இந்தியாவிற்குள் மட்டும் முடங்கிக்கிடந்த, உண்மையில் இந்தியாவிலும் சுருங்கிக் கொண்டிருந்த வைஷ்ணவ தர்மத்தினைத் தனது குருவின் கட்டளைக்கு இணங்க, பாரெங்கும் பரவச் செய்தவர் ஸ்ரீல பிரபுபாதர். ஜடத்தில் மயங்கியிருந்த ஜகத்தை மாற்ற ஜகந்நாதரான மாதவரின் துணையுடன் ஜலதூதா கப்பலில் அவர் படியேறிய அற்புதத் திருநாள் ஆகஸ்ட் 13, 1965. அதன் 50வது நினைவு நாளை உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்கள் கொண்டாடி வரும் வேளையில், ஸ்ரீல பிரபுபாதரின் அப்பயணம் குறித்து அவரது சீடரான தவத்திரு ஸத்ஸ்வரூப தாஸ கோஸ்வாமி அவர்கள் எழுதிய உங்கள் நலனை என்றும் விரும்பும் பிரபுபாதர் என்னும் நூலிலிருந்து ஒரு சிறு பகுதியினை பகவத் தரிசன வாசகர்களுக்காக இங்கு அர்ப்பணிக்கின்றோம்.
ஸ்ரீல பிரபுபாதர் என்று பிற்காலத்தில் தனது சீடர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அபய சரணாரவிந்த பக்திவேதாந்த சுவாமி அவர்கள், ஸ்ரீமத் பாகவதத்திற்கு விருந்தாவனத்தில் அமர்ந்தபடி உரையெழுதிக் கொண்டிருந்த நேரம்.
தனது புத்தகத்திற்குச் சாதகமாக வந்த விமர்சனங்களை ஒருவகையான விளம்பரமாக உபயோகித்து, பக்தி வேதாந்த சுவாமி பல பெரிய மனிதர்களைச் சந்தித்து தனது அடுத்து வரப்போகும் பாகங்களுக்கு நன்கொடை திரட்ட முயற்சிச் செய்தார். கடைசியில் ஒரு வழியாகப் போதிய பணத்தினைத் திரட்டி அடுத்த பாகத்தை அச்சடிப்பதற்கு பேப்பர் வாங்குவது, ப்ரூப் பார்ப்பது, காலக்கெடுவின்படி பிரிண்டிங் வேலை நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிடுவது போன்ற வேலைகளை மும்முரமாகச் செய்யத் தொடங்கிவிட்டார். இப்படியாக தனது விடா முயற்சியின் காரணமாக, பக்திவேதாந்த சுவாமி தனக்கென்று காலணா இல்லாத நிலையிலும், ஒரு பக்கம் அலைந்து நன்கொடை திரட்டினார், மறுபக்கம் மணிக்கணக்காக அமர்ந்து மொழிபெயர்ப்புகளையும் பொருளுரைகளையும் எழுதினார். ஒரு வழியாக இரண்டே வருட காலத்தில் ஸ்ரீமத் பாகவதத்தின் மூன்று பெரிய பாகங்களை அச்சிட்டு வெளியிட்டுவிட்டார்.
படித்தவர்கள் மத்தியில் அவருடைய மதிப்பு உயர்ந்து கொண்டே சென்றது, பக்திவேதாந்த சுவாமி கூடிய சீக்கிரத்தில் இந்தியாவின் மிகப் பிரபலமான புள்ளியாக மாறிவிடுவார் எனத் தோன்றியது. ஆனால் அவரின் பார்வையோ மேலை நாடுகளின் மீது தான் இருந்தது. மூன்றாவது பாகமும் அச்சடிக்கப்பட்டுவிட்ட நிலையில் வெளிநாடு செல்லத் தான் தயாராகிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. அவருக்கு வயது அறுபத்திஒன்பது என்பதால், இனிமேலும் காலம் தாழ்த்தக் கூடாது, உடனே கிளம்பியாக வேண்டும் என்று நினைத்தார். ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் அவர்கள் இளைஞர் அபயிடம், “உங்களைப் போன்ற படித்த இளைஞர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று கிருஷ்ண உணர்வை ஆங்கிலத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டும்,” என்று கூறி 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அப்போது இளைஞர் அபய்க்கு அவ்வாறு பிரச்சாரம் செய்வது முடியாத காரியமாகத் தோன்றியது. ஆனால் போகப்போக தடைகள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக விலகி விட்டன. குடும்ப பாரம், தொல்லைகள் எல்லாம் இப்போது மறைந்து விட்டன. அவர் தடையில்லாமல் மேல் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். பணம் இல்லையென்பது வேறொரு விஷயம்.
பயணக்கட்டணம் மற்றும் அரசாங்க அனுமதி பெறுவதில் இருந்த சில சங்கடங்கள் தான் பாக்கி. மற்ற எல்லாத் தடைகளும் நீங்கி விட்டன. இவையும் 1965ஆம் வருடத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மறைந்தன. (குறிப்பு: அமெரிக்கப் பயணம் என்பது அந்நாள்களில் மிகவும் சிரமம் வாய்ந்தது என்பதையும் அதற்குரிய சம்பிரதாயங்கள் ஏராளமாக இருந்தன என்பதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.)
ஒருநாள் விருந்தாவனத்தில் பக்தி வேதாந்த சுவாமி மதுராவைச் சேர்ந்த அகர்வால் என்ற வியாபாரியைச் சந்தித்தபோது, எதேச்சையாக தான் அமெரிக்காவிற்குச் செல்ல விரும்புவதைப் பற்றி எல்லாரிடமும் கூறுவதுபோல கூறினார். அகர்வால் பக்திவேதாந்த சுவாமியை முதல் முறையாகப் பார்த்தது அப்போதுதான். என்றாலும், அவர் உடனடியாக அமெரிக்காவில் உள்ள தனது மகன் கோபாலிடம் பேசி சுவாமிக்கு அமெரிக்காவில் ஒரு கொடையாளியை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அகர்வாலின் மகன் கோபால் அமெரிக்காவில் பென்சில்வானியா நகரத்தில் பொறியாளராக வேலைப் பார்த்து வந்தார். அகர்வால் அவ்வாறு உதவி செய்ய முன் வந்ததைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த பக்திவேதாந்த சுவாமி, “தயவுசெய்து அப்படியே செய்யுங்கள்,” என்று கேட்டுக் கொண்டார்.
இதன் பிறகு, பக்திவேதாந்த சுவாமி வழக்கம்போல புத்தக விற்பனைக்காக டில்லி வந்துவிட்டார். ஒருநாள் ஆச்சரியப்படும் வகையில் வெளியுறவு அமைச்சகத்திலிருந்து அவருக்கு ஒரு செய்தி வந்தது. அதில் அவர் அமெரிக்கா போவதற்கு ஆட்சேபணை இல்லை என்பதைக் குறிப்பிடும் சான்றிதழ் (No Objection Certificate) தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. தான் விண்ணப்பிக்காமலேயே எப்படி தனக்கு அந்தச் சான்றிதழ் தயாரானது என்பதைத் தெரிந்துகொள்ள பக்தி வேதாந்த சுவாமி வெளியுறவு அமைச்சகத்திற்குச் சென்று விசாரித்தார். அங்கிருந்த அதிகாரிகள் கோபால் அகர்வால் கையெழுத்திட்ட (Declaration) படிவத்தை பக்திவேதாந்த சுவாமியிடம் காண்பித்தார்கள். அந்த படிவத்தில், கோபால், பக்திவேதாந்த சுவாமி அமெரிக்காவில் தங்குவதற்கான செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்திருந்தார். நன்கொடையாளர் கிடைத்தாயிற்று. இப்போது வேண்டியதெல்லாம் பாஸ்போர்ட், விசா, பி-பாரம் மற்றும் பயணக் கட்டணம் மட்டும்தான். பாஸ்போர்ட் எந்த கஷ்டமும் இல்லாமல் கிடைத்துவிட்டது.
நன்கொடை பேப்பர்களுடன் பாஸ்போர்ட்டையும் எடுத்துக் கொண்டு பக்திவேதாந்த சுவாமி மும்பைக்கு பயணமானார். இம்முறை அவர் மும்பாய் செல்வது புத்தகம் விற்கவோ நன்கொடை சேகரிக்கவோ அல்ல; ஸிந்தியா கப்பல் கம்பெனியின் முதலாளியான ஸ்ரீமதி சுமதி மொரார்ஜியைச் சந்தித்து, தான் அமெரிக்கா செல்வதற்கு உதவி கேட்பதற்காகவே. இதற்கு முன் ஸ்ரீமதி சுமதி மொரார்ஜி ஸ்ரீமத் பாகவதத்தின் இரண்டாவது பாகத்தை அச்சிடுவதற்கு நன்கொடை அளித்திருந்தார். பக்திவேதாந்த சுவாமி தன்னிடமிருந்த நன்கொடை பேப்பர்களை சுமதியின் காரியதரிசியான திரு. சோக்ஷியிடம் காண்பிக்க, அவர் ஸ்ரீமதி சுமதி மொரார்ஜியிடம் பக்திவேதாந்த சுவாமியின் சார்பாகப் பேசுவதற்கு உள்ளே சென்றார்.
“விருந்தாவனத்திலிருந்து வருவாரே அந்த சுவாமிஜி வந்திருக்கிறார். நீங்கள் கொடுத்த நன்கொடையில் அவர் புத்தகத்தை அச்சடித்து வெளியிட்டுவிட்டார். இப்போது அவர் அமெரிக்கா போக வேண்டும் என்கிறார். பாஸ்போர்ட் எல்லாம் தயாராக வைத்திருக்கிறார். நீங்கள் நமது ஸிந்தியா கப்பலில் அவருக்கு ஓர் இலவச டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.”
“நோ…நோ… சுவாமிஜி மிகவும் வயதானவர். அவரால் அவ்வளவு தூரம் பயணம் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி, இந்த வயதில் அவரால் அங்கு என்ன சாதிக்க முடியும்?” என்று ஸ்ரீமதி சுமதி மொரார்ஜி கூறிவிட்டார். திரு. சோக்ஷி வெளியே வந்து பக்திவேதாந்த சுவாமியிடம் நடந்ததைச் சொன்னார்.
ஆனால் பக்திவேதாந்த சுவாமி அமெரிக்கா போவதென்று ஏற்கனவே திடமாக முடிவு எடுத்திருந்தார். அவர் சோக்ஷியிடம் தான் அமெரிக்கா போக வேண்டியதன் அவசியத்தை சுமதியிடம் எவ்வாறு உணர வைப்பது என்பதை விளக்கினார். அவரிடம் இப்படி போய்ச் சொல்லு என்று தானே சொல்லிக் கொடுத்தார். “இந்தப் பெரியவர் அமெரிக்கா சென்று கிருஷ்ணருடைய போதனை களை அங்குள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்று சொல்” என்றார் பக்திவேதாந்த சுவாமி. சோக்ஷியும் அவர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சுமதியிடம் கூறினார். ஆனால் சுமதியோ மறுபடியும் முடியாது என்று சொன்னார், “சுவாமிஜிக்கு உடல்நிலை வேறு சரியாக இல்லை. மேலும், அமெரிக்க மக்கள் அவ்வளவு ஒத்துழைப்பு தரமாட்டார்கள். இவர் சொல்வதை அவர்கள் காது கொடுத்துக் கேட்பார்களா என்பதே சந்தேகம். ஆகவே, அவர் போக வேண்டாம்.”
இதைக் கேட்டதும், பக்திவேதாந்த சுவாமி தானே நேரில் ஸ்ரீமதி சுமதி மொரார்ஜியிடம் பேச வேண்டும் என்று கூறினார். சுமதி மொரார்ஜியும் அதற்கு ஒப்புக் கொள்ள பக்திவேதாந்த சுவாமி உள்ளே சென்றார். தான் அமெரிக்கா போக வேண்டியதன் அவசியத்தை விளக்கிய பின்னர், முடிவில், “தயவுசெய்து எனக்கு உங்களுடைய கப்பலில் ஒரு டிக்கெட் கொடுங்கள்” என்றார் பிடிவாதத்துடன். சுமதி மொரார்ஜி கவலையுடன், “சுவாமிஜி உங்களுக்கு வயதாகி விட்டது. இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்கிறீர்களே, உண்மையில் உங்களால் சமாளிக்க முடியுமா?” என்று கேட்டார்.
“எனக்கு ஒன்றும் ஆகிவிடாது. எல்லாம் நல்ல விதமாக நடக்கும்,” என்றார் பக்திவேதாந்த சுவாமி.
பக்திவேதாந்த சுவாமி இவ்வளவு சொல்லியும் திருப்தியடையாமல், சுமதி மொரார்ஜி, தொடர்ந்து, “என்னுடைய காரியதரிசிகள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? உங்களால் இந்த நெடுந்தூரப் பயணத்தைத் தாங்க முடியாது. உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என்கிறார்கள்,” என்றார். ஆனால் பக்திவேதாந்த சுவாமியோ, “அதெல்லாம் அனாவசிய பயம். எனக்கு அவசியம் நீங்கள் அமெரிக்கா போவதற்கு டிக்கெட் கொடுத்தேயாக வேண்டும்” என்றார். இதற்கு மேலும் அவரைத் தடுக்க மனமில்லாமல், “சரி, உங்களுடைய ஜி படிவத்தை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் எங்கள் கம்பெனியின் கப்பலிலேயே போகலாம்,” என்று சுமதி மொரார்ஜி கூறினார். இதைக் கேட்டதும் பக்திவேதாந்த சுவாமிக்கு உற்சாகம் தாங்கவில்லை. முகத்தில் புன்னகை தவழ சுமதி மொரார்ஜியின் அலுவலகத்திலிருந்து புதுப் பொலிவுடன் வெளியே வந்தார்.
சுமதி மொரார்ஜியின் உத்தரவின் பேரில் அவருடைய காரியதரிசி பக்திவேதாந்த சுவாமியின் அமெரிக்க பயணத்திற்கு வேண்டிய கடைசி ஏற்பாடுகளைச் செய்தார். பக்திவேதாந்த சுவாமியிடம் குளிருக்கு உகந்த உடை ஒன்றுமில்லாததால், கம்பளி ஆடை வாங்கித்தர சோக்ஷி அவரை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். மேலும், பக்திவேதாந்த சுவாமி கேட்டுக் கொண்டதன்படி, சைதன்ய மஹாபிரபுவின் சிக்ஷாஷ்டகம் எனப்படும் எட்டு பாடல்களையும் ஸ்ரீமத் பாகவதம் பற்றிய விளம்பரம் அடங்கிய துண்டுப் பிரசுரத்தையும் ஐநூறு பிரதிகள் அச்சடிப்பதற்கு சோக்ஷி ஏற்பாடு செய்தார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி 1965ஆம் வருடம் கொல்கத்தாவிலிருந்து கிளம்பவிருந்த ஜலதூதா என்ற தங்களது கப்பலில் பக்திவேதாந்த சுவாமிக்கு ஓர் இடத்தை ஒதுக்குவதற்கு சுமதி மொரார்ஜி உத்தரவிட்டிருந்தார். அவர் சைவ உணவு உண்பவர் என்பதையும் சந்நியாசி என்பதையும் புரிந்து கொண்டு நடக்கக்கூடிய கேப்டனைக் கொண்ட கப்பலைத்தான் சுமதி மொரார்ஜி சுவாமிஜியின் பயணத்திற்கு தேர்ந்தெடுத்திருந்தார்.
ஜலதூதாவின் கேப்டன் அருண் பாண்டியாவிடம் சுமதி மொரார்ஜி சுவாமிஜிக்காக அதிகப்படியான காய்கறி களையும் பழங்களையும் எடுத்து செல்லுமாறு கூறினார். சோக்ஷி அவர்கள் பக்திவேதாந்த சுவாமியுடன் இரண்டு நாட்கள் கூடவே இருந்து, அச்சகத்திற்குச் சென்று தயாராக இருந்த கைப்பிரதிகளைப் பெற்றுக் கொள்ளவும் துணிகளை வாங்குவதற்கும் உதவி செய்தார். பிறகு, தானே அவரை ஸ்டேஷனுக்கு தன் காரில் கொண்டு விட்டுச் சென்றார். சுவாமிஜி கொல்கத்தாவிற்கு வண்டியேறினார்.
ஜலதூதா கிளம்புவதற்கு இரண்டு மூன்று நாள்கள் முன்னதாகவே பக்திவேதாந்த சுவாமி கொல்கத்தா வந்து சேர்ந்தார். கொல்கத்தா அவர் பிறந்து வளர்ந்து தன் வாழ்வில் பெரும் பகுதியைக் கழித்த நகரம். அப்படியிருந்தும் இன்று அவர் தங்குவதற்கு என்று எந்தவோர் இடமும் அங்கு இல்லை. எப்படியோ முன்பே சுமாராக அறிமுகமாகியிருந்த ஒருவரின் இல்லத்தில் பக்திவேதாந்த சுவாமிக்கு அடைக்கலம் கிடைத்தது. கப்பல் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக பக்திசித்தாந்தரின் சமாதியைப் பார்க்க மாயாபுர் சென்று, உடனே கொல்கத்தா திரும்பிக் கடல் பயணத்திற்குத் தயாராக இருந்தார் பக்திவேதாந்த சுவாமி.
அவரிடம் இருந்தது ஓர் இரும்புப் பெட்டி, ஒரு குடை மற்றும் கொஞ்சம் தானியங்கள். தனக்கு அமெரிக்காவில் உண்பதற்கு என்ன கிடைக்கும் ஏது கிடைக்கும் என்று தெரியாத நிலை. மாமிச உணவு தவிர வேறெதுவும் கிடைக்கவில்லையெனில் என்ன செய்வது? அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் வெறும் உருளைக் கிழங்கையும் தான் எடுத்துச் செல்லும் தானியங்களையும் உண்டு காலம் தள்ளுவது என்ற முடிவுடன் இருந்தார் பக்திவேதாந்த சுவாமி. அவருடைய உடமைகளின் முக்கிய பாகமான அவருடைய புத்தகங்கள் அடங்கிய இரும்பு பெட்டிகள் தனியாக அனுப்பப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்புத்தகங்களின் எண்ணிக்கை சுமார் இருநூறு இருக்கும். அவற்றைப் பற்றி நினைக்கும்போதே பக்திவேதாந்த சுவாமிக்கு தனி உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்பட்டது. முக்கியமாக இப்பெரும் பயணத்தை மேற்கொள்ளும் தறுவாயில் அதுபோன்ற நம்பிக்கை அவருக்கு மிகவும் தேவைப்பட்டது. ஏனென்றால், இந்நாள் அவர் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நாள். அவர் அதற்கு முன்பு பார்த்திராத நாட்டிற்குப் போக இருக்கிறார். அந்த நாடு அவரை வரவேற்குமா என்று சொல்ல முடியாதநிலை. யாரையும் தெரியாதவராக ஏழையாக இந்தியாவில் இருப்பது என்பது வேறு. கலி காலத்தில்கூட இந்தியாவில் வேத கலாச்சாரம் முற்றிலும் அழிந்துவிடவில்லை. சாதுக்களுக்கும் சந்நியாசிகளுக்கும் மதிப்பும் மரியாதையும் இருக்கவே செய்தது. பக்திவேதாந்த சுவாமியினால் எளிதாக பெரியபெரிய பணக்காரர் களையும் மந்திரிகளையும் கவர்னர்களையும், ஏன் பிரத மரையும்கூட பார்த்துப் பேச முடிந்ததே இதற்கு சாட்சி.
ஆனால் அமெரிக்காவில் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? அங்கு அவர் ஒரு வேற்று நாட்டுக்காரர், அவ்வளவுதான். சாதுக்களையோ கோயில்களையோ ஆசிரமங்களையோ பற்றி ஒன்றுமே அறியாத நாடு அமெரிக்கா. பக்திவேதாந்த சுவாமிக்கு தைரியம் கொடுத்தது ஒன்றுதான், அஃது அவர் எடுத்துச் செல்லும் புத்தகங்களே. அமெரிக்காவில் யாரைச் சந்தித்தாலும் கொடுப்பதற்கு அவரிடம் ஸ்ரீமத் பாகவதம், அமைதி மற்றும் நல்லெண்ணத்திற்கான இந்தியாவின் செய்தி என்ற துண்டுப் பிரசுரம் தயாராக இருந்தது.
அன்று ஆகஸ்ட் 13. கிருஷ்ண ஜெயந்திக்கு இரண்டு மூன்று நாள்களே இருந்தன. கடந்த பல வருடங்களாக கிருஷ்ண ஜென்மாஷ்டமியை பக்திவேதாந்த சுவாமி விருந்தாவனத்தில் தான் கொண்டாடினார். விருந்தா வனத்தில் வசிக்கும் பல சாதுக்கள் விருந்தாவன எல்லையை விட்டு வெளியே போகமாட்டார்கள். விருந்தா வனத்தில்தான் உயிரை விடுவது என்ற வைராக்கியத்தில் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். பக்திவேதாந்த சுவாமிக்கு விருந்தாவனத்தில் அல்லாமல் வேறு எங்கேனும் இறந்து விடுவோமோ என்ற கவலை ஏற்படும். விருந்தாவனத்தை விட்டு மதுராவிற்குக்கூட போக மாட்டேன் என்று சபதம் மேற்கொள்ளும் சாதுக்களும் உண்டு. ஏனெனில், விருந்தாவனத்தில் இறப்பதில் தான் ஒருவரது வாழ்வின் வெற்றியே உள்ளது.
மற்றொரு விஷயம் என்னவெனில், இந்து பாரம்பரியப்படி, ஒரு சந்நியாசி கடல் கடந்து போய் மிலேச்சர்கள் நிறைந்த அயல்நாடுகளில் காலடி எடுத்து வைக்கக்கூடாது என்பது சட்டம். ஆனால் ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் விருப்பம் என்பது இதுபோன்ற சட்ட திட்டங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. ஏனெனில், அவருடைய விருப்பத்திற்கும் ஸ்ரீ கிருஷ்ணரின் விருப்பத்திற்கும் வேறுபாடு என்பதே கிடையாது. சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தது கிருஷ்ணரே. ஹரே கிருஷ்ண கீர்த்தனம் உலகிலுள்ள ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் ஒலிக்கப் போகிறது என்பதைச் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே உரைத்தவர் அவரே.
பக்திவேதாந்த சுவாமி ஒரு டாக்ஸியைப் பிடித்து கல்கத்தா துறைமுகத்திற்குச் சென்றார். பெட்டி, குடை தவிர கையில் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தையும் எடுத்துக் கொண்டு சென்றார். கடல் பயணத்தில் அதைப் படிக்க வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். கப்பலில் தனியாக சமைத்துக்கொள்ள தனக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்பினார். அப்படி அனுமதி கிடைக்கா விடில் பட்டினி கிடக்கவும் அவர் தயார். டாக்ஸியில் அமர்ந்தபடியே டிக்கெட், பாஸ்போர்ட், விசா, ஜி படிவம், நன்கொடையாளரின் விலாசம் ஆகியவை சரியாக இருக்கின்றனவா என்று ஒருமுறை சரிபார்த்துக் கொண்டார். தான் நினைத்த காரியம் ஒருவழியாக நடக்கப் போகிறது என்பதை நினைக்க அவருக்கு மகிழ்ச்சி. அந்த நாளை நினைவிற்குக் கொண்டுவந்து ஸ்ரீல பிரபுபாதர் அடிக்கடி கூறுவார்: “பல கஷ்டங்களைக் கடந்து கிருஷ்ணரின் அருளால் எப்படியோ இந்தியாவை விட்டு அமெரிக்காவிற்குப் பயணமானேன். அன்று நான் இந்தியாவை விட்டு வெளியேறியதால்தான் கிருஷ்ண உணர்வு இயக்கத்தை உலகெங்கும் என்னால் பரப்ப முடிந்தது. அப்படியில்லாமல் இந்தியாவிலேயே இருந்திருந்தால், என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. உண்மையில் இந்தியாவில் தான் நான் இந்த இயக்கத்தை முதலில் ஆரம்பிக்க நினைத்தேன். ஆனால் அப்போது எனக்கு ஊக்கமளிக்கவோ ஆதரவளிக்கவோ யாரும் முன்வரவில்லை.”
கறுப்பு நிற சரக்குக் கப்பலான ஜலதூதா துறைமுகத்தில் நங்கூரம் போடப்பட்டு துறைமுக பிளாட்பாரத்தையொட்டி நிறுத்தப்பட்டிருந்தது. பயணிகள் நடந்து செல்வதற்கு ஏணிப்படி பாதை பொருத்தப்பட்டிருந்தது. டாக்ஸியிலிருந்து இறங்கி தன்னுடன் வந்தவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு காவியுடை காற்றில் படபடக்க கப்பலை நோக்கி நடந்தார் பக்திவேதாந்த சுவாமி.
கல்கத்தா, ஆகஸ்ட் 13, 1965: வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்கத்தாவிலிருந்து நியுயார்க் நோக்கி புறப்படவிருந்த ஸிந்தியா நேவிகேஷன் கம்பெனிக்கு சொந்தமான ஜலதூதா சரக்குக் கப்பலின் ஒரே பயணியர் அறையில் நியுயார்க் செல்வதற்கான இலவச டிக்கெட்டுடன் பயணத்திற்கு ஆயத்தமாக இருந்தார் 69 வயது நிரம்பிய பக்திவேதாந்த சுவாமி. கப்பல் துறைமுகத்தை விட்டு புறப்பட்ட சமயத்தில், தனது பயணத்திற்கெல்லாம் சுமதி மொரார்ஜியை உதவி செய்யத் தூண்டிய கிருஷ்ணருக்கு நன்றி என்று அவர் தனது டைரியில் எழுதினார்.
பக்திவேதாந்த சுவாமியின் பயணம் எவ்வாறு இருந்தது, அவர் சந்தித்த போராட்டங்கள் யாவை என்பதை அடுத்த இதழில் காணலாம்.
குறிப்பு: ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கை வரலாற்றினை எடுத்துரைக்கும் புத்தகம் அனைத்து இஸ்கான் கோயில்களிலும் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு, 9894814553.
ஜலதூதா கப்பலின் படிக்கட்டுகளில் ஸ்ரீல பிரபுபாதர் ஏறிச் செல்லுதல்.
மேலும் பார்க்க