட்ட முழு பலனை அடையலாம். பின்னர், சுபத்ரா தேவி விக்ரஹத்திற்கு மஞ்சள் வர்ணம் பூசியும் பலதேவருக்கு வெள்ளை வர்ணம் பூசியும் ஜகந்நாதருக்கு கரிய வர்ணம் பூசியும் வழிபடுமாறு நாரதர் மன்னருக்கு அறிவுறுத்தினார்.
இடமிருந்து வலம்) பலதேவர், சுபத்ரா, ஜகந்நாதர்—ரதயா த்திரைக்கு சில நாள்களுக்கு முன்பு ஸ்நான பூர்ணிமா நாளன்று இவர்களுக்கு அபிஷேகம் செய்யப்படும். அபிஷேகத்திற்கு சற்று முன்பு எடுத்த படம்.
மஹாபிரசாதம்
புரிக்கு மேற்கொள்ளப்படும் யாத்திரை, ஜகந்நாதரின் மஹாபிரசாதத்தை உண்ணும் போதுதான் முழுமை பெறுகிறது. அங்கே காஜா என்னும் ஒருவகை இனிப்பு மஹாபிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஜகந்நாதர் போகப் பிரியர், அவருக்கு தினமும் 56 வகையான உணவு வகைகள் ஆறு வேளை கொடுக்கப்படுகின்றது. ஜகந்நாதரின் மஹாபிரசாதம் நாயின் வாயிலிருந்து கீழே விழுந்தாலும் களங்கமடைவதில்லை என்று புராணங்கள் கூறுகின்றன. புரி ஜகந்நாதர் தனது மஹாபிரசாதத்தின் மூலமாகவே அனைவருக்கும் கருணையைக் கொடுக்கிறார். ஜகந்நாதரின் மஹாபிரசாதம் பலநாள்களாகி ஊசிப் போனாலும் அதனுடைய தெய்வீக குணம் மாறுவதில்லை. ஜகந்நாதரை தரிசிக்க இரவில் வரும் தேவர்கள் அவருக்கு சிறந்த உணவு பதார்த்தங்களை அர்ப்பணிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஜகந்நாதரின் மஹாபிரசாதம் கிடைப்பதற்காக தேவர்களும் தவம் கிடக்கின்றனர். ஜகந்நாதரின் சமையற் கூடத்தில் இருக்கும் வைஷ்ணவ அக்னி என்னும் நெருப்பு, உணவு தயாரிக்க எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.
ஜெயதேவ கோஸ்வாமியினால் இயற்றப்பட்ட கீத கோவிந்தம் என்கிற பாடல் ஜகந்நாதருக்கு மிகவும் பிரியமானதாகும். மேலும், பாண்டா என்று அழைக்கப்படும் ஜகந்நாதரின் சேவகர்கள் அவருக்கு மிகவும் பிரியமானவர்கள்.
ரத யாத்திரை
ஆண்டுதோறும் ஜுன்-ஜுலை மாதத்தில் நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற ரத யாத்திரையில் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். கோயிலில் வீற்றிருக்கும் மூல விக்ரஹங்கள் தங்களை தரிசிக்க வராதவர்களுக்கும் கருணையை வழங்குவதற்காக வருடத்தில் ஒரு முறை உலா வருவது கண்கொள்ளா காட்சியாகும். முக்கிய கோயிலிலிருந்து ரத யாத்திரையாக குண்டிசா கோயிலை அடையும் ஜகந்நாதர், பலதேவர், சுபத்ரை அங்கே பத்து நாள்கள் இருந்துவிட்டு மீண்டும் தங்களின் இருப்பிடத்திற்கு ரத யாத்திரையாகச் செல்கின்றனர்.
சைதன்ய மஹாபிரபு தனது திவ்ய லீலையின் இறுதி பதினெட்டு வருடங்களை அரங்கேற்றிய இடம் புரி. நடன பிரியரான சைதன்யர் சுமார் 500 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வருடமும் ரத யாத்திரையின்போது ஆனந்த நடனமாடுவார், அப்போது அந்த சுற்றுப்புறம் அனைத்தும் ஆனந்த பெருங்கடலாக மாறிவிடும். சைதன்ய மஹாபிரபுவின் நடனத்தை ஜகந்நாதர் மிகவும் ரசித்ததாக சைதன்ய சரிதாம்ருதம் கூறுகின்றது. ஆனந்த பெருங்கடலான அந்த ரத யாத்திரை திருவிழாவினை ஸ்ரீல பிரபுபாதர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பகவானைக் காட்டிலும் ஆச்சாரியர்கள் ஒரு க்ஷேத்திரத்திற்கு வரும்போது, அதன் சக்தி பல மடங்கு அதிகரித்து விடும். அதன்படி, ஸ்ரீல பிரபுபாதரின் குருவான பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் பிறந்த ஊர் என்பதாலும், அவரது தந்தை பக்திவினோத தாகூர் பல வருடம் தங்கிய ஊர் என்பதாலும் புரி மேலும் சிறப்பு பெறுகின்றது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சங்கு (பஞ்சஜன்யம்) தோன்றிய திதியில், வித்யாபதி முதன் முதலில் ஸ்ரீ க்ஷேத்திரம் வந்து சேர்ந்த திதியில் புரியை சுற்றி வலம் வர வேண்டும் என ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திதியில் புரி-பரிக்ரமத்திற்கு (புரியைச் சுற்றி வலம் வருவதற்கு) இஸ்கான் வருடந்தோறும் ஏற்பாடு செய்கின்றது. நவம்பர்-டிசம்பர் மாதத்தில் வரும் இத்திதியில், பக்தர்கள் 19 கி.மீ சுற்றளவு கொண்ட நீலாச்சல மலையை பாதயாத்திரையாக வலம் வருகின்றனர்.
க்ஷேத்திரத்தை எப்படி பார்ப்பது
கிருஷ்ணர், சைதன்ய மஹாபிரபு, ஜகந்நாதர் ஆகிய மூவரும் ஒருவரே. விருந்தாவனம் இனிமையான க்ஷேத்திரம், நவத்வீபம் கருணையான க்ஷேத்திரம், புரி ஐஸ்வர்யமான க்ஷேத்திரம். இம்மூன்று க்ஷேத்திரங்களுக்கு இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை. க்ஷேத்திரங்களை பௌதிக கண்களால் பார்க்க முடியாது, இவற்றின் மகிமைகளை சாஸ்திரங்களிலிருந்து காதால் கேட்டு அதன் மூலமாகவே பார்க்க வேண்டும். அப்போதுதான் க்ஷேத்திரத்தை உள்ளது உள்ளபடி பார்க்க முடியும்; இல்லாவிடில், ஒட்டகம், கடற்கரை, சொகுசு பங்களா, பஜ்ஜி கடை இவற்றைப் பார்த்து நமது கண்கள் திருப்தியடைந்து விடும்.
புரியில் உள்ள இதர கோயில்களைப் பற்றியும் சைதன்ய மஹாபிரபுவிற்கும் புரிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பைப் பற்றியும் பின்னர் (ஏப்ரல் இதழில்) காணலாம்.